Published:Updated:

``அஜித் ப்ளேலிஸ்ட்ல இந்தப் பாடலானு ஷாக் ஆகிட்டேன்..!" - ஹரிஷ் ராகவேந்திரா

ஹரிஷ் ராகவேந்திரா
ஹரிஷ் ராகவேந்திரா

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ப்ளேலிஸ்ட்டில் ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்கள் கட்டாயம் இருக்கும்.

90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் ப்ளேலிஸ்ட்டில் ஹரிஷ் ராகவேந்திராவின் பாடல்கள் கட்டாயம் இருக்கும். மம்மூட்டி போன்ற சீனியர்களில் தொடங்கி புதிய நடிகர்கள் வரை, இவர் யாருக்குப் பாடினாலும் இவரது குரல் பக்காவாகப் பொருந்திப் போகும். சில வருடங்களாக இவரது குரலை நாம் மிஸ் செய்யவே, எங்கே இருக்கிறார் எனத் தேடிப்பிடித்துப் பேசினோம்.

நீங்க பல பாடல்கள் பாடியிருக்கீங்க. இப்போதும் உங்களோட முதல் பாடல் ஞாபகம் இருக்கா?

``அஜித் ப்ளேலிஸ்ட்ல இந்தப் பாடலானு ஷாக் ஆகிட்டேன்..!" - ஹரிஷ் ராகவேந்திரா
VIKATAN

``முதல் பாடலும் நான் சினிமாவுக்கு வந்த கதையும் நல்லாவே ஞாபகம் இருக்கு. மயிலாப்பூர் விவேகானந்தா காலேஜ்ல படிக்கும்போது, நிறைய கல்ச்சுரல்ஸ் போவேன். பல முறை பாட்டுப் போட்டியில் முதல் பரிசு வாங்கிட்டு வருவேன். அதையெல்லாம் பார்த்த என் பேராசிரியர்கள்,`நீ சினிமால பாடலாமே’னு சொன்னாங்க. ஆனா, எனக்கு யாரைப் போய் பார்க்கணும், என்ன ஏதுனு எதுவுமே தெரியலை. அந்தச் சமயத்தில் நார்த் இந்தியாவில் ஒரு டிவி ஷோவுக்கு எங்க காலேஜ் டீமோடு போயிருந்தேன். அங்க நான் பாடினதைக் கேட்ட ஒரு கீபோர்ட் ஆர்டிஸ்ட், `எங்க மாமா ஒரு மியூசிக் டைரக்டர். அவர்கிட்ட உங்களைப் பத்திச் சொல்றேன்’னு சொன்னார். `யார் உங்க மாமா’னு கேட்டதுக்கு, `வித்யாசாகர்’னு சொன்னார். `நான் அவரோட மிகப்பெரிய ரசிகன். கண்டிப்பா சொல்லுங்க’னு சொன்னேன். அதேமாதிரி, அர்ஜுன் சாரும் என் வாய்ஸைக் கேட்டுட்டு வித்யாசாகர் சார்கிட்ட சொல்லியிருக்கார். இப்படித்தான் வித்யாசாகர் சாருக்கு நான் அறிமுகமானேன். அப்போதான் மம்மூட்டி சார் நடிச்ச `அரசியல்’ங்கிற மலையாளப் படத்தில் என்னைப் பாட வெச்சார். இதுதான் நான் சினிமாவுக்கு வந்த கதை.’’

உங்களை அடையாளப்படுத்திய முதல் பாடல் எது..?

`` `பாரதி’ படத்துல `நிற்பதுவே நடப்பதுவே’ பாட்டு மூலமாதான் நான் வெளில தெரிய ஆரம்பிச்சேன். பாரதியாரோட பயோபிக்ல, இளையராஜாவோட இசையில நான் பாடுவேன்னு நினைச்சுக்கூடப் பார்க்கலை. இப்பவரைக்கும் நான் எந்தக் கச்சேரிக்குப் போனாலும், இந்தப் பாட்டைப் பாடச் சொல்லுவாங்க. இந்தப் பாட்டு எனக்குக் கிடைச்சதுக்குப் பின்னாடியும் ஒரு கதை இருக்கு. ரொம்ப நாளா ராஜா சாரை மீட் பண்றதுக்கு ட்ரை பண்ணிட்டிருந்தேன். நான் தினமும் வந்து, வந்து போனதைப் பார்த்த ராஜா சார், ஒரு நாள் சாப்பிட உட்காரும்போது என்னை அழைச்சுப் பாடச் சொன்னார். நானும் ஒரு பாட்டுப் பாடினேன். கண்ணை மூடிட்டுக் கேட்டவர், `சரி நான் சொல்றேன்’னு சொன்னார். அவர் முன்னாடி பாடினதுனால எதாவது சொதப்பிட்டோமானு எனக்கு ஒரே குழப்பமா இருந்துச்சு. ஆறு மாசம் கழிச்சு, ராஜா சார் ஆபீஸ்ல இருந்து என்னைக் கூப்பிட்டாங்க. அப்போ எனக்குக் கிடைச்ச பாட்டுதான், இது. நான் ஆயிரம் பாடல்கள் பாடியிருந்தாலும், இப்போவரைக்கும் என்னை அடையாளப்படுத்துறது இந்தப் பாட்டுதான்.’’

`ஹாரிஷ் ஜெயராஜ் - ஹரிஷ் ராகவேந்திரா’ இந்த காம்போவைப் பற்றிச் சொல்லுங்க?

``அஜித் ப்ளேலிஸ்ட்ல இந்தப் பாடலானு ஷாக் ஆகிட்டேன்..!" - ஹரிஷ் ராகவேந்திரா
VIKATAN

``பாடகர்களைப் பொறுத்தவரைக்கும் ஒரு ஹிட் பாடல் கிடைச்சதுக்கு அப்பறம் அடுத்த ஹிட்தான் அவங்க கரியர்லேயே ரொம்ப முக்கியமானது. ஏன்னா, ரெண்டாவது ஹிட் கிடைக்காம ஒன் டைம் வொண்டரா இருக்கிற நிறைய பேரை நான் பார்த்திருக்கேன். அப்படி என் கரியர்ல ரொம்ப முக்கியமான `மின்னலே’ படத்தோட `ஏ... அழகிய தீயே’ பாட்டு மூலமா எனக்கு ரெண்டாவது ஹிட்டைக் கொடுத்தவர் ஹாரிஷ் ஜெயராஜ். அவரோட முதல் படத்திலிருந்து தொடர்ந்து பல படங்கள்ல என்னைப் பாட வெச்சிட்டே இருந்தார். தமிழில் மட்டுமல்லாம அவர் எந்த மொழிகள்ல வொர்க் பண்ணாலும், எனக்கு வாய்ப்பு கொடுத்தார். ஹாரிஷ் சாருக்கும் எனக்கும் பெரிய புரிதல் இருக்கு. அவரைப் பொறுத்தவரைக்கும் ராகத்தில் பாடினால் மட்டும் போதாது. டெக்னிக்கலாகவும் அது சரியா வரணும்னு நினைப்பார். பாடகர்களோட குரல் மைக்கோட எந்தப் பகுதியில் விழுந்தா அது சரியா இருக்கும்னு பார்த்துப் பார்த்து பாட்டை ரெக்கார்டு பண்ணுவார். இன்னுமே பல பேர் என்னை ஹாரிஷ் ராகவேந்திரான்னும் அவரை ஹரிஷ் ஜெயராஜுன்னும் மாத்தி மாத்திச் சொல்லுவாங்க. அந்தளவுக்கு நாங்க ஒண்ணா டிராவல் பண்ணியிருக்கோம்.’’

ஹாரிஸ் ஜெயராஜ் மாதிரியே யுவன் இசையிலும் நீங்க பாடிய பாடல்கள் எல்லாமே ஹிட்டாச்சே?

``யுவன் இசையில் நான் பாடிய சில பாடல்கள் எனக்கு ஒரு நல்ல நினைவுகளைக் கொடுத்திருக்கு. எப்பவுமே குத்துப்பாடல்களைத்தான் தியேட்டரில் ஆடியன்ஸ் அதிகமா ரசிப்பாங்க. ஆனால், `காதல் கொண்டேன்’ படத்தில் யுவன் இசையில் நான் பாடிய `தேவதையை கண்டேன்’, `தொட்டுத்தொட்டு போகும் தென்றல்’ பாடல்களுக்கு தியேட்டர்லேயே ஆடியன்ஸ் பயங்கரமா என்ஜாய் பண்ணாங்க. இந்த அனுபவம் எனக்கு முதன் முதலா இந்தப் பாடல்கள்லதான் கிடைச்சது. யுவன் இசையில நான் பாடிய `தீனா’ படத்தோட `என் நெஞ்சில் மிங்கிங் ஆனாளே’ பாட்டு என்னோட ஃபேவரைட். இது அஜித் சாருக்கும் ஃபேவரைட்டான பாடல்னு `திருப்பதி’ படத்தோட ஷூட்டிங்கில் என்கிட்ட சொன்னார். அஜித் சாரோட ப்ளேலிஸ்டில் இந்தப் பாட்டும் இருக்குனு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன். அதுக்கப்புறம் `ஏப்ரல் மாதத்தில்’ படத்தில் பாடிய `ஏய் நெஞ்சே என் நெஞ்சே’ பாட்டுக்கு என்னைக் கூப்பிட்டப்ப எனக்குத் தொண்டை சரியில்லை. நேர்ல போய் அவங்ககிட்ட சொல்லிட்டு வந்திடுவோம். என் குரலைக் கேட்டதுக்கு அப்பறம் அவங்களே என்னை அனுப்பி விட்டுடுவாங்கனு நினைச்சுத்தான், யுவன் ஸ்டூடியோவுக்குப் போனேன். ஆனால், அங்க போனதுக்கு அப்புறம் என் தொண்டைக்கு என்ன ஆச்சுனே தெரியலை; டக்குனு பாட ஆரம்பிச்சிட்டேன். அத்தனைக்கும் அந்தப் பாட்டு முழுக்க ஹை பிட்ச். எப்படித்தான் பாடி முடிச்சேன்னு தெரியலை; பாட்டும் ரொம்ப நல்லா வந்திடுச்சு. இப்படி யுவன் கம்போஸிங்ல எனக்குப் பல மெமரீஸ் இருக்கு.’’

`விஜய் - மணிசர்மா - ஹரிஷ் ராகவேந்திரா’ இந்த காம்போ எப்போதுமே ஹிட்டடிக்கிற மேஜிக் எப்படி நடந்துச்சு?

``விஜய் சார் எனக்கு ஸ்கூல் சீனியர்; அவரும் நானும் ஒரே ஏரியாதான். அவர் சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சு பெரிய ஸ்டார் ஆனதுக்கு அப்பறம், `நம்ம ஏரியாக்காரர் பெரிய நடிகராகிட்டார்’னு பெருமையா இருக்கும். அவருக்கு நான் பாடிய முதல் பாட்டு, `ஷாஜகான்’ படத்தோட `மெல்லினமே’தான். இந்தப் பாட்டோட ட்யூனில் பல்லவியோட ஒவ்வொரு வரிக்கு அப்புறமும் மூச்சு எடுக்குறதுக்கு ஒரு சின்ன கேப் இருக்கும். ஆனால் வைரமுத்து சார் அந்த கேப்பில் ஒரு ஒரு வார்த்தையைப் போட்டு எழுதி அனுப்பிட்டார். பாட்டை ரெக்கார்டு பண்ண அன்னைக்கு அவர் ஊர்ல இல்லை. அதுனால மணிசர்மா சார், `உன்னால மூச்சு எடுத்துக்காமப் பாட முடியும். நீ ட்ரை பண்ணு’னு சொன்னார். அப்படிப் பாடின பாட்டுதான் அது. அந்தப் பாட்டு செம ஹிட்டானதுக்கு அப்பறம், `யூத்’ படத்தோட `சர்க்கரை நிலவே’ பாட்டுப் பாடினேன். இந்தப் பாட்டுக்காக என்னைக் கூப்பிட்டப்ப நான் வெளியூர்ல கச்சேரிக்காகப் போயிருந்தேன். மணிசர்மா சார் நினைச்சிருந்தா வேற பாடகரை வெச்சு ரெக்கார்டு பண்ணியிருக்கலாம். ஆனா, எனக்காக ஒரு வாரம் வெயிட் பண்ணி, நான் வந்ததுக்கு அப்பறம் இந்தப் பாட்டை ரெக்கார்டு பண்ணார். இந்தப் பாட்டும் செம ஹிட். என்னதான் ஒரு சிங்கர் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடியிருந்தாலும், கச்சேரியில பாடும் போது அவர்கிட்ட 10 பாட்டுத்தான் ஞாபகத்துல வெச்சிருந்து கேட்பாங்க. அப்படி நான் எந்தக் கச்சேரிக்குப் போனாலும் என்னைக் கட்டாயம் பாடச் சொல்ற பாட்டுல ஒண்ணு இது. அந்தளவுக்கு எனக்கு பெரிய ஹிட்டைக் கொடுத்துச்சு. அதுக்கப்பறம் `திருப்பாச்சி’ படத்தோட `கண்ணும் கண்ணும்தான்’ பாட்டு. அதுவும் நல்ல ஹிட்.’’

பாடகரா இருந்த நீங்க திடீர்னு நடிகரானதுக்கு என்ன காரணம்..?

``டிவி சேனல்ல நான் கொடுத்த ஒரு பேட்டியைப் பார்த்துட்டு, நடிக்கிறதுக்காகச் சில பேர் கேட்டாங்க. எனக்குக் கொஞ்சம் பயமா இருந்தனால பண்ணலை. அப்படித்தான் ஒரு நாள் அருண் பாண்டியன் சார் என்னை நடிக்கிறதுக்குக் கேட்டார். `உன் கேரக்டருக்கு ஏத்த மாதிரியான படம்தான்’னு சொன்னார். அதுனால `விகடன்’ படத்துல நடிச்சேன். அதுக்கப்பறம் எனக்கு நடிக்கணும்னு தோணலை. நடிக்கலாம்னு போய், பாட்டுப் பாடுற வாய்ப்பும் வராமப் போயிடுச்சுன்னா என்ன பண்றதுனு, பாட்டு மேல மட்டும் கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஏன்னா, பாடகாரா இருந்துட்டு நடிகனாகலாம்னு நான் எடுத்த முடிவை ரொம்பவே சீக்கிரமா எடுத்துட்டேன். 2010-க்கு மேலதான் இசையமைப்பாளர்கள் நடிகராகுறது, பாடலாசிரியர்கள் நடிகராகுறதுனு விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ், பா.விஜய், சினேகன்னு பல பேர் நடிக்க வந்தாங்க. நான் அந்த முடிவை ரொம்பவே சீக்கிரமா எடுத்தனால, அது வொர்க் அவுட் ஆகலை. `விகடன்’ படத்துக்கு அப்பறம் நடிக்காம இருந்த என்னை, பேரரசு சார்தான் `திருப்பதி’ படத்துல மறுபடியும் நடிக்க வெச்சார். இப்போ மறுபடியும் நடிக்கலாம்னு இருக்கேன். அதேமாதிரி, பாடலாசிரியராகவும் சில பாடல்கள் எழுதியிருக்கேன். அதையும் இனிமேல் தொடர்ந்து பண்ணிட்டிருப்பேன்.’’

ஏன் இந்த இடைவெளி?

``எனக்கு மியூசிக் பண்ணணும்னு ரொம்ப நாள் ஆசை. படங்கள்ல பாட ஆரம்பிச்சதுக்கு அப்பறம் தொடர்ந்து அதுலேயே பிஸியா இருந்தனால மியூசிக் பண்ண முடியலை. இப்போ அதுக்கான முயற்சிகள்ல இருக்கேன். திருக்குறளில் இருக்கிற 133 அதிகாரத்துக்கு, 133 ராகங்களை வெச்சு, அதைப் பாடலா பண்ணிட்டிருக்கேன். திருக்குறளுக்கான விளக்கத்தையும் நானே எழுதி, அதையும் பாட்டுல சொல்லியிருக்கேன். இது இசையாவும் இருக்கும்; அடுத்த தலைமுறைக்கான பாடமாகவும் இருக்கும். அந்த வொர்க்லதான் பிஸியா இருக்கேன். இப்போ சில பாடல்களும் பாடியிருக்கேன். அதையும் தொடர்ந்து பண்ணிட்டுத்தான் இருப்பேன்.’’

அடுத்த கட்டுரைக்கு