Published:Updated:

``இனியும் என்னால கஷ்டத்தைத் தாங்க முடியாது!" - பேரனைக் காப்பாற்றப் போராடும் `கர்ணன்' பட பாடகி

குடும்பத்தினருடன் கிடாக்குழி மாரியம்மாள்

`கர்ணன்' படத்தின் `கண்டா வரச் சொல்லுங்க' பாடல் புகழ் கிடாக்குழி மாரியம்மாள், புற்றுநோயால் தவிக்கும் தன் பேரனைக் குணப்படுத்த போராடி வருகிறார். வாழ்வாதாரத்துக்கு வழியின்றி கலங்கித் தவிக்கிறது இவரின் குடும்பம். இக்கட்டான கஷ்ட நிலை குறித்து மனம் திறக்கிறார்.

``இனியும் என்னால கஷ்டத்தைத் தாங்க முடியாது!" - பேரனைக் காப்பாற்றப் போராடும் `கர்ணன்' பட பாடகி

`கர்ணன்' படத்தின் `கண்டா வரச் சொல்லுங்க' பாடல் புகழ் கிடாக்குழி மாரியம்மாள், புற்றுநோயால் தவிக்கும் தன் பேரனைக் குணப்படுத்த போராடி வருகிறார். வாழ்வாதாரத்துக்கு வழியின்றி கலங்கித் தவிக்கிறது இவரின் குடும்பம். இக்கட்டான கஷ்ட நிலை குறித்து மனம் திறக்கிறார்.

Published:Updated:
குடும்பத்தினருடன் கிடாக்குழி மாரியம்மாள்

`ஒரு வாய்ப்பு... ஓஹோவென புகழ்' என்பது அரிதாகவே நடக்கும் பெருமிதம். கடந்த ஆண்டில் வெளியான `கர்ணன்' படத்தில் இடம்பெற்ற `கண்டா வரச் சொல்லுங்க' பாடல் மூலம் ஒரே நாளில் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார் கிடாக்குழி மாரியம்மாள். பின்னணிப் பாடகியாக வேண்டுமென்ற இவரின் ஏக்கம், ஒரு தலைமுறைக்குப் பிறகு, அந்தக் கணத்தில் நிறைவேறியது. கொரோனா பிரச்னையால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கைகூடாத சிக்கலுடன், பேரனுக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோய் பாதிப்பு மாரியம்மாளின் குடும்பத்தை முழுவதுமாக முடக்கிப்போட்டுள்ளது.

மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணனுடன் மாரியம்மாள்
மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணனுடன் மாரியம்மாள்

மாரியம்மாளின் மூத்த பேரன் சிவா, ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஓராண்டுக்கும் மேலாகத் தொடரும் சிகிச்சைக்காகப் பல லட்சங்கள் செலவழித்துள்ள நிலையில், தொடர் சிகிச்சைக்கும் வாழ்வாதாரத்துக்கும் வழியின்றி கலங்கித் தவிக்கிறது இவரின் குடும்பம். இதுகுறித்து மாரியம்மாளிடம் பேசினோம். வார்த்தைகள் வரும் முன்னரே, அவரது குரல் உடைகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``என் சின்ன வயசுல மேடை நாடகங்கள், கரகாட்ட நிகழ்ச்சிகளை அதிகம் பார்ப்பேன். அந்தத் தாக்கத்துல கலைத்துறையில வேலை செய்யணும்னு ஆசைப்பட்டேன். எட்டு வயசுல மேடைப் பாடகியாகி கேள்வி ஞானத்துல பாடிக்கிட்டிருந்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, என் கணவர் கொட்டும் முரசு கோட்டைச்சாமிகிட்டயும் முறைப்படி பாடக் கத்துக்கிட்டேன். அந்த நேரத்துல அவரும் நானும் நாட்டுப்புறப் பாடகர்களா உச்சத்துல இருந்தோம். எங்க பாடல்களுக்குப் பெரும் வரவேற்பு இருந்துச்சு. எந்த ஒரு நல்ல விஷயமும் என் வாழ்க்கையில ரொம்ப நாளைக்கு நீடிக்காது. தனிப்பட்ட காரணத்தால, கல்யாணமான சில வருஷங்கள்லயே கணவரை விட்டுப் பிரிஞ்சேன். ஆனாலும், வாழ்வாதாரத்துக்காக மேடை நிகழ்ச்சிகள்ல மட்டும் அவரோடு சேர்ந்து பாடினேன்.

மாரியம்மாளின் மகள், பேரன் சிவா...
மாரியம்மாளின் மகள், பேரன் சிவா...

பெத்தவங்க, மகள்னு என்னை நம்பி நிறைய ஜீவன்கள் இருந்துச்சு. அவங்களையெல்லாம் காப்பாத்த தனி மனுஷியா ரொம்பவே கஷ்டப்பட்டேன். அந்தக் காலத்துச் சூழ்நிலையில பெண் பிள்ளைகளுக்கு இந்தத் துறை தோதுப்படாதுனு நினைச்சு, என் மகளைப் படிக்க அனுப்பினேன். ஆனா, அவளுக்கோ இசைத்துறையிலதான் நாட்டம். அதுக்காக, என்கிட்ட சம்மதம் வாங்க அவ பட்ட கஷ்டம் தனி அத்தியாயம். அப்புறம் நாங்க ரெண்டு பேருமே நிறைய மேடைகள்ல பாடினோம். மகளுக்குக் கல்யாணமானதும், ரெண்டு குடும்பங்களும் ஒண்ணாதான் வசிச்சோம். உடல்நிலை சரியில்லாம மகளோட கணவரும் சின்ன வயசுலேயே இறந்துட்டார். இப்போவரைக்குமே எங்களுக்குப் போராட்ட வாழ்க்கைதான்" - விடாமல் துரத்தும் போராட்ட வாழ்க்கை குறித்து கவலையுடன் பகிர்ந்தவர், பேரனின் உடல்நிலை குறித்து கண்ணீர் மல்கப் பேசினார்.

``கர்ப்பப்பை, சினைப்பையை நீக்க ஆபரேஷன் முடிஞ்சு, சர்க்கரை அளவும் அதிகரிச்சு, கொஞ்ச காலமாவே என் ஒடம்பு முன்ன மாதிரி ஒத்துழைக்குறதில்ல. இத்தனை வருஷங்களுக்குப் பிறகு, சினிமா வாய்ப்பெல்லாம் வராதுனு மனசைப் பக்குவப்படுத்திகிட்டேன். இந்த நிலையிலதான் `கர்ணன்' படப் பாடல் வாய்ப்பு வந்துச்சு. இந்த நிலையில, கடந்த மே மாசம் பெரிய பேரனுக்குப் பிறந்தநாள் கொண்டாடினோம். அவன் கடைசியா சந்தோஷப்பட்டது அப்பதான். கொஞ்ச நாள்லயே திடீர்னு நெஞ்சுவலி, மூச்சுத்திணறலுடன், பேசவும் சாப்பிடவும் சிரமப்பட்டான். டாக்டரைப் பார்த்ததுல, புள்ளைக்கு கேன்சர் இருக்குதுனு சொன்னாங்க. தலையில இடியே இறங்குன மாதிரி இருந்துச்சு. திருச்சியிலயும், அப்புறமா சென்னையிலயும் சில காலம் தனியார் ஆஸ்பத்திரியில புள்ளைக்கு சிகிச்சை நடந்துச்சு.

மகனுடன் லக்ஷ்மி
மகனுடன் லக்ஷ்மி

செலவு கட்டுப்படியாகல. அப்புறம் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்ல இலவசமா வைத்தியம் கொடுத்தாங்க. அதுக்காகவே சென்னையில வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கினோம். அப்பதான் `கர்ணன்' பாட்டு ரிலீஸாச்சு. எதிர்பாராத வகையில நிறைய பாராட்டுகளும் புகழும் எனக்குக் கிடைச்சது. `இனி நம்ம வாழ்க்கையில வசந்தம் பொறந்துடும். பேரனைக் குணப்படுத்திடலாம்'னு ஆசைப்பட்டேன். அதெல்லாமே பகல் கனவா போயிடும்போல! பேரக்குழந்தைங்க ரெண்டு பேரையுமே என் புள்ளைங்க மாதிரிதான் வளர்த்தேன். இவனுங்களும் என் மவளும்தான் எனக்கான பிடிப்பு. என் பேரன் துடிக்குறதை என்னால பார்க்க முடியல" - வார்த்தைகள் தடுமாற அமைதியாகிறார் மாரியம்மாள்.

`கர்ணன்' பாடல் வெற்றியால், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாள சினிமாக்களில் இருந்தும் மாரியம்மாளுக்குப் பாடல் வாய்ப்புகள் வந்துள்ளன. கொரோனா இரண்டாம் அலையால், அந்த வாய்ப்புகள் செயல் வடிவம் பெறாமல் கிடப்பில் உள்ளன.

குடும்பத்தினருடன் கிடாக்குழி மாரியம்மாள்
குடும்பத்தினருடன் கிடாக்குழி மாரியம்மாள்

``பேரனுக்கும் மியூசிக்ல ஆர்வம். காலேஜ்ல மியூசிக் படிப்புல சேரணும்னு ஆசைப்பட்டான். `என் ஃப்ரெண்ட்ஸ் காலேஜ் படிக்குறாங்க. என்னால காலேஜ் சேர முடியலையே... நான் பிழைப்பேனா?'ன்னு அழுவுறான். அவனுக்கு என்ன பதில் சொல்லுறதுனு தெரியாம நானும் மவளும் தவிக்குறோம். அவனுக்கான சிகிச்சைக்காக, புதுசா கட்டின வீட்டையும் வித்துட்டோம். கைவசம் இருந்த எல்லாச் செல்வங்களையும் இழந்துட்டோம். சென்னையிலிருந்து மறுபடியும் புதுக்கோட்டைக்கு வந்து, வாடகை வீட்டுல வசிக்குறோம். சம்பாத்தியம் இல்லாம, மூணு மாசமா வீட்டு வாடகையும் கொடுக்கல.

`கர்ணன்' படத்துக்குப் பிறகு, இப்போவரை புதுசா ஒரு பாடல்கூட இன்னும் சினிமாவுல பாடல. ஒரு வருஷமாவே நிம்மதி இல்ல. எங்க போனாலும் அழுதுகிட்டேதான் இருக்கேன். நாங்க சிரிச்சு ரொம்ப காலமாச்சு. எந்த நல்ல விஷயமும் என் வாழ்க்கையில ரொம்ப நாளைக்கு நீடிக்காதுனு முன்னாடியே சொன்னேன்ல... இனியும் எத்தனை கஷ்டங்களைத்தான் தாங்குறது? வாய்ப்பு உள்ளவங்க இயன்ற உதவியை எங்களுக்குச் செஞ்சு, என் பேரனைக் காப்பாத்திக் கொடுங்கய்யா..." என்று ஆற்றாமையுடன் முடித்தார் மாரியம்மாள்.

மகனுடன் லக்ஷ்மி
மகனுடன் லக்ஷ்மி

திருச்சியில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் மகனைக் கவனித்துக்கொள்ளும் மாரியம்மாளின் மகள் லக்ஷ்மியிடம் பேசினோம். ``அம்மாவுக்கு சினிமாவுல பாடுற ஆசை நிறைவேறாத நிலையில, நானாச்சும் பின்னணிப் பாடகியாகி, அம்மாவின் ஏக்கத்தைக் குறைக்கலாம்னு ஆசைப்பட்டேன். அதுக்காக நான் எதிர்கொண்ட சிரமங்கள் சொல்லி மாளாது. ஜீ தமிழ் சேனல்ல ரியாலிட்டி நிகழ்ச்சியிலயும் கலந்துகிட்டுப் பாடினேன். அதன் பிறகு சினிமாவுல பாடும் வாயுப்புகள் அமைய இருந்துச்சு. அதுக்குள்ள கொரோனா வந்திடுச்சு. இந்த நிலையிலதான் பையனுக்கு உடல்நிலை சரியில்லாம போச்சு. `நுரையீரலைச் சுத்தி அசுத்த நீர் பரவியிருக்கு. பல லிட்டர் நீரை எடுத்தும், தொடந்து நீர் உருவாகிட்டே இருக்கு. நுரையீரல் பகுதியில உருவாகியிருக்குற புற்றுக்கட்டிதான், அசுத்த நீரைப் பரப்பிகிட்டு இருக்கு'னு ஆஸ்பத்திரியில சொன்னாங்க.

பையனுக்கு சிகிச்சை நடந்துட்டு இருந்தபோதுதான், அம்மா பாடின `கர்ணன்' பாட்டு ரிலீஸாச்சு. அம்மாவோட பெருங்கனவு நிறைவேறுன சந்தோஷத்தைப் பலர்கிட்டயும் வெளிப்படுத்தக் கூட முடியாத துயரத்துல இருந்தோம். பலமுறை கீமோதெரபி சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில, பையன் ஓரளவுக்கு குணமானான். வீட்டுல ஓய்விலிருந்த பையனுக்கு மறுபடியும் உடம்பு சுகவீனமாச்சு. கடந்த வாரம்தான் மறுபடியும் ஆஸ்பத்திரியில சேர்த்தோம். இப்போ சிகிச்சை போயிட்டிருக்கு. பையன் படுற அவஸ்தையைப் பார்க்க முடியாம, அம்மா இப்போ ஆஸ்பத்திரிக்கு வர்றதையே குறைச்சுகிட்டாங்க. வீட்டுலேயே கெடந்து அழுதுகிட்டிருக்காங்க.

மகனுடன் லக்ஷ்மி
மகனுடன் லக்ஷ்மி

எங்க கஷ்டத்தைக் கேள்விப்பட்டு டைரக்டர் மாரி செல்வராஜ் சார், பின்னணிப் பாடகர் ஶ்ரீநிவாஸ் உட்பட சிலர் உதவினாங்க. யார்கிட்ட உதவி கேட்குறதுனு தெரியல. உதவி கேட்டா தப்பா எடுத்துப்பாங்களோன்னும் பயமா இருக்கு. எங்க சக்திக்கு மீறி பல லட்சம் செலவழிச்சுட்டோம். இனி என்ன பண்றதுனு தெரியல. வேறு வழியே இல்லாமதான், மத்தவங்ககிட்ட உதவியை எதிர்பார்க்கிறோம். பைத்தியம் பிடிக்காத குறையா என்ன பண்றதுனே தெரியாம தவிக்குறோம். எங்க கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது..." - மகனைக் குணப்படுத்த வேண்டிய தவிப்புடன் முடித்துக்கொண்டார் லக்ஷ்மி.

Note:

இக்கட்டான சூழலில் தவிக்கும் மாரியம்மாளின் குடும்பத்துக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com' என்ற மெயில் ஐ.டி-க்கு தொடர்புகொண்டு விவரங்களைத் தெரிவிக்கலாம். மாரியம்மாள் குறித்த தகவல்கள் உங்களுக்கு உடனடியாகத் தரப்படும். உங்கள் உதவியை மாரியம்மாள் குடும்பத்துக்குக் கொண்டு சேர்க்கும் பணியை விகடன் ஒருங்கிணைக்கும்.