Published:Updated:

"கலைஞர்கள் குழந்தைங்க மாதிரி!" இளையராஜா - எஸ்.பி.பி குறித்து நெகிழும் பாடகி எஸ்.பி.ஷைலஜா

ஆ.சாந்தி கணேஷ்

இளையராஜாவும், எஸ்பிபியும் இணைந்தது குறித்து எஸ்பிபியின் தங்கையும், பாடகியுமான எஸ்பி ஷைலஜா நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்

இளையராஜா
இளையராஜா

இளையராஜாவும் எஸ்.பி.பியும் இணைந்துவிட்டார்கள் என்ற செய்திதான் நேற்றிலிருந்து இசை ரசிகர்களின் காதுகளிலெல்லாம் இனித்து வழிந்துகொண்டிருக்கிறது. பாடகி எஸ்.பி. சைலஜாவிடம் இசையும் குரலும் இணைந்துவிட்டதே மேடம் என்றோம். ''இது நான் எதிர்ப்பார்த்த விஷயம்தாங்க'' என்றவர் உணர்வுக்குவியலாக பேச ஆரம்பித்தார்.

இளையராஜாவுடன் எஸ்பிபி
இளையராஜாவுடன் எஸ்பிபி

''நம்ம வீடுகள்ல அக்கா - தங்கை, அண்ணன் - தம்பிக்குள்ள வர்ற சின்னச் சின்ன வருத்தங்கள் மாதிரிதான் அண்ணனுக்கும் ராஜா சாருக்கும் இடையே நடந்துச்சு. சுத்தியிருக்கிற நாமெல்லாம் என்ன பிரச்னை, ஏன் பிரிஞ்சீங்கன்னு காரணத்தைக் கேட்டாதான் அந்த பிளவு இன்னும் பெருசாகும். கொஞ்ச காலம் அதைப்பத்தி யாரும் பேசலைன்னா, அது தானாகவே சரியாகிடும். அதுதான் இப்ப நடந்திருக்கு. கலைஞர்கள் குழந்தைங்க மாதிரி.

ஒரு சந்தர்ப்பத்துல ரெண்டு பேரும் மீட் பண்ணா, நடந்த பிரச்னைகளையெல்லாம் மறந்துட்டு ஒண்ணு சேர்ந்துடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறதைப் பார்க்கிறப்போ எவ்வளவு சந்தோஷமா இருக்கு பாருங்க. அண்ணனுக்குத் தங்கையா, ராஜா சாரோட இசையில பாடின பாடகியா எனக்கு இது ரெட்டை சந்தோஷம். அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கிறப் படங்களை பார்க்கிறப்போ கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்குங்க.

எஸ்பி சைலஜா
எஸ்பி சைலஜா

நடக்கப் போகிற கச்சேரியில பாடறதுக்கு அண்ணன் ஒத்துக்கிட்டதும் 'அண்ணா நீ பாடப் போறியா'ன்னு கேட்டேன். 'என்னைக் கூப்பிட்டு இருக்காங்க. எங்களுக்குள்ள எந்தப் பிரச்னையுமில்ல. நான் அவன்கிட்டே போகப் போறேன்'னுதான் சொன்னார்.

அண்ணனும் ராஜா சாரும் பிரிஞ்சி இருந்தப்போ, ராஜா சார் பாடல்களை கேட்கிறப்போ எல்லாம், உடனே அவரைப் பத்தி பேச ஆரம்பிச்சிடுவார் அண்ணா. ராஜா சார் அன்பை மனசுல வச்சுக்குவார்; என் அண்ணன் அதை வெளிப்படையா காட்டக்கூடியவர்.

மத்தபடி ரெண்டு பேருக்குமே ஒருத்தர் மேலே ஒருத்தர் அன்பு இருக்குங்க. அவங்க ரெண்டு பேரும் கண்டிப்பா ஒண்ணு சேருவாங்கன்னு எனக்கு நல்லாவே தெரியும். இது நான் எதிர்பார்த்ததுதான்'' என்கிற ஷைலஜாவின் குரலில் மகிழ்ச்சித் தூக்கலாகவே தெரிகிறது.

ஆ.சாந்தி கணேஷ்