ஏற்கெனவே வெளியாகி ஹிட் ஆன படங்களின் தலைப்புகளையே புதிய படங்களுக்கு மறுபடியும் வைக்கும் வழக்கம் சமீபமாக தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது. 'காக்கிச் சட்டை' முதல் 'கர்ணன்' வரை இதற்கு எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம். இப்படிப் பெயர் வைக்கிற போது சிலர், பழைய ஹிட் படங்களின் உரிமையாளர்களிடம் முறையாகப் பேசி அனுமதி வாங்கி விடுகின்றனர். சிலரோ, அப்படி எதுவும் செய்வதில்லை. தலைப்புக்கு அனுமதி வாங்காத பட்சத்தில்தான் பிரச்னை உண்டாகிறது.
''எங்கள் படங்களின் பெயரை எங்களிடம் அனுமதி பெறாமல் மறுபடியும் வைப்பது முறையான செயல் அல்ல'' என்கிறார்கள், ஏற்கெனவே அந்தப் பெயரில் படம் தந்தவர்கள்.
'நான் அவன் இல்லை', 'குரு என் ஆளு' ஆகிய படங்களை இயக்கிய செல்வாவின் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்திருக்கும் 'வணங்காமுடி' படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன் வெளியானதிலிருந்து படத்தின் தலைப்பும் பிரச்னைக்குள்ளாகி இருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
'' 'வணங்காமுடி' 1957-ல் வெளியான படம். சிவாஜி கணேசன், சாவித்திரி, எம்.என்.நம்பியார், கே.ஏ.தங்கவேலு முதலானோர் நடிச்சிருந்தாங்க. என்னுடைய அப்பா ஏ.கே.பாலசுப்ரமணியம் தயாரிக்க பி.புல்லையா இயக்கியிருந்தார். 'சரவணபவா அண்ட் யூனிட்டி பிக்சர்ஸ்'ங்கிற பேனர்ல தயாரானது. தமிழ் சினிமாவுல சிவாஜிக்கு முதன்முதலா பெரிய கட் அவுட் வச்சது இந்தப் படத்துக்குத்தான். அப்படியிருக்க, இப்ப 'வணங்காமுடி'ங்கிற அதே பேர்ல ஒரு புதுப் படத்தின் டீசர் வெளியாகி இருக்கு. இது பத்திக் கேள்விப்பட்டதும் எங்களுக்கு பெரிய அதிர்ச்சியா இருந்தது'' என்கிறார் தயாரிப்பாளர் ஏ.கே.பாலசுப்ரமணியத்தின் மகன் மோகன் குமார்.
''படத்தின் ட்ரெய்லரையும் நாங்க பார்த்தோம். செல்வாங்கிறவர் இயக்க, அரவிந்த் சாமி நடிச்சிருக்கார். தயாரிப்பாளர் யாருங்கிற விபரம் எங்களுக்குத் தெரியலை. மேஜிக் பாக்ஸ் ஃபிலிமிஸ்னு போட்டிருக்காங்க. 'வானம்', 'பண்ணையாரும் பத்மினியும்' ஆகிய படங்களைத் தயாரிச்சவங்கனு குறிப்பிட்டிருக்காங்க.

என்னுடைய கேள்வி என்னன்னா, சினிமாவுக்குப் புதுசா வர்ற தயாரிப்பாளர்களே படத்துக்கு டைட்டில் வைக்கிறப்ப அந்த டைட்டில்ல ஏற்கெனவே படம் வெளிவந்திருக்கா, வந்திருந்தா யார் படம், வெளியான வருஷம்னு பல விபரங்களையும் நிச்சயம் தெரிஞ்சுதான் டைட்டில் வைப்பாங்க. ரெண்டு படம் தயாரிச்ச இந்தத் தயாரிப்பாளருக்கு சிவாஜி நடிச்ச 'வணங்காமுடி' படம் பத்தித் தெரியாமலா இருக்கும்?
தெரிஞ்சும், 'அதையெல்லாம் பார்த்துக்கலாம்'ங்கிற மனப்பான்மையில வச்சிருந்தா அது சரியான நடைமுறையா, சட்ட விரோதமில்லையா?" எனக் கேள்வி எழுப்புகிறார் மோகன் குமார்.
'வணங்காமுடி'யைத் தயாரித்த இந்த ஏ.கே.பாலசுப்ரமணியம் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பல படங்களைத் தயாரித்த ஜூபிடர் பிக்சர்ஸ் எம். சோமசுந்தரத்தின் மாப்பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.