Published:Updated:

1954-ல் வெளியான தமிழ் சினிமாவின் வித்தியாச முயற்சி பற்றி தெரியுமா?

நாயகனை மட்டுமே மையப்படுத்தி கதைகள் உண்டான சமயத்தில் நாயகிக்கும் (பண்டரிபாய்) சரிபங்கு அளித்ததோடு நிறுத்தாமல், அவரை வைத்து உலகப் போரின் ஐரோப்பிய அரசியலை இந்தப் படத்தில் பேசியுள்ளனர்.

Andha Naal
Andha Naal

ஒருவர் இயக்கி, அந்த ஒருவர் மட்டுமே நடித்த உலகின் முதல் சினிமாவாக வெளியாகவிருக்கிறது `ஒத்த செருப்பு' படம். இதேபோல் வித்தியாச முயற்சிகள் பிளாக் அண்டு வொயிட் காலத்திலிருந்தே தமிழ் சினிமாவில் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படி பெரிய அளவில் இப்போதும் கொண்டாடப்படும் படம்தான் `அந்த நாள்'.

ஒத்த செருப்பு
ஒத்த செருப்பு

1954-ஆம் ஆண்டு வெளிவந்து தேசிய விருது பெற்ற தமிழ்ப் படம்தான், `அந்த நாள்'. சுந்தரம் பாலசந்தர் இயக்கத்தில் சிவாஜி நாயகனாக நடித்த இந்தப் படம்தான் தமிழ் சினிமாவின் முதல் `noir' வகைத் திரைப்படம். அதிலும் குறிப்பாக, `Locked Room Mystery' வகையைச் சார்ந்தது.

இந்தப் படத்தில் ஒரு குற்றம் நிகழ்வதை, அந்தக் கதையில் வரும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் அவரவர் பார்வையில் விவரிப்பர். இறுதியில் யார் குற்றம் புரிந்தது எனத் துப்பறியும் வகையில் எழுதப்பட்ட கதை இது.

ஆரம்பகால தமிழ் சினிமாவில் குறைந்தது எட்டுப் பாடல்களாவது இருக்கும். ஆனால், திரைக்கதைக்கு முக்கியத்துவம் அளித்த `அந்த நாள்' படத்தில் பாடல்களே இல்லை. 50-களில் புராண இதிகாசங்களை மையப்படுத்தியே பெரும்படங்கள் வெளிவந்தன. அந்த விதியை மாற்றி மேற்குலகக் கலைபாணியை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது இந்தப் படம். பாடல்கள், நடனம், சண்டைக் காட்சிகள் இல்லாத முதல் தமிழ்ப் படமும் இதுதான்.

Andha Naal
Andha Naal

நாயகனை மட்டுமே மையப்படுத்தி கதைகள் உண்டான சமயத்தில் நாயகிக்கும் (பண்டரிபாய்) சரிபங்கு அளித்ததோடு நிறுத்தாமல், அவரை வைத்து உலகப் போரின் ஐரோப்பிய அரசியலை இந்தப் படத்தில் பேசியுள்ளனர். பெண் விடுதலை என்று போராடிக்கொண்டிருந்த சமயத்தில் 'கொலையும் செய்வாள் பத்தினி' என்கிற ஒன்லைன் கதையை எடுப்பதெல்லாம் பெரும் துணிச்சல்.

படத்தின் சுவாரஸ்யப் பகுதியே அவர்கள் எடுத்துக்கொண்ட கதைக்களம்தான். 1943 அக்டோபர் 11 இரவு அன்று இரண்டாம் உலகப்போரின் ஒரு பகுதியாக ஜப்பான் விமானங்கள் சென்னை மாநகரத்தின் மீது குண்டு வீசியது. அதற்கு மறுநாள் காலை, ரேடியோ இன்ஜினீயரான ராஜன் (சிவாஜி கணேசன்) சுடப்பட்டு இறந்துபோகிறார். போலீஸுக்குத் தகவல் சொல்லப்படுகிறது.

Andha Naal
Andha Naal

சென்னை அன்று மயான அமைதி பூண்டிருந்தது. மக்கள் மறுபடியும் குண்டு வெடிக்குமோ என்ற அச்சத்தில் ஊரைவிட்டு வெளியேறிக்கொண்டிருக்கும் சமயத்தில் போலீஸ் வாகனம் ராஜன் வீட்டுக்கு விரைகிறது. அங்கே இன்ஸ்பெக்டர் நாயுடு உடன் C.I.D சத்யானந்தம் இணைகிறார். ஷெர்லாக் ஹோம்ஸ்போல ஒரு தொப்பி, ஆங்கிலேய ஆடை பாணி, விசாரணையில் ஒரு புன்னகை நெடி, எதனையும் சிந்தித்து முடிவெடுக்கும் கில்லாடியாக வருகிறார், ஜவகர் சீதாராமன். இவர்தான் படத்துக்கு வசனமும், திரைக்கதையும் எழுதியிருக்கிறார்.

ராஜன் இறந்த இடத்தின் அருகில் பெட்டியில் கட்டுக்கட்டாகப் பணம் கிடக்கிறது. எனவே, திருடன் கொலை செய்திருக்கலாம் என முதலில் சந்தேகம் வருகிறது. துப்பறிவாளர் அதை மறுக்க, பணத்தை விட்டுச் சென்றிருப்பதால் இங்கே வேறு ஏதோ மர்மம் நிகழ்ந்திருக்கிறது எனப் பல்வேறு கோணத்தில் ஆய்வைத் தொடங்குகிறார்.

```விஸ்வாசம்' வசூலின் உண்மை, விஷாலின் போக்கு, ஆன்லைன் புக்கிங்கில் அரசின் அதிரடி!''- ஜே.எஸ்.கே.சதீஷ்

அப்பாவித் தம்பி பட்டாபி, கோபக்காரத் தம்பி மனைவி, சந்தேகப்படும் படியான பக்கத்து வீட்டுப் பணக்காரர், ரகசியக் காதலி, தேசபக்தி மிகுந்த மனைவி எனப் பலரிடம் விசாரணை நடக்கிறது. அவரவர் தங்கள் பாணியில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானமாகச் சொல்கிறார்கள். அவர்கள் தங்கள் கதையைச் சொல்லும்போது மட்டுமே சிவாஜி திரையில் தோன்றுகிறார்.

ஒரே காட்சி ஆனால் வெவ்வேறு கதாபாத்திரங்களோடு நடிக்க வேண்டும். தனித்தனி ஆளுமைகளுக்கு ஏற்றாற்போல தனது சாயலை மாற்றி ரசிக்க வைக்கிறார், சிவாஜி. கல்லூரிக் காலங்களில் மாணவனாக மிடுக்காக மேடையில் பேசுவதும், இன்ஜினீயர் ஆனதும் ஏளன சைகை செய்து ஆங்கில வார்த்தைகளில் ஜாலம் செய்வதுமென ரசிக்க வைக்கிறார், சிவாஜி.

Andha Naal
Andha Naal

யார் இந்தக் கொலையைச் செய்திருப்பார் என மக்களை ஆவலோடு பார்க்க வைப்பதோடு, ஒவ்வொரு நடிகரும் ஸ்கோர் செய்யுமாறு காட்சிப்படுத்தியுள்ளார், இயக்குநர். ஜப்பான் குண்டு தாக்குதலுக்கும், ராஜன் கொலை மர்மத்திற்கும் உள்ள தொடர்பை இறுதியில் அவிழச் செய்கிறார்கள். ராஜன் ஒரு ரகசிய உளவாளி. 50-களில் ஒரு Spy Thriller. மேலும், படத்திற்கு வசனங்கள் எவ்வளவு முக்கியத்துவமாக இருந்துள்ளன என்பது `அந்த நாள்' பார்த்தால் புரியும். படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பு வரும் தேசத்தைப் பற்றிய வசனங்கள், பெண்களும் அந்தக்கால அரசியலில் எவ்வளவு ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள் என்பது புரியும்.

நேர்த்தியான படத்தொகுப்பு, காட்சிப்படுத்திய விதம், விறுவிறுப்பான பின்னணி என எல்லாமே மிளிர்கிறது. படத்தின் இறுதிக் காட்சியில் குற்றவாளியாகச் சந்தேகப்படும் நபர்களின் கையில் ரிவால்வரைக் கொடுத்து கொலை நடந்த அறையில் நிற்க வைத்துத் துப்பறியும் காட்சி அன்றைய ஆங்கிலப் படங்களுக்கு இணையானது என்றே சொல்லலாம். குண்டுவெடிப்புக்குப் பின்னான சென்னை நகரம், அந்தக்கால போலீஸ் வாகனம், ஜப்பானில் தயாரிக்கப்பட்ட டிரான்ஸ்மீட்டர், கைரேகையைப் பதிவெடுத்து பூதக்கண்ணாடி வைத்துக் கண்டுபிடிப்பது என அக்கால சென்னைக்கு அழைத்துச் செல்கிறது, இந்தப்படம்.

Andha Naal
Andha Naal
Vikatan

`அந்த நாள்' படம் ஒரு கலைப் புரட்சியாக வெற்றிபெற்றாலும், அன்றைய தமிழ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை. பாடல்கள் இல்லாதது ஒரு காரணம் என்று சொன்னாலும், முக்கியக் காரணமாகக் கருதப்படுவது படத்தில் சிவாஜியின் மரணம்தான். `பராசக்தி', `மனோகரன்' படம் வெளியான பின்னர் சிவாஜிக்கு ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிய சமயம் அது. முதல் காட்சியிலேயே நாயகன் இறந்துபோனதால், ஏமாற்றம் அடைந்தார்கள் ரசிகர்கள். காலப்போக்கில் விருதுகள் பெற்ற படமாக இருந்தாலும், மக்களிடம் மனதில் பதிவுபெறாத படமாகவே இருந்துவிட்டது `அந்த நாள்'. இப்போது காலம் `அந்த நாள்' படத்தைக் கொண்டாடுகிறது.