சிவகார்த்திகேயன் அடுத்து வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கிறார் என்றும் அதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் பேச்சு எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்தோம்.
`மாநாடு', `மன்மதலீலை' படத்திற்குப் பிறகு, இப்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து தன் புதிய படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த அதன் பூஜையின் போது ராணா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டனர். 'மாநாடு' சமயத்திலேயே சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு இணைவதற்கான சூழலும், பேச்சும் எழுந்தது. இந்நிலையில்தான் வெங்கட் பிரபு, தெலுங்கு பக்கம் சென்றார். சிவாவும், 'ப்ரின்ஸ்' படத்தை முடித்துவிட்டு ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படம் மற்றும் 'மாவீரன்' படத்தில் இருக்கிறார். 'மண்டேலா' மடோன் அஷ்வின் அதனை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தை முடித்த பின்னரே சிவா, ஏ.ஜி.எஸ் படத்திற்கு வருகிறார். அதற்குள் வெங்கட் பிரபுவும் நாகசைதன்யா படத்தை முடித்துவிட்டு, சிவாவின் படத்திற்கான கதையை ரெடி பண்ணுவார் என்கிறார்கள். 'பிகில்' படத்திற்குப் பின் பெரிய படங்கள் தயாரிப்பிலிருந்து ஒதுங்கிய ஏஜிஎஸ், இடையே 'நாய் சேகர்' என்ற குறைந்த பட்ஜெட் படம் ஒன்றைத் தயாரித்தது. அதன்பின், இப்போது 'லவ் டுடே' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கிடைத்திருப்பதால், மீண்டும் பெரிய பட்ஜெட்டிற்குள் வருகின்றனர். இந்தப் படம் அநேகமாக அடுத்த ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பரில்தான் டேக் ஆஃப் ஆகும் என்ற பேச்சும் இருக்கிறது. எனவே, அடுத்தாண்டுதான் மேற்கொண்டு இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.