Published:Updated:

`சைலன்டாக முடிந்த 90% பணிகள்!' - பரபரக்கும் சிவகார்த்திகேயனின் சயின்ஸ் ஃபிக்ஷன் படம்

Sivakarthikeyan - AR Rahman - Ravikumar
Sivakarthikeyan - AR Rahman - Ravikumar

`சீமராஜா' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் `இன்று நேற்று நாளை' இயக்குநரோடு இணைந்த செய்தி பரவலாகப் பேசப்பட்டது. சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படத்தை, `24 ஏ.எம்' ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

இடையில் தயாரிப்பில் சில பல சிக்கல்கள் ஏற்பட்டதால் படம் பாதியிலேயே நின்றுபோனது. இதைத் தொடர்ந்து படத்தின் 90 சதவிகிதப் பணிகள் முடிந்திருப்பதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

தொடர்ந்து பல கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த சிவகார்த்திகேயன், முதல் முதலாக சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஜானர் படத்தில் கமிட்டாகியிருந்ததும் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. அதுவும் வெற்றிப் படம் கொடுத்த `இன்று நேற்று நாளை' இயக்குநரான ரவிகுமாரோடு இணைகிறார் என்று சொன்னதும் எதிர்பார்ப்பு மேலும் அதிகமானது. 7 ஷெட்யூல்களாகப் பிரித்து படத்தின் ஷூட்டிங்கை நடத்தத் திட்டமிட்டிருந்தனர். இதில், நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் பணப்பற்றாக்குறை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.

அதன் பின்னர், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் மீதியுள்ள படத்தைத் தொடர படக்குழு திட்டமிட்டனர். இந்த நிலையில், சைலன்டாக படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், மீதியிருக்கும் 10 சதவிகித படப்பிடிப்பும் `24 ஏ.எம்' ஸ்டுடியோஸ் பேனரிலேயே நடைபெறும் என்று செய்திகள் தற்போது வெளியாகி வருகின்றன. மேலும், இப்படத்துக்கு சர்வதேச அளவில் கிராஃபிக்ஸ் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கான வேலைகள் நீண்டநாள்கள் எடுத்துக்கொள்ளும் எனத் தெரிகிறது. ஏர்.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படம், அடுத்த வருடத்தின் பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு