Published:Updated:

`ஒத்த செருப்பு'... உலக சினிமாவா... உள்ளூர் சினிமாவா? #SneakPeek

Oththa Seruppu Size 7
Oththa Seruppu Size 7

ஒற்றை கேரக்டர் பின்னணியில் வெளியான அனைத்து சினிமாக்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பதுதான் `ஒத்த செருப்பு' படத்தின் முதல் ப்ளஸ்.

ஒருவர் மட்டுமே நடித்து, அந்த ஒருவரே இயக்கி, தமிழ் சினிமாவின் தனிப்பெரும் முயற்சியாக இந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது பார்த்திபனின் `ஒத்த செருப்பு சைஸ் 7'. வசனங்களற்று சினிமா உருவான போது, கொடிகட்டிப் பறந்தார் சார்லி சாப்ளின். டெக்னாலஜியின் வளர்ச்சியில் சினிமாக்கள் பேசத்தொடங்கியவுடன் `கோமாளியின் காலம் முடிந்துவிட்டது' எனத் தலையங்கங்கள் எழுதப்பட்டன. கோமாளி பேசத்தொடங்கிவிட்டான் என்றார் சார்லி சாப்ளின். அதில் வெற்றியும் பெற்றார். அதற்குப் பிறகும் பேசா படங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார் சார்லி. ஒலியின் வளர்ச்சியால் இந்தியாவிலும் `ஆலம் ஆரா' பிறந்தது. பேசும் படங்கள் வந்தபின்னும் வெளியானது `பேசும்படம்'. இப்படி சினிமா எப்போதும் பரிசோதனை முயற்சிகளுக்கு இடம்கொடுத்தே வந்திருக்கிறது.

Oththa Seruppu Size 7
Oththa Seruppu Size 7

பார்த்திபன் இராதாகிருஷ்ணனின் `ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல் எனப் பார்க்கும் முன், வித்தியாச முயற்சிகளாக திரைக்குவந்திருக்கும் சில படங்களை ரீவைண்டு செய்து பார்த்துவிடுவது நல்லது.

சர்வைவல் பாணி சினிமாக்கள்

ஒருவர் மட்டும் நடித்திருக்கும் முழுநீளத் திரைப்படங்களையே பலவகையாகப் பிரிக்கலாம். காரணம், படம் முழுக்க ஒரு நாயகன் என்றதும் டாம் ஹாங்ஸ் நடித்த `cast Away' பலருக்கும் நினைவுக்கு வரலாம். கடந்த ஆண்டு இந்தியில் கூட `பிஹூ' என்றொரு திரைப்படம் வந்தது. `Trapped' என 2016-ம் ஆண்டு ஒரு படம் வெளியானது. இப்படியாக எண்ணற்ற படங்கள் இந்த ஜானரில் வெளியாகி இருக்கின்றன. `Cast away' மாதிரியான சினிமாக்களை `survival' பிரிவின் கீழ் வகைப்படுத்துவார்கள். ஒரு இடம், அங்கு மாட்டிக்கொள்ளும் ஒரு நபர், எப்படி அங்கிருந்து சர்வைவாகி வெளியேறுகிறார் என இப்படங்கள் நீளும். டேனி பாய்ல் இயக்கத்தில் ரஹ்மான் இசையமைத்த `The 127 Hours' இப்படியான ஒரு சினிமாதான். 127 மணி நேரங்கள் அந்த நபர் எப்படி அந்த மலையில் சிக்கிய கையை விடுவித்து தப்பித்தார் என்பதை த்ரில்லராகச் சொல்லும் `The 127 Hours'.

சாண்ட்ரா புல்லக் நடித்த `கிராவிட்டி' படம் கூட அப்படியான ஒன்றுதான். என்ன இது விண்வெளியில் நடக்கும் கதை. ரிட்லி ஸ்காட் இயக்கத்தில் மேட் டேமன் நடித்த `மார்ஷியன்' கூட இந்த வகை சினிமாதான். இதுவும் விண்வெளிக் கதைதான்.

 R. Parthiepan
R. Parthiepan

இந்த வகை சினிமாக்களில் முக்கியமான தொரு முயற்சி `Locke'. பர்மிங்ஹாமிலிருந்து லண்டனுக்குச் செல்கிறார் டாம் ஹார்டி. வழி நெடுகிலும் 36 முறை மொபைலில் பேசுகிறார். அந்த 36 மொபைல் காலும்தான் `லாக்கி' திரைப்படம். இப்படியான சினிமாக்களிலிருந்து தன்னை வேறுபடுத்தி வெளியானது டென்மார்க் திரைப்படமான `The guilty'. காவல்துறை அதிகாரி ஆஸ்கர் ஹோம்ஸுக்கு ஒரு போன்கால் வருகிறது. ஒரு பெண் தன்னை யாரோ கடத்திச் செல்கிறார்கள் என அழுதுகொண்டே சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிடுகிறார். தொடர்ச்சியாக அழைப்புகள் வருகின்றன. ஆஸ்கரின் பார்வையில் கதை நமக்குச் சொல்லப்படுகிறது. முழுக்க முழுக்க ஆஸ்கரின் முகபாவனைகள்தான் நம் கண்ணுக்குத் தெரியும். அட்டகாசமான த்ரில்லராக வெளியாகி பலரை ஆச்சர்யப்படுத்தியது `The guilty'.

இப்படி ஒற்றை கேரக்டர் பின்னணியில் வெளியான அனைத்து சினிமாக்களிலிருந்தும் வேறுபட்டு நிற்பதுதான் `ஒத்த செருப்பு' படத்தின் முதல் ப்ளஸ்.

ஒத்த செருப்பு சைஸ் 7 எப்படி இருக்கிறது?! சந்தேகத்தின்பேரில் மாசிலாமணியை (பார்த்திபன்) கைது செய்கிறது காவல்துறை. ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. இப்போது பார்த்திபன் கதை சொல்லத்தொடங்குகிறார். நிற்க... இதற்கு முன்பு சொல்லப்பட்ட அனைத்துப் படங்களிலும், பெயருக்காவது சில கதாபாத்திரங்கள் படத்தின் ஆரம்பத்திலோ, இறுதியிலோ எட்டிப்பார்க்கும். ஆனால், `ஒத்த செருப்பு' படத்தின் இரண்டு மணி நேரம் முழுக்க திரையில் பார்த்திபன் மட்டுமே. நடித்ததோடு மட்டுமல்லாமல் படத்தை எழுதி, இயக்கியும் இருக்கிறார்.

Oththa Seruppu Size 7
Oththa Seruppu Size 7

கேமராவுக்கு முன், கேமாராவுக்குப் பின் என்கிற வகையில் உலகிலேயே இது புது முயற்சி. ஒத்த செருப்பில் முதல், இரண்டாம், மூன்றாம் ஹீரோ எல்லாமே பார்த்திபன்தான். நடிப்பில் நிச்சயமாக நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். ஒருவர் மட்டுமே நீண்ட நேரமாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்பதை தன்னுடைய அபார நடிப்புத்திறனால் பலநேரங்களில் மறக்கடித்திருக்கிறார். பார்த்திபனின் நடிப்புப் பசிக்கு அவரே தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

பார்த்திபனுக்கு அடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்துபவர் ரஸூல் பூக்குட்டி. ஓர் அறையில் மட்டுமே கதை நடக்கிறது. அவ்வப்போது பக்கத்து அறைக்குள் நுழைகிறது ராம்ஜியின் கேமரா. மற்றபடி நமக்குத் தெரிவது எல்லாம் பார்த்திபன். அவர் கழிவறைக்குள் செல்வது, பறவைகளுடன் பேசுவது என One Act play தான்.

இளையராஜாவின் பாடல்களை பின்னணி இசையாகக் கடந்த பத்தாண்டுகளில் தமிழில் வெளியான பல படங்கள் பயன்படுத்திவிட்டன. காட்சிகளுக்கு ஏற்ப, இதில் இளையராஜாவின் பாடல்களை செறிவாகப் பயன்படுத்தியிருக்கிறார் பார்த்திபன். டைட்டில் கார்டு சொல்வது போல், இதற்கு இசைந்த இளையராஜாவுக்கு நன்றி.

சும்மாவே பேசிக்கொண்டு இருக்கும் பார்த்திபன், இதில் படம் முழுக்கப் பேச வேண்டும் என்கிற டாஸ்க் கொடுத்தால் பேசாமல் இருப்பாரா? பேசுகிறார்... பேசுகிறார்.... பேசிக்கொண்டே இருக்கிறார். தியேட்டரைவிட்டு வெளியே வந்தபின், பார்த்திபன் போல நாமும் கொஞ்ச நேரம் பேசத்தொடங்கிவிடுகிறோம்.

Oththa Seruppu Size 7
Oththa Seruppu Size 7

`ஒத்த செருப்பு' உலக சினிமாவா?

இப்படியான முயற்சிகளில் வரும் படங்களின் விமர்சனங்கள் இரண்டு வகைப்படும். புரியவில்லை... புரிகிறது அல்லது பிடிக்கவில்லை, பிடித்திருக்கிறது. இப்படியான ஒரு கிராஃப்ட்டில் ஒரு சினிமாவை ஏன் எடுக்க வேண்டும் எனும் கேள்விகூட நமக்கு எழலாம். ஆனால், அது முழுக்க முழுக்க கிரியேட்டரின் உரிமை. 7 நோட்டுகள் இருக்கும் போது இளையராஜா ``வா வா பக்கம் வா'' ,'' ராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா...'' என சிங்கிள் நோட், டூயல் நோட்டில் இசையமைத்தார். வெவ்வேறு இசைக்கருவிகள், வெஸ்டன் இசை எனக் கொடி கட்டிப் பறந்தபோதுதான் ஏ.ஆர்.ரஹ்மான் ``ராசாத்தி என் உருசு என்னுதில்ல'' என இசைக்கருவிகள் அற்ற பாடலை வெளியிட்டார்.

கதை சொல்லல் ஏன் நேர்க்கோட்டில் இருக்க வேண்டும் என யோசித்தபோதுதான் நான் லீனியர் உருவானது. ஒருவரின் பார்வையில் கதை ஏன் நிகழ வேண்டும் எனும் கேள்விதான் `ரேஷோமோன்', `விருமாண்டி', `ஆயுத எழுத்து', 'அமோரோஸ் பெரோஸ்' என வெவ்வேறு பார்வை வெளியானது. அவ்வளவு ஏன் பார்த்திபனின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் திரைப்படத்தில் பார்த்திபன் பார்வையாளனுடன் பேசுவதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதுவே Breaking the fourth wall கான்செப்ட் தான். அப்படிப்பட்ட தனித்துவ முயற்சிதான் 'ஒத்த செருப்பு சைஸ் 7'.

தமிழ் சினிமாவில் நிச்சயம் இது உலக சினிமா முயற்சிதான்... வாழ்த்துகள் பார்த்திபன்!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு