Published:Updated:

`தேவர் மகன்' சீக்வெல்தான் `தலைவன் இருக்கின்றான்'... விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா? #VikatanExclusive

'தேவர் மகன்' படத்தில் சாதிதான் மையமாக இருந்தது. ஆனால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அரசியல்தான் 'மையமாக' இருக்கும் என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

'இந்தியன் - 2' நீண்டுகொண்டேபோவதால், 'தலைவன் இருக்கின்றான்' புராஜெக்ட்டை கையில் எடுத்துவிட்டார் கமல்ஹாசன். இந்தப் படம் சொந்தத் தயாரிப்பு என்பதால் லாக்டெளன் நாள்களில் நடிகர்களை ஒப்பந்தம் செய்துமுடிக்கும் பணிகள் மிகமிக வேகமாக நடந்துவருகிறது.

'தலைவன் இருக்கின்றான்' பட வேலைகளை ஆரம்பித்ததும், கமல் முதலில் கமிட் செய்தது ஏ.ஆர்.ரஹ்மானைத்தான். இசையைப் பொறுத்தவரை ரஹ்மான் கிட்டத்தட்ட தன்னுடைய பாடல் பதிவுகளை முடித்துவிட்டார். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக கமல் ஒப்பந்தம் செய்தது வடிவேலுவை. அடுத்து, மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் கமல். சமீபத்தில், இருவரும் உரையாடுவதுபோல் யூ-டியூபில் நடந்த நிகழ்சிகூட 'தலைவன் இருக்கின்றான்' பட புரமோஷனின் ஒரு பகுதியாகத்தான் நடத்தப்பட்டது.

ஓகே... இப்போது 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் கதைதான் என்ன என கமல் அண்ட் கோ-விடம் பலகட்ட விசாரணைகள் நடத்தியதில், சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன. 'தேவர் மகன் -2'தான் 'தலைவன் இருக்கின்றான்' படம் என்கிறார்கள். ஆமாம், 1992-ல் வெளிவந்து தென்மாவட்டங்களில் மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்திய 'தேவர் மகன்' படத்தின் பார்ட் 2 தான் 'தலைவன் இருக்கின்றான்.' 'தேவர் மகன்' படத்தில் சாதிதான் மையமாக இருந்தது. ஆனால், 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் அரசியல்தான் 'மய்யமாக' இருக்கும் என்கிறார்கள். 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் வடிவேலு உடனான நகைச்சுவை காட்சிகளில், அரசியல் பகடி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் வகையில் வசனங்கள் எழுதப்பட்டிருக்கிறதாம். ரஹ்மான் நீண்ட நாள்களுக்குப் பிறகு முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணி கொண்ட கதைக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்.

Sivaji Ganesan, Kamal Hassan
Sivaji Ganesan, Kamal Hassan

தேவர் மகனில் நடித்த ஒல்லி வடிவேலு, 'தலைவன் இருக்கின்றான்' படத்திலும் அதே இசக்கியாக நடிக்க இருக்கிறார். பங்காளி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். தன் அப்பாவைக் கொன்றுவிட்டு ஜெயிலில் இருந்து திரும்பும் கமல்ஹாசனுடன் அரசியல் வில்லனாக விஜய் சேதுபதி மோத இருக்கிறார் என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'தேவர் மகன்' படத்தில் சிவாஜி எப்படியிருந்தாரோ அப்படி ஒரு கெட்அப் கமல்ஹாசனுக்கு 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் இருக்கிறதாம். இந்தப் படத்தில் மொத்தம் மூன்று ஹீரோயின்கள். கமல்ஹாசனின் மனைவியாக ரேவதியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. இது தவிர, கமல்ஹாசனின் ஃபேவரைட்ஸான பூஜா குமாரும், ஆண்ட்ரியாவும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள்.

Vijay Sethypathi
Vijay Sethypathi

'தேவர் மகன்' படத்தில் சிவாஜி - கமல் நடித்த காட்சிகளை பொள்ளாச்சியில் ஒரு வீட்டில்தான் படம்பிடித்தார் இயக்குநர் பரதன். இப்போதும் அதே வீட்டில்தான் 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்க இருக்கிறார் கமல்ஹாசன்.

'தலைவன் இருக்கின்றான்' ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 49-வது படமாம். படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 நாள்களுக்குள் முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருக்கிறதாம். கொரோனா பிரச்னை நீண்டுகொண்டேபோனாலும், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் ஷூட்டிங் நடத்த விரைவில் அனுமதி கிடைக்கும் எனத்தெரிகிறது. அதனால் ஷூட்டிங் தொடங்க தமிழக அரசு அனுமதி கொடுத்ததும் பொள்ளாச்சியில் ஷூட்டிங்கைத் தொடங்கி, செப்டம்பர் மாதத்துக்குள் படத்தை முடித்துவிடுவார்கள் என்கிறார்கள். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், 2021 பொங்கலுக்கே 'தலைவன் இருக்கின்றான்' ரிலீஸாகலாம்.

kamal , Revathi
kamal , Revathi

இதற்கு அடுத்து, ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 50-வது படத்தைத்தான் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில், ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு