Published:Updated:

`படையப்பா', `தவமாய் தவமிருந்து', `நாடோடி மன்னன்'... தமிழின் நீளமான சினிமாக்கள்!

தமிழ் சினிமாவின் காலளவு நீளமாக இருந்த படங்கள்...

1
நாடோடி மன்னன்

நாடோடி மன்னன்

பொதுவாக ஒரு திரைப்படத்தின் நீளம் அதிகமாக இருந்தால் கதையின் வேகம் குறைவாக இருக்கும் என்றும், நீளம் குறைவாக இருந்தால் கதையின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் ஓர் எண்ணம் உண்டு. ஆனால், இதையெல்லாம் கணக்கில் எடுக்காமல், படத்தின் தேவைக்காக அதிக நேரம் ஓடும் படமாக வெளியான தமிழ் சினிமாக்களின் தொகுப்பு இது.

எம்.ஜி.ஆர் இயக்கி, நடித்த 'நாடோடி மன்னன்' திரைப்படம் தமிழ் சினிமாவிற்கும் சரி, எம்.ஜி.ஆருக்கும் சரி மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இல்லாமல், பல நடைமுறை யதார்த்தங்களையும் அரசியல் சித்தாந்தங்களையும் மக்கள் மத்தியில் பேசவைத்த படம். இப்படத்தின் நீளம் 3 மணி நேரம், 40 நிமிடங்கள்.

2
பார்த்திபன் கனவு

பார்த்திபன் கனவு

கல்கியின் புகழ் பெற்ற 'பார்த்திபன் கனவு' நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம், 'பார்த்திபன் கனவு'. தமிழ், தெலுங்கு, சிங்களம் என மூன்று மொழிகளில் தயாரிக்கப்பட்டு வெளியான முதல் திரைப்படம் 'பார்த்திபன் கனவு'தான். இப்படத்தின் நீளம் 3 மணி நேரம், 39 நிமிடங்கள். ஜெமினி கணேசன், வைஜயந்தி மாலா, ரங்காராவ், வீரப்பா, பாலைய்யா, அசோகன், சரோஜா தேவி எனப் பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருந்தார்கள்.

3
ஹே ராம்

ஹே ராம்

கமல்ஹாசன் தயாரித்து, இயக்கிய திரைப்படம் ‘ஹே ராம்’. இப்படத்தின் ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் தனித் தனிக் கட்டுரைகளே எழுதலாம். அவ்வளவு நுணுக்கமான விஷயங்களைப் படம் நெடுக இணைத்திருப்பார், கமல். இத்திரைப்படத்தின் நீளம் 3 மணி நேரம், 30 நிமிடங்கள். திரைப்படம் எடுப்பவர்களுக்கும், அது குறித்து அறிய விரும்புகிறவர்களுக்கும் 'ஹே ராம்' படம் அள்ள அள்ளக் குறையாத ஒரு பொக்கிஷம்.

4
தவமாய் தவமிருந்து

தவமாய் தவமிருந்து

ஒரு பிரின்டிங் பிரஸ் நடத்தும் ஏழைத் தகப்பனின் 35 வருட வாழ்க்கையை எந்த விதமான கமர்ஷியல் சாயமும் பூசாமல் தெளிந்த நீரோடையைப்போல அதன் போக்கில் நேர்மையாகப் பதிவு செய்த திரைப்படம், 'தவமாய் தவமிருந்து'. இந்தத் திரைப்படத்தின் நீளம் 4 மணி நேரம், 35 நிமிடங்கள். 'இவ்வளவு நேரம் திரையரங்கில் படத்தை ஓட்டமுடியாது. கட்டாயம் நீளத்தைக் குறைத்தே ஆகவேண்டும்' என விநியோகஸ்தர்கள் வலியுறுத்த, இப்படம் 3 மணி நேரம், 24 நிமிடங்களாகக் குறைக்கப்பட்டு வெளியானது.

5
படையப்பா

படையப்பா

ரஜினியின் 25-வது வெள்ளிவிழா ஆண்டில் வெளிவந்து, ரஜினி ரசிகர்களால் காலத்துக்கும் மறக்க முடியாத படமாக மாறிய படம் 'படையப்பா'. இந்தப் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு படத்தைப் பார்த்தபோது, படத்தின் நீளம் 22 ரீலாக இருந்தது. எந்தக் காட்சியை நீக்குவதெனத் தெரியாமல் படக்குழுவினர் குழப்பத்தில் இருந்தபோது, 'படத்திற்கு இரண்டு இடைவேளைகள் விடலாம்' என ஐடியா சொல்லியிருக்கிறார், ரஜினி. பிறகு, இதுகுறித்துக் கமலுடன் ஆலோசனை நடத்தும்போது, 'தப்பு பண்ணிடாதீங்க ரஜினி. படத்தை 16 ரீலா ட்ரிம் பண்ணுங்க' எனச் சொல்லியிருக்கிறார், கமல். பிறகு, 3 மணி நேரம், 12 நிமிடங்கள் ஓடும் படமாக வெளியானது, 'படையப்பா'.

6
அஞ்சாதே

அஞ்சாதே

தமிழ் சினிமா அதுவரை பார்த்த போலீஸ் கதைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு போலீஸ் படமாக வெளியானதுதான், 'அஞ்சாதே'. பரபரப்பான திரைக்கதை, அழகான விஷூவல்களால் மனதை அள்ளிய இப்படத்தின் நீளம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள்.

இவை தவிர, எஸ்.ஜே.சூர்யாவின் 'இசை', செல்வராகவன் இயக்கிய '7ஜி ரெயின்போ காலனி', 'ஆயிரத்தில் ஒருவன்' எனப் பல தமிழ்சினிமாக்கள் கதையின் தன்மைக்காக, மூன்று மணி நேரத்துக்கும் அதிகமாக ஓடும் படங்களாக வெளிவந்திருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்த 'நீளமான சினிமா'க்களை கமென்ட் பாக்ஸில் பதிவு செய்யலாமே?!

அடுத்த கட்டுரைக்கு