Published:Updated:

``டபுள் மீனிங் பாட்டு... இளையராஜாவோட முறைப்பு... கடைசியா அந்தச் சிரிப்பு!'' - பார்த்திபன் தொடர் - 5

ஆண்Line பெண்Line Thought காம்
ஆண்Line பெண்Line Thought காம்

இயக்குநர், நடிகர், பல்கலை வித்தகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் விகடனுக்காக பிரத்யேகமாக எழுதும் ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் 5வது பகுதி.

''கமல் சார் மீதான உங்களின் காதல் அபரிமிதமானது. அதைப் பற்றி நீங்கள் கூறியிருந்தாலும் எனக்காகக் கொஞ்சம் சொல்லுங்களேன்?''

- எஸ்.சுரேஷ், வத்தலகுண்டு

ஹேராம்
ஹேராம்

''கமல், காதல், முத்தம்... எனக்கு அலுக்கவே அலுக்காது. எனக்கு மட்டுமல்ல; யாருக்குமே அலுக்காது. காதலும், முத்தமும் அலுக்கவே அலுக்காது. 10 கோடிய 42 லட்சத்து 382-வது தடவை கொடுக்கும்போது மட்டும் முத்தத்தோட சுவை குறைஞ்சிடுமா என்ன? கமல் சாரை, சினிமாவில் எவ்வளவு பிரமிப்போட பார்த்தேனோ, அதே பிரமிப்போட அவரை அரசியல்வாதியாகவும் பார்க்குறேன். நிஜ ஹீரோவா மாறிட்டிருக்கார். சினிமாவில் பல பரீட்சார்த்த முயற்சிகளைச் செய்தவர். எனக்கு அவர்தான் இன்ஸ்பிரேஷன். 'ஹேராம்'லாம் இன்னைக்குப் பார்க்கும்போதும் பிரமிப்பா இருக்கு. பெரிய நடிகர் நிறைய பிரச்னைகளை ஃபேஸ் பண்ணுவாங்க. தன்னுடைய பிரச்னைகளைப் பின்னுக்குத் தள்ளிட்டு மக்களுக்காக முன்னே வருவதுதான் ரியல் ஹீரோயிஸம். கமல் சார் இப்போது ரியல் ஹீரோ. அவர்கிட்ட ரசிக்கிற புது விஷயம் இதுதான்.''

'' 'சுகமான சுமைகள்' தோல்விக்காக, கோபமுடன், விரக்தியுடன் கொஞ்சம் விரசமாகவும் 'உள்ளே வெளியே' என வெற்றி கொடுத்தும் கூட பிறிதொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அதே பாதையைத் தேர்ந்தெடுக்காமல் உங்களுக்கெனத் தனிப் பாணியை உருவாக்கிக்கொண்ட பக்குவம் எப்படி கிடைத்தது?''

- வ.செ.வளர்செல்வன், நத்தக்காடையூர்

பார்த்திபன்
பார்த்திபன்

''பத்திரிகைகள் காறித் துப்பினதுதான் என்னைப் பக்குவப்படுத்துச்சு. சில பேருக்கு எவ்ளோ திட்டினாலும் சொரணையே இருக்காது. ஆனால், நான் அப்படியல்ல. பத்திரிகைகள்தான் நம்முடைய மிகப்பெரிய பலம்னு நினைக்கிறவன். அவர்களின் பாராட்டுகளை, விமர்சனங்களை ரொம்பவும் சீரியஸா எடுத்துப்பேன். தவறுகளைச் சுட்டிக்காட்டும் விமர்சனங்களுக்குக் காதுகொடுத்து கேட்பேன். அந்த விமர்சனத்தில் எனக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும் அதற்கான மரியாதை கொடுப்பேன். இந்தப் பழக்கம்தான் எனக்கு உரிய மரியாதை கிடைக்காதப்ப, விருதுகள் கிடைக்காதப்ப என்னை வருத்தப்படவும் வைக்குது. 'உள்ளே வெளியே' சூப்பர் டூப்பர் ஹிட். ஆனால், ஒரே டபுள் மீனிங்கா இருக்குன்னு எல்லோரும் திட்டினாங்க. ஆனா, இப்போ யோசிச்சுப் பார்த்தா அது ஒரு ஜானர். இப்ப டபுள், டிரிப்பிள் மீனிங்லாம் சிங்கிள் மீனிங்காவே படங்கள்ல பேச ஆரம்பிச்சிட்டாங்க.

பாரதிராஜா சார் 'உள்ளே வெளியே' படம் பார்த்துட்டு 'என்னயா இந்த மாதிரிலாம் படம் எடுத்திருக்க'ன்னு ரொம்ப கோச்சிக்கிட்டுப் போயிட்டார். அப்ப அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'வாலிபமே வா வா'-ன்னு ஒரு படம் பண்ணீங்களே. 'கருத்தம்மா'ல மிஸ்டர் வடிவேல் பேசின டயலாக்ஸ் டபுள் மீனிங்கா இருக்குமே'னுலாம் கடிதம் எழுதினேன். ஆனாலும், இந்தச் சம்பவங்கள் சினிமால இந்த மாதிரி அவப்பெயரையா சம்பாதிக்கணும்கிற வருத்தத்தைக் கொடுத்துச்சு. வர்த்தக ரீதியான அருவருப்புன்னு சொல்லப்பட்ட படங்கள் பண்றதுல இப்ப விருப்பம் இல்லை. பிரமாதமான நியாயமான ஆக்‌ஷன் படம் பண்ணணும் ஆசை. 'அசுரன்' மாதிரி ஒருத்தனுடைய கோபத்தில் நியாயம் இருக்கணும். அப்படிப்பட்ட ஆக்‌ஷன் படம் பண்ணணும்னு நினைக்கிறேன். பாட்டு, ஆட்டம் பாட்டம் இருக்கிற படங்கள் பண்ணணும்னும் ஆசை இருக்கு.''

''சமீபத்தில் பார்த்திபனின் மகிழ்ச்சிகள் மற்றும் வலிகள்?''

- சுரேந்தர் குமார், கல்பாக்கம்

''வலியா, மகிழ்ச்சியான்னு பார்த்தா மகிழ்ச்சிதான் மிக அதிகம். பற்றற்று இருன்னு சொல்லுவாங்க. எதிலயுமே பற்று அதிகமா வெச்சிட்டோம்னா அது கொடுக்குற மகிழ்ச்சி, வலி எல்லாமே அதிகமா இருக்கும். 'ஒத்த செருப்பு'க்குக் கிடைச்ச பாராட்டுகள் ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது. லாஸ் ஏஞ்சலீஸ்ல படம் பார்த்துட்டு அங்க இருக்கவங்க பாராட்டினது, ஒரு தயாரிப்பாளர் இந்தப் படத்தை இங்க படமா பண்ணலாம்னு பேசினது எல்லாமே மகிழ்ச்சியா இருந்துச்சு. அதேசமயம் இந்தப்படம் இங்க சரியான வரவேற்பைப் பெறாதபோது வலியையும் கொடுத்துச்சு. இப்ப நிறையப் பேர் நெட்ஃபிளிக்ஸ்ல படத்தைப் பார்த்துட்டு 'அய்யய்யோ அப்பவே தியேட்டர்ல பார்க்காம மிஸ் பண்ணிட்டோமே'னு சொல்றாங்க. இந்த மாதிரி வார்த்தைகள் கொஞ்சம் கம்பீரமான, கெளரவமான வலியா இருந்தது. தேசிய விருது அறிவிப்புகளுக்காகக் காத்திட்டிருக்கேன். வலி எல்லாத்தையும் வலிமையாக்கி அடைஞ்சே தீருவேன். எந்த விருதா இருந்தாலும் அடைஞ்சே தீருவேன். வலிகளை மகிழ்ச்சியால் வென்றுகொண்டிருக்கிறேன்.''

பார்த்திபன்
பார்த்திபன்

''உங்களையும், உங்கள் மேடைப் பேச்சையும் பிடிக்கும்... உங்களை என் அப்பாவைப் போல் உணர்கிறேன். எனது கேள்வி என்னவென்றால் அப்பா... உங்களுடைய மிக பெரிய பாதிப்பு அல்லது இழப்பு என்னப்பா, அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தீர்கள், இப்போது அந்தப் பாதிப்பு, இழப்பைப் பற்றி நினைப்பதுண்டா?''

- ஜெய்சங்கர், கோயம்புத்தூர்

''என்னுடைய அப்பாவின் இழப்பு. அந்த இழப்பு தந்த வலி, பாதிப்பு இந்த உலகின் எல்லாவற்றையும்விட கொடியது. அப்பா இறந்த பிறகு அடுத்தநாள் நான் உயிர்வாழமுடியுமா, உயிர் வாழ்வேனான்னுகூட யோசிச்சிருக்கேன். அதில் இருந்து எப்படி மீண்டுவந்தேன், எப்படி அழுகை குறைஞ்சது, எப்படி விசும்பல் குறைஞ்சதுன்னு இப்பவும் யோசிப்பேன். அம்மா இருக்காங்க, தம்பி இருக்காங்க, இனி துயரப்பட்டு பிரயோஜனம் இல்லைன்னு என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டு மீண்டு எழுந்துவிட்டேன். நான் அப்பா ஆனதுக்குப்பிறகு நிறைய பாதிப்புகள். அது எல்லாமே சுகமான சுமைகள்னு சொல்லலாம். மூன்று குழந்தைகளும் கையில கிடைச்ச பிறகு, அவங்க அன்பு கிடைச்ச பிறகு சொல்லமுடியாத சந்தோஷத்துல இருந்தேன். பாதிப்புகள் இப்ப இல்லை. பாதி தித்திப்புகளா மாறியிருக்கு. அந்தந்த தருணத்தைக் கடக்குறதுதான் கஷ்டம். அதைக் கடந்துவந்து யோசிச்சுப் பார்த்தா இதுக்கு இவ்ளோ இமோஷனும், ஸ்ட்ரெய்னும் தேவையான்னு தோணும். முடிஞ்ச வரைக்கும் நம்மால் மத்தவங்களுக்குப் பாதிப்பு ஏற்படாம இருப்போம். நம்மால் மத்தவங்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்தா அதை எப்படி சரிசெய்யணும்னு பார்க்கணும். நிச்சயமா பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக காதலில் பாதிப்புகள் இருக்கும். நீங்க யார் மேலயாவது பாசம் காட்டினா பாதிப்பு அங்க இருந்துதான் வரும். Detached attachmentனு சொல்லுவாங்க. இந்த மாதிரி வார்த்தைத் தத்துவங்கள் சொல்றது நல்லாயிருக்கும். ஆனா, வாழ்ந்து பார்க்கணும். வாழ்ந்து பார்ப்போம்.''

''தமிழ் சினிமாவில் நிறைய புதுமைகளைச் செய்துவிட்டீர்கள். ஒரு படத்தில் முதல் பாதிக்கு இளையராஜா அவர்களையும், இரண்டாம் பாதிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களையும் இசையமைக்க வைத்து தமிழ் சினிமா வரலாற்றில் மற்றுமொரு புதுமை படைப்பீர்களா?

- ஜீவகன் மகேந்திரன், நட்டாமங்கலம்

ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா
ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா

''ராஜா சாரும், ரஹ்மான் சாரும் இணைந்து பணிபுரியறது சாத்தியாமான்னு தெரியல. 'இவன்' படத்துல ராஜா சார், கார்த்தி, யுவன், பவதாரினி நீங்க நாலு பேரும் இசையமைக்கணும்னு கேட்டேன். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொருத்தர் பண்ணலாம்னு ஐடியா. ஆரம்பத்துல சாத்தியமா இருந்தது. ஆனா, கடைசில ப்ராக்டிக்கலா முடியல. யுவனை இதுக்குள்ள சேர்க்க முடியல. யுவன்கிட்டயிருந்து 'அப்படிப் பார்க்குறதுன்னா வேணாம்'னு ட்யூனை மட்டும் வாங்கிட்டுப்போய் கார்த்திக் ராஜாகிட்ட ஆர்க்கெஸ்ட்ரேஷனுக்குக் கொடுத்தேன். இதுக்கே ரொம்ப நாள் ஆச்சு. ராஜா சாரையும், ரஹ்மான் சாரையும் ஒரே மேடைல கொண்டு போய் சேர்க்குறதே பெரிய விஷயம். அதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அந்த ராமாயணத்துல நானும் ஒரு சின்ன அணிலா இருந்தேன்றதுல சந்தோஷம். ஆனா, அவங்க ரெண்டுபேரையும் வெச்சு தனித்தனியா ஸ்பெஷலா ஒரு படம் பண்ணணும்னு ஆசை. அந்தப் படங்கள் பிரமிக்கவைக்கக்கூடிய வகையில் இருக்கும். விரைவில் நிறைவேறும்னு நம்புறேன்.''

'' 'பொண்டாட்டி தேவை' படத்துக்கு இளையராஜா சார் கிட்ட பாட்டு கேட்டு வாங்குன சுவாரஸ்யமான சம்பவம் சொல்லுங்க. குறிப்பா 'அம்மா நான் பச்ச புள்ள பாட்டு' பாட்டுக்கு இடையில வர பிரேக்குக்கு சார் என்ன சொன்னார்?''

குமரகுரு - மலேசியா

இளையராஜா
இளையராஜா

''முதல்படமான 'புதிய பாதை' படத்துக்கு அவர்கிட்டதான் போனேன். ஆனா, பண்ணமாட்டேன்னு சொல்லிட்டார். அப்போ அதுக்குப் பல காரணங்கள் இருந்தன. முதல் படம் ஹிட் ஆனவுடனே கம்பீரத்தோட, தைரியத்தோட அவர்கிட்ட ரெண்டாவது படத்துக்குப்போனேன். ஏன்னா, அந்த ஹிட் ரொம்ப ஆபூர்வமான விஷயம். 'அபூர்வ சகோதர்கள்'கூட வந்து ஒரு வெற்றிபெறதுன்றது பெரிய விஷயம். இந்தப்பாடல் ரெக்கார்டிங்ல நீங்க சொல்ற இடத்துல ஒரு பாஸ் விட்டா கொஞ்சம் டபுள் மீனிங்கா இருக்கும். அதைத்தெரியாத மாதிரி, ரொம்ப அப்பாவியா ராஜா சார்கிட்ட போய், 'சார் அந்த இடத்துல கொஞ்சம் கட் பண்ணி பாடுனா நல்லாயிருக்கும்'னு சொன்னேன். திரும்பி அப்படியே மேல இருந்து கீழ வரைக்கும் பார்த்தார். எனக்கு சப்தநாடியும் அடங்கிருச்சு. ரொம்ப பயந்துட்டேன். மைக்கிட்ட போய் பாடகர்ட்ட, 'அந்த இடத்துல கொஞ்சம் கட் பண்ணி பாடுங்க'ன்னு சொல்லிட்டு என்னைப் பார்த்து லைட்டா சிரிச்சார்.

அப்ப அது ரசனையான விஷயங்களா இருந்தது. நம்ம தாத்தா, பாட்டின்னு அந்தக் காலத்தில் எல்லோருமே டபுள் மீனிங்ல பேசியிருக்காங்க. ஆனா, இப்ப நான் அதையெல்லாம் தவிர்த்துடுறேன். 'ஏ கலா கலா' பாட்டுல நிறைய வார்த்தைகள் அப்படி வரும். இப்ப அப்படியெல்லாம் பயன்படுத்துறதே இல்லை. இந்தக் கேள்வி எனக்கு ரொம்ப வியப்பா இருக்கு. எவ்ளோ நுணுக்கமா ராஜா சார் பாடல்களைக் கேட்குறீங்கன்னு புரியுது. அதுக்குள்ள இருக்குற என்னோட கிறுக்குத்தனத்தையும் நீங்க எப்படி பார்க்குறீங்கன்னும் புரிஞ்சிக்கிறேன்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.

அடுத்த கட்டுரைக்கு