Published:Updated:

``சமந்தாவை அவங்க பார்க்கிற பார்வை மாறலை... ஆனா, இங்க?'' - சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்

நடிகை சோனியா அகர்வால் பேட்டி...

திவ்யா, அனிதா, ஏஞ்சல் என சோனியா அகர்வால் நடித்த அடுத்தடுத்த கேரக்டர்கள் தமிழ் சினிமா ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதவை. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஓடிடி எனத் தன்னை பிஸியாகவே வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் முதன்முதலில் தமிழில் வெளியான `காதல் கொண்டேன்' 17 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிலையில் சோனியா அகர்வாலிடம் பேசினேன்.

``சினிமா ஆர்வம், முதல் பட வாய்ப்பு எப்படி வந்தது?"

``உண்மையைச் சொல்லணும்னா எனக்கு சினிமா ஆசையே இல்ல. என்னோட அம்மாவுக்குதான் நான் நடிகையாகணும்னு ரொம்ப ஆசை. நான் பிறக்கிறதுக்கு முன்னாடியே பொண்ணு பிறந்தா சோனியானு பெயர் வைக்கணும், அவள் நடிகையாகணும் நினைச்சிருந்திருக்காங்க. அவங்களுடைய எண்ணம் ரொம்ப ஆழமா இருந்திருக்கும்போல. அதுதான் என்னை சினிமாத்துறைக்கு கூட்டிட்டு வந்திருக்குனு நினைக்கிறேன். நான் பத்தாவது படிக்கும்போது எங்க ஸ்கூல்ல ஃபேஷன் பரேட் நடக்கும். அதுல கலந்துகிட்டு ராம்ப்ல நடந்து வந்ததைப் பார்த்த என் அம்மா, ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஒருநாள் நியூஸ் பேப்பர்ல `Miss Panchkula' போட்டிக்கான விளம்பரத்தைப் பார்த்து, அதுக்குப் பதிவு செஞ்சு கலந்துக்க வெச்சாங்க. அதுல நான் ரன்னர் அப். இந்தப் போட்டியில கலந்துகிட்ட பிறகு, எனக்கும் ஆர்வம் வர ஆரம்பிச்சு நிறைய ஃபேஷன் ஷோல கலந்துகிட்டேன். `மிஸ் சண்டிகர்', `மிஸ் பஞ்சாப்' பட்டம் ஜெயிச்சேன். ஒருநாள் ஜீ டிவியில இருந்து சண்டிகர் வந்து புதுமுகங்கள் சிலரை தேர்ந்தெடுத்தாங்க. அதுல நானும் தேர்வானேன். மும்பையில இருக்கிற ரோஷன் தனேஜா ஆக்டிங் ஸ்கூல்ல ட்ரெய்னிங் கொடுத்து அவங்களுடைய இந்தி சீரியல்ல நடிக்க வெச்சாங்க. ஆனா, எங்களுக்கு வெளியே போய் வாய்ப்புத் தேட சிரமமா இருந்தது. அதனால, அங்கிருந்து வெளியே வந்து போர்ட்ஃபோலியோ ரெடி பண்ணி நிறைய இடங்களுக்கு அனுப்பினேன். அதைப் பார்த்துட்டு தெலுங்குல ராமநாயுடு சார் அவர் தயாரிச்ச `நீ ப்ரேமகய்' படத்துல நடிக்க வெச்சார். வினீத், அப்பாஸ் கூட நடிச்சேன். அப்படியே சினிமா பயணம் ஆரம்பமாகிடுச்சு."

``முதல் படம் தெலுங்கு, இரண்டாவது படம் கன்னடம், மூன்றாவது படம் தமிழ். ஆனா, தமிழ்ல அதிகம் நெருக்கமாகிட்டீங்க. அதுக்கு என்ன காரணம்?"

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்

``ரெண்டாவது படம் கன்னடத்துல சுதீப் சார்கூட `சந்து', மூணாவது படம் தனுஷ்கூட `காதல் கொண்டேன்'. மும்பையில இருக்கும்போது எனக்கு தென்னிந்திய சினிமாவுல இருந்து ஒரு சில பெயர்கள் மட்டும்தான் தெரியும். தென்னிந்திய மொழிகள்ல நடிப்பேன்னு நான் நினைச்சதேயில்லை. எனக்கு தென்னிந்திய மக்கள் அவ்ளோ அன்பு கொடுத்தாங்க. குறிப்பா, தமிழ் மக்கள். சென்னையில ஷூட் பண்ணும்போது எனக்கு ரொம்ப கம்ஃபர்டபுளா இருந்தது. தமிழ் மக்களுடைய உண்மையான அன்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதனாலதான் கோலிவுட் எனக்கு நெருக்கமாகிடுச்சுனு நினைக்கிறேன். `7ஜி ரெயின்போ காலனி' படம் முடிஞ்சதும், என் அம்மாக்கிட்ட `மும்பையில இருந்த வீட்டை காலி பண்ணிட்டு சென்னைக்கு வந்துடலாம்'னு சொன்னேன். அப்போதிலிருந்து இப்போவரை சென்னையிலதான் இருக்கேன். தெலுங்கு, கன்னடம், மலையாளம்னு எந்த சினிமா ஷூட்டிங்னாலும் முடிச்சுட்டு உடனே சென்னை வந்திடுவேன். இங்க இருக்கிறதுதான் எனக்கு பிடிச்சிருக்கு."

`காதல் கொண்டேன்' வெளியாகி 17 வருஷமாகிடுச்சு. செல்வராகவன், தனுஷ், நீங்க... உங்க மூணு பேருக்குமே ரொம்ப முக்கியமான படம். திவ்யா எவ்ளோ ஸ்பெஷல்?"

``திவ்யா எனக்கு எப்போவும் ரொம்ப ஸ்பெஷல்தான். `காதல் கொண்டேன்' படம் வெளியானவுடன் எங்க டீம் எல்லோரும் தமிழ்நாடு முழுக்க தியேட்டர் விசிட் பண்ணோம். எல்லா இடத்துலயும் `திவ்யா திவ்யா'னு கத்துனாங்க. இந்தப் பெயர்தான் எனக்கு அவ்ளோ அன்பை வாங்கித் தந்திருக்கு. என் வாழ்க்கையிலயே `திவ்யா', `அனிதா' இந்த ரெண்டு பெயர்களையும் மறக்கவே மாட்டேன். `காதல் கொண்டேன்' படத்தைப் பொறுத்தவரை ஷூட்டிங் மாதிரியே இல்லை. தனுஷ், செல்வா சார், அரவிந்த் கிருஷ்ணா சார்னு எல்லோரும் ரொம்ப ஜாலியா இருப்பாங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஷூட்டிங் நடந்ததுனால எல்லோரும் ரொம்ப நெருக்கமாகிட்டோம். `காதல் கொண்டேன்' படத்துலதான் ப்ராம்டிங்கை கேட்டு எப்படி முகத்துல ரியாக்‌ஷன் கொண்டு வர்றதுனு செல்வராகவன் சார் தெளிவா கத்துக்கொடுத்தார். இங்க நான் கத்துக்கிட்ட விஷயங்கள் என்னுடைய அடுத்தடுத்த படங்கள்ல பெரிய உதவியா இருந்தது."

`` `காதல் கொண்டேன்' சமயத்துல இருந்த தனுஷையும், இப்போ இருக்கிற தனுஷையும் எப்படிப் பார்க்குறீங்க?"

காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்

``தனுஷ் இப்போ இருக்கிற நிலைமைக்கு வர்ற அவ்ளோ உழைச்சிருக்கார். அதை நான் பார்த்திருக்கேன். ஸ்பாட்ல ஒரு ஸ்டூடன்ட் மாதிரி இருப்பார். இயக்குநர்கிட்ட போய் எப்படி நடிக்கணும், என்ன எதிர்பார்க்குறாங்கன்னு கேட்டுட்டு வந்து ஒவ்வொரு வசனத்தையும் ஒவ்வொரு மாதிரி பேசிப்பேசி பார்ப்பார். அவருக்கு திருப்தியாகுற வரைக்கும் பயிற்சி பண்ணிட்டே இருப்பார். இந்த உழைப்பும் ஆர்வமும்தான் அவரை இந்த இடத்துல வெச்சிருக்கு. அவரை இவ்ளோ பெரிய இடத்துல பார்க்கும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு."

`` `கோவில்' நீங்க நடிச்ச முதல் கிராமத்து படம். சிம்பு கூட நடிச்ச அனுபவம் எப்படியிருந்தது?"

`` `காதல் கொண்டேன்', `7ஜி ரெயின்போ காலனி'னு பண்ணவுடனே கமர்ஷியல் படத்துல கமர்ஷியல் ஹீரோவோட நடிக்கிறது ரொம்ப வித்தியாசமான அனுபவமா இருந்தது. இதுல `ஏஞ்சல்'ங்கிற என்னுடைய கேரக்டரே ரொம்ப சிம்பிளான அமைதியான பொண்ணு. இதுக்கு முன்னாடி நான் பண்ண படங்களைவிட இது வித்தியாசமா இருந்தது. சிம்பு டான்ஸ் ஆடுறதைப் பார்த்து அசந்துட்டேன். நான் எப்படிப் பண்ணப்போறேன்னு பயமும் இருந்தது. சிம்புதான் என்னை கூல் பண்ணி, டான்ஸ் சொல்லிக்கொடுத்து ரொம்ப சப்போர்டா இருந்தார். இந்தப் படத்துல நிறைய சீன்ல சிம்புகூட சைக்கிள்ல முன்னாடி உட்கார்ந்து போகிற மாதிரி இருக்கும். அப்படி உட்கார்ந்து எனக்கு பழக்கமே இல்லை. சைக்கிள் கம்பியில முன்னாடி யாரையும் உட்கார வெச்சு ஓட்டி சிம்புவுக்கும் பழக்கமில்லை. அதை பேலன்ஸ் பண்றது ரெண்டு பேருக்குமே ரொம்ப சிரமமா இருந்தது. சிம்பு சைக்கிள் பெடலை அழுத்தும்போது என் கால்ல இடிச்சு இடிச்சு நல்லா காயமாகிடிச்சு. அப்புறம், அந்த ஊர்ல இருந்த ஒரு பொண்ணுதான் எனக்கு எப்படி உட்காரணும்னு சொல்லிக்கொடுத்தாங்க. அப்புறம்தான், பழக்கமாச்சு. அப்புறம், வடிவேலு சாருடைய காமெடி போர்ஷன் எடுக்கும்போது செம காமெடியா இருக்கும். அதுவும் மாடு முட்டுற சீன், யானை துரத்துர சீன் எடுக்கும்போது சத்தமா சிரிச்சுட்டேன். கேமரா ஆன் பண்ணாதான் அவருக்கு ஹியூமர் வரும்னு இல்லை. எப்பவுமே காமெடிதான். அவர்கூட வொர்க் பண்ணதும் செம ஜாலியா இருந்தது."

`` `7ஜி ரெயின்போ காலனி' அனிதா உங்க கரியர்ல பெஸ்ட். அந்தக் கேரக்டரா உங்களை எப்படி மாத்திக்கிட்டீங்க?

'7ஜி ரெயின்போ காலனி'
'7ஜி ரெயின்போ காலனி'

`` `காதல் கொண்டேன்' செட்ல செல்வா சார் தனுஷ்கிட்டயும் என்கிட்டயும் இந்தக் கதையைப் பத்தி பேசியிருக்கார். அதைக் கேட்கும்போது எனக்கு அதுல நடிக்கணும்போல இருக்குனு செல்வா சார்கிட்ட சொல்லிட்டேன். `இன்னும் ஸ்கிரிப்ட் வேலைகள் இருக்கு. எப்படி வரும்னு தெரியலை. நம்ம இந்தப் படத்தை முதல்ல முடிப்போம்'னு சொன்னார். `காதல் கொண்டேன்' முடிச்சுட்டு ஏ.எம்.ரத்னம் சார் தயாரிப்புல`கோவில்' படத்துடைய ஷூட்டிங்ல இருந்தேன். அதோட கடைசி நாள் அன்னிக்கு ரத்னம் சார்கிட்ட இருந்து போன் வந்தது. `உங்களுக்கு சென்னைக்குப் பதிலா ஹைதராபாத்துக்கு டிக்கெட் போடச் சொல்றேன். இங்கே வந்திடுங்க'னு சொன்னார். எனக்கு ஒண்ணும் புரியல. அப்புறம்தான், `7ஜி ரெயின்போ காலனி' படத்துல `சுப்ரமணியபுரம்' சுவாதிதான் நடிச்சுட்டு இருந்தாங்க. இப்போ அவங்களால தொடர முடியலை. அதனால, இந்தப் படத்துல நீங்கதான் நடிக்கிறீங்க'னு சொன்னார். கடைசியா, நான் ரசிச்ச அந்தக் கதையில நானே நடிக்கிறேன்னு ரொம்ப சந்தோஷம். இந்தப் படத்துல ஏன் நடிக்கணும்னு நினைச்சேன்னா, அனிதா கேரக்டர்ல என்னை பார்க்க முடிஞ்சது. இதுல நானாவே இருந்தேன். ஒவ்வொரு நாளும் அவ்ளோ என்ஜாய் பண்ணி நடிச்சேன். அனிதா கேரக்டர் எனக்கு கிடைக்காம போயிருந்தா ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். திவ்யா எனக்கு ஸ்பெஷல்னா, அனிதா என் ஆல் டைம் ஃபேவரைட்!"

`` `புதுப்பேட்டை 2' தயாராகிட்டு இருக்கு. அதுல செல்வி கேரக்டர் இருக்குமா?"

`` `புதுப்பேட்டை' படம் லைட்டிங்ல இருந்து பல விஷயங்கள்ல வித்தியாசமா இருக்கும். ஏற்கெனவே, செல்வா சார், தனுஷ் கூட வொர்க் பண்ணிட்டதுனால எனக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருந்தது. `புதுப்பேட்டை' படத்தை ரீ ரிலீஸ் பண்ணபோது ரொம்ப நல்ல ரெஸ்பான்ஸ்னு கேள்விப்பட்டேன். இத்தனை வருஷம் கழிச்சு வெளியாகும்போதும் தியேட்டர் ஹவுஸ்ஃபுல்லானது ரொம்ப சந்தோஷமா இருந்தது. நீங்க சொன்ன மாதிரி `புதுப்பேட்டை 2' வரப்போகுது. இயக்குநர் அந்தக் கதையில என்னெல்லாம் வெச்சிருக்கார்னு பொறுத்திருந்து பார்க்கணும்."

``விஜய்கூட `மதுர' படத்துல நடிச்ச அனுபவம், அதுல உங்களுக்கான கேரக்டர் இன்னும் பெருசா இருந்திருக்கலாம்னு தோணியிருக்கா?"

மதுர
மதுர

`` `7ஜி ரெயின்போ காலனி'ல அனிதா கேரக்டர் இறந்த பிறகு, எடுக்க வேண்டிய சீக்வென்ஸ். அதனால, எனக்கு அன்னிக்கு ஷூட்டிங் இல்லை. ஹோட்டல்லதான் இருந்தேன். அப்போ எனக்கு போன் பண்ணி `உங்கக்கிட்ட கதை சொல்ல டைரக்டர் மாதேஷ் வந்திருக்கார்'னு சொன்னாங்க. `யார் படம்?'னு கேட்டவுடன் விஜய் சார் படம்னு சொன்னாங்க. உடனே, அவங்கக்கிட்ட கதை கேட்டேன். அவர் கதை சொல்லி முடிச்ச அடுத்த நிமிஷமே ஓகே சொல்லிட்டேன். காரணம், விஜய் சார். அவர்கூட நடிக்கிறது அவ்ளோ சந்தோஷம். `கண்டேன் கண்டேன்' பாடலுக்காக பாரிஸ் போயிருந்தோம். அப்போ அவர்கூட ரொம்ப என்ஜாய் பண்ணி வொர்க் பண்ணேன். என்னுடைய ஃபேவரைட் பாடல்கள் லிஸ்ட்ல எப்போதும் இந்தப் பாடலுக்கு தனி இடமுண்டு. அந்த சாங் தவிர, மத்தபடி ரெண்டு பேருக்கும் அவ்ளோ காம்பினேஷன் சீன் இருக்காது. முதல் நாள் ஷூட்டிங் அவர்கூட சேர்ந்து நடிக்க எனக்கு ரொம்ப பதற்றமாகிடுச்சு. அப்புறம் அவர்தான் என்னை கூல் பண்ணி, தண்ணி குடிக்க வெச்சு நார்மல் மோடுக்கு கொண்டுவந்தார். நான் ரொம்ப பதற்றமா இருந்ததுனால எனக்கு அன்னிக்கு டயலாக் பேசுற மாதிரி சீனே கொடுக்கலை. ரியாக்‌ஷன் சீன் மட்டும்தான் இருந்தது. அடுத்தடுத்த நாள்கள்தான், எனக்கான சீனை எடுத்தாங்க. விஜய் சார்கூட வொர்க் பண்ணது நல்ல அனுபவம். அவர் கூட படம் முழுக்க வர்ற மாதிரி ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு."

``கொஞ்சம் பிரேக் விட்டு சினிமாவுக்கு வரும்போது எந்த மாதிரியான சவால்களை சந்திச்சீங்க?"

``உண்மையை சொல்லணும்னா இப்போவரை சவால்கள் இருந்துட்டுதான் இருக்கு. கோலிவுட் சினிமாவுல ஒரு நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சுனா, அவங்களை பார்க்கிற விதமும் அவங்களுக்கான கேரக்டர்களும் மாறிடுது. இந்த ஒரு விஷயம் எப்போ மாறும்னு தெரியலை. மத்த ஊர்ல எல்லாம் அப்படியில்லை. சமந்தாவை எடுத்துக்கோங்க. கல்யாணமான பிறகும் அவங்க கரியர்ல சூப்பரா வொர்க் பண்ணிட்டு இருக்காங்க. எப்போவும் போல அவங்களுக்கு வர்ற கதாபாத்திரங்கள் வந்துட்டுதான் இருக்கு. அந்த இண்டஸ்ட்ரி அவங்களை இப்போவும் லீட் ஹீரோயினா பார்க்குது. சமந்தாவை அங்க இருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் பார்க்குற மாதிரி இங்கேயும் பார்க்கணும். அந்த எண்ணம் மாறணும். இதை எனக்காக சொல்லலை. எல்லோருக்காகவும்தான் சொல்றேன். இதுதான் பெரிய சவாலா இருக்கு. இன்னொரு விஷயம், நானும் செல்வாவும் பிரிஞ்ச பிறகும் அவருடனும் அவர் குடும்பத்துடனும் நட்பு ரீதியா பேசிக்கிட்டு இருந்தாலும்கூட, செல்வா படத்துலயோ தனுஷ் படத்துலயோ நான் நடிக்கிறதா இருந்தால் அதை இண்டஸ்ட்ரி தவறாதான் பார்க்குது. அந்த எண்ணங்கள் மாறணும்."

``குணச்சித்திர கதாபாத்திரங்கள்ல நடிக்கலாம்னு எப்போ முடிவு பண்ணீங்க?"

சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்

``குணச்சத்திர கதாபாத்திரகள்தான் பண்ணுவேன்னு இல்லை. எனக்கு அந்த ரோல் எவ்வளவு பிடிச்சிருக்கு அப்படிங்கிறதை பொறுத்துதான் நடிக்கிறேன். `குயின்' வெப் சீரிஸுக்காக கெளதம் மேனன் சார் என்கிட்ட கேட்கும்போது அந்த ரோல் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. குறைவான பகுதிதான். ஆனா, நல்ல கேரக்டர். தவிர, கெளதம் மேனன் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசை. அதனால, அதுல நடிச்சேன். `தடம்' படத்துல மகிழ் திருமேனி சார் என்கிட்ட `அந்த அம்மா கேரக்டர் நீங்கதான் பண்ணணும்'னு அவ்ளோ உறுதியா இருந்தார். நமக்காக ஒரு கேரக்டர் எழுதிருக்காங்கன்னா, அதை எப்படி மாட்டேன்னு சொல்ல முடியும். கேமியோ ரோல்ல வந்தாலும் அந்த கேரக்டர் பவர்ஃபுல்லா இருந்தா, நிச்சயமா பண்ணுவேன்."

``யாரையும் இமிடேட் செய்யவில்லை!" - `குயின்' ரம்யா கிருஷ்ணன் ஷேரிங்ஸ்

``கொஞ்ச காலம் டிவி சீரியல்கள்ல பிஸியா இருந்தீங்க. அந்த வாழ்க்கை எப்படியிருந்தது?"

``குஷ்புதான் என்னை அவங்க தயாரிக்கிற சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க. நானும் முயற்சி பண்ணி பார்க்கலாமேனு நடிச்சேன். அதுவும் நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. நான் ஒரு நடிகை அவ்ளோதான். அது சினிமா, டிவி, வெப் சீரிஸ் எந்தத் தளமாக இருந்தாலும் பிடிச்சிருந்தால் நடிப்பேன். இப்போ இருக்கிற சூழலைப் பார்த்தால் எப்போ தியேட்டர் திறப்பாங்க, எப்போ சினிமா ஷூட்டிங் ஆரம்பிக்கும்னு தெரியலை. ஆனா, சீரியல் ஷூட்டிங் மட்டும்தான் நடந்துக்கிட்டு இருக்கு. இந்த கேப்ல ஒரு சீரியல்ல கமிட்டாகி என்னை பிஸியா வெச்சுக்கலாம்னு கூட ஒரு எண்ணமும் இருக்கு."

`` `குயின்'லயும் அவங்க அம்மாதான் தன் மகள் நடிகையாகணும்னு நினைப்பாங்க. உங்க வாழ்க்கையிலயும் அப்படித்தான். அதுல நடிக்கும்போது இந்தத் தொடர்பை உணர்ந்தீங்களா?"

குயின்
குயின்

`` `குயின்'ல அனிகாவை நான் முதன்முதல்ல நடிக்க கார்ல கூட்டிட்டுப்போகுற சீனை எடுக்கும்போது, எனக்குள்ள என் அம்மா என்னை நடிக்கக் கூட்டிட்டுப் போன ஞாபகங்கள்தான் ஓடுச்சு. கதையில வர்ற மாதிரி எனக்கும் அப்போ 15 வயசுதான். அதனால, அந்தப் பகுதியை எடுக்கும்போது நிச்சயமா என் பர்சனல் வாழ்க்கையில இருக்கிற தொடர்பை உணர்ந்தேன்."

``இவங்கக்கூட அல்லது இவங்க இயக்கத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கா?"

``மணிரத்னம் சாருடைய தீவிர ரசிகை நான். அவர் இயக்கத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை. கமல் சார், அஜித் சார் கூட சேர்ந்து நடிக்கணும்."

சிரிச்சு விழுந்த செல்வா, ரவிகிருஷ்ணாவுக்கு அட்வைஸ்! கதிர் - அனிதா மீட்டிங் #15YearsOf7GRainbowColony

``இப்போ எந்த நடிகை உங்களுடைய ஃபேவரைட்?"

``கீர்த்தி சுரேஷ்."

``நடிக்காமல் இருந்த சமயத்துல நீங்க மிஸ் பண்ண படங்கள் ஏதாவது இருக்கா?"

``உன்னாலே உன்னாலே'"

``சினிமாவுல உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் யார்?"

``நிறைய பேர் இருக்காங்க. ஆனா, ரீமா சென், ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா இவங்ககூட அடிக்கடி பேசுவேன்."

அடுத்த கட்டுரைக்கு