Published:Updated:

12,500 அமெரிக்க டாலர்கள்... ஆஸ்கர் ரேஸில் சூர்யாவின் `சூரரைப் போற்று' இணைந்தது எப்படி?!

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

'பாராசைட்' படத்துக்கு விருது கொடுத்து 'ஆஸ்கர்' என்பது உலகின் அனைத்து திரைப்படங்களுக்குமான விருது என மறைமுகமாகச் சொன்னது ஆஸ்கர் அகாடமி. விரைவில் ஓர் இந்தியப் படம் ஆஸ்கரில் கௌரவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கவே செய்கின்றன.

'சூரரைப் போற்று' ஆஸ்கர் ரேஸில் இருக்கிறது எனத்தகவல் பரவ கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கருக்கான பட்டியல் வரும் போதெல்லாம், அயல்மொழி திரைப்படங்களுக்கான இறுதிப் பட்டியலில் இந்தியத் திரைப்படம் ஒன்றின் பெயர் வந்துவிடாதா என ஏங்கிய ஆண்டுகள் பல! இதுவரை அப்படி இறுதி பரிந்துரை பட்டியலுக்குத் தேர்வான இந்தியப் படங்களே மிகக் குறைவுதான். 'மதர் இந்தியா'(1957), 'சலாம் பாம்பே' (1988), 'லகான்' (2001) என இதுவரை மூன்று இந்தியப் படங்கள்தான் ஆஸ்கரின் இறுதி பரிந்துரைப் பட்டியலையே எட்டியிருக்கின்றன!

இறுதிப் பட்டியலுக்குள் நுழைய முடியவில்லை என்றாலும், இந்திய சார்பாக அனுப்பப்படும் படங்களில் தமிழ் மொழி படம் இருந்துவிட்டாலே பெருமை என ஆசையைச் சுருக்கிக்கொண்ட காலம் ஒன்றுண்டு. ஏனெனில், இனி இந்தியத் திரைப்படங்கள் எப்படியும் இறுதி டாப் 5 பட்டியல் வரை செல்லாது என மனதளவில் தயாரான காலம் அது. 'பீப்ளி லைவ்', 'அடமிண்ட மகன் அபு',' விசாரணை',' நியூட்டன்' போன்ற படங்கள் அனுப்பப்பட்ட போது சிறிதளவு நம்பிக்கை இருந்தது.

சூரரைப் போற்று
சூரரைப் போற்று

ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. கடந்த ஆண்டு தென் கொரிய படமான 'பாராசைட்' முக்கியமான விருதுகளை வென்றதும், நம் தேசத்துக்கும் ஒரு வாய்ப்பு வராதா என ஏக்கம் சற்று அதிகமாக ஆரம்பித்தது. இதற்கு முன்பும், 'லைஃப் இஸ் பியூட்டிஃபுல்', 'லா வி என் ரோஸ்' போன்ற அயல்மொழி படங்கள் முக்கிய விருதுகளை வென்றிருந்தாலும், 'பாராசைட்' நிகழ்த்தியது ஒரு அசுர பாய்ச்சல். பொதுப் பிரிவிலேயே அத்தனை விருதுகளை வென்றது 'பாராசைட்'. ஆஸ்கர் அமெரிக்க படங்களுக்கு மட்டுமானதாகவே இருக்கிறது. அவற்றுக்கு இவ்வளவு ஹைப் தேவையா என்ற கேள்வி அவ்வப்போது எழுவதுதான். ஆனால், 'பாராசைட்' படத்துக்கு விருது கொடுத்து 'ஆஸ்கர்' என்பது உலகின் அனைத்து திரைப்படங்களுக்குமான விருது என மறைமுகமாகச் சொன்னது ஆஸ்கர் அகாடமி. விரைவில் ஓர் இந்தியப் படம் ஆஸ்கரில் கௌரவிக்கப்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கவே செய்கின்றன.

'சூரரைப் போற்று' ஆஸ்கர் ரேஸில் குதித்திருக்கிறது என்னும் வைரல் செய்திக்கு முன்னர், கமலின் 'உத்தமவில்லன்' லாஸ் ஏஞ்சலீஸில் பல்வேறு விருதுகளைக் குவித்த சம்பவத்தைத் திரும்பிப் பார்க்க வேண்டிய நேரமிது.
உத்தமவில்லன்
உத்தமவில்லன்

2015-ம் ஆண்டு வெளியான 'உத்தமவில்லன்' படத்துக்கு லாஸ் ஏஞ்சலீஸ் சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள் வழங்கப்பட்டன எனச் செய்தி வெளியானது. இணையத்தில் நன்கு துழாவினால், 'உத்தமவில்லன்' படத்துக்கு விருது வழங்கியது வேறு நிறுவனமாம்.

விருது விழாக்களாகட்டும், சர்வதேச திரைப்பட விழாக்களாகட்டும் இப்படி நடப்பது முதல் முறை அல்ல. 2018-ம் ஆண்டு ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது இயக்குநர் ராமின் 'பேரன்பு'. அதே நிகழ்வில் திரையிடப்பட்ட மற்ற தமிழ்ப் படங்களுள் 'கொடி', 'பொல்லாதவன்', 'சூது கவ்வும்', 'கற்றது தமிழ்', 'மாநகரம்', 'வாயை மூடிப் பேசவும்' படங்களும் அடக்கம். ஆனால், செய்தியாக வந்தது 'பேரன்பு' மட்டும்தான்.

ஒரிஜினல் இந்திரன்... ‘செளத்’ சந்திரன்!

சரி, இப்போது ஆஸ்கருக்கு வருவோம். ஆஸ்கர் விருதுகளில் ஒருபடம் தகுதி பெறுவதற்கு, அமெரிக்காவில் இருக்கும் திரையரங்குகளில் அப்படம் குறைந்தகாலம் ஓடியிருத்தல் அவசியம். 'ஒத்த செருப்பு' படம் ஆஸ்கரில் இணைவதற்காக அமெரிக்கா சென்று அப்படத்தைத் திரையிட்டார் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன்.

Oscars
Oscars

2019-ம் ஆண்டிலிருந்து சர்வதேச படைப்பாளிகளுக்காக இதில் தளர்வை அறிவித்தது ஆஸ்கர் குழுமம். அதன்படி ஒரு பட நிறுவனம் 12,500 அமெரிக்க டாலர் தொகையை கட்டி, தங்களின் படத்தினை ஆஸ்கர் குழுவுக்கு அனுப்பலாம். அதை 'Quality Control' குழு ஒன்று தரம் பார்க்கும். தரத்தில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் அந்தப் படம் ஆஸ்கர் ஸ்கிரீனிங் பட்டியலில் இடம்பெறும். அமெரிக்காவில் திரையிடப்பட்ட படம் என்றால் இந்த 12,500 அமெரிக்க டாலர் தேவையில்லை.

'சூரரைப் போற்று' இப்படியாகத்தான் ஆஸ்கருக்குள் நுழைந்திருக்கிறது. பொது பிரிவில் பல விருதுகளுக்காக போட்டியிடுகிறது. மேலும் 2020-ம் ஆண்டு கொரோனா ஆண்டு என்பதால், மேலும் ஒரு தளர்வையும் அறிவித்தது ஆஸ்கர். அதன்படி திரையரங்கத் திரையிடலுக்காக முடிவு செய்யப்பட்டு, வேறு வழியின்றி ஒடிடி தளங்களில் வெளியான படங்களும், இந்தமுறை ஆஸ்கர் குழுமத்தால் அனுமதிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் 'சூரரைப் போற்று' படத்துக்கு கிரீன் சிக்னல் பெற்றிருக்கிறது. ஆஸ்கர் குழுமமும், 'சூரரைப் போற்று' ஸ்கிரீனிங் பெறத்தகுதி பெற்றிருக்கிறது என்றுதான் அந்தக் குறிப்பிட்ட இ-மெயில் ரிப்ளையில் பதில் அனுப்பி இருக்கிறது. தற்போது 'Academy Screening Room'-ல் 'சூரரைப் போற்று' திரையிடப்படும்.

Oscar 2020
Oscar 2020
ஆஸ்கர்

சரி இதற்குப் பின் என்னவெல்லாம் நடக்கும் என்கிற டைம்லைன் கீழே,

பிப்ரவரி 1-5 - முதல்கட்ட வாக்கெடுப்பு நடக்கும். இதில் தேர்வாகும் படங்களே ஆஸ்கர் பரிந்துரைக்குப் பரிசீலிக்கப்படும்.

பிப்ரவரி 9 - இந்தப் பட்டியல் வெளியிடப்படும்.

மார்ச் 5-10 - இறுதி பரிந்துரை பட்டியலுக்கான தேர்வு. இதற்குப் பின் இறுதி பரிந்துரை பட்டியல் வெளியிடப்படும்.

ஏப்ரல் 15-20 - Oscar Nominees Luncheon என்ற நிகழ்வு நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் முடிவு செய்யப்படுவார்கள்.

ஏப்ரல் 25 - மேடையில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வெற்றியாளர்கள் கெளரவிக்கப்படுவார்கள்.

'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கரில் வெற்றிபெற்றால், ஒரு தமிழராய் நமக்கும் பெரு மகிழ்ச்சிதான். ஆனால், இது முதல் படி என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இது எல்லா படைப்பாளிகளாலும் எளிதாக அணுகக்கூடிய ஒருபடிதான். பொதுப்பிரிவில் அமெரிக்காவில் நல்ல முறையான வரவேற்பு பெற்ற படங்கள் மட்டுமே பரிந்துரை பட்டியலையே எட்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இம்முறை ஓடிடி படங்களுக்குப் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதால் ப்ரைம் வீடியோ, நெட்ஃப்ளிக்ஸ் ஆகிய தளங்களே பல படங்களை அனுப்பிவைத்திருக்கின்றன.

Jallikattu
Jallikattu

இந்தியா சார்பாக அனுப்பப்பட்ட கேரள சினிமாவான 'ஜல்லிக்கட்டு' பரிந்துரை பட்டியலில் இடம்பெற வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கணிக்கின்றனர் ஆஸ்கர் தேர்வு குழுவின் போக்கு தெரிந்தவர்கள். ஆனாலும், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். குறும்பட பிரிவில் 'Shameless' என்ற படமும் இந்தியா சார்பில் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் என்பது மாரத்தான் போட்டி... அது இப்போதுதான் முதல் சுற்றில் இருக்கிறது!
அடுத்த கட்டுரைக்கு