``மேடம் உங்களைப் பேட்டி காண வேண்டும். எப்போது வரலாம்?" என்று செளகாரிடம் டெலிபோனில் கேட்டால் உடனே ஒரு குறிப்பிட்ட நேரத்தைச் சொல்லி அப்போது வரச் சொல்லுவார்.
அவர் சொன்ன நேரத்தில் அவர் வீட்டில் நுழைந்தால், முன் அறையில் நம் வருகைக்காகக் காத்திருப்பார். கடகடவென்று கேள்விகளுக்குப் பதிலளிப்பார்.
இவர் தன் எண்ணத்தைச் சொல்லும் போது அதிகமாக ஆங்கில வாக்கியங்களையே உபயோகிப்பார். தில் ஒரு தனி கம்பீரமும் மரியாதையும் இருக்கும்.
இவரிடம் எந்தக் கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம். மிக நாசூக்காகப் பதிலளிப்பார்.

பதினோரு வருடங்களுக்கு முன்பு விகடன் தீபாவளி மலரில் சினிமா நட்சத்திரங்களின் உதவியுடன் ஏதாவது ஒரு பகுதி சேர்க்கலாம் என யோசித்து, பின்னர் நட்சத்திரங்களையெல்லாம் ஓர் இடத்தில் சேர்ந்து சமையல் செய்யச் சொல்லலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
அதற்கு செளகார் தன் வீட்டிலேயே இடமளித்தார். பல பிரபல நட்சத்திரங்கள் வந்து சமையல் செய்தனர். அதைப் படமெடுத்தோம்.
நாங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டு அவர் வீட்டை இரண்டாக்கினோம்!
நாங்கள் குப்பையாக்கிய இடத்தை வெகு நாசூக்காக எங்களுக்குத் தெரியாமலேயே சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்.
எப்போதும் இவர் வீடு ஒரு தூசி தும்பு இல்லாமல் சுத்தமாக இருக்கும். வீட்டை அழகாக அதே சமயம் `கிளீ'னாக வைத்திருப்பார்.
ஒரு சமயம் ஒரு நாடகத்தில் நடிக்க சில நண்பர்கள் செளகாரை அழைத்தனர்.
அவரும் வந்தார் நாடகக் கதையைப் படிக்கச் சொல்லிக் கேட்டார். முழு வசனமும் காட்சி காட்சியாகப் படிக்கப்பட்டது.
எல்லாம் முடிந்ததும் நாடகம் தன் மனத்திற்குப் பிடித்தமாக இல்லாததால் வேறு யாரையாவது போட்டு நடித்துக் கொள்ளச் சொல்லி விட்டு ``ஐ விஷ் யூ ஆல் பெஸ்ட் ஆஃப் லக்" என்று சொல்லிவிட்டு விடைபெற்றுச் சென்றார்.
சமாளிப்பதோ சால்ஜாப் சொல்லுவதோ செளகாரிடம் கிடையாது. தன் மனத்தில் பட்டதை சூறைத் தேங்காய் உடைப்பதைப் போல டப் டப்பென்று உடைத்துச் சொல்லிவிடுவார். அதே சமயம் நல்லதை மனமாரப் பாராட்டுவார்.
- பாலா