``ஒரு துப்பாக்கி கையில் எடுக்காதே, எந்தத் தோட்டாவும் என்ன துளைக்காதே!" - கமல் சொல்லி அடித்த `அபூர்வ சகோதரர்கள்'
யாரும் ரீமேக் செய்ய அஞ்சும்படியான ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதுதான் இதே நாளில் 31 வருடங்களுக்கு முன்னால் வெளியான அபூர்வ சகோதரர்கள்.
பொதுவாக இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களைப் பிற மொழியினர், தங்கள் மொழியில் ரீமேக் செய்வார்கள். ஆனால், சிலரின் வெற்றி பெற்ற படங்களைத்தான் மற்றவர்கள் ரீமேக் செய்ய அஞ்சுவார்கள். அதில் முக்கியமானவர் கமல்ஹாசன். அவரின் பெரிய வெற்றிப்படங்களை ரீமேக் செய்யப் பலரும் தயங்குவர், ஏனென்றால் தன் பர்ஃபாமன்ஸ் மூலம் படத்தை இன்னொரு தளத்திற்குக் கொண்டு சென்றிருப்பார் கமல்ஹாசன். நாயகன் படத்தை `தயாவன்' என இந்தியில் ரீமேக் செய்து வினோத் கன்னா பட்ட பாடு நாடறியும். அதுபோல யாரும் ரீமேக் செய்ய அஞ்சும்படியான ஒரு படத்தைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம். அதுதான் இதே நாளில் 31 வருடங்களுக்கு முன்னால் வெளியான அபூர்வ சகோதரர்கள்.
`நாயகன்' திரைப்படம் வெளியாகி, பொது மக்கள், விமர்சகர்கள், திரைத்துறையினர் என அனைவரின் பாராட்டைப் பெற்ற பின்னர், கமல்ஹாசனுக்கு ஒரு சுமை ஏறியது. இதற்கடுத்து அவர் சாதாரணமான கதையம்சம் உள்ள படங்களைச் செய்தால் அவருடைய ரசிகர்களும், மக்களும் ஏற்றுக் கொள்வார்களா என ஒரு சந்தேகம் வந்துது. ஏதாவது ஒரு புதுமை படத்தில் இருந்தாக வேண்டும் என்ற கட்டாயம் அவரையறியாமலேயே அவருக்கு ஏற்பட்டது.

`நாயகன்' வெளியான அடுத்த மாதத்திலேயே `பேசும் படம்' (புஷ்பக்) வெளியானது. அதுவும் விமர்சகர்களிடத்தில் நல்ல பெயர் பெற்றது. அடுத்து வந்த `சத்யா'வும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. அனால், அதற்கடுத்து வந்த `சூரசம்ஹாரம்' வழக்கமான போலீஸ் - பழிவாங்கும் கதைபோல இருந்ததால் பெரிதாக எடுபடவில்லை. அதற்கடுத்து வந்த `உன்னால் முடியும் தம்பி' விமர்சகர்களிடம் பாராட்டு பெற்றாலும் எதிர்பார்த்த கமர்ஷியல் வெற்றியைப் பெறவில்லை.
இந்நிலையில் கமலின் சொந்தப்படம் `அபூர்வ சகோதரர்கள்' என்று அறிவிப்பு வெளியானது. இரண்டு வேடம் என முதலில் சொல்லப்பட்டது. இயக்கம் சிங்கீதம் சீனிவாசராவ் என்றதும், கமல் ரசிகர்களுக்கு, `இது எந்த மாதிரிப்படமா இருக்கும்' எனக் குழப்பமே ஏற்பட்டது. பின்னர் ஜெமினி சர்க்கஸில் படம் எடுக்கப்படுகிறது, காந்திமதி அம்மாவாக நடிக்கிறார் எனப் பத்திரிகைச் செய்திகள் வந்தன. இரண்டு கமல்ஹாசன்களின் தந்தை வேடத்திற்கு பிரேம் நசீரை கேட்டதாகவும், அவர் உடல்நலம் சரியில்லாதால் கமலே அந்த வேடத்தையும் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வந்தன. அப்பா கமலின் ஜோடியாக லட்சுமியை முதலில் கேட்டார்கள். அவரோ கமலுக்கு அம்மாவாக நான் நடிப்பதா? எனக்கு அப்பா கேரக்டரில் அவர் நடிப்பாரா எனக் கேட்க, ஸ்ரீவித்யாவை அந்த கேரக்டரில் ஒப்பந்தம் செய்தார்கள்.
அபூர்வ சகோதரர்களின் வெளியீட்டுற்கு முன்னர் எல்லாப் பத்திரிகைகளிலும் படத்தைப் பற்றிய செய்தியை கவர் செய்திருந்தார்கள். படத்தில் ஒரு வெளிநாட்டுக் கிளி இருக்கிறது. அது வரும் காட்சிகள் எல்லாம் ஹைலைட்டாக இருக்கும் என்றார்கள். `அபூர்வ சகோதரர்கள்' வரும் முன்னர் `வருசம் 16', `ராஜாதிராஜா' ஆகிய திரைப்படங்கள் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தன. பாடல் கேசட் வெளியாகி பாடல்கள் நன்றாக இருந்தாலும், ஆஹா ஒஹோ எனப் புகழப்படவில்லை. ஏனென்றால் தொடர்ந்து அந்த ஆண்டில் சிக்ஸர்களாக அடித்துக்கொண்டிருந்த இளையராஜாவிற்கு அது இன்னொரு சிக்ஸர். அவ்வளவுதான்.

1989-ம் ஆண்டு, ஏப்ரல் 14ல் அபூர்வ சகோதரர்கள் வெளியாகியது. உடன் பார்த்திபனின் `புதியபாதை', அவரின் குருநாதர் பாக்யராஜின் `என் ரத்தத்தின் ரத்தமே', பிரபுவின் `பிள்ளைக்காக' ஆகிய படங்களும் வெளியாகின. உண்மையைச் சொல்லப்போனால் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் கமல் ரசிகர்கள் போயிருந்தார்கள். 1986-ல் வெளியான விக்ரம் படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பைவிட சற்று குறைவாகவே இருந்தது.
ஆனால், படம் திரையிடப்பட்டதும் எல்லாமே மாறிப்போனது. ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி, நான்கு சமூக விரோதிகளால் கொல்லப்படுகிறார். கர்ப்பமாக இருக்கும் அவர் மனைவிக்கு விஷம் கொடுக்கப்படுகிறது. இதனால் ஒரு மகன் குள்ளமாகவும் (அப்பு), இன்னொரு மகன் வழக்கமானவனாகவும் (ராஜா) பிறக்கிறார்கள். பிரிந்து வெவ்வேறு இடங்களில் வளர்கிறார்கள். தன் குள்ள உருவம் காரணமாக மன வேதனைக்குள்ளாகும் அப்பு, தற்கொலைக்கு முயல, அம்மா வில்லன்களைப் பற்றிச் சொல்ல, பழிவாங்கப் புறப்படுகிறான் அப்பு. பழி, முக ஒற்றுமை காரணமாக ராஜாவின் மேல் விழுகிறது. எப்படி எல்லாம் சுபமாக முடிகிறது என்பதுதான் கதை. இடைவேளை வரை எங்குமே கவனத்தைத் திருப்ப முடியாதபடி கவனமாக நெய்யப்பட்ட திரைக்கதை எல்லோரையும் கட்டிப் போட்டது. இரண்டாம் பாதியும் அதே போலத்தான். படம் முடியும் வரையுமே இது தன் தந்தையைக் கொன்றவர்களை மகன் பழிவாங்கும் படம்தான் என்ற உணர்வே யாருக்கும் வரவில்லை. வில்லன்களின் பெயரில்கூட தர்மராஜ், நல்ல சிவம், அன்பரசு, சத்தியமூர்த்தி எனப் பெயர் வைத்து விளையாடியிருப்பார்கள்.

அதைவிட இன்னொரு முக்கிய விஷயம், குள்ள உருவத்தில் இருக்கும் கமல் (அப்பு), எப்படி அப்படி நடித்தார், என்று யோசனையே யாருக்கும் வரவில்லை. அப்படி ஒரு திரைக்கதை. காட்சிகளின் பின்னால் நாம் தொடர்ந்து சென்றுகொண்டிருப்போம். படம் முடிந்து வந்த பின்னர்தான், அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இந்த அப்பு கேரக்டர் எந்த அளவிற்குத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், அந்த ஆண்டு முதல் குறைந்து ஐந்தாறு ஆண்டுகளுக்குக் கல்லூரி கலை விழாக்கள், பள்ளி விழாக்கள் போன்றவற்றில் அப்பு வேடம் அணிந்து (கால்களை மடித்துக் கட்டியோ, அவரவர்க்குத் தோன்றும் விதத்திலோ) பர்ஃபாமன்ஸ்கள் செய்யத் தூண்டியது. 90-களின் ஆரம்பத்தில், இன்னிசைக் கச்சேரி நடத்தும் குழுக்களுக்குப் போட்டியாக, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தும் நாட்டியா, நர்த்தனா போன்ற பெயர்களில் ஏராளமான நடனக் குழுக்கள் தோன்றின. அவற்றிலும் கட்டாயமாக ஒரு அப்பு பர்ஃபாமன்ஸ் இருந்தது.
சில இயக்குநர்கள், மக்களுக்குத் தங்கள் படங்களின் மூலம் உணர்ச்சிகளைக் கடத்துவதில் வல்லவர்கள். திரைக்கதை, வசனம், நடிப்பு ஆகியவற்றால் உருக்கமான காட்சிகளை உருவாக்கி, கண்ணீர் சிந்த வைத்துவிடுவார்கள். சில இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். கேமரா கோணங்கள், சிறப்பாக கட் செய்யப்பட்ட காட்சிகள் என்று படம் பார்ப்பவர்களை `அடடே' என்று வியக்க வைத்துவிடுவார்கள். கமல்ஹாசன் போன்ற ஒரு சிலரின் படங்களில்தான் இரண்டும் இருக்கும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டு, அபூர்வ சகோதரர்கள். எந்த அளவிற்கு மனதை உருக்கும் காட்சிகள் இருந்தனவோ, அந்த அளவிற்குத் தொழில்நுட்பத்திலும் (அப்போது இருந்த வசதிகளைக் கவனத்தில் கொண்டால்) ஒரு பாய்ச்சல் பாய்ந்திருந்தார்கள். குற்றவாளியின் படத்தை சாட்சி ஒருவர் வரைய, அது அப்படியே ஆளாக மாறும் கிராபிக்ஸ் காட்சி தமிழ் சினிமாவிற்குப் புதிது. இப்போது அது `டைம் லேப்ஸ்' எனப் பரவலாக மென்பொருள் செயலிகள் மூலம் செய்யப்படுகிறது.
கமலின் குள்ள வேடத்தை எப்படி எடுத்தார்கள் என்று, பல ஆண்டுகள் வரை தயாரிப்புத் தரப்பிலிருந்து சொல்லவில்லை. ஆனால், பின்னர் அந்தப் படத்தில் பணியாற்றிய பல்வேறு கலைஞர்கள் மூலம் தெரியவந்தது. கால்களை மடக்கி, பிரத்யேக பூட்ஸ்கள் அணிந்து, சில சமயம் கேமரா கோணங்கள் மூலம், (ஒளிப்பதிவு : பி.சி.ஸ்ரீராம்) எடுக்கப்பட்ட விதங்கள் தெரிய வந்தது.
ஒவ்வொரு படமும் சில கதைக்களங்களில் ஒரு மைல்கல்லை வைத்துவிட்டுச் செல்லும். அதுபோல தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்கும் கதைக்களத்திற்கும், உருவ ஒற்றுமை உள்ள இரண்டு சகோதரர்கள் கதைக்கும் அபூர்வ சகோதரர்கள் படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது. இந்தப் படத்திற்குப் பின்னர் இரண்டு சகோதரர்கள் கதையெனில் இருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு வேறுபாட்டை வைத்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு தமிழ்சினிமா இயக்குநர்கள் தள்ளப்பட்டார்கள்.

`அபூர்வ சகோதரர்கள்' படத்தின் வெற்றியில் இன்னொரு முக்கிய பங்கு கிரேஸி மோகனின் வசனங்களுக்கு உண்டு. `பொய்க்கால் குதிரை', `கதாநாயகன்' போன்ற படங்களில் கிரேஸி மோகனின் பங்களிப்பு இருந்தாலும், ஜனகராஜ் - சிவாஜிராவ் - மனோரமா ஆகியோரின் வசனங்கள் மூலம் தமிழ்த் திரையுலகினரால் இப்படத்தின் மூலம் பெரிதும் கவனிக்கப்பட்டார். இளையராஜா இந்தப் படத்திற்குக் கொடுத்த எல்லாப் பாடல்களுமே சிறப்பு என்றாலும், `உன்னை நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்' காதல் தோல்விப் பாடல்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தது. `அண்ணாத்தே ஆடுறார்'க்கு துள்ளிசைப் பாடல்களில் ஓர் முக்கிய இடம்.
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; எல்லாத் தரப்பு ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் பிடித்த படமாகிப்போனது `அபூர்வ சகோதரர்கள்'.
சென்னை, கோவை, மதுரை போன்ற அப்போதைய பெரு நகரங்களிலும் மற்ற மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தப் படம் 50 நாள்கள் வரையிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. பல இடங்களில் வெள்ளி விழா கண்டது. பின்னர் சிறு நகரங்கள், சிற்றூர்கள் என எல்லா இடங்களிலும் அதுவரை இருந்த வசூல் சாதனைகளை முறியடித்தது. தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளாவிலும் இந்தப் படம் பல சாதனைகளைப் புரிந்தது. ஓராண்டு கழித்து அப்பு ராஜா என்ற பெயரில் இந்தியில் டப் செய்து வெளியிட்டு அங்கும் பல சாதனைகளைச் செய்தது.
முதலில் காந்திமதி, ராஜா கமலை வளர்ப்பவராக எடுக்கப்பட்ட பாடல் காட்சிகள், எடிட்டிங்கில் குறைக்கப்பட்ட அப்புவின் சர்க்கஸ் சாகசக் காட்சிகள் ஆகியவை படம் 100 நாள்களைக் கடந்ததும், இடைவேளையில் திரையிடப்பட்டது. அதைப் பார்க்கவும் ரிப்பீட் ஆடியன்ஸ் வந்தார்கள்.
1973-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன், அதற்கு முன்னரான வசூல் சாதனைகளைத் தகர்த்து இண்டஸ்ட்ரி ஹிட் அந்தஸ்தைப் பெற்றிருந்தது. 1979-ல் வெளியான சிவாஜி கணேசனின் திரிசூலம் அதை முறியடித்தது. 1982-ல் வெளியான `சகல கலா வல்லவன்', `திரிசூலத்தின்' வசூல் சாதனையை முறியடித்தது. சகல கலா வல்லவனின் ஏழாண்டுச் சாதனையை அபூர்வ சகோதரகள் முறியடித்தது.
கமலின் திரை வாழ்க்கையில் `அபூர்வ சகோதரர்கள்' ஒரு முக்கியமான படம். தன்னால் இந்தியா முழுக்க ஓட வைக்கக் கூடிய படத்தைத் தமிழிலேயே எடுத்துக் காட்ட முடியும் என நிரூபித்த படம். அதற்கு முன்னர் அந்தந்த மொழிகளிலேயே நடித்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர், ஒரு மொழியில் எடுத்தே அத்தனை மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆக்க முடியும் என்று நிரூபித்த படம். இந்தப் படத்திற்கு முன்னதான பேட்டி ஒன்றில்,`` எய்தவனுக்குத் தெரியும் அம்பு எங்கு போய் விழுகுமென்று. நிச்சயம் இது வெற்றிப்படம்" என்று சொல்லியிருந்தார். பின் நடந்தது சரித்திரம்.
அண்ணாத்தே ஆடுறார் பாடலில் ஒரு வரி வரும். `ஒத்தயா நின்னுதான் வித்தய காட்டுவேன் என் கித்தாப்பு' என்று. அன்று முதல் இன்று வரை தனியாகவே தமிழ்சினிமாவிற்கு அளப்பரிய பங்களிப்பை நல்கிவரும் கமலின் திரைப்பயணத்தில் அபூர்வ சகோதரர்கள் ஒரு மறக்க முடியாத படமாகவே மாறிவிட்டது.