Published:Updated:

``ஸ்டைலிஷ் விஜய், சென்டிமென்ட்டை மீறிய முருகதாஸ், அனிருத்தின் 4 நாள் இசை!" #5YearsOfKaththi

விஜய்
விஜய் ( கத்தி )

`துப்பாக்கி' படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் - விஜய் கூட்டணியில் வந்த படமென்பதால், `கத்தி' மீது கூர்மையான எதிர்பார்ப்புகள் இருந்தன. `துப்பாக்கி' படத்தின் ஸ்பெஷலே, தோட்டா வேகத்தில் நகரும் திரைக்கதைதான்.

`கத்தி' படத்திற்கு போலீஸிடம் அடிவாங்கி, முதல் நாள் முதல் காட்சியைப் பார்த்தேன். நண்பர் ஒருவர் கூட்டத்திற்குப் பயந்து கிட்னியில் கல் இருக்கிறது எனச் சொல்லி போலீஸிடம் எக்ஸ்கியூஸ் கேட்டு தியேட்டருக்குள் நுழைந்தார். பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இப்படத்தைப் பார்க்கப்போனதால், ஒவ்வொரு நிகழ்வும் நினைவிருக்கிறது. அதுவும் விஜய் படமென்றால் சொல்லவா வேண்டும். `கத்தி' திரைப்படம் வெளியாகி ஐந்து வருடம் ஆகிறது. இப்படம் குறித்த ஒரு சிறப்புப் பகிர்வு. 

`துப்பாக்கி' படத்தின் ப்ளாக் பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, முருகதாஸ் - விஜய் கூட்டணில் வந்த படமென்பதால், `கத்தி' மீது கூர்மையான எதிர்பார்ப்புகள் இருந்தன. `துப்பாக்கி' படத்தின் ஸ்பெஷலே, தோட்டா வேகத்தில் நகரும் அதன் திரைக்கதை. அதுவரை விஜய்யை எந்தப் படத்திலும் `க்ளாஸ் + மாஸி'ல் இவ்வளவு அழகாகப் பார்த்ததில்லை.

வழக்கமாக விஜய் படம் என்றாலே, பிரச்னைதான். `பிகில்' வரை அது தொடர்கிறது. `கத்தி' படத்திற்கு லைக்கா என்ற தயாரிப்பு பேனரை வைத்துப் பிரச்னைகள் கிளம்பியது. படத்தின் டீஸர் வெளிவந்த சமயத்தில்கூட மீம் எனும் பொறிக்குள் சிக்கித் தவித்தது. டனலுக்குள் உட்கார்ந்திருந்த விஜய்யை எடிட் செய்து, டிசைன் டிசைனாக மீம்ஸ் போட்டார்கள்.

ஆனால், படம் காட்டிய மேஜிக் வேறு ரகம்! ஜெயிலிலிருந்து விஜய் ஓடி வந்ததைப் பார்க்கும்போதே, முதுகெலும்பு நேரானது. புளூ பிரின்ட்டையும், ஒரு கைதியையும் பயன்படுத்தி சிறையிலிருந்து தப்பிவிடுகிறார், கத்தி என்கிற கதிரேசன். 

விஜய்
விஜய்
கத்தி

பிறகு, டைட்டில் கார்டு இன்னும் சுவாரஸ்யமாக இருந்தது. சிட்டுக் குருவி, காளை மாடு, ஆலமரம், ஏர் களப்பை, மாட்டு வண்டி, மண் வெட்டி, ஆடு மாடு... என இயற்கையோடும், விவசாயத்தோடும் தொடர்புடைய விஷயங்களுக்குப் பின்னால் புகை வழியும் தொழிற்சாலைகளைக் காட்டியபோது, படத்தின் கதை வெகுவாகப் புரிந்தது. அடுத்ததாக, `அதை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ்' என்ற எதிர்பார்ப்பு அதிகமானது. பிறகு, ஹீரோயின் என்ட்ரி, அறிமுகப் பாடல், சுமாரான சில காமெடிகள் என வழக்கமான மசாலா படமாக நகர்ந்தது.

கத்தி
கத்தி

விபத்து ஒன்றில் ஒரு விஜய் இன்னொரு விஜய்யைப் பார்த்துக்கொண்டதிலிருந்து ஆரம்பிக்கிறது, சுவாரஸ்யம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தில் மீண்டும் ஒரு 20 நிமிடத் தொய்வு. ஆறுதலாக இருந்தது அனிருத்தின் பின்னணி இசையும், 'ஆத்தி என நீ' பாடலும்தான். முக்கால் மணி நேரம் கழித்துதான் படம் மெல்ல மெல்ல மையப்புள்ளிக்கு நகர்ந்தது.

படத்தின் மொத்த உயிரையும் தூக்கி நிறுத்திய காட்சி, அந்தக் கல்லூரியில் ஒளிபரப்பான தன்னூத்து கிராமத்தின் கதைதான். விவசாயத்திற்காகவும், தண்ணீருக்காகவும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த நான்கு விவசாயிகள் கழுத்தை அறுத்துக்கொள்ளும்போது, மொத்தத் திரையரங்கிலும் மயான அமைதி. சிலர் தேம்பியழுதார்கள். விவசாயம் நம் ரத்தத்தோடு ஊறிய ஒன்று. ஏதோவொரு வகையில் நம்முடன் பிணைந்திருப்பது விவசாயம். நாளுக்கு நாள் அது அழிந்துவரும் நிலையில், இதுபோன்ற ஒரு காட்சியைப் பார்க்கும்போது, கட்டாயம் கண்ணீர் வரத்தானே செய்யும்!

அடுத்ததாக, கிராமத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று கூலி வேலை பார்க்கும் சிலரது காணொலி ஒளிபரப்பப்படும். கண்ணீர் நின்றபாடில்லை. இப்படி மனதில் எழுந்த ஒருவித அழுத்தத்தை, அடுத்ததாக வந்த சண்டைக் காட்சியானது தீர்த்து வைத்தது.

``நம்ம பசி தீர்ந்ததுக்கு அப்புறம் சாப்பிடுற அடுத்த இட்லி, இன்னொருத்தவங்களுடையது!"
- ஜீவானந்தம்

இப்படியான மாஸ் காட்சியை விண்வெளி உயரத்துக்கு அழைத்துச் சென்றது, அனிருத்தின் பின்னணி இசை. சதக் சதக்கென கத்திகள் கீச்சிட, விஜய் ஸ்டைலாக சண்டையிட, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது, இடைவேளை காட்சி.

முதன்முதலில் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது, நமக்கே ஒருவித வெறி வரும். சரி, இடைவேளை பன்ச் என்ன என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்க, 'துப்பாக்கி' பாணியிலேயே சிரித்தபடி, 'ஐ ஆம் வெயிட்டிங்' என விஜய் சொல்ல, மொத்தத் திரையரங்கும் அதிர்ந்தது.

இந்தச் சண்டைக் காட்சியைப்போலவே மற்றொரு ஃபேமஸான சண்டைக் காட்சி, 'காயின்' ஃபைட். விஜய் ஒவ்வொரு காயின்களாகச் சுண்டிவிட, சதீஷ் கரன்ட்டை ஆன்/ஆஃப் செய்வார். இந்தச் சண்டைக் காட்சி 1974-ல் வெளியான 'ப்ளாக் பெல்ட் ஜோன்ஸ்' என்ற படத்திலிருந்து இன்ஸ்பையராகி எடுக்கப்பட்டது என்பது பின்னாள்களில் கண்டுபிடிக்கப்பட்டது. 

மொத்தத்தில், 'கத்தி' சோஷியல் மெசேஜ் சொன்ன பக்கா கமர்ஷியல் படம். இந்தப் படத்தில் சில சுவாரஸ்யமான சம்பவங்கள் இருக்கின்றன. படத்தின் வில்லனாக நடித்திருந்த நீல் நித்தின் முகேஷ், அவரது சொந்தக் குரலிலேயே தமிழ் டப்பிங் பேசியிருந்தார். எந்தவொரு காட்சியிலும் புகை, மது போன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்தும் காட்சிகள் இடம்பெறாததால், 'ஸ்மோக்கிங் இஸ் இன்ஜூரியஸ் டு ஹெல்த்' என்ற அறிவிப்பு சொல்லப்படவில்லை.

படத்திற்கு அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி, அடுத்த நான்கு நாள்களில் படத்திற்கான பின்னணி இசையை முடித்துக் கொடுத்துவிட்டார்.

படத்தின் க்ளைமாக்ஸில் வரும் பிரஸ்மீட் காட்சி இரண்டே மணிநேரத்தில் படமாக்கப்பட்டதென முருகதாஸ் ஒரு பேட்டியில் பகிர்ந்தார். அதேசமயம், விஜய்யின் சிங்கிள்-டேக் ஷாட் பற்றியும் நெகிழ்ந்து கூறினார். சிரஞ்சீவியின் 150-வது படமாக இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. தவிர, படத்தின் முதல் காட்சியையே இரவு நேரத்தில்தான் படமாக்கியிருக்கிறார்கள். பொதுவாக, இதுபோன்ற பெரிய பட்ஜெட் படங்களை சென்டிமென்ட் காரணமாக இருட்டிலிருந்து தொடங்கமாட்டார்களாம்!

விஜய் - சமந்தா
விஜய் - சமந்தா

படத்தில் நிறை குறைகள் நிறைய இருந்தாலும், விஜய்யின் கரியரில் 'கத்தி' முக்கியமான படம். ரசிகர்களுக்கும் அப்படித்தான். எத்தனை வருடங்களானாலும் அவர்களுக்கு இது கொண்டாடப்பட வேண்டிய சினிமா! 

`பிகில்' கதை, `சக்தே இந்தியா' கதை மட்டுமல்ல... இந்தப் படங்களின் கதையும்தான்!
அடுத்த கட்டுரைக்கு