Published:Updated:

யுவன் இசை இல்லாமல் காதல், பிரிவு, சோகம், தவிப்பு, ஏக்கம், புலம்பல்... கடந்துவிடமுடியுமா? HBDYuvan

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் 42வது பிறந்த தினம் இன்று. யுவனின் இசைப்பயணத்தையும், முக்கியமான சில தருணங்களையும் பதிவுசெய்கிறது இந்தக் கட்டுரை!

‘யுவன்’ என்றாலே இளமை என்றுதான் பொருள். தன் பெயருக்கேற்ப இன்று வரை தன் அதி இளமையான இசையால் ரசிகர்களைக் கட்டிப் போட்டுக் கொண்டிருக்கும் ‘யுவன் ஷங்கர் ராஜா’ எனும் இசையமைப்பாளனுக்கு தொடக்க காலம் அத்தனை சிறப்பானதாக அமையவில்லை.

1997-ல் ‘அரவிந்தன்’ என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான யுவனின் முதுகில் ஒரு பெரிய சுமை தன்னிச்சையாக ஏறி அமர்ந்து கொண்டது. பொதுவாகவே பிரபலங்களின் வாரிசுகள் எதிர்கொள்ளும் சுமை அது. அதுவொரு முள்கிரீடம். ‘இளையராஜா’ என்கிற மகத்தான இசைக்கலைஞரின் மகன், தந்தையைப் போலவே பிரகாசிப்பாரா என்கிற கேள்வி எல்லோருக்குள்ளும் எழுந்தது.

ஏறத்தாழ தன்னுடைய பத்தாம் வயதிலேயே தந்தை இளையராஜாவுடன் ‘ஆனந்த்’ போன்ற சில திரைப்படங்களில் யுவன் துணையாக பணிபுரிந்திருந்தாலும் யுவனுக்கு இசைத்துறைக்குள் வருவதற்கான ஆர்வம் இருந்தது போல் தெரியவில்லை. உலகத்தைச் சுற்றி வரும் ஒரு விமான பைலட் ஆவது தான் அவரது கனவாகவும் விருப்பமாகவும் இருந்திருக்கிறது. ராஜாவின் இதர வாரிசுகளான கார்த்திக்கும், பவதாரிணியும் தந்தையின் அடிச்சுவட்டையொட்டி தீவிரமாக இசை பயின்று கொண்டிருக்க, யுவனோ ஒரு வட்டத்துக்குள் அடங்காத காற்று மாதிரி உலவிக் கொண்டிருந்தார். என்றாலும் காலம் அவரை இசையின் பக்கம்தான் இழுத்து வந்தது.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

‘’நீ இசைத்துறையில் ஈடுபடுவது நல்லது'’ என்று தன் அம்மா வழிகாட்டியதின் காரணமாக இசை ஆல்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த யுவனின் இசைத்திறமையை கவனித்த தயாரிப்பாளர் சிவா, தனது புதிய திரைப்படத்தில் யுவனை அறிமுகப்படுத்த விரும்பினார். ‘அன்னக்கிளி’ என்கிற தலைப்பில் ராஜாவின் முதல் திரைப்படம் அமைந்ததால், அதே ராசியின் படி இந்தத் திரைப்படத்துக்கு ‘அ’ என்ற எழுத்தில் பெயர் தொடங்கும்படியாக ‘அரவிந்தன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இதன் டிரைலருக்கு யுவன் அமைத்த இசை பலரைக் கவர்ந்தது. இதன் பாடல்கள் இன்றைக்கு கேட்டாலும் இனிமையாக இருக்கும்படியாக இருந்தாலும் படம் தோல்வியடைந்ததால், ஒரு சிறிய வட்டத்தைத் தாண்டி இதன் பாடல்கள் வெகுவாக கவனிக்கப்படவில்லை.

அடுத்த திரைப்படங்களான ‘வேலை’, ‘கல்யாண கலாட்டா’ போன்ற திரைப்படங்களுக்கும் இதே கதிதான். தோல்வியைச் சுமப்பது மட்டுமல்லாது, ‘’யுவனின் இசை ராஜா பாணியின் நகல்களாக இருக்கின்றன’’, ‘’யுவனுக்கு அவரது தந்தைதான் இசையமைத்து தருகிறார்’’ போன்ற அவதூறுகளையும் அவப்பெயர்களையும் யுவன் சந்திக்க வேண்டியிருந்தது.

இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஓர் இசையமைப்பாளர் அடிப்படையில் என்னதான் திறமைசாலியாக இருந்தாலும், ஒரு திரைப்படத்தின் இயக்குநர்தான் அவருக்கு ஒரு நல்ல தூண்டுதலாக இருக்க முடியும். திரைக்கதையும், சூழலும், இயக்குநர் விவரிக்கும் விதமும், இசையமைப்பாளருக்குள் அகத்தூண்டுதலை ஏற்படுத்தி நல்ல இசையை வெளிப்படுத்த வைக்க வேண்டும்.

மதமாற்றம் திட்டமிட்ட அஜெண்டாவா? - ஆனந்த விகடன் பிரஸ்மீட்டில் யுவன் ஷங்கர் ராஜா!

“யோவ்... எத்தனையோ பேருக்கு பாட்டு எழுதறேன். ஆனா நீ சொல்ற சிச்சுவேஷன்லாம் வித்தியாசமா இருக்கு. சவாலா இருக்கு. யோசிச்சு உற்சாகமா எழுத வைக்குது”. இப்படி கே.பாலசந்தரிடம் சொன்னவர் கவியரசு கண்ணதாசன்.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

இங்கு ஒரு கேள்வி எழலாம். ‘பல மோசமான திரைப்படங்களுக்கு கூட இளையராஜா, மிகச்சிறந்த பாடல்களைத் தந்திருக்கிறாரே?’ என்று. ராஜா போன்ற பிறவி மேதைகளை எந்த விதியிலும் பொருத்தி விட முடியாது. அவர் கருமமே கண்ணாயினார் போல மிக மோசமான கதைகளுக்கு கூட தன்னிடம் பொங்கி வரும் இசையை அள்ளித் தந்து கொண்டேயிருப்பார்.

யுவனுக்கான அகத்தூண்டல் இயக்குநர் வசந்த்தின் வழியாக நிகழ்ந்தது. ஆம், நடிகர் சூர்யாவை அறிமுகப்படுத்திய அதே இயக்குநர்தான். ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ திரைப்படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அப்போதுதான் ஒட்டுமொத்த ரசிகர் உலகமே ‘யாருய்யா இது?’ என்று யுவனை திரும்பிப் பார்க்க ஆரம்பித்தது. இளம் பார்வையாளர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனம் இட்டு அமர்வதற்கான முன்னெடுப்பை இந்த ஆல்பத்தின் மூலம் யுவன் ஏற்படுத்தினார்.

அஜித்குமாரின் கரியரில் ‘தீனா’ (2000) ஒரு முக்கியமான திரைப்படம். அவருக்கு ‘மாஸ் ஹீரோ’ என்கிற அடையாளத்தை கொடுத்த படம். அது போலவே யுவனுக்கும் இந்த ஆல்பம் ஒரு முக்கியமான அடையாளமாக அமைந்தது. அத்தனை ‘ஹிட்’ அடித்த ஆல்பம். ‘’வத்திக்குச்சி பத்திக்காதுடா’’ பாடலில் எஸ்.பி.பியை மிக வித்தியாசமான தொனியில் பாட வைத்தார். இந்த அதிரடிப் பாடலின் எதிர்முனையில் ‘’சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்’’ என்கிற அற்புதமான மெலடியின் மூலம் ஹரிஹரனை சிறப்பாக பயன்படுத்தினார். ‘தீனா’வின் வெற்றிக்கு பாடல்களும் அட்டகாசமான பின்னணி இசையும் உறுதுணையாக இருந்தது.

இதே ஆண்டில்தான் ‘துள்ளுவதோ இளமை’ ஆல்பம் வெளியாகிறது. செல்வராகவனுடனான கூட்டணி என்பது யுவனை ஒரு புத்தம் புதிய திசைக்கு அழைத்துச் செல்கிறது. உண்மையில் யுவனின் பயணம் இங்கிருந்துதான் டேக் ஆஃப் ஆகிறது என்று கூட சொல்லலாம். ‘’தீண்டத் தீண்ட’’ என்கிற பாடலின் மூலம் தனக்கு கர்நாடக இசையிலும் சிறப்பாக இசையமைக்க முடியும் என்பதை நிரூபித்தார் யுவன். ‘இவர் எங்காளுப்பா’ என்பதை யுவனை இளம் பார்வையாளர்கள் அடையாளம் கண்டுகொண்டது இந்த ஆல்பத்தின் மூலம்தான்.

``ஆரோக்கியமான போட்டின்னா ஓகேதான்!'' - யுவன் பார்வையில் ரசிகர்களின் ராஜா Vs ரஹ்மான்!
யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

இந்த காலகட்டத்தின் சூழலை சற்று எண்ணிப்பாருங்கள். ஒருபக்கம் இளையராஜா என்னும் சக்கரவர்த்தி, தனது சிம்மாசனத்தில் அமர்ந்து சற்றும் அசைக்க முடியாமல் நெடுங்கால ஆட்சியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் ஏ.ஆர்.ரஹ்மான் எனும் தமிழ் திரையிசையின் புதிய பரிணாமம் தோன்றி, ஒரு பேரரசனுக்குரிய அடையாளங்களை அப்போது தோற்றுவித்துக் கொண்டிருந்தார்.

இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு இடையில் ஒருவர் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு அசாதாரணமான திறமையும் உழைப்பும் தனித்தன்மையும் தேவைப்படும். அது யுவனிடம் இருந்தது. எனவே இந்த காலகட்டத்தின் தங்க இளவரசனாக தனக்கென்று ஒரு ராஜபாதையை அமைத்துக் கொண்டு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தார் யுவன். 2001-ல் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘நந்தா’வில் யுவனின் இசை இன்னொரு பரிமாணத்தை எட்டியது. ‘’முன்பனியா... முதல் மழையா’’ பாடலை ஒலிபரப்பாத வானொலிகளோ, முணுமுணுக்காத உதடுகளோ அந்தக் காலத்தில் இல்லை.

2002-ம் ஆண்டு. ‘காதல் கொண்டேன்’ திரைப்படம் வெளியாகிறது. செல்வராகவன்+நா.முத்துக்குமார்+யுவன் என்கிற அற்புதமான கூட்டணி, தங்களின் இருப்பை அழுத்தமாக நிரூபித்த ஆல்பம் இது. தனுஷின் வெறித்தனமான நடிப்புக்கு யுவனின் பின்னணி இசை மகத்தான உதவி புரிந்தது என்றால் அதில் மிகையில்லை. ஹாலிவுட் பாணியில் ‘பின்னணி இசையும்’ ஆல்பமாக வெளிவந்தது இந்தத் திரைப்படத்தில்தான். இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்கிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2003-ல் வெளியான ‘குறும்பு’ என்கிற திரைப்படத்தில், தனது தந்தை இசையமைத்த சூப்பர் ஹிட் பாடலான ‘’ஆசை நூறு வகை’’யை ரீமிக்ஸ்-ஆக பயன்படுத்தினார் யுவன். இப்படியாக யுவனின் வழியாகத்தான் ‘ரீமிக்ஸ்’ என்கிற கலாசாரம் தமிழில் நுழைந்தது. இந்த கலாசாரம், ஒருபக்கம் பாராட்டுக்களைப் பெற்றதோடு இன்னொரு பக்கம் எதிர்மறையான விமர்சனங்களையும் சந்தித்தது. ரீமிக்ஸ்தான் என்றாலும் அவற்றில் தனது பிரத்யேகமான உழைப்பை யுவன் தயங்கத் தவறவில்லை.

யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

‘7ஜி ரெயின்போ காலனி’ யுவனின் இசைப்பயணத்தில் அமைந்த புதிய மைல்கல் எனலாம். தனது அசுரத்தனமான உழைப்பை யுவன் தந்திருந்ததால் இந்த ஆல்பம் அதிரிபுதிரியாக ஹிட் ஆனது. இதன் தீம் மியூசிக், சவுண்ட் டிராக் போன்றவை ஆல்பங்களாக வெளிவந்தன.

ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் வெற்றிக்கு எப்படி ராஜாவின் இசை அந்தக் காலக்கட்டத்தில் மிக முக்கியமான காரணமாக அமைந்ததோ, அதைப் போலவே அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த அஜித், தனுஷ், சிம்பு, கார்த்தி, விஷால், ஆர்யா போன்ற நடிகர்களின் வளர்ச்சிக்கு யுவனின் இசை அடிப்படையான காரணமாக அமைந்தது.

செல்வராகவன், ராம், லிங்குசாமி, விஷ்ணுவர்த்தன், வெங்கட்பிரபு, ராஜேஷ் போன்ற இசையமைப்பாளர்களுடனான யுவனின் கூட்டணி தொடர்ந்து வெற்றி பெற்றது. இதில் செல்வராகவன், ராம் ஆகியோருடன் இணைந்த ஆல்பங்களை தனித்தன்மையுடன் கூடிய ‘கிளாசிக்’ எனலாம். ‘புதுப்பேட்டை’ ஆல்பத்திற்கு எல்லாம் தனி கட்டுரையைத்தான் ஒதுக்க வேண்டும். ‘ஒருநாளில் வாழ்க்கை’யெல்லாம் என்ன மாதிரியான பாடல்!

மகிழ்ச்சி, துள்ளல், வீரம் போன்று பல உணர்வுகளை யுவன் தன்னுடைய பாடல்களில் வெற்றிகரமாக கடத்தியிருந்தாலும், அவர் பிரத்யேகமாக அடித்து ஆடிய ஏரியா ஒன்று இருக்கிறது. அது ‘காதல் சோகம்’. நீங்கள் இளம் தலைமுறையைச் சேர்ந்த எந்த ஒருவரிடமும் யுவனின் பாடல்களில் பிடித்தவற்றை கூறச் சொல்லுங்கள். அவர்கள் குறிப்பிடுவதில் ‘காதல் சோகத்தில்’ அமைந்த பாடல் உத்தரவாதமாக இடம் பெறும். அந்த அளவுக்கு ஒரு காலகட்டத்தின் காதலர்களின் மனக் காயங்களுக்கு யுவனின் பாடல்கள் பெரிய ஆறுதலாகவும் மருந்தாகவும் அமைந்தன. ‘தீபாவளி’ திரைப்படத்தில் வரும் ‘‘போகாதே’’ பாடலின் வரிகளை தங்களின் செல்போன்களில் கல்வெட்டாக பொறித்துக் கொண்டவர்கள் ஏராளம். இந்த வரிசையில் நிறைய பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம்.

காதலின் பிரிவு, சோகம், நிராசை, தவிப்பு, ஏக்கம், புலம்பல், ஆறுதல் என்று இந்த ஒரு உணர்வின் பல்வேறு பரிமாணங்களை தனது பாடலில் உருவாக்கினார். இந்த நோக்கில் யுவனுக்குள் ஓர் அழகான, உண்மையான காதலன் இருப்பதை யூகிக்க முடிகிறது. அதிலும் இந்த வரிசையில் யுவனே பாடிய பாடல் என்றால் அது கூடுதல் ஸ்பெஷலாக அமையும். யுவனின் குரலில் உள்ள பிரத்யேகமான வசீகரம் இந்தப் பாடல்களுக்கு கூடுதல் சுவையை சேர்த்தன.

‘வலிமை’ படத்துக்குப் புதுமையான தீம் மியூசிக்! - யுவன் சொன்ன ரகசியம்
யுவன் ஷங்கர் ராஜா
யுவன் ஷங்கர் ராஜா

‘பேசு’ என்கிற வெளிவராத திரைப்படத்தில் ‘’வெண்ணிற இரவுகள்’’ என்கிற யுவன் பாடிய பாடலைக் கேட்டுப்பாருங்கள். சினிமா பாடல் என்றல்லாது ஒரு பிரைவேட் ஆல்பத்தின் மிகச்சிறந்த பாடலைக் கேட்ட உணர்வைத் தரும். யுவனின் குரல் அட்டகாசமான அமைந்த பாடல்களில் ஒன்று அது.

யுவன் ஆல்பங்களின் வரிசையில் இரண்டை நிச்சயமாக குறிப்பிட வேண்டும். ஓன்று, 2006-ல் வெளிவந்த ‘பருத்தி வீரன்’. இளையராஜாவின் பிரதான அடையாளமே ‘நாட்டுப்புற இசை’தான். ஆனால், நவீன இசையமைப்பாளர்களால் அசலான கிராமிய இசையை தர முடியுமா என்கிற கேள்வி நெடுங்காலாக இருந்த போது அந்த மரபையும் ‘பருத்தி வீரன்’ மூலம் உடைத்தெறிந்தார் யுவன். நாட்டார் இசையின் கச்சாத்தன்மையை ஏறத்தாழ அதன் வீரியம் குறையாமல் இதில் கடத்திக் கொண்டு வந்தார். இந்த வகையில் குட்டி பதினாறு அடி பாய்ந்தது என்று நிச்சயமாக சொல்ல முடியும். ‘’ஊரோரம் புளியமரம்’’ பாடல் ரசிகர்களை குத்தாட்டம் போட வைத்தது.

இரண்டாவது ஆல்பம் ‘ஆரண்ய காண்டம்’. இதில் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் பின்னணி இசையில் பட்டையைக் கிளப்பி விட்டார் யுவன். ஆரண்ய காண்டமே ஒருவகையான cult படம்தான். எனவே சம்பிரதாய பாணியை தவிர்த்து முற்றிலும் ஒரு புதிய பாணியை யுவன் உருவாக்கியிருந்தது பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸில் நிகழும் உக்கிரமான சண்டைக்கு துள்ளலான இசையைப் பயன்படுத்தியிருந்தது மறுமலர்ச்சியான உத்தி.

இசைக்கும் ஆன்மீக தேடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை பல இசையமைப்பாளர்கள் நிரூபித்திருக்கிறார்கள். இந்த வகையில் யுவனின் தேடலும் ஒரு புதிய திசையை நோக்கி அவரை அழைத்துச் சென்றது. சூஃபி இசையின் தாக்கம், யுவனின் உருவாக்கத்தில் எதிரொலித்தது. ‘’பாவங்களைச் சேர்த்துக் கொண்டு’’ (தரமணி) போன்ற பாடல்கள் இதற்கு உதாரணம்.

ஒரே பாசறையில் உருவானவர்கள் என்பதால் கார்த்திக் ராஜாவையும் யுவனையும் ஒப்பிடுவது தவிர்க்க முடியாது. யுவனை விடவும் கார்த்திக் ஒரு சிறந்த கம்போஸர். யுவனே ஒப்புக் கொண்ட விஷயம் இது. கார்த்திக்கும் தனித்தன்மையுடன் கூடிய இசையமைப்பாளர் என்றாலும் அதில் ராஜாவின் ராணுவ ஒழுங்கும் கச்சிதமும் நன்கு தெரியும். ஆனால் தந்தையின் சுவடுகளைப் பின்பற்றினாலும் இந்தக் கூட்டை உடைத்துக் கொண்டு தைரியமாக வெளியே சுதந்திரமாக பறந்த பறவை என்று யுவனை சொல்ல முடியும். ஒருவகையில் அவர் அடைந்த பிரம்மாண்டமான வெற்றிக்கு இதுவே கூட ஒரு காரணம்.

தொடக்க காலகட்டத்தில் அவ்வளவாக கவனிக்கப்படாத ஓர் இசையமைப்பாளர்தான், பின்னாளில் யூட்யூபில் ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை உருவாக்குகிறார். ‘ரவுடி பேபி’ என்கிற அந்த அட்டகாசமான பாடல் பல கோடி பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்து இணையத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்துகிறது. இந்த கால இடைவெளிக்குள் இடைவெளிக்குள் இருப்பது வெறும் அதிர்ஷ்டமல்ல. அதற்கு காரணமாக இருப்பது யுவனின் அசாதாரணமான உழைப்பும் திறமையும்.

யுவன் எனும் பறவை இன்னும் பல ஆண்டுகளுக்கு இசைவானில் தொடர்ந்து பறந்து கொண்டேயிருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை!

அடுத்த கட்டுரைக்கு