சினிமா
Published:Updated:

‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!

ரஜினி, நடராஜன் ராம்ஜி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி, நடராஜன் ராம்ஜி

படிப்புதான் எல்லாம்னு நினைக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா எனக்குப் படிப்பே ஏறலை. டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருக்கிறதே தெரியாம காலேஜ்வரை வந்தேன்.

'எந்திரன்’ படத்தின் ‘காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை....’ பாடலின் ப்ரீஸி லொகேஷனும், ‘பாகுபலி’ படத்தில் பிரபாஸ் சண்டையிடும் பனிபடர்ந்த மலைகளும், ‘மெர்சல்’ படத்தில் வில்லனை விஜய் கொல்லும் பிரமாண்ட அரங்கும் நினைவிலிருக்கின்றனவா? அத்தகைய அழகிய லொகேஷன்களுக்காக ஒளிப்பதிவாளரையும் இயக்குநரையும் புகழ்ந்துதள்ளியிருக்கும் நமக்கெல்லாம் அதன் பின்னணியில் உள்ள முக்கியமான நபரைப் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ‘லொகேஷன் குரு’வாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிற நடராஜன் ராம்ஜி, கோலிவுட், டோலிவுட், மல்லுவுட், பாலிவுட் என அத்தனை மொழிப்படங்களின் பிரமாண்ட லொகேஷன்களின் பின்னணியிலும் இருக்கும் சென்னை மனிதர். ‘எந்திரன்’, ‘பாகுபலி’, ‘தில்வாலே’, ‘சரைனோடு’ என நீளும் இவரின் படங்களில் லேட்டஸ்ட் புராஜெக்ட் ‘ஆர்ஆர்ஆர்.’

வருடத்துக்கு எட்டு மாதங்கள் உலகம் சுற்றும் ராம்ஜியின் பார்வையிலிருந்து பூமிப்பந்தின் எந்த அழகிய இடமும் தப்பாது. கண்களில் எந்நேரமும் லொகேஷன் தேடலுடன் திரியும் ராம்ஜி, அப்படி எந்த இடம் பார்வையில் பட்டாலும் குறித்துவைக்கத் தவறுவதில்லை. அந்த இடத்தின் வரலாறு முதல் நிலப்பரப்பு வரை அனைத்தையும் பதிவுசெய்து, படக்குழுவினருக்குக் காட்டி, கதைக்குத் தேவையான களத்தை உறுதிசெய்கிறார். படப்பிடிப்பு உறுதியானதும், அங்கே அனுமதி வாங்குவது முதல் படக்குழுவினருக்குப் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்வதுவரை அனைத்தும் ராம்ஜியின் வேலைகள். இதுவரை 140 நாடுகளுக்குப் பயணம் செய்திருப்பவர், அவற்றில் 75 நாடுகளில் ஷூட்டிங் நடக்க ஏற்பாடு செய்துள்ளார்.

‘‘படிப்புதான் எல்லாம்னு நினைக்கிற குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். ஆனா எனக்குப் படிப்பே ஏறலை. டிஸ்லெக்ஸியா பாதிப்பு இருக்கிறதே தெரியாம காலேஜ்வரை வந்தேன். படிப்பைத் தொடர முடியலை. வீட்டுல ‘இவன் தேறமாட்டான்’னே முடிவு பண்ணிட்டாங்க. எங்கப்பாவோட நண்பரான நடிகர் நாகேஷ் என்னைப் பார்த்துட்டு, ‘பையன் ஸ்மார்ட்டா இருக்கானே... படத்துல நடிக்கலாமே’ன்னு கேட்டார். தாசரி நாராயணராவ் இயக்கத்தில் ‘ஸ்வப்னா’ படம் மூலமா நடிகரானேன். ஆனா அடுத்தடுத்து நான் ஹீரோவா நடிச்ச சில படங்கள் சரியா போகலை. வீட்டுல ஏதாவது வேலைக்குப் போகச் சொன்னாங்க.

எனக்கு சின்ன வயசுலேருந்தே பயணங்கள் ரொம்பப் பிடிக்கும். அந்த வயசுல அதுக்கான வாய்ப்புகள் அமையலை. உலகத்தைச் சுத்திப் பார்க்கணும்ங்கிற என் ஆசைக்கேத்தபடி டிராவல் ஏஜென்சியில வேலை கிடைச்சது. ஆனா அந்த வேலையிலயும் தாக்குப்பிடிக்க முடியலை.

‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!
‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!

சினிமாவுல நடிச்ச ஏழு வருஷங்கள்ல நான் சம்பாதிச்சிருந்த ஒரே விஷயம் நட்பு. பெரிய நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள்னு எல்லார்கூடவும் நல்ல நட்பு இருந்தது. நட்பு அடிப்படையில அவங்க என்னைக் கூப்பிட்டு பாஸ்போர்ட் எடுக்குறது, விசா எடுக்குறது மாதிரியான வேலைகளைக் கொடுப்பாங்க. அப்படித்தான் நடிகர் சிரஞ்சீவி, அவருடைய உறவினர் அல்லு அரவிந்த், டைரக்டர் கே. ராகவேந்திரராவ் மூணு பேரும் கூப்பிட்டாங்க. அவங்க சிங்கப்பூர்ல ஷூட் பண்ணவிருந்த ‘ருத்ர நேத்ரா’ படத்துக்கான லொகேஷன் பார்த்துக் கொடுக்கிறது, டிக்கெட், விசா, ஹோட்டல் ஸ்டே, அங்கே பர்மிஷன் வாங்குறது, ஷூட்டிங் நடத்திக்கொடுக்கிறது உள்ளிட்ட விஷயங்களைப் பண்ணிக் கொடுக்கச் சொன்னாங்க. கூடவே அந்தப் படத்துல எனக்கு வில்லன் ரோலும் கொடுக்கிறதா சொன்னாங்க. அப்படியே நடிகர் வெங்கடேஷ், அவர் அப்பா தயாரிப்பாளர் ராமாநாயுடு ரெண்டு பேரும் கூப்பிட்டு ஹாங்காங்ல ஷூட்டிங் நடத்த ஏற்பாடு செய்துதரச் சொன்னாங்க. அடுத்தடுத்து பலரும் இந்த வேலைகளைக் கொடுத்தாங்க. வாழ்க்கையில முதல்முறையா பிடிச்ச விஷயத்தை நோக்கி நகர ஆரம்பிச்ச உணர்வு. என் ஆர்வம் எனக்கு வருமானத்தையும் கொடுக்கவே, அதுல கவனம் செலுத்தத் தொடங்கினேன்.’’ குட்டி ஸ்டோரி சொல்பவர், சத்யம் தியேட்டர்ஸ் ரெட்டி பிரதர்ஸின் ஆலோசனைப்படி ‘டிராவல் மாஸ்டர்ஸ்’ என்ற ஏஜென்சியை ஆரம்பித்திருக்கிறார்.

‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!
‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!

‘‘வழக்கமான டிராவல் ஏஜென்சிதான். ஆனாலும் சினிமா ஷூட்டிங் பயணங்களுக்கான பிசினஸா அதைக் கொண்டுபோனேன். கம்பெனி தொடங்கினதும், ஆம்ஸ்டர்டாம்ல வெங்கடேஷ், தபு நடிச்ச ‘கூலி நம்பர் ஒன்’ படத்துக்கும், ஸ்விட்சர்லாந்துல சிரஞ்சீவி நடிச்ச ‘ரவுடி அல்லுடு’ படத்துக்கும் வேலை பார்த்தேன். கோலிவுட், டோலிவுட், பாலிவுட்னு எல்லா மொழிப் படங்களுக்கும் ஸ்விட்சர்லாந்து ஃபேவரைட் லொகேஷனாவே மாறிடுச்சு. குளிர்காலத்துல ஸ்விட்சர்லாந்துல ஷூட்டிங் எடுக்க முடியாமப்போனது. படம் எடுக்கிறவங்களுக்கு மாற்று லொகேஷன் தேவைப்பட்டது. கூகுள் எல்லாம் இல்லாத அந்தக் காலத்துல அப்படிப்பட்ட இடங்களைத் தேடிக் கண்டுபிடிக்கிறது எனக்குப் பெரிய சவாலா இருந்தது. புதுசா எந்த நாட்டுக்குப் போனாலும் அங்குள்ள புத்தகக் கடைக்குப் போய், அந்த நாட்டோட வரைபடங்கள் உள்ள புத்தகங்களை வாங்கிப் பார்ப்பேன். அப்பதான் நியூஸிலாந்துல வேற மாதிரியான வானிலை நிலவும்னு தெரிஞ்சது. என் லொகேஷன் லிஸ்ட்டுல நியூஸிலாந்து சேர்ந்தது’’ என்பவர், அடுத்தடுத்து உலக வரைபடத்திலுள்ள பல நாடுகளையும் லிஸ்ட்டில் இணைத்துள்ளார்.

‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!
‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!

‘‘கிரீஸ், துருக்கி, ரஷ்யா, எகிப்து, ஜோர்டான்னு முதல்ல ஒவ்வொரு நாட்டுக்கும் நான் போய்ப் பார்ப்பேன். லொகேஷன்களை மட்டுமல்லாம, சவால்கள், பிரச்னைகளையெல்லாம் பார்த்துட்டு வருவேன். ‘எந்திரன்’ படத்துக்காக தென் அமெரிக்கா போனோம். டைரக்டர் ஷங்கரோட டேஸ்ட் வித்தியாசமானது. ‘நாம கேமரா வைக்கிற இடத்துல இதுவரைக்கும் யாரும் கேமரா வெச்சிருக்கவே கூடாது’ன்னு சொல்வார். சுவர் ஓவியத்துல ஓரிடத்தைப் பார்த்தேன். அதைப் பத்தி விசாரிச்சபோது அந்த இடம் சௌத் பிரேசில்ல இருக்கிறதா சொன்னாங்க. அந்தப் படங்களைக் காட்டினதுமே ஷங்கர் சாருக்குப் பிடிச்சுப்போச்சு. உடனே கிளம்பினோம். பிரேசில்ல ரியோடி ஜெனிரோவிலேருந்து ப்ளைட்ல 5 மணி நேரப் பயணம். அங்கிருந்து இன்னொரு ஊருக்குக் காட்டு வழியா பயணம். லொகேஷனைப் பார்த்ததும் ஷங்கர் சார் அசந்துட்டார். தண்ணீர், அடுத்து பாலைவனம், அடுத்து தண்ணீர், அப்புறம் பாலைவனம்னு அந்த இடத்துல எடுத்ததுதான் ‘காதல் அணுக்கள்...’ சாங். ‘பாகுபலி’ படத்தின் பல்கேரியா லொகேஷன் ஹிட் அடித்ததன் விளைவு, அடுத்தடுத்து ‘ஐ’ (சீனா), ‘மெர்சல்’ (மாசிடோனியா), ‘ஷிவாயே’ மற்றும் ‘தில்வாலே’ (பல்கேரியா), ‘சரைனோடு’ (பொலிவியா) என வெற்றிப்படங்கள் வாகை சூட்டின.

‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!
‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!
‘எந்திரன்’ முதல் ‘ஆர் ஆர் ஆர்’ வரை... அசத்தும் லொகேஷன் குரு!

‘‘இப்படிப் பரபரப்பா ஓடிட்டிருந்தபோதுதான் கொரோனா வந்தது. ஷூட்டிங், தியேட்டர்னு மொத்த சினிமா இண்டஸ்ட்ரியும் ஸ்தம்பிச்சு நின்னது. டிராவல், டூரிசம்னு எல்லாமே ஆட்டம்கண்ட நிலையில, மறுபடி ஏதாவது பண்ணி என்னை நிலைநிறுத்திக்க வேண்டிய கட்டாயம். கொரோனா ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே ஒரு பெரிய படத்துக்கு லொகேஷன்ஸ் கொடுத்திருந்தேன். அந்த வருஷம் ஜூலை ஒன்றாம் தேதி என் மகளுக்கு நிச்சயதார்த்தம். ஜூன் 25 அந்தப் படத்துக்கான லொகேஷன் பார்க்கக் கூப்பிட்டாங்க. டிராவல் பண்ற ஒவ்வொரு முறையும் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கணுமே.... எங்கேயாவது பாசிட்டிவ் ஆயிட்டா, பொண்ணு நிச்சயதார்த்தம் என்னாகிறதுங்கிற பயத்தோடவே விஷயத்தை மனைவிகிட்ட சொன்னேன். முதல்ல திட்டினவங்க, அது ராஜமௌலியோட ‘ஆர்ஆர்ஆர்’ படம்னு தெரிஞ்சதும், ‘நிச்சயதார்த்த வேலைகளை நான் பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க...’ன்னு சொல்லி அனுப்பிவெச்சாங்க. 1920 காலகட்டத்தைப் பிரதிபலிக்கிற அந்தப் படத்துக்காக நான் காட்டின உக்ரைன் லொகேஷன் ராஜமௌலிக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. சூப்பர்ஹிட் சாங் ‘நாட்டு நாட்டு’ அங்கே எடுத்ததுதான். சார்ட்டர்டு ப்ளைட் புக் பண்ணி அங்கே போய் 28 நாள் ஷூட் பண்ணினோம்...’’ மீண்டும் மீண்டிருப்பவரின் கைவசம் இப்போது கிட்டத்தட்ட 30 படங்கள்.

பிரமிக்கவைக்கிறார் ‘62 இயர்ஸ் யங்’ ராம்ஜி.