கட்டுரைகள்
சினிமா
Published:Updated:

இது பெண்கள் காலம்!

நயன்தாரா
பிரீமியம் ஸ்டோரி
News
நயன்தாரா

நான் ‘கனா’ பண்ணும்போது எனக்கு என் மீதான நம்பிக்கையைவிட, இயக்குநர் அருண்ராஜாமீது நம்பிக்கை இருந்தது.

தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கம் இன்னும் குறையவில்லைதான். அரசியல் சினிமாக்கள்கூட ஆண்களின் சினிமாக்களாகவே இருக்கின்றன. ஆனாலும் 30 ஆண்டுகளுக்கு முந்தைய சினிமா இல்லை இப்போது. கட்டிப்பிடித்து டூயட் பாடி, கண்ணீர் சிந்தி, தாலியின் பெருமை பேசிய ஹீரோயின்கள் காலமில்லை. ஹீரோயின்களுக்குமான வெளி விரிந்திருக்கிறது. ஜோதிகா, நயன்தாரா போன்றோர் முழுக்கவே ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிக்கத்தொடங்கியிருக்கிறார்கள். ஓ.டி.டியும் அதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது. ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’, ‘டேனி’, ‘திட்டம் இரண்டு’, ‘நெற்றிக்கண்’ என்று ஓ.டி.டியில் அடுத்தடுத்து நாயகி சினிமாக்கள் வெளியாகின்றன. தமிழ் சினிமாவில் ஹீரோயின்களின் கை ஓங்குகிறதா? ஹீரோயின் சென்ட்ரிக் படங்களுக்கு ஓ.டி.டியில் முக்கியத்துவமா போன்ற பல கேள்விகளைத் திரைப்பிரபலங்கள் சிலரிடம் முன் வைத்தேன்.

‘`இது ஹாலிவுட்லேயும் பாலிவுட்லேயும் இருக்கற டிரெண்ட்தான். ஷபானா ஆஸ்மி, வித்யாபாலன்னு அங்கே பலரும் வுமன் சென்ட்ரிக் படங்கள் பண்ணினாங்க. அதுல இங்கே சக்சஸ்ஃபுல்லா இருக்கறது ஜோதிகா மேமும் நயன்தாராவும்தான்...” என்றபடி பேச ஆரம்பித்தார் ஜோதிகாவின் ‘ராட்சசி’ பட இயக்குநர் எஸ்.ஒய்.கௌதம்ராஜ்.

இது பெண்கள் காலம்!

‘`நடிகைகள் இப்போ தங்களுக்கென தனிப்பட்ட மார்க்கெட்டை உருவாக்கிக்கணும்னு நினைக்கறாங்க. அவங்களுக்கான பார்வையாளர்களும் உருவாகியிருக்காங்க. இது தன்னோட படம்னு அவங்க நினைக்கும்போதே அவங்களோட மேக்கப் சென்ஸ்ல இருந்து ஆக்ட்டிங் வரை எல்லாமே மாறும். வெறும் ஹீரோயின் என்பதைத் தாண்டி, ஹீரோயின் சென்ட்ரிக்னு வரும்போது, கதையை செலக்ட் பண்ணும்போதே கவனமா செலக்ட் பண்ண ஆரம்பிப்பாங்க. அதே டைம்ல வுமன் சென்ட்ரிக்கை ஒரு பயனுள்ள படமா, சமூக அக்கறையுள்ள ஒரு கதையா தேர்வு செய்யறதுல ஜோ மேம் ரொம்பவே ஸ்பெஷல். அவங்களோட ‘36 வயதினிலே’ ‘ராட்சசி’, ‘நாச்சியார்’, ‘மகளிர் மட்டும்’ எல்லாத்திலுமே ஒரு சமூகப் பொறுப்புணர்வு இருக்கும். ‘கோலமாவு கோகிலா’ செம ஹிட் படம்தான். அப்படி ஒரு ஸ்கிரிப்ட் ஜோதிகாவுக்கு அமைஞ்சா, கண்டிப்பா அவங்க அதைப் பண்ண மாட்டாங்க. ஏன்னா, அவங்க கதை கேட்கும்போதே அதுல ஒரு சமூகம் சார்ந்த விஷயம் இருக்கணும்னு நினைக்கறாங்க. அதுல ‘ஜாக்பாட்’ மட்டும் விதிவிலக்கு” என்கிறார் கௌதம் ராஜ்.

சமீபத்திய ‘திட்டம் இரண்டு’-க்குப் பிறகு ‘டிரைவர் ஜமுனா’, ‘பூமிகா’ என அடுத்தும் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இது பெண்கள் காலம்!

‘`நான் ‘கனா’ பண்ணும்போது எனக்கு என் மீதான நம்பிக்கையைவிட, இயக்குநர் அருண்ராஜாமீது நம்பிக்கை இருந்தது. ஏன்னா எனக்கு சுத்தமா கிரிக்கெட் தெரியாது. ஆனால் அருண்ராஜா சார் தைரியம் கொடுத்து நடிக்கவெச்சார். ஹீரோயின் சென்ட்ரிக்கோ, ஹீரோ படமோ, என்னைப் பொருத்தவரை நான் ஒரு கதையை செலக்ட் பண்ணும்போதே அந்தப் படத்தை எல்லாரும் குடும்பமா ஒண்ணா உட்காந்து பார்க்கமுடியுமான்னு மட்டும்தான் பார்ப்பேன். அப்படிப்பட்ட கதைகள்தான் பண்றேன்; பண்ணுவேன்” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஒரு பெண் காவலர் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்னைகளைச் சொன்ன ‘மிக மிக அவசரம்’ படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி, ‘`பெரிய ஹீரோக்களைத் தாண்டி, சின்ன ஹீரோக்களை வெச்சுப் படம் பண்ணும்போது அவங்க ஒரு மாநிலத்தில் மட்டும்தான் தெரிஞ்சவங்களா இருக்காங்க. ஆனா ஹீரோயின்களோ தமிழகம் தாண்டியும் வேற்றுமொழிப்படங்களில் நடிச்சிருக்காங்க. அதனால் பல மாநில மக்களுக்குத் தெரிஞ்ச முகமா இருக்கிறது டிஜிட்டல் பிசினஸுக்கு முக்கியமான பலம். இங்கே நயன்தாராவைவிட மத்த ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுனால, படத்தோட பட்ஜெட்டும் குறைவாகிடுது” என்கிறார்.

இது பெண்கள் காலம்!

‘`பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அதிகமா வர்றது சினிமாவுக்கு ஆரோக்கியமானது” என்கிறார் ‘டேனி’ படத்தின் இயக்குநர் சந்தானமூர்த்தி. ``நயன்தாரா நடிச்ச ‘அறம்’னாலதான் இவ்ளோ ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் வந்திருக்கு. வளர்ந்திட்டு இருக்கு. அதுக்கு முன்னாடி இந்தியில் வித்யா பாலனின் ‘கஹானி’ மாதிரி ஒரு சில படங்கள்தான் முன்னுதாரணமா இருந்திருக்கு. வீட்ல டி.வி-யில சீரியல் பார்க்கற ஆடியன்ஸ் அத்தனை பேருமே இப்ப ஓ.டி.டியில படங்கள் பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. ஓ.டி.டினால புது ஆடியன்ஸும் கிடைச்சிருக்காங்க. வியாபார எல்லைகளும் விரிவடைஞ்சிருக்கு” என்கிறார் சந்தான மூர்த்தி.

ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் ஆண்களின் பங்களிப்பே அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார் ‘அறம்’ பட இயக்குநர் ந.கோபிநயினார்.

இது பெண்கள் காலம்!

‘’வரலாறு முழுக்க பெண்களோட உழைப்பு சுரண்டப்பட்டுக்கொண்டே இருந்திருக்கு. அதைத் தாண்டிதான் அவங்க ஒவ்வொரு தளத்துலயும் முன்னேறுறாங்க. ஆனா, அவங்களை முன்னேறவிடுற அந்த வெளிகூட ஆண்களோட அனுமதி வழியா உருவானதாதான் இருக்கு. சினிமாவுலயும் அப்படித்தான். ஆண்களோட கண்காணிப்பு, அனுமதி இதை எல்லாம் மீறி ஒரு பெண் கலைப்படைப்பை எடுத்துட்டு வர்றப்போதான் அது சினிமாவுக்கு மிகப்பெரிய திருப்புமுனையா அமையுது. இப்போ சினிமா வணிகம் பெண்களுக்கானதாவும் மாறிகிட்டு இருக்கிறது நல்ல விஷயம். இதுவரை சினிமானு சொல்லப்பட்ட ஹீரோ பிம்பம் உடைஞ்சு தங்களுக்கான வெளியும் உருவாகிறதை வருங்கால பெண் குழந்தைகள் நல்லாவே உணர்வாங்க’ என்கிறார்.

கோலிவுட்டில் தயாரிப்பாளர் கம் விநியோகஸ்தராக மின்னும் திரையுலக அனுபவசாலி ஒருவரின் பார்வையோ வேறாக இருக்கிறது. “தமிழ் ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் ஓ.டி.டியில் வெளியானதால் தயாரிப்பாளருக்கு லாபம் வந்திருக்குமே தவிர, மக்களிடம் போதுமான வரவேற்பைப் பெறவில்லை. காரணம், கதையில் போதுமான கவனம் செலுத்தாதது. மேலும், ஹீரோக்கள் தங்களுக்கான பில்டப் காட்சிகளை விரும்புவதுபோல் ஹீரோயின்களும் விரும்புவது தவறான முன்னுதாரணம்” என்கிறார்.

கோபி நயினார், கௌதம்ராஜ், சுரேஷ் காமாட்சி
கோபி நயினார், கௌதம்ராஜ், சுரேஷ் காமாட்சி

கதை முதல் தொழில்நுட்பம் வரை தமிழ் சினிமாவின் முகம் மாறத்தொடங்கியிருக்கும் காலத்தில் ஹீரோயின் சென்ட்ரிக் சினிமாக்கள் வரவேற்கத்தக்கவை. சின்னச் சின்னக் குறைகளைக் களைந்து இன்னும் பல உயரங்களை அவை எட்ட வேண்டும்.