சினிமா
Published:Updated:

அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!

தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன்
பிரீமியம் ஸ்டோரி
News
தனுஷ், விஜய், சிவகார்த்திகேயன்

தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்த காலத்தில் அனைத்துத் தென்னிந்திய சினிமாக்களின் வேலைகளும் இங்கேதான் நடந்தன.

‘பேன் இந்தியா...’ இப்போது சினிமா வட்டாரத்தில் அதிகம் பேசப்படும் வாசகம்.

அடுத்தடுத்த லாக்டெளன்களால் முடங்கிப்போயிருந்தது சினிமா உலகம். இன்னொரு பக்கம் லாக்டெளனில் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஜீ 5, ஹாட்ஸ்டார் போன்ற ஓ.டி.டி தளங்களின் ஆதிக்கம் அதிகமானது. அதில் வேற்று மொழிப் படங்களைப் பார்த்து மக்கள் பழகிவிட்டனர். நேரடியாக ஒரு படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாகுமா என்ற எண்ணம் இருந்த சூழல் மாறி, எல்லா மொழியிலும் பெரிய ஹீரோக்களின் படங்களையே நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியிடுமளவிற்கு, மார்க்கெட் பெரிதாகிவிட்டது. தற்போதைய சினிமாச் சூழல் எப்படி இருக்கிறது, பேன் இந்தியா, பைலிங்குவல், மல்டிலிங்குவல் என மார்க்கெட் விரிவடைந்ததன் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.

அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!
அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!
அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!

கோலிவுட் - டோலிவுட்

தென்னிந்திய சினிமாவின் தலைநகரம் சென்னையாக இருந்த காலத்தில் அனைத்துத் தென்னிந்திய சினிமாக்களின் வேலைகளும் இங்கேதான் நடந்தன. பிறகு, அந்தந்த மொழிப் படங்கள் அந்தந்த ஊர்களிலேயே உருவாக ஆரம்பித்துவிட்டன. தமிழ் ஹீரோக்கள் தெலுங்குப் படத்தில் நடிப்பதும் தெலுங்கு ஹீரோக்கள் தமிழ்ப் படத்தில் நடிப்பதும் சகஜமாக இருந்தது. காலப்போக்கில் இந்த வழக்கம் குறைந்து அவரவர் மொழியில் தங்களுடைய மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டனர். இப்போது, குறிப்பாக ஓ.டி.டி தளங்கள் மக்களுக்கு அறிமுகமாகி எல்லா ஊர்ப் படங்களையும் பார்க்கப் பழகியபின், அவரவர் ஊரில் இருக்கும் மார்க்கெட்டை பக்கத்து மாநிலங்களிலும் விரிவடையச் செய்ய ஏற்பாடுகள் நடந்துகொண்டு இருக்கின்றன. டோலிவுட் சினிமாவின் வளர்ச்சியை ‘பாகுபலி’க்கு முன், பின் எனப் பிரிக்கலாம். பாகுபலி இந்தியா முழுக்க, ஏன் உலகம் முழுக்க எப்படியான வரவேற்பைப் பெற்றது என்பது நமக்குத் தெரியும். இந்தப் படத்தினால் இயக்குநர் ராஜமெளலியையும் நடிகர்களையும் எல்லா ஊர் மக்களுக்கும் தெரிந்தது. அதைப் பயன்படுத்த, தொடர்ந்து அதுபோன்ற பிரமாண்ட படங்களை எடுத்து இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியிடுகின்றனர். ‘RRR’ படம் ஸ்பானிஷ், டர்கிஷ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில்கூட வெளியாகிறது. இந்திய சினிமா என்றால் பாலிவுட்தான் என்ற எண்ணம் மற்ற நாட்டவருக்கு உண்டு. அந்த எண்ணத்தை மாற்றப் போராடிக்கொண்டிருக்கிறது டோலிவுட்.

அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!

மார்க்கெட் ரீதியாக டோலிவுட்டின் மாஸ்டர் ப்ளான் என்னவென்றால், பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க வேண்டும், அதில் தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், கன்னட சினிமா நபர்களையும் நடிக்க வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா ஆகிய ஐந்து மாநில மக்களை ஈர்த்துவிடலாம். அதனை இந்தியில் டப் செய்து வெளியிட வேண்டும். இதன் மூலம் வணிக ரீதியாகவும் நிறைய கதவுகள் திறக்கும். அதில் நடிக்கும் நடிகர்களுக்கான பிசினஸும் விரிவடையும்.

இப்போது தமிழிலிருந்து விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படங்களை டோலிவுட் இயக்குநர்களை வைத்துத் தயாரிக்கிறார்கள். தவிர, மலையாளத்தில் இருந்து துல்கர் சல்மான், பகத் பாசில் போன்ற முன்னணி நடிகர்களையும் சுதீப், தனஞ்செயா, துனியா விஜய் போன்ற கன்னட நடிகர்களையும் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்க வைக்கிறார்கள். சமீபமாக, ‘RRR’, ‘புஷ்பா’ பட விழாக்களில் ‘இது தெலுங்கு சினிமா அல்ல, இந்திய சினிமா’ என்ற ஸ்லோகனை மறக்காமல் அடிக்கடி பயன்படுத்தினார்கள். ‘இந்திப் படம் மட்டும் இந்திய சினிமா கிடையாது’ என்பதுதான் டோலிவுட் உணர்த்த விரும்பும் உண்மை.

மலையாள சினிமா

மலையாள சினிமாவுக்கு எப்போதும் தனி ரசிகர்கள் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் உள்ள திரைப்படங்களை வழங்குவதில் மல்லுவுட் எப்போதும் கில்லி. மம்மூட்டி, மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படங்களும் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாகின்றன. ஓ.டி.டி தளத்திற்கென்றே அவர்களின் சில படங்கள் தயாராகின்றன. ஓ.டி.டி தளங்களும் மலையாளப் படங்களை வாங்குவதில் அதிகம் கவனம் செலுத்துகின்றன. காரணம், அவர்களின் பட்ஜெட். ரூ.2 கோடிக்குள் ஒரு படத்தை எடுத்து ரூ.4 கோடிக்கு விற்றுவிடுகிறார்கள். ஓ.டி.டி-யின் மூலம் நல்ல லாபமும் கிடைத்திருக்கிறதாம். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரு படத்திற்குக் கொடுக்கும் தொகையில் ஏழெட்டு மலையாளப் படங்களை வாங்கிவிடுகிறார்கள். அதனால், ஓ.டி.டி-யை மிகச்சரியாகப் பயன்படுத்தி நல்ல நல்ல கதையம்சம் கொண்ட படங்களை வாரி வழங்குகிறது மலையாள சினிமா.

அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!
அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!
அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!

பேன் இந்தியா படங்கள்

பேன் இந்தியா, தமிழ் தெலுங்கு பைலிங்குவல் படங்கள் அதிகரிப்பது குறித்துத் தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் பேசினேன். ‘‘விஜய் சாருக்கு பேன் இந்தியா மார்க்கெட் இருக்கு. அதுக்குத் தகுந்த மாதிரியான கதைகள்ல நடிக்கணும். ‘துப்பாக்கி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ எல்லாமே எல்லா ஊருக்கும் பொருந்துற கதைகள்தான். ஆனா, அதை பேன் இந்தியா படமா உருவாக்கியிருக்கணும். தெலுங்குப் படங்களை ஆரம்பத்துல இருந்தே ‘இது பேன் இந்தியா படம்’னுதான் அறிமுகப்படுத்துறாங்க. அப்படிப் பண்ணினாதான், அந்தப் படத்தை ஒரு டப்பிங் படம்னு நினைச்சுப் பார்க்கமாட்டாங்க. உதாரணத்துக்கு, ‘RRR’. ஆரம்பிக்கும்போதே அது பேன் இந்தியா படம்னுதான் புரொஜக்ட் பண்ணினாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி, அஜய் தேவ்கன், ஆலியா பட் மாதிரியான பாலிவுட் நட்சத்திரங்களைப் படத்துக்குள்ள கொண்டு வந்து இந்தி மார்க்கெட்டைப் பிடிச்சிட்டாங்க. அது ரொம்பப் பெருசு. அதனாலதான், இந்தப் படத்தைத் தெலுங்கு, இந்தி ரெண்டு மொழியிலயும் ஷூட் பண்ணியிருக்காங்க.

எதெல்லாம் இருந்தா அது பேன் இந்தியா படம்?

* எல்லா ஊர் மக்களும் தங்களை இணைத்துப் பார்க்கும் படமா இருக்கணும்.

* நாலு மொழிகள்ல இருந்து பாப்புலரான நடிகர்கள் இருக்கணும்.

* குறைந்தது 200 கோடியாவது படத்துடைய பட்ஜெட்ட்டா இருக்கணும்.

* படத்துடைய மேக்கிங் பிரமாண்டமா இருக்கணும்.

* படக்குழு குறைந்தது நான்கு மாநிலங்களுக்காவது போய் படத்தை புரமோட் பண்ணணும்.

* ஏதாவது இரண்டு மொழிகளிலாவது ஷூட் செய்யப்பட்டிருக்கணும் அல்லது அந்த நடிகர்கள் தங்களுடைய சொந்தக் குரலில் வேற மொழிகள்லயும் டப் பண்ணியிருக்கணும்.

அகில இந்திய மார்க்கெட்டைக் குறிவைக்கும் விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன்!

இவையெல்லாம் இருந்தால்தான் அது பேன் இந்தியா படம். இதுல ஏதோ ஒண்ணு இல்லைன்னாலும் அது முறையான பேன் இந்தியா படம் இல்லை. ஒரு மொழியில் படத்தை எடுத்துவிட்டு, அதை நான்கைந்து மொழியில் டப் செய்து வெளியிட்டால் அது பேன் இந்தியா படமில்லை. அது மல்டிலிங்குவல் படம். பேன் இந்தியா ரிலீஸ் படம் என்றும் சொல்லலாம்.

ஒரு பேன் இந்தியா படத்தைத் தொடங்குறதுக்கு அடிப்படைப் புள்ளி, கதைதான். எல்லா ஊருக்கும் இந்தக் கதை பொருந்துமான்னு பார்ப்பாங்க. அப்படிப் பொருந்துச்சுனா, அது பேன் இந்தியா படத்துக்கான கன்டென்ட். ஆனா, அதை நம்ம பேன் இந்தியா ரிலீஸா பண்றோமா அல்லது பேன் இந்தியா படமா பண்றோமா அப்படிங்கிறது தயாரிப்பாளர் கையிலயும் ஹீரோக்கள் கையிலயும்தான் இருக்கு. ஏன் சொல்றேன்னா, குறைந்தது ரெண்டு மொழியிலாவது ஷூட் பண்ணணும். மத்த மொழியில டப் பண்ணணும். அதுக்கு ஹீரோக்களுடைய ஒத்துழைப்பும் வேணும். ‘பாகுபலி’ தமிழ் - தெலுங்குல எடுத்து இந்தியில டப் பண்ணி வெளியிட்டாங்க. ‘RRR’ படத்தை இந்தி - தெலுங்குல எடுத்து தமிழ்ல டப் பண்ணி வெளியிடுறாங்க. ‘ஜெய் பீம்’ பேன் இந்தியா ரிலீஸ்தான். பேன் இந்தியா படமல்ல. பேன் இந்தியா கன்டன்ட் உள்ள நிறைய படங்களை நாம எடுக்கிறோம். ஆனால், அதை வணிக ரீதியா யோசிச்சு பேன் இந்தியா படமா உருவாக்குறதில்லை. இப்போதான் நம்ம ஹீரோக்கள் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இன்னும் தமிழ் சினிமா வணிகரீதியா போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு. பார்ப்போம்’’ என்றார் நம்பிக்கையாக.

தனஞ்செயன், வெங்கட் பிரபு
தனஞ்செயன், வெங்கட் பிரபு

இதுகுறித்துப் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ‘‘ஆக்‌ஷன் சீக்வென்ஸ்கள் இருக்கிற தென்னிந்திய சினிமாக்களின் இந்தி டப்பிங் உரிமை நல்ல தொகைக்குப் போகுது. இப்போ லிங்குசாமி சார் இயக்கத்துல ராம் பொத்தனேனி ‘தி வாரியர்’னு ஒரு படம் பண்ணியிருக்கார். ராம் பொத்தனேனிக்கு தெலுங்குல ஒரு பெரிய பிசினஸ் இருக்கு. அவர் தெலுங்கு தாண்டி இதுவரை பண்ணலை. இப்போ லிங்குசாமி சார் மாதிரி ஒரு இயக்குநரோடு தமிழுக்கு வரும்போது, இங்க ஒரு பிசினஸ் உருவாகும். கன்டென்ட் நல்லாருந்ததுன்னா அதுக்கு மொழி தடையாவே இருக்காது. பெரிய இயக்குநர்கள், பெரிய நடிகர்கள் எல்லோரும் அவங்க படைப்பை எல்லா ஊர்களுக்கும் எடுத்துட்டுப் போவாங்கன்னு நினைக்கிறேன். ‘பாகுபலி’ தெலுங்கு - தமிழ்ல ஷூட் பண்ணினாங்க. சத்யராஜ் சார், நாசர் சார், ரம்யா கிருஷ்ணன் மேடமுடைய க்ளோஸ் அப் ஷாட்ஸ் பார்த்தாலே தெரியும். ஆனா, ‘RRR’ தமிழ்ல டப் பண்ணியிருக்காங்க. சரியான ரைட்டர்களை வெச்சு ரொம்ப கவனமா டப் பண்ணினாலே போதும். இன்னொரு மொழியில ஷூட் பண்ணத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். இந்தியில ஒரு படத்தை ரிலீஸ் பண்ணணும்னா, அந்த ஊர்ல இருக்கிற நல்ல தயாரிப்பு கம்பெனியோட சேர்ந்து ரிலீஸ் பண்ணுனாங்கன்னா, ஈஸி. ‘மாநாடு’ படத்தை நாங்க ஒரே சமயத்துல தெலுங்குலயும் வெளியிடணும்னு ப்ளான் பண்ணினோம். ஆனா, பொருளாதாரச் சிக்கல் கொஞ்சம் இருந்ததனால பண்ண முடியலை. ‘மாநாடு’ படத்தை எனக்கு எல்லா மொழிக்கும் எடுத்துட்டுப் போகணும்னு ஆசை. இன்னொரு மார்க்கெட்டுக்குப் போறது தயாரிப்பாளர் கையிலதான் இருக்கு.

இப்போ நம்ம ஊர் ஹீரோக்கள் தெலுங்கு சினிமாவுக்குப் போறாங்க. அந்த ஊர் ஹீரோக்கள் தமிழுக்கு வர்றாங்க. இது இனி அதிகரிக்கும். எனக்கு மலையாள ஸ்டைல்ல ஒரு படம் பண்ணணும்னு ஆசையா இருக்கு. ‘மின்னல் முரளி’ எனக்கு அவ்ளோ பிடிச்சிருந்தது. நல்ல கன்டென்டை எல்லா மொழிகளுக்கும் எடுத்துட்டுப் போறதுக்கு ஓ.டி.டி தளங்களுக்குத்தான் நன்றி சொல்லணும்’’ என்கிறார்.

மொத்தத்தில் சினிமாவுக்கான சந்தையும் விரிகிறது; பார்க்கும் சனங்களும் பெருகுகிறார்கள்.