Published:Updated:

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னியின் செல்வன்

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

ஓவியங்கள்: பிரகாஷ் கலை

Published:Updated:
பொன்னியின் செல்வன்
பிரீமியம் ஸ்டோரி
பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவின் பெரும் கனவும், எதிர்பார்ப்பும் ‘பொன்னியின் செல்வன்.’ எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் எனப் பலரும் கனவு கண்ட பொன்னியின் செல்வனை சாத்திய மாக்கியிருக்கிறார் இயக்குநர் மணி ரத்னம். ‘பொன்னியின் செல்வன்’ மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு.

சந்தித்த ஒவ்வொரு திரைக்கதையாளரிடமும் எம்.ஜி.ஆர் பொன்னியின் செல்வனின் அத்தனை வால்யூம்களையும் கொடுத்து ஸ்கிரிப்ட் கேட்பதை வழக்கமாகவே வைத்திருந்தார். கடைசியாக இயக்குநர் மகேந்திரனும் அந்த வேலையில் ஈடுபட்டார். இறுதியாக இயக்குநர் மணிரத்னத்தின் கைகளுக்குள் வந்து சேர்ந்திருக்கிறது பொன்னியின் செல்வன்.

மணிரத்னம் நண்பர் குமரவேலோடு சேர்ந்து ஸ்கிரிப்ட் செய்யத் தொடங்கும்போது, தொடங்கி விடலாம் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. தன்னோடு கூட்டுச்சேர நம்பிக்கையான கூட்டாளியைத் தேட, லைகா நிறுவனம் மணிரத்னத்துக்குக் கைகொடுத்தது. 2010-லிருந்து ஸ்கிரிப்ட்டுக்கான தீவிரம் தொடங்க, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் பணியில் சேர்ந்தார். மொத்த நாவலின் சுவாரஸ்யமான பகுதிகளை இணைத்து இரண்டு பாகங்களாகத் திரைப்படம் உருவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய், மகேஷ்பாபு என நடிகர்கள் ஆரம்பக்கட்டத்தில் இருக்க, தயாரிப்புக்குத் தயாராவ தாகச் செய்தி வந்தது. ஆனால் அந்தப் பேச்சு போட்டோ ஷூட் எடுத்த தோடு நின்றது.

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

இப்போது இறுதிப் படுத்தப்பட்ட பட்டியலின்படி ஆதித்த கரிகாலனாக விக்ரமும், ராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாகக் கார்த்தியும், பெரிய பழுவேட்டரையராக சரத்குமாரும், சின்னப் பழுவேட்டரையராகப் பார்த்திபனும், ஆழ்வார்க்கடியானாக ஜெயராமும், சுந்தர சோழராக பிரகாஷ்ராஜும், மலையமானாக லாலும், ரவி தாசனாகக் கிஷோரும் களமிறங்கியிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராய் நந்தினியாகவும், த்ரிஷா குந்தவையாகவும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும் நடிக்கிறார்கள். ‘தெய்வத்திருமகள்’ சாரா சின்ன வயது நந்தினியாக வருகிறார்.

முதலில் தாய்லாந்தில் ஆரம்பித்த படப்பிடிப்பு நீண்ட ஷெட்யூல் கொண்டது. அங்கே கடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்டன. அந்த ஷெட்யூலை முடித்துக்கொள்ளும்போதுதான் கொரோனா முதல் அலை வந்தது. அவசர அவசரமாக அத்தனை பேரும் சென்னை திரும்பினார்கள். எடுத்த வரைக்கும் ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் செய்து தயாராக்கினார். முதல் அலை தீவிரமாக இருந்த சமயங்களில் மணிரத்னம் வீட்டில் உட்கார்ந்து இன்னும் ஸ்கிரிப்ட்டைக் கூர்மையாக்கினார்.

கிட்டத்தட்ட 100 நாள்களுக்கு மேல் படமாக்கி, 80 சதவிகிதம் படத்தை முடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனின் தீவிர உழைப்பு, நடிகர்களுக்குத் தங்கள் பாத்திரங்கள் குறித்த தெளிவு, மணிரத்னத்தின் திட்டமிடல் ஆகியவையே இதற்குக் காரணம் என்கிறார்கள். ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு அத்தனை லேட்டஸ்ட் உபகரணங்களும் தருவித்துக் கொடுக்கப்பட்டன. காலையில் ஆறு மணிக்குப் படப்பிடிப்பைத் தொடங்கு வதை வழக்கமாக வைத்திருக்கிறார் மணிரத்னம். இதற்காக காலை 4 மணிக்கே நடிகர்கள் முதற்கொண்டு யூனிட் தயாராகியிருக்கிறது.

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர்கள் கேரவனுக்குத் திரும்புவதில்லையாம். அடுத்த நடிகர்களின் நடிப்பையும் பாத்திரப் படைப்பையும் கவனிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அவ்வளவு தூரம் அவர்கள் கேரக்டர்களில் உள்நுழைந்து இருக்கிறார்களாம். மணிரத்னம் வந்தவுடன் எல்லோருக்கும் குட் மார்னிங் சொல்லிவிட்டு வேலையை ஆரம்பித்துவிடுகிறார். வீண் அரட்டை, நேர வீணடிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லையாம். நடிகர்களின் நடிப்பு நல்லபடியாக அமைந்தால் அவரிடமிருந்து சிறிய புன்னகை பரிசாகக் கிடைக்கிறது. விக்ரம், ஜெயராம், ஜெயம் ரவி, கார்த்தி என ஒரு நல்ல நண்பர்கள் வட்டம் உருவாகிவிட்டது.

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

படத்தின் பேச்சு மொழியைப் பழைய முறைக்கும், இப்போதைய மொழிக்கும் இடையிலான விதத்தில் வைத்திருக்கிறார்கள். படத்தின் உரையாடலை ஜெயமோகன் எப்போதோ எழுதிக்கொடுத்துவிட்டார். ஸ்கிரிப்ட்டில் உதவிய குமரவேல், இயக்குநருக்கு உதவியாகக் கூடவே இருக்கிறார்.

முதல் ஷெட்யூல் தாய்லாந்தில் முடிய, அடுத்த நீண்ட ஷெட்யூல் ஹைதராபாத்தில் நிறைவு பெற்றிருக்கிறது. இப்போது புதுச்சேரியில் 20 நாள் படப்பிடிப்பு முடிய, மீண்டும் ஹைதராபாத்துக்குப் படையெடுக்கிறார்கள். அதற்கடுத்து வட இந்தியாவின் சில பகுதிகளில் கொஞ்சம் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்க வேண்டியிருக்கிறது. மூன்றாவது அலை நெருங்காமல் எல்லாம் சுபமாக நடந்தால் அடுத்த இரண்டு மாதங்களில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்கிறார்கள்.

பொன்னியின் செல்வனில் பாடல்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது. இவ்வளவு பெரிய படத்துக்கு நல்ல உணர்வையும் சிலிர்ப்பையும் பாடல்கள் தரவேண்டும். பழைமையான காலத்தை நவீனமாகப் பாடல்களில் கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் சரியாகப் பொருந்துபவர் வைரமுத்து. மணிரத்னம் படங்கள் என்றாலே வைரமுத்துவின் வரிகளும் உயிர்பெறும்; அவரும் மணியும் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியிருக்கிறார்கள். சில பிரச்னைகளால் ‘பொன்னியின் செல்வ’னில் வைரமுத்து பணிபுரிய முடியாத சூழல். இதை ஈடுசெய்ய வேறு பாடலாசிரியரைத் தேட ஆரம்பித்தார்கள்.

பெரும் தேடலுக்குப் பிறகு மணிரத்னம் அந்தப் பாடலாசிரியரைக் கண்டுபிடிக்கவும் செய்தார். அவர்தான் இளங்கோ கிருஷ்ணன்; தமிழின் குறிப்பிடத்தக்க நவீனக்கவிஞர். அவரது அழகு தமிழும், மெட்டை எதிர்கொள்ளும் தன்மையும், தெளிந்த பார்வைத் திறனும், உணர்வுகளை வார்த்தைகளில் பொருத்தித் தந்த அழகும் மணிரத்னத்தையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் மிகவும் கவர்ந்துவிட்டது. 12 பாடல்களில் உச்சபட்சமாக எட்டுப் பாடல்களை அவரையே எழுத வைத்துவிட்டார்கள். மீதியை கபிலனும், கபிலன் வைரமுத்துவும், வெண்பா கீதாயனும் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

ஏராளமான தேசிய விருதுகளைப் பெற்று எடிட்டிங் அறையில் அடுக்கி வைத்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத், படத்தொகுப்பைக் கவனித்துக்கொள்கிறார்.

தமிழின் முக்கியமான படத்தை ஒளிப்பதிவு செய்யும் பெருமையை அடைந்திருக்கிறார் ரவிவர்மன். 500 கோடிக்கும் அதிகமான பட்ஜெட். எக்கச்சக்க உழைப்பு என எல்லாமே ஃப்ரேம் பை ஃப்ரேம் கவிதையாக்கி வைத்திருக்கிறாராம். அவரது மகுடத்தில் இன்னொரு வைரம் என்கிறார்கள்.

இல்லாத உலகம் ஒன்றை உருவாக்க வேண்டும். அங்கே ‘பொன்னியின் செல்வன்’ மாந்தர்களை உலவ விடவேண்டும். கேரக்டர்கள் உலவும் அரண்மனைகளையும் கனவுலகம்போல் நிகழ்த்தவேண்டும். இறங்கி வேலை செய்திருக்கிறாராம் கலை இயக்குநர் தோட்டா தரணி. அவரது வரைகலையின் பக்குவம் அப்படி. ஒற்றை ஆளாய் உருவாக்கித் தந்த அரங்குகள், தோட்டாவின் கை வண்ணத்தில் கலையின் கலையாத காட்சிகளாக இருக்கிறதாம்.

பிரமாண்டமாய் நிறைவேறும் பெருங்கனவு!

படப்பிடிப்பு முடிந்து விட்டால் உடனே புரமோஷன் வேலைகளை ஆரம்பிக்கப்போகிறார்கள். வரலாற்றுப் படங்களில் இயக்குநர்கள் திறம்பட இயங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே சமயம் ஸ்கோர் செய்தாக வேண்டிய நெருக்கடி இருக்கும். தமிழ் வாசகப் பரப்பில் பெருமித அடையாளமாகக் கருதப்படுகிறது பொன்னியின் செல்வன். ‘இந்த நிலப்பரப்பில் இப்படித்தான் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்’ என்று பொருத்திப் பார்க்கும் ரசிகர்கள் பலர் இந்தக் கல்கியின் கதைக்கு உண்டு. இந்த நூற்றாண்டின் புதிய இளைஞனுக்கும் பொன்னியின் செல்வனைப் புரியவைக்க வேண்டிய சூழல். இந்தச் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார்.

எம்.ஜி.ஆரில் தொடங்கிய கனவு, எக்கச்சக்க நடிகர் பட்டாளம், இன்னும் கல்கியின் எழுத்துக்கு இருக்கும் ஈர்ப்பு ஆகியவற்றை நெஞ்சில் ஏந்திக் காத்திருக்கிறார்கள் ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்கள்.