Published:Updated:

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

சாபு சிரில்
பிரீமியம் ஸ்டோரி
சாபு சிரில்

சினிமா

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

சினிமா

Published:Updated:
சாபு சிரில்
பிரீமியம் ஸ்டோரி
சாபு சிரில்

இந்தியாவின் மோஸ்ட் வான்டட் புரொடக்‌ஷன் டிசைனர், சாபு சிரில். பிரமாண்ட படங்களின் இயக்குநர்களான ராஜமௌலி, ஷங்கர் போன்றப் பலரின் முதல் சாய்ஸ் இவர்தான். பாலிவுட் டாப் ஹீரோக்களான ஷாரூக் கான், அஜய் தேவ்கான் எனப் பலருக்கும் பிரியமானவர். `எந்திரன்’, ‘பாகுபலி’ படங்களின் மூலம் உலகை வியக்கவைத்தவர். `தேன்மாவின் கொம்பத்து’, `காலாபானி’ (தமிழில் ‘சிறைச்சாலை’), ஷங்கரின் ‘எந்திரன்’, ஷாரூக் கானின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ ஆகிய படங்களுக்காக தேசிய விருதுகளை அள்ளியவர். 1996-ல் நடந்த உலக அழகிப் போட்டியின் மேடையை வடிவமைத்தவரும் இவர்தான். 2,600 விளம்பரப் படங்களுக்கு தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியவர். இப்போது ராஜமௌலி இயக்கி வரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் வேலைகளில் பரபரப்பாக இருக்கிறார்.

``சினிமாவுல 31-வது வருஷம் கொண்டாடுறீங்க... வாழ்த்துகள் சார்’’ எனப் பேச ஆரம்பித்தேன். ``நன்றி. இத்தனை வருஷங்கள் ஆகிடுச்சுன்னு ஆச்சர்யமெல்லாம் ஒண்ணுமில்லை. எப்பவும் நான் நடந்து போனதைப் பத்தி யோசிக்கறதில்லை. அதேபோல, எதிர்காலம் பத்தியும் யோசிக்க மாட்டேன். நிகழ்காலம்தான் முக்கியம். இப்ப என்ன பண்றோம் என்பதுதான் நிதர்சனம். இன்னிக்கு வேலையைச் சரியாப் பண்ணினா, அடுத்த வேலை தானா சிறப்பா அமையும்னு அனுபவங்கள் கத்து கொடுத்திருக்கு’’ – என முகம் மலர்ந்தவர், அதற்கான காரணம் குறித்து மனம் திறந்தார்.

``முதல் தேசிய விருது ‘தேன்மாவின் கொம்பத்து’க்காக கிடைச்சுது. அது மலையாளத்துல முதல் சினிமாஸ்கோப் படம். கே.வி.ஆனந்துக்கும் அதுல விருது கிடைச்சுது. ‘ஒளிப்பதிவும் கலை இயக்கமும் கைகோத்திருக்கு’னு அந்தப் படத்துல எங்க உழைப்பைப் பேசினாங்க. நான் சின்ஸியரா பண்ணினதுக்குக் கிடைச்ச பரிசா அதை எடுத்துக்கறேன். எப்பவும் வேலை வேலைனுதான் இருக்கப் பிடிக்கும். எனக்கு ரெண்டு மகள்கள். ரெண்டு பேருமே இப்ப பெரியவங்களா ஆகிட்டாங்க. ஆனா, அவங்க குழந்தையா இருக்கும்போது நான் அவங்களோட நேரம் செலவிட்டதில்லை. சொன்னா நம்ப மாட்டீங்க. என் ஆரம்பகால படங்கள் பண்ணும்போது, எட்டு மாசமா வீட்டுக்கே போனதில்லை. என் மனைவி கர்ப்பமா இருக்காங்கனு எனக்கு ஸ்பாட்டுக்கு ட்ரங்க் கால் போட்டு சொன்னாங்க. அப்புறம் என் மகள் பிறந்த பிறகுதான் வீட்டுக்குப் போய் மனைவியையும் குழந்தையையும் பார்த்தேன்.'' சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு இயல்புக்கு வந்த சாபுவின் பேச்சு, ‘பாகுபலி’ பக்கம் திரும்பியது.

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

``ஒரு புரொடக்‌ஷன் டிசைனரோட வேலை, ஒரு படத்தின் கதையைக் கேட்கும்போதே ஆரம்பிச்சுடும். மினியேச்சர் பண்றது, இங்கே கலை இயக்குநர் வேலையா இருக்கு. ஆனா, அது ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பண்றவரின் வேலை. விஷுவல் எஃபெக்ட்ஸ்னா, அது கிராபிக் டிசைனிங். நான் ஆரம்பத்துல ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் தான் பண்ணிட்டு இருந்தேன். `சாஹோ’ல வொர்க் பண்ணின ஹாலிவுட்காரர், என் டீமை பெஸ்ட் டீம்னு சொல்லியிருந்தார். சந்தோஷமா இருந்தது. ‘பாகுபலி’யை என் திறமைக்குச் சரியான படமா நினைச்சேன். ஏன்னா, அதுல ஒவ்வொரு வொர்க்குமே சவால்கள் நிறைஞ்சது. ராஜமௌலியை முதன்முதல்லா சந்திக்கும்போது, அவர் ஒரு அருவி படத்தைக் காட்டி. ‘இந்த மாதிரி மிகப்பெரிய அருவி வேணும்’னார். அப்பவே அந்தப் படத்தோட பிரமாண்டம் புரிஞ்சிடுச்சு. அதுக்காக ரெடியாகிட்டேன். முதல் பார்ட்டுக்கு மூணு வருஷமும், ரெண்டாவது பார்ட்டுக்கு ரெண்டு வருஷமுமாக மொத்தம் அஞ்சு வருஷம் வொர்க் போச்சு. ஒவ்வொரு நாளுமே புது அனுபவம்தான். டம்மி யானை, குதிரைகள் எல்லாம் பண்ணினேன். பிரபாஸ் ஓடி, சுத்தி ஏறி உட்காருவார். கோட்டை, கொத்தளங்கள், வாள்கள்னு எல்லாமே பண்ணினோம். நாசரின் கை, கிராபிக்ஸ் கிடையாது. நிஜமாகவே ரெடி பண்ணினது. அதை நாசரே ஆபரேட் பண்ணிக்க முடியும். ராஜமௌலி ரொம்ப நுணுக்கமா, டீட்டெயிலா வொர்க் பண்றவர். எல்லாமே அவரோட ஐடியாக்கள். நான் பிராக்டிகலாகக் கொண்டுவந்தேன். எல்லாருக்குமே நல்ல பெயர் கிடைச்சுது. கடின உழைப்பு எப்பவும் வீண் போகாதுனு புரியவெச்சுது’’ என்கிற சாபு சிரிலின் பேச்சு, ஷங்கர், பிரியதர்ஷன் குறித்தும் திரும்பியது.

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

``தண்ணீரை எதுல நிரப்பினாலும், அந்தப் பாத்திரத்துக்கு ஏத்த மாதிரி பொருந்தி நிற்கும். அப்படித்தான் என்னைவெச்சிருக்கேன். பொதுவா என்கிட்ட வர்ற இயக்குநர்கள்கிட்ட, `நீங்க எது வேணாலும் கற்பனை பண்ணிக்குங்க. செய்து பார்த்துடலாம். இதெல்லாம் பண்ண முடியுமானு யோசிக்க வேணாம்'னு சொல்வேன். ராஜமௌலி, ஷங்கர்னு ஒவ்வொருத்தரின் வொர்க்கிங் ஸ்டைலும் மாறுபடும். ஷங்கர் சார், சினிமாவுலேயே நடக்க முடியாத விஷயத்தைக்கூட நடத்திக் காட்டுவார். நம்ப முடியாததை நம்புற மாதிரி காட்டவைப்பார். ‘எந்திரன்’ ஃபைட் சீக்குவென்ஸ், க்ளைமாக்ஸ் சீன் எல்லாம் அவர் என்கிட்ட சொல்லும்போதே, அவ்ளோ அருமையா இருக்கும். நிறைய சுதந்திரம் கொடுப்பார். ரோபோ பண்றதுக்காக அவர் ஹாலிவுட்ல விசாரிக்கும்போது, ரொம்ப காஸ்ட்லியா சொன்னாங்க. `நான் பண்ணித் தர்றேன்’னு ஷங்கர் சார்கிட்ட சொன்னதும், ‘பண்ணுங்க உங்களால முடியும்’ னார். ஒரு இயக்குநர்கிட்ட நமக்கு நம்பிக்கை கிடைக்கறதுதான் நமக்கான பலம். `சாபுகிட்ட சொன்னா அது நடந்துடும்’னு அவர் சொல்வார்.

சாபு சிரில் குடும்பத்தினருடன்
சாபு சிரில் குடும்பத்தினருடன்

பிரியதர்ஷனோட மட்டும் 71 படங்கள் சேர்ந்து வொர்க் பண்ணியிருப்பேன். மலையாள ‘கிலுக்கம்’ படத்தை இந்தியில அவர் ‘முஷ்கராத்’னு ரீமேக் பண்ணினார். அதுல இருந்து ஆரம்பிச்சது எங்க நட்பு. ஊட்டியில செட் வொர்க் நடந்துட்டு இருந்த போது திடீர்னு ஒருநாள் வந்து, ‘எங்க தங்கியிருக்கீங்க?’னு கேட்டு, அவர் தங்கியிருக்கற ஹோட்டல்லேயே என்னைத் தங்கவெச்சார். ‘உங்க வொர்க்ல ஒரு தரம் இருக்கு. அதுக்காகத்தான் உங்களை இங்கே மாத்தினேன். நான் உங்கள இம்ப்ரஸ் பண்ண பார்க்கறேன். நீங்களும் என்னை இம்ப்ரஸ் பண்ணப் பாருங்க. உங்களை என்னோட வொர்க் இன்ஸ்பயர் பண்ணலைன்னா, நீங்க தாராளமா வேற இயக்குநரோட வொர்க் பண்ணிக்கலாம். அதுவரைக்கும் நாம சேர்ந்து வொர்க் பண்ணுவோம்’னார். அதை ரெண்டு பேருமே இப்போ வரை ஃபாலோ பண்றோம்’’ – எனப் பெருமிதப்படும் சாபு சிரிலின் ஒரிஜினல் பெயர் செபாஸ்டியான் வின்சென்ட் சிரில். தான் சாபு சிரில் ஆனது குறித்தும் பேசுகிறார்.

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

``என் பூர்வீகம் கேரளாவிலுள்ள வயநாடு. அப்பா சிரில் ஆர்தர், ஆனைமலை டீ எஸ்டேட் டீ ஃபேக்டரியில் பணியாற்றியவர். அம்மா ஸ்லான்சா, இல்லத்தரசி. எங்க தாத்தா, ‘த தீஃப் ஆஃப் பாக்தாத்’ ஹாலிவுட் ஹீரோ சாபுவின் ரசிகராக இருந்ததால் என்னை `சாபு’னு கூப்பிட ஆரம்பிச்சுட்டார். பின்னாளில் அதுவே நிலைச்சிடுச்சு. நான் கோவையில்தான் படிச்சேன். பிறகு சென்னை எக்மோர்ல இருக்குற ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் பி.எஸ்சி., விஸ்காம் முடிச்சேன். நான் ஸ்கூல்ல படிக்கும்போது கூட பேப்பர்ல ஏதாவது வரைஞ்சுக்கிட்டே இருப்பேன். ஓவியக் கல்லூரியில் சேரப் போறேன்னு அப்பாகிட்ட சொன்னதும், ‘ஓவியம் படிச்சா வறுமையிலதான் வாடணும்’னு சொல்லி எனக்கு காலேஜ் ஃபீஸ் கட்ட மறுத்துட்டார். நான் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து, அந்தப் பணத்தைக் கொண்டு ஃபைன் ஆர்ட்ஸில் படிச்சு முடிச்சேன். படிச்சு முடிச்சதும் கிராபிக் டிசைனரானேன். டாப் கம்பெனிகள்ல வொர்க் பண்ணினேன். சொந்தமா விளம்பரப்பட கம்பெனி ஆரம்பிச்சபோது, டைட்டில்ல என் பெயரைக் குறிப்பிட விரும்பினேன். அப்போ மலையாளத்துல `சாபு’ங்கற பெயர்ல ஏகப்பட்ட டெக்னீஷியன்கள் இருந்ததால, என் உறவினர்கள் கொடுத்த ஐடியாவின்படி `சாபு சிரில்’ ஆனேன்.

கலை இயக்கத்தில் யதேச்சையாகத்தான் என்ட்ரி ஆனேன். என் நெருங்கிய நண்பரும், ஆர்ட் டைரக்டருமான அசோக், தான் வொர்க் பண்ணவேண்டிய ‘ஐயர் த கிரேட்’ படத்துக்கு என்னைப் பரிந்துரைத்தார். அந்த டைம்ல அப்பா சொன்ன அட்வைஸை இப்பவும் கடைப்பிடிக்கிறேன். ‘நீ எந்த வேலை செய்தாலும் அதில் நீதான் பெஸ்ட்னு பெயரெடுக்க வேண்டும்’னாங்க. ‘ஐயர் த கிரேட்’ பாதி நடந்து முடிந்தபோதுதான் அதில் வேலை செய்தேன். பரதன் இயக்கிய ‘அமரம்’லதான் முழுப் படமும் வொர்க் பண்ணினேன். தமிழ்ல நான் முதலில் கமிட் ஆன படம், ‘புதியமுகம்.’ ஆனா, முதலில் வெளியான படம் ‘கலைஞன்.’ அதுக்கு முன்னாடியே கமலின் ‘வெற்றி விழா’வில் குண்டுவெடிப்பு காட்சிக்கு உதவியிருக்கேன்’’ என மலரும் நினைவுகளில் மலர்கிறார். இவரிடம் உதவியாளராக இருந்து கலை இயக்குநராக ஆனவர்களின் எண்ணிக்கை ஐம்பதைத் தொடும்.

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

``எனக்கே இது ஆச்சர்யமா இருக்கும். என்கிட்ட சேர்ந்தவங்களுக்கு நீச்சலெல்லாம் கத்துக் குடுக்க மாட்டேன். ஆழமான குளத்துல தள்ளிவிட்டுடுவேன். அவங்க மூழ்கற நிலைமையில இருந்தா கைகொடுத்து தூக்கிவிடுவேன். மத்தபடி அவங்களா நீந்தி வரணும்னு விரும்புவேன். இடையில வயித்துவலினு சொல்லிட்டு ஓடிப்போனவங்களும் இருக்காங்க. ஆனா, அஞ்சாறு வருஷம் பொறுமையா வொர்க் பண்ணினவங்க எல்லாரும் இன்னிக்கு கலை இயக்குநரா, புரொடக்‌ஷன் டிசைனரா இந்தி, தெலுங்குனு எல்லா இண்டஸ்ட்ரியிலும் சிறந்து விளங்குறாங்க. என்னாலதான் அவங்க பெரிய ஆளாகியிருக்காங்கன்னு சொல்ல மாட்டேன். அவங்க அவங்க திறமைதான் காரணம். நான், தூண்டுதலா இருந்திருப்பேன். அவ்ளோதான். என் மகள் ஸ்வேதா செபாஸ்டியான், என்கிட்ட மூணாவது உதவியாளராதான் இருந்தாங்க. இப்ப அவங்களும் ஆர்ட் டைரக்டர் ஆகிட்டாங்க. ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ல வொர்க் பண்றாங்க’’ என்கிற சாபு, இப்போது ஹைதராபாத்தில் வசித்தாலும், தமிழில் பணியாற்றவும் விரும்புகிறார்.

‘பாகுபலி’ அருவியை உருவாக்கியவர் இவர்தான்!

``இப்ப நான் கேட்கற சம்பளத்தைக் கொடுக்கறாங்கனு சொல்றதைவிட, நான் சொல்றதைப் பண்றதுக்கான பட்ஜெட்டையும் ஒதுக்குறாங்க. தேவையில்லாத செலவுகளை நான் பண்ண மாட்டேன். ஏன்னா, காசு யாருக்கும் சும்மா வர்றதில்லை. `காஞ்சீவரம்’ மாதிரி சின்ன பட்ஜெட் படமும் பண்ணுவேன். ஆனா, சின்ன பட்ஜெட் படங்களுக்கு யாரும் கூப்பிட மாட்டேங்கறாங்க. மணி சார் ‘பொன்னியின் செல்வன்’ பத்தாண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டபோது, நானும் கமிட் ஆகியிருந்தேன். ஆனா, அது நடக்கலை. `ஆர்.ஆர்.ஆர்’னால இப்ப அதுல வொர்க் பண்ணலை. இந்தியில ஒரு படம் பண்றேன். என் மனைவி சினேகலதா, கேமராமேன் ஏ.வின்சென்ட்டின் மகள். என் மூத்த மகள் ஸ்வேதா, இப்ப ஆர்ட் டைரக்டர் ஆகியிருக்காங்க. ரெண்டாவது மகள், சௌம்யா சிங்கப்பூரில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் படிச்சுட்டு, இப்ப மும்பையில் ஷாரூக் கானின் ரெட் சில்லியில் வொர்க் பண்றாங்க. சென்னை ரொம்ப பிடிச்ச இடம். இப்பவும் அப்பா, சொந்த பந்தங்கள் இங்கேதான் இருக்காங்க’’ என்று மகிழ்ச்சியோடு விடை கொடுத்தார் சாபு சிரில்.