Published:Updated:

ஏன் இந்த ரீமேக் மோகம்?

ரீமேக்
பிரீமியம் ஸ்டோரி
ரீமேக்

ஒரு படம் லாபத்தை சம்பாதிக்கறதுக்கு ரீமேக்கா, நேரடிப்படமாங்கறது முக்கியமில்ல. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் இது ரீமேக்கா, நேரடிப்படமான்னு பார்த்து வர்றது இல்லை.

ஏன் இந்த ரீமேக் மோகம்?

ஒரு படம் லாபத்தை சம்பாதிக்கறதுக்கு ரீமேக்கா, நேரடிப்படமாங்கறது முக்கியமில்ல. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் இது ரீமேக்கா, நேரடிப்படமான்னு பார்த்து வர்றது இல்லை.

Published:Updated:
ரீமேக்
பிரீமியம் ஸ்டோரி
ரீமேக்

கோலிவுட்டில் ரீமேக்கிற்கு எப்போதுமே ஒரு வரவேற்பு உண்டு. இந்தியிலிருந்து ‘குயின்’, ‘அந்தாதூன்’, ‘ஆர்ட்டிகிள்15’; மலையாளத் திலிருந்து ‘அய்யப்பனும் கோஷியும்’, ‘ஆண்ட்ராயிட் குஞ்சப்பன்’, ‘ஜோசப்’, ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’ என ஒரு டஜன் படங்களுக்கு மேல் தமிழில் இப்போது ரீமேக் ஆகி வருகின்றன. ‘பிற மொழிகளில் ஹிட்டாகும் படங்களை இங்கே தயாரிக்க விரும்புவது ஏன்? ஹிட் கேரண்டி மட்டும் காரணமா? நமது ஒரிஜினாலிட்டிமீது நம்பிக்கை குறைகிறதா?’ போன்ற பல கேள்விகளுடன் திரைப்பிரபலங்கள் சிலரிடம் பேசினேன்.

கதாசிரியராகவும், தயாரிப் பாளராகவும் தமிழ் சினிமாவில் அரை நூற்றாண்டைக் கடந்தவர் கலைஞானம். ரஜினிகாந்த் ஹீரோவாக அறிமுகமான ‘பைரவி’ படத்தின் தயாரிப்பாளர்.

‘‘இந்த ரீமேக் கலாசாரத்தை ஆரம்பிச்சு வச்சதே நாமதான். 1960களில் இந்தியிலிருந்து பல படங்கள் இங்கே ரீமேக் ஆகியிருக்கு.

எம்.ஜி.ஆரின் ஆரம்பக்காலப் படங்களில் சிலவற்றின் ஒரிஜினல் பாலிவுட்டிலிருந்து வந்ததுதான். சிவாஜியோட ‘வாழ்க்கை’, ‘படிக்காத மேதை’, ‘அன்னை’, ‘குலதெய்வம்’ போன்ற பலவும் இந்தியிலிருந்து வந்தவைதான். கே.பாலாஜி (மோகன்லாலின் மாமனார்) தயாரிச்ச அத்தனையுமே ரீமேக்குகள்தான். இங்கிருந்து மத்த மொழிகளுக்கும் படங்கள் ரீமேக் ஆகிட்டுதான் இருக்கு. பொதுவா ரீமேக் விஷயத்தில் ஒண்ணு ரெண்டுவேணா வெற்றி பெறாமல் போயிருக்கலாம். பெரும்பாலான படங்கள் வெற்றி வரிசையில் சேரும்” என்கிறார் கலைஞானம்.

ஏன் இந்த ரீமேக் மோகம்?


கலைஞானத்தின் கருத்தையே பிரதிபலிக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா. ‘தனி ஒருவன்’ படத்துக்கு முன்புவரை மோகன்ராஜாவின் அடையாளங்கள் ரீமேக் படங்களே. இப்போது மீண்டும் மலையாள ‘லூசிபர்’ படத்தைத் தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து ரீமேக் செய்துவருகிறார்.

“நூறு படங்கள் இங்கே ரிலீஸ் ஆனா, அதுல இருபது படங்களாவது வெற்றி பெறணும். அப்பதான் சினிமா பிழைத்திருக்கும். அந்த இருபது படங்களுக்கும் பேர் கிடைச்சது, புகழ் கிடைச் சதுன்னு சொல் றதைவிட, அந்த இருபதும் லாபம் சம்பாதிச்சவை, முதல் நாளே தியேட்டருக்குப் போயி படம் பார்க்கணும்னு ஆடியன்ஸ் மனசைத் தூண்டி யிருப்பவைன்னு சொல்றதுதான் இண்டஸ்ட்ரீக்கு ஆரோக்கியமானதா இருக்கும்.

ஒரு படம் லாபத்தை சம்பாதிக்கறதுக்கு ரீமேக்கா, நேரடிப்படமாங்கறது முக்கியமில்ல. படம் பார்க்க வரும் பார்வையாளர்கள் இது ரீமேக்கா, நேரடிப்படமான்னு பார்த்து வர்றது இல்லை. படம் நல்லாருக்கா, இல்லையாங்கிறது மட்டும்தான் அவங்க கேள்வி. நான் ஏழு ரீமேக் படங்கள் இயக்கியிருக்கேன்னா, அதுக்கு முன்னாடி எழுபது ரீமேக்கை நிராகரிச்சிருக்கேன். எந்தப் படம் தமிழில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளதுன்னு பார்த்துதான் ரீமேக் பண்ணியிருக்கேன். அந்தந்த வருஷத்தைய டாப்-5 படங்களில் என் படமும் நிச்சயம் இடம் பிடிச்சிருக்கும். டாப்-5 படங்களில் ரீமேக் படமும் இடம்பிடிக்குது என்பது பெரிய விஷயம்” என்கிறார் மோகன் ராஜா.

சினிமா ஆர்வலரும், ஏவிஎம்-மின் மக்கள் தொடர்பாளருமான பெரு.துளசிபழனிவேலின் கோணமோ வேறாக இருக்கிறது.

‘‘இங்கே ஏழு விதமான கதைகள்தான் இருக்கு. அதையே திருப்பித் திருப்பி எடுக்கும்போது கேரன்டி இல்லாமல் இருக்கு. அதனாலதான் மற்ற மொழிகளில் ஓடினதை இங்கே பண்ண ரெடியா இருக்காங்க. ஜெயிச்ச படத்தை மட்டுமே இங்கே வாங்கிட்டு வந்து பண்ணுவாங்க. ஒரு இந்திப்படம் ரீமேக் ஆகப் போகுதுன்னா, அதைப் பார்க்கும் டிஸ்ட்ரிபியூட்டர் ‘அந்தப் படம்தான் ரீமேக் ஆகுதா... நல்லாதான் இருக்கும், பண்ணலாம்’னு சொல்லி, பிசினஸ் ஆகிடுது. ஆனா, இப்ப யார் சார் கதை கேட்குறா? ‘ஹீரோ யார்’னுதானே முதல் கேள்வியா இருக்குது... அடுத்துதானே டைரக்டர் யார்னு கேட்குறாங்க.?” என யதார்த்த சூழலையும் உடைத்தார் பெரு.துளசி.

‘கண்டேன் காதலை’, ‘சேட்டை’ படங்களைத் தொடர்ந்து, இப்போது ‘தி கிரேட் இண்டியன் கிச்ச’னையும் ரீமேக் செய்துவரும் இயக்குநர் ஆர்.கண்ணன், நடைமுறைச் சிக்கலைத் தெளிவுபடுத்துகிறார்.

ஏன் இந்த ரீமேக் மோகம்?

‘‘ஒரு ஸ்கிரிப்ட் உருவாகுறதுல ரெண்டு பாணி இருக்கு. ஒண்ணு, மணி சார் மாதிரி தனி ஆளாக உட்கார்ந்து எழுதி முடிக்கறது. இன்னொன்னு பாக்யராஜ் சார் மாதிரி ஒரு டீம் வச்சு ஸ்கிரிப்ட் பண்றது. என்னைப் பொறுத்தவரை ஒரு ஸ்கிரிப்ட் எழுத ஆரம்பிச்சு, ஷூட் போக ரெடியாகுறதுக்கு அதிக பட்சம் ரெண்டு வருஷமாவது ஆகிடும். ‘ஜெயங்கொண்டான்’ என் சொந்த ஸ்கிரிப்ட். அடுத்த படம் ‘வந்தான் வென்றான்’ எழுதி முடிக்க ரெண்டு வருஷம் ஆச்சு. அதுக்கு நடுவுல கிடைச்ச படம்தான் ‘கண்டேன் காதலை.’

ரீமேக் பண்ணும் போது, ஒரு நல்ல படத்தை அதுக்கான மரியாதை கெடாதவாறு பண்றது பெரிய சவால். உண்மையிலேயே ரீமேக் ரொம்பவும் கஷ்டமான வேலை. சொந்த சரக்கு எனும்போது, ஆடியன்ஸ் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தியேட்டருக்கு வருவாங்க. ஆனா, ரீமேக் படம்னா, ஆடியன்ஸ் நிச்சயமா அதோட ஒரிஜனலைப் பார்த்து எதிர்பார்ப்புடன்தான் வருவாங்க. இப்போ ஓ.டி.டி வசதி இருக்கறதால, எல்லா மொழிப்படங்களையும் யார் வேணா பார்த்திட முடியும். ‘அந்தப் படம் அப்படி இருந்துச்சு. இந்தப் படம் எப்படி இருக்கும்’னு நினைச்சுகூட ஆடியன்ஸ் வருவாங்க.

ஒரு கதையில் எது உயிர்நாடின்னு கண்டுபிடிக்கறது கஷ்டமானது. அதைக் கண்டுபிடிச்சிட்டா, கதை பிடிபட்டிடும். உதாரணமா விக்ரம் சாரோட ‘சேது’ க்ளைமாக்ஸில், ‘அவ இல்லாத இந்த உலகமும் இந்தப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியும் ஒண்ணு’தான்னு குணமான ஒருத்தன் ஆட்டோமேடிக்கா வண்டியில ஏறிப் போவான். அந்தக் கதைக்கு அதான் உயிர்நாடி. ஆனா, தெலுங்குல அதை ரீமேக் செய்யும்போது ஹீரோவையும் ஹீரோயினையும் க்ளைமாக்ஸ்ல சேர்த்து வச்சிட்டாங்க. அவர் பாண்டிமடத்துல கஷ்டப்பட்டதன் பலன் முழுமையாகாமல் போயிடுச்சு. ஸோ, ரீமேக் பண்ணும்போது உயிர்நாடியை மிஸ் பண்ணிடக்கூடாது” என்கிறார் ஆர்.கண்ணன்.

ஏற்கெனவே வெற்றியும் வரவேற்பும் பெற்ற படம் என்பதால்தான் ரீமேக் படங்கள் உருவாகின்றன. அதேநேரத்தில் அதைத் தமிழுக்கு ஏற்றவாறு மாற்றவேண்டும், ஒரிஜினல் படப்பார்வையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற இரண்டு சவால்களில் ஓர் இயக்குநர் வென்றுவிட்டால், பின் எல்லாம் சுபமே!

***

ரீமேக்கில் ஹிட் ஆன படங்களில் சில...

‘கில்லி’ (ஒக்கடு), ‘போக்கிரி’ (போக்கிரி), ‘கண்டேன் காதலை’ (ஜப் வி மேட்), ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.’ (முன்னாபாய் எம்.பி.பி.எஸ்), ‘சந்திரமுகி’ (ஆப்தமித்ரா), ‘நண்பன்’ ( 3 இடியட்ஸ்), ‘மனிதன்’ (ஜாலி எல்.எல்.பி) ‘உன்னைப் போல் ஒருவன்’ (எ வெனஸ்டே), ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’ (நுவ்வொஸ்தானான்டே நெனோதான்டா), ‘சந்தோஷ் சுப்ரமணியம்’ (பொம்மரிலு), ‘சிறுத்தை’ (விக்ரமகுடு), ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ (அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி), ‘ஜெயம்’ (ஜெயம்), ‘பாபநாசம்’ (த்ரிஷ்யம்), ‘நேர் கொண்ட பார்வை’ (பிங்க்).

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism