அலசல்
அரசியல்
Published:Updated:

ஈகோ யுத்தத்தில் திரைத்துறை! - அந்தரத்தில் சினிமா தொழிலாளர்கள் வாழ்க்கை...

திரைத்துறை
பிரீமியம் ஸ்டோரி
News
திரைத்துறை

எங்கள் உரிமையில் தலையிடாதீர்கள். யாருடன் கையெழுத்திட வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் (Fefsi) இடையேயான சம்பளப் பிரச்னை சமீபத்தில்தான் ஒரு முடிவுக்கு வந்தது. அடுத்த புயலாக, பெப்சியுடன் போட்டிருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம். சங்கத்துக்குள் நடக்கும் ஈகோ மோதலே எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம் என்கிறார்கள் விவரமறிந்த தயாரிப்பாளர்கள்.

பெப்சி அமைப்புக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் இடையே சம்பளப் பிரச்னை பல மாதங்களாக நீடித்துவந்தது. கடந்த பிப்ரவரி மாதம் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டிருந்த அறிக்கையில், `பெப்சி தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருப்பதால், அதை தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடத்த விரும்புகிறோம். தமிழக முதல்வர் அதற்கு நேரம் ஒதுக்கித் தர வேண்டும்’ எனக் கோரியிருந்தார். அதற்கு பதிலடியாக, `இன்னமும் சம்பள உயர்வு குறித்து முடிவு செய்யப்படவில்லை. அதற்குள் ஆர். கே.செல்வமணி அவசரகதியில் தன்னிச்சையாக அறிவித்திருப்பதன் காரணம் என்ன... இந்த அறிவிப்பினால் தயாரிப்பாளர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்” என்று சூடான அறிக்கையை வெளியிட்டார் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.ராமசாமி. இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வெளியேறி, பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்ட ‘தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க’த்துடனும் பெப்சி தரப்பினர் தனியாகப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் திரையுலகில் பரபரப்பு கிளம்பியது. ஒருவழியாக, இந்தப் பிரச்னைகளெல்லாம் சரிக்கட்டப்பட்டு, ஊதிய ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், அந்த ஒப்பந்தத்தைக் கடந்த மே 2-ம் தேதி ரத்துசெய்திருக்கிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.

ஈகோ யுத்தத்தில் திரைத்துறை! - அந்தரத்தில் சினிமா தொழிலாளர்கள் வாழ்க்கை...

இது குறித்து சங்கத்தின் கெளரவச் செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். “4,000 உறுப்பினர்களைக்கொண்ட தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்தான் தாய் அமைப்பு. பல வருடங்களாக இந்தச் சங்கத்துடன்தான் பெப்சி அமைப்பினர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு வருகின்றனர். இந்த வகையில், கடந்த மார்ச் 9-ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையில் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், எங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு, எங்கள் சங்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துடனும் அவர்கள் ஒப்பந்தம் கையெழுத்திட்டிருக்கிறார்கள். கடந்தகாலங்களில் இதுபோல முன்னுதாரணங்கள் இல்லை. தாணு, கே.ஆர் போன்றவர்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பொறுப்பிலிருந்த போதெல்லாம் இப்படி நடந்தது இல்லை. பெப்சி அமைப்புக்குப் போட்டியாக பல தொழிலாளர் அமைப்புகள் செயல்படுகின்றன. அவற்றோடெல்லாம் நாங்கள் தனியாக ஒப்பந்தம் போடுவதில்லை. நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திலுள்ள சில தயாரிப்பாளர்களை திருப்திப்படுத்துவதற்காக, எங்களை பெப்சி அமைப்பு அவமானப் படுத்துவதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக அவர்களை அழைத்துப் பேசினோம். ‘எங்கள் உரிமையில் தலையிடாதீர்கள். யாருடன் கையெழுத்திட வேண்டுமென்பது எங்களுக்குத் தெரியும்’ என்று சொல்லிவிட்டனர். அவர்களுக்கு உரிமை இருக்கும் பட்சத்தில், அதே உரிமை எங்களுக்கும் இருக்கிறது. அதன் அடிப்படையில்தான், பெப்சி அமைப்புடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தை ரத்துசெய்வதாக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அறிவிக்கப்பட்டது. தற்போது சுமார் 150 திரைப்படங்கள் ஷூட்டிங்கில் இருக்கின்றன. அவற்றில், 120 படங்களின் தயாரிப்பாளர்கள் எங்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதால், அந்தத் தயாரிப்பாளர்கள் தாங்கள் விருப்பப்பட்ட தொழிலாளர்கள் யாரை வேண்டுமானாலும் வைத்து படப்பிடிப்பு நடத்திக்கொள்ளலாம். இழப்பு பெப்சி அமைப்புக்குத்தான்” என்றார்.

ஆர்.ராதாகிருஷ்ணன்,  என்.ராமசாமி, ஆர்.கே.செல்வமணி
ஆர்.ராதாகிருஷ்ணன், என்.ராமசாமி, ஆர்.கே.செல்வமணி

பல்லாயிரக்கணக்கான சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கும் இந்த விவகாரத்தில், சுமுகமான தீர்வுகாண சில தயாரிப்பாளர்கள் முன்முயற்சி செய்துவருகின்றனர். நம்மிடம் பேசிய பழம்பெரும் தயாரிப்பாளர் ஒருவர், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து வெளிவந்திருக்கும் இந்த அறிக்கையில், சங்கத்தின் தலைவர் என்.ராமசாமிக்கு எந்த உடன்பாடும் இல்லை. கெளரவச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவசரப்பட்டுவிட்டார். இந்தச் சங்கத்துடன் போட்டுக்கொண்ட ஒப்பந்தம், மற்ற சங்கங்களுக்கும் பொருந்தும் என்றுதான் பெப்சி கடிதம் அளித்திருக்கிறது. யாருடனும் அவர்கள் புதிதாக ஒப்பந்தம் போடவில்லை. பிரச்னையைச் சுமுகமாகப் பேசித் தீர்க்க சில திரைத்துறை பெரியவர்கள் முயல்கிறோம்.

ஏற்கெனவே, வெளிமாநில படப்பிடிப்பால் தமிழ் சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பேரிடரால் சிறு தயாரிப்பாளர்கள் பலரும் நெருக்கடியில் இருக்கிறார்கள். இதற்கிடையில், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குள் நடக்கும் ஈகோ யுத்தத்தால் மற்றொரு பிரச்னை உருவாவதை யாரும் விரும்பவில்லை. என்.ராமசாமி தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கமும் பாரதிராஜா தலைமையில் செயல்படும் நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கமும் இணைந்து ஒரு கூட்டமைப்பாக செயல்படுவதென சில மாதங்களுக்கு முன்னர் பேசி முடிவெடுத்தார்கள். ஈகோ பூசலால், அதையே செயல்பாட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை. விரைவில் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு எட்டப்படும்” என்றார்.

கடைசியாக, பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் பேசினோம். “இந்த அறிக்கையால் பெப்சி தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரச்னை சுமுகமாக முடிய வேண்டுமென்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும். விரைவில் தீர்வு வந்துவிடும்” என்றார் சுருக்கமாக.

சினிமாவை நம்பியிருக்கும் தொழிலாளர்கள், தயாரிப்பாளர்களின் வாழ்க்கையை ஒரு சிலரின் ஈகோ பூசல் அழித்துவிடக் கூடாது!