என்டர்டெயின்மென்ட்
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

மாலினி பொன்சேகா
பிரீமியம் ஸ்டோரி
News
மாலினி பொன்சேகா

- நிகமுனி

‘ஹூ ஈஸ் த பிளாக் ஷீப்...’ - ஓங்கி ஒலிக்கும் ‘சிம்மக்குரலோன்’ சிவாஜியின் இந்தக் குரலை 70, 80-களில் இலங்கை வானொலியில் கேட்காதவர்கள் மிகவும் குறைவு. குறிப்பாக, தமிழகத்தின் கிழக்கு, மத்திய மற்றும் தென் பகுதி மாவட்டத்தினர். ஆம், அவர்களின் முக்கியமான பொழுதுபோக்கே இலங்கை வானொலிதான். அதிலும், சிவாஜி கணேசனுடன் இலங்கை நடிகை மாலினி பொன்சேகா கதாநாயகியாக இணைந்து நடித்த ‘பைலட் பிரேம்நாத்’ படத்தின் இந்த டயலாக் மிகமிக பிரபலம்.

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

‘இலங்கை-இந்திய கூட்டுத் தயாரிப்பில் படம் உருவாகிறது... இலங்கை நடிகை நடிக்கிறார்...’ என்பதெல்லாம் 1978-ல் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயங்கள்.

மாலினி, இலங்கை சினிமாவின் ராணி. நாடக நடிகராகப் பயணத்தை ஆரம்பித்தவர், சிங்கள சினிமாவின் உச்ச நட்சத்திரமானார். நடிப்புத் திறனுக்காக சர்வதேச விருதுகளைப் பெற்றவர், சர்வதேச திரைப்படங்களிலும் நடித்தார். திரைப்பட இயக்குநர்,, தயாரிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், சின்னத்திரை இயக்குநர் என்று பல முகங்கள் மாலினிக்கு. 43 ஆண்டுகளுக்குப் பிறகு, மாலினியுடன் ஒரு நேர்காணல்...

சிங்கள திரைப்பட உலகில் முடிசூடா ராணி நீங்கள். உங்கள் திரையுலக வாழ்வின் ஆரம்பம் எப்படியிருந்தது?

1947-ம் ஆண்டு கொழும்பின் கலனி என்னும் இடத்தில் பிறந்தேன். 1968-ம் ஆண்டு ‘பூஞ்சி பபா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானேன். எனினும், அதற்கு அடுத்த வருடம் வெளிவந்த நாடகம் ஒன்றின் மூலமே இலங்கையில் அடையாளம் கிடைத்தது. தேசிய நாடக விழாவில் சிறந்த நடிகையாக அங்கீகரிக்கப்பட்டேன். தொடர்ச்சியாக, நான் நடித்த பல சிங்கள சினிமாக்கள் பெரும் வெற்றி பெற்றன. இலங்கை தாண்டியும் அறியப்பட்டேன். 2010-ம் ஆண்டு, அமெரிக்காவின் சிஎன்என் செய்தி சேவை, ஆசியாவின் சிறந்த 25 நடிகர்களில் ஒருவராக என்னையும் தேர்ந்தெடுத்தது பெரிய அங்கீகாரம்.

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

இப்போதெல்லாம் நடிகைகளுக்கு நீடித்தகால வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆனால், நீங்கள் கிட்டத்தட்ட 150 படங்களில் நடித்துள்ளீர்கள், நீண்ட காலம் கதாநாயகியாக வலம்வந்து சாதனை புரிந்துள்ளீர்கள், கிட்டத்தட்ட 55 வருடங்களாக நடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்...

ஆம்... இப்போது அதிகபட்சமாக இரண்டு வருடங்களில் நடிகைகளின் தொழில்முறை வாழ்க்கை முடிவுக்கு வருவது வருத்தமாக இருக்கிறது. அதை மீறி சில நடிகைகள் 10 வருடங்களுக்கு மேலாகவும் தங்கள் முதல்வரிசை முக்கியத்துவத்தை தக்கவைத்துக்கொள்வதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றுடன் ஒப்பிடும்போது, எங்கள் காலத்தில் நடிகைகள் நீடித்தகாலம் திரைத்துறையில் வெற்றியைத் தக்கவைத்திருந்தோம். குறிப்பாக, சிங்கள சினிமாவின் பல இயக்குநர்களின் முதன்மைத் தேர்வாக, தொடர்ச்சியாக நான் இருந்தேன். கிட்டத்தட்ட 150 படங் களில் நடித்துள்ளேன்.

சிங்கள திரையுலகத்துக்கு 40 வருடங்களாக நான் செய்து வந்த பங்களிப்புக்காக, 2003-ம் வருடம் அன்றைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க முன்னிலையில் எனக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இன்றைய நடிகைகள், 10 படங் களில் முடிந்துபோகாத வண்ணம் தங்களை ஆளுமையாக நிலைநிறுத்திக்கொள்ளும் வாய்ப்பை, தங்களின் நடிப்புத் திறனாலும், திரைப்படங்களைத் தேர்ந்தெடுப்பதில் கொடுக்கும் கவனத்தின் மூலமும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். நடிப்பில் தினமும் புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

நடிப்பைத் தாண்டியும், இயக்கம், தயாரிப்பு, அரசியல் என்று உங்கள் பயணம் மிகவும் அடர்த்தியாக உள்ளதே...

1984-ம் வருடம், ஒரு திரைப்படத்தைத் தயாரித்து இயக்கினேன். இதுவரை மூன்று திரைப்படங்களை இயக்கி யுள்ளேன். சினிமாவின் ஒவ்வொரு பொறுப்பையும் கையில் எடுத்து முயன்றுபார்த்தபோது, அது என் தன்னம்பிக்கையை இன்னும் வளர்ப்பதாக அமைந்தது. பின்னர் தொலைக்காட்சித் துறையிலும் கவனம் செலுத்தினேன். சிங்களத்தின் முதல் பெண் டெலிடிராமா இயக்குநர் என்ற பெருமையுடன், பல ஹிட் டெலி டிராமாக்களைக் கொடுத்தேன். அவற்றில் நடிக்கவும் செய்தேன்.

2010-ல் நாடாளுமன்ற உறுப்பின ராகவும் தேர்வு செய்யப்பட்டேன். சென்ற வருடம் எனது கடைசி திரைப்படம் வெளியானது. இப்படி இயங்கிக்கொண்டே இருப்பதைத்தான் என் பலமாக உணர்கிறேன்.

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

எத்தனை விருதுகள்... எப்படி சாத்தியமானது?!

1975-ம் ஆண்டு பெற்ற மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் நான் பெற்ற ஸ்பெஷல் ஜூரி விருதுதான், என் முதல் சர்வதேச விருது. தொடர்ந்து, புதுடெல்லி ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருது, ஆசிய திரைப்பட விழாவில் 50 வருட திரை உலக வாழ்வுக்கான தங்கத் தாமரை விருது எனப் பல விருதுகள். மேலும் உள்நாட்டில் ஐந்து முறை ஜனாதிபதி விருது, 13 முறை சிறந்த நடிகை விருது எனப் பெற்றுள்ளேன்.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் எனக்குப் பாராட்டு விழாக்கள் நடத்தியுள்ளனர். 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸில் எனக்காக நடத்தப்பட்ட விருது விழாவை மறக்க முடியாது. விருதுக்காக என்று தனியாக முயற்சி கொடுக்கத் தேவையில்லை. செய்யும் வேலையை மனதுக்கு மிகப் பிடித்தும் முழு அர்ப்பணிப்புடனும் செய்தாலே விருது நம்மைத் தேடிவரும் என்பது என் அனுபவம்.

இலங்கை சினிமாவின் ராணி... மாலினி பொன்சேகா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ‘பைலட் பிரேம்நாத்’ திரைப்படத்தில் நடித்த நினைவுகள் பற்றி...

அவர் ஓர் உன்னதமான மனிதர். திரைப்படத்துறைக்குக் கிடைத்த பெரும் சொத்து. தென்னிந்தியத் திரைப்படத்துறையின் கௌரவம். 1978-ம் ஆண்டு காலகட்டத்தில், அவருடன் இணைந்து நான் ‘பைலட் பிரேம்நாத்’ திரைப் படத்தில் நடித்தபோது, திரைத் துறையின் அனைத்து விஷயங்கள் தொடர்பான அவரின் பரந்து பட்ட அறிவைக் கண்டு வியந்தேன். அவரிடம் பல நடிப்பு வகுப்பு களைக் கற்றுக்கொண்டேன். நான் பின்னாளில் திரைப்பட இயக்கத்தில் பங்களிக்க, அவர் கொடுத்த தைரியமும் முதன்மை காரணம்.

நான் இயக்கிய திரைப்படத்தை, சென்னையில் அவர் வீட்டுக்குச் சென்று திரையிட்டுக் காட்டினேன். அவர் என்னை மகிழ்ச்சியும் பெருமையுமாகப் பாராட்டினார். அவரின் குடும்பத்தினரின் அன்பையும், அன்று அவர்களது வீட்டில் எனக்களிக்கப்பட்ட இரவு விருந்தையும் என்னால் மறக்கவே முடியாது.