Published:Updated:

`குறும்பு ரஜினி; அக்கறை அமிதாப்!' - குறும்படம் மூலம் ஒன்றுதிரண்ட இந்தியப் பிரபலங்கள் #corona

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

“எந்த கிளாஸ் உனக்கு வேணும்? இதுவா இல்லை இதுவா?“ எனத் தான் அணிந்திருக்கும் கூலிங்கிளாஸை ஸ்டைலாகக் கழற்றி மாட்டுகிறார் ரஜினி. ஷேவ் செய்துகொண்டிருக்கும் சிரஞ்சீவியோ, ``நான் பாத்ரூமில் இருக்கிறேன். பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை. கூலிங்கிளாஸ் எப்படி வரும்?” என்கிறார்.

உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது கொரோனா என்னும் ஒற்றைச் சொல். வீட்டுக்குள் அடைபட்டிருக்கும் நமக்கு தொலைக்காட்சிதான் முக்கியப் பொழுது போக்கு. ஆனால் படப்பிடிப்பு இல்லாமல் சின்னதிரை முதல் பெரிய திரை வரை அனைத்துத் தொழிலாளர்களும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் உதவியாளர்கள், தினக்கூலிப் பணியாளர்கள் எனக் குறைந்த சம்பளம் பெரும் ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்திய அளவிலான திரை நட்சத்திரங்கள் இணைந்து ஒரு குறும்படத்தில் நடித்துள்ளார்கள்.

சிரஞ்சீவி
சிரஞ்சீவி

சோனி நிறுவனம் சார்பில், 4.35 நிமிடங்கள் ஓடக்கூடிய `ஃபேமிலி’ என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. அதில் ரஜினி, அமிதாப் பச்சன், மம்மூட்டி, மோகன்லால், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.

வீட்டில் இருக்கையில் அமர்ந்துள்ள அமிதாப் தன்னுடைய கூலிங்கிளாஸைத் தேடிப்பார்கிறார். அது கிடைக்காமல் போகவே அந்தக் கண்ணாடியைக் கண்டுபிடித்துக் கொடுக்க முடியுமா என வீட்டில் உள்ளவர்களிடம் கேட்கிறார். ஆனால் யாரிடமும் இருந்து பதில் வரவில்லை. பிறகு வீட்டில் உள்ளவர்கள் அந்தக் கண்ணாடியைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள்.

மோகன்லால்
மோகன்லால்

கண்ணாடி குறித்து மம்மூட்டியிடம் கேட்கும் போது, “நான் ஒரு பழைய கண்ணாடியைப் பார்த்தேன். அவரிடம் அதே போல புதிய கூலிங்கிளாஸ் இருக்கிறதா எனக் கேள்” என்கிறார் மம்மூட்டி. பிறகு ரஜினியிடம் இதே கேள்வி தொடர்கிறது. “எந்த கிளாஸ் உனக்கு வேணும்? இதுவா இல்லை இதுவா?“ எனத் தான் அணிந்திருக்கும் கூலிங்கிளாஸை ஸ்டைலாகக் கழற்றி மாட்டுகிறார் ரஜினி.

ஷேவ் செய்துகொண்டிருக்கும் சிரஞ்சீவியோ, “நான் பாத்ரூமில் இருக்கிறேன். பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை. கூலிங்கிளாஸ் எப்படி வரும்?” என்கிறார். பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் மோகன்லால் “அந்தக் கண்ணாடி எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். அந்தக் கண்ணாடியைக் கண்டுபிடிக்க முதல்ல என்னோட கண்ணாடி வேண்டும்'' எனச் சிரித்துக்கொண்டே பதில் அளிக்கிறார். கடைசியாகப் பிரியங்கா சோப்ரா அந்தக் கண்ணாடியைக் கண்டுபிடித்து அமிதாப்பிடம் கொடுக்கிறார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

``எனக்கு ஒரு உண்மை தெரியணும்… எதற்காக இந்த கூலிங்கிளாஸ் உங்களுக்குத் தேவைப்படுகிறது? என்கிறார் பிரியங்கா. “இப்போது இந்தக் கண்ணாடி எனக்குத் தேவைப்படவில்லை ஏனென்றால் இன்னும் கொஞ்ச நாள் நான் வெளியே போகப் போவதில்லை. ஆனால் இதைப் பாதுகாக்கவில்லையென்றால் தொலைந்துவிடும். இது தொலைந்து விட்டால் நீங்கள் எல்லோரும் வெளியில் தேடிக்கொண்டிருப்பீர்கள்! நான் ஏன் உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டும்?“ என அமிதாப் சொல்வதோடு படம் நிறைவடைகிறது.

இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் அவர்களின் தாய் மொழியிலேயே பேசி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. குறும்பட முடிவில் பேசும் அமிதாப், ``ஊரடங்கு காரணமாக திரைத்துறையினர் அனைவரும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய இருக்கிறோம். இந்தியத் திரைத்துறையினர் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

மம்மூட்டி
மம்மூட்டி

இந்தக் குறும்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் அதில் நடித்துள்ளவர்களின் வீட்டிலேயே எடுக்கப்பட்டன. நாங்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. நீங்களும் அதுபோல் வீட்டிலேயே இருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். இதுதான் நமக்கு இருக்கும் ஒரே வழி” என்கிறார் அக்கறையாக.

அடுத்த கட்டுரைக்கு