Published:Updated:

`` `என் பையன் 20 வருஷம் கழிச்சு இதைப் பார்த்தா செமயா இருக்கும்ல’னு அஜித் சொன்னார்..!’’ - சிற்றரசு

ஸ்டில் போட்டோகிராஃபர் சிற்றரசு பேட்டி!

அஜித்துடன் சிற்றரசு
அஜித்துடன் சிற்றரசு

"எனக்கு சின்ன வயசில இருந்தே நடிப்புல ஆர்வம் அதிகம். பேஸிக்கா நான் ஒரு தியேட்டர் ஆர்டிஸ்ட். நிறைய மேடை நாடகங்களில் நடிச்சிருக்கேன். இசைக்கல்லூரியில முறைப்படி இசைப் படிச்சேன். என் மனைவியும் அங்கதான் படிச்சாங்க. அவங்க ஒரு சிங்கர். கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணவுடனே ஏதாவது முறையான தொழில் வேணும்னு தோணுச்சு. அதனால என் பொழுதுபோக்கா இருந்த போட்டோகிராபி என் தொழிலாகிடுச்சு. அதுல பிஸியா இருந்ததுனால நடிக்கிறதுல கவனம் செலுத்த முடியலை. போட்டோகிராபரா 22 வருடம் நிறைவாகி நல்லபடியா போயிட்டு இருக்கு. நிறைய இயக்குநர்கள் கொடுக்கிற சின்னச் சின்ன கேரக்டர்கள்ல நடிச்சுக்கிட்டும் இருக்கேன்" என உற்சாகமாக பேசத் தொடங்குகிறார் சிற்றரசு.

'நேர்கொண்ட பார்வை' vs 'பிங்க்'... ஆறு வித்தியாசங்கள்..!

ஸ்டில் போட்டோகிராபரா உங்க முதல் படம் என்ன?

"சிவாஜி சார் - மோகன்லால் சார் நடிச்ச 'ஒரு யாத்ராமொழி'னு மலையாளப் படத்துல அசிஸ்டென்டா வேலை செஞ்சேன். போட்டோகிராபரா நான் வேலை பார்த்த முதல் படம் இன்னும் ரிலீஸ் ஆகலை. தமிழ்ல 'காற்றுக்கென்ன வேலி' படத்துல ஆரம்பிச்சு இப்போ 'தர்பார்' வரை 57 படங்கள்ல வொர்க் பண்ணிட்டேன்."

அஜித்துக்கும் உங்களுக்குமான அறிமுகம் எப்போ?

சிற்றரசு
சிற்றரசு

"விஷ்ணுவர்தன் சார் இயக்கத்துல 'குறும்பு', 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்' படங்களில் வேலை பார்த்தேன். அப்புறம் அவர் அஜித் சாரை வெச்சு 'பில்லா' பண்ணார். அவர் மூலமாதான் நான் அந்தப் படத்துக்குள்ள வந்தேன்; அஜித் சார் பழக்கம் கிடைச்சது. 'பில்லா' படத்துல இருந்து இப்போ 'நேர்கொண்ட பார்வை' வரைக்கும் 'மங்காத்தா', 'பில்லா 2' தவிர அஜித் சாருடைய மற்ற எல்லா படங்களுக்கும் நான் ஸ்டில் போட்டோகிராபரா வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கேன்."

அவர்கூட இத்தனை வருடங்களா பயணிச்சுக்கிட்டு இருக்கீங்க. அவருக்கும் உங்களுக்குமான முதல் உரையாடல் ஞாபகம் இருக்கா?

" 'பில்லா' படத்துடைய முதல் நாள் மலேசியா மெட்ரோ ரயில்ல எடுத்துட்டு இருந்தோம். அப்போ அவரும் விஷ்ணு சாரும் பேசுறதை நான் போட்டோ எடுக்கிறதைப் பார்த்துட்டு 'எக்ஸ்க்யூஸ் மீ... யாரோ போட்டோ எடுக்குறாங்க"னு விஷ்ணு சார்கிட்ட சொன்னார். அப்புறம்தான் அவர் என் பெயர் சொல்லி என்னை அறிமுகப்படுத்தி வெச்சார். எல்லா படங்களின் முதல் நாள் ஷூட்டிங்ல செட்ல இருக்கவங்க எல்லார்கிட்டேயும் 'ஹலோ ஐ எம் அஜித், ஆக்டர்'னு தன்னை அறிமுகப்படுத்திக்கிட்டு அவங்க யார், இந்தப் படத்துல என்ன வேலை பார்க்குறாங்கன்னு தெரிஞ்சுக்குவார்."

14 வருடங்களுக்குப் பிறகு இணையும் அஜித்-ஏ.ஆர்.ரஹ்மான்; அஜித் 60-ன் இசை எப்படி இருக்கும்?

'பில்லா' பட அனுபவம்?

'பில்லா' படப்பிடிப்பில்
'பில்லா' படப்பிடிப்பில்

"அந்தப் படத்துல நடிச்ச எல்லோரும் செம மாஸா இருப்பாங்க. அதுல அஜித் சார் துப்பாக்கி வெச்சிருந்தது, நீச்சல் குளத்துல கையை வெளியே வெச்சு நிற்கிறதுனு நான் கேண்டிடா எடுத்த ஸ்டில்ஸ்தான் பயங்கரமா வைரலாச்சு. அந்த கேண்டிட் போட்டோக்களை தெலுங்கு 'பில்லா' பண்ணும்போது ரெஃபரன்ஸா எடுத்துக்கிட்டாங்க. அது எனக்குப் பெரிய சந்தோஷம். அந்தப் படத்துல நயன்தாரா அஜித் சாரை எஸ்கேப் பண்ணிவிடுற சீன்ல அவங்க என்ட்ரி மாஸா இருக்கும். அந்த போட்டோக்களை பார்த்துட்டு அவங்க செம ஹாப்பி. என்னை கார்ல கூட்டிட்டு போய் மலேசியாவை ஒரு ரவுண்டு அடிச்சாங்க. அது எல்லாம் மறக்கவே முடியாத அனுபவம்."

ஒரு ஸ்டில் போட்டோகிராபருக்கான வேலை என்ன? அவங்க எப்படி இருக்கணும்?

"யாருக்கு பிரேக் கொடுத்தாலும் கொடுக்கலைனாலும் ஸ்டில் போட்டோகிராபர் எல்லோரும் அலெர்டா இருக்கணும். எப்போ வேணாலும் சூப்பரான க்ளிக் கிடைக்கலாம். ஆர்டிஸ்ட்களுக்கு குறிப்பா ஹீரோயின்களுக்கு நம்பிக்கையான நபரா இருக்கணும். அந்தப் பரபரப்புல தப்பான ஆங்கிள்ல போட்டோ பதிவாகி இருக்கலாம். அதை எல்லாம் பார்த்து நம்மளே டெலிட் பண்ணிடனும். அந்த நம்பிக்கைதான் நமக்கு நற்பெயரை கொடுக்கும்."

Vikatan

'பில்லா', 'கோலமாவு கோகிலா', 'நானும் ரெளடிதான்', 'விஸ்வாசம்', 'தர்பார்'னு நயன்தாராயுடைய நிறைய படங்கள்ல வொர்க் பண்ண அனுபவம்?

'நானும் ரெளடி தான்' படப்பிடிப்பில்
'நானும் ரெளடி தான்' படப்பிடிப்பில்

"வேற லெவல் நடிகை. அதே மாதிரி அவங்களுக்கு என்ன காஸ்ட்டியூம் போட்டாலும் அதுக்கு பொருந்தியிருவாங்க. ஆறு மாசமா பட வாய்ப்புகளே இல்லாமல் இருந்தேன். அந்த நேரத்துல நயன்தாரா மேடமுடைய ஆபீஸ்ல இருந்து போன் பண்ணி 'கோலமாவு கோகிலா'னு ஒரு படத்துக்கு நீங்க போட்டோ எடுக்கணும்னு மேடம் சொல்றாங்க. வொர்க் பண்றீங்களா?'னு கேட்டாங்க. அப்போதான் நான் வாய்ப்பே இல்லாமல் இருக்கிறதை சொன்னேன். இப்போ அவங்க ஒரு படம் தயாரிக்கிறாங்க. அந்தப் படத்துக்கும் என்கிட்டதான் சொல்லியிருக்காங்க. 'தர்பார்' ஷூட்டிங்ல என்னைப் பார்த்தவுடனே 'ஹே சிட்டு... நீங்கதான் வொர்க் பண்றீங்களா?'னு கேட்டு ஃபேமிலி பத்தி எல்லாம் விசாரிச்சாங்க. நமக்கு தெரிஞ்ச ஆள் ஒருத்தர் இங்கே இருக்காங்கனு அவங்களுக்கு ஒரு கம்ஃபோர்ட் ஜோன் உருவாகுது."

அஜித்கூட இத்தனை வருடமா பயணிக்கிறீங்க. தொழிலைத் தாண்டி உங்களுக்கும் அவருக்கும் உறவு எப்படிப்பட்டது?

'அசல்' படப்பிடிப்பில்
'அசல்' படப்பிடிப்பில்

" 'அவர் என் சகோதரர் மாதிரி. தப்பு பண்ணா திட்டுவார். அவர் திட்டிட்டா எனக்கு அழுகை வந்திடும். உடனே, 'தொட்டாசிணுங்கி இங்கே வா'னு கூப்பிட்டு, 'சிட்டு ஜி'னு ஜாலியா பேச ஆரம்பிச்சுடுவார். எனக்கு பர்சனலா நிறைய உதவி பண்ணியிருக்கார். 'ஆரம்பம்' படத்துல எனக்கு உடம்பு சரியில்லாமல் போயிடுச்சு. அப்போ உடம்பு சரியாகுற வரைக்கும் ஷூட்டிங் சாப்பாடு வேண்டாம்னு சொல்லி அவரே எனக்கு சமைச்சு கொடுப்பார். ரெண்டு பேரும் அப்பப்போ கேமராவை எடுத்துக்கிட்டு ரவுண்டு போவோம். அப்போ எனக்கு முதுகு வலி இருக்குனு என்னை பெட்ல தூங்க சொல்லி அவர் சோஃபாவுல படுத்துக்குவார். இவ்ளோ பெரிய ஸ்டார் இப்படிப் பண்ணணும்னு அவசியமே இல்லை. அவர் கூட இருக்க எல்லோரையும் அப்படிப் பார்த்துப்பார். அதனாலதான் அவர் 'தல'.

நீங்க அவரை எடுத்த பல போட்டோக்களில் அஜித்துக்கு பிடிச்ச போட்டோ எது?

"செர்பியால அவர் பைக் ஓட்டிட்டு வர்றதை போட்டோஷூட் பண்ணேன். அதை மேக்கிங் வீடியோவாகவும் எடுத்தோம். அதை அன்னைக்கு நைட் சூப்பரா கட் பண்ணி அவருடைய பிறந்தநாள் கிஃப்டா அவருக்கு அனுப்பினேன்.

"அதைப் பார்த்துட்டு அவர் ரொம்ப சந்தோஷமாகி, 'இதை என் பையன் 20 வருஷம் கழிச்சு பார்த்தா செமயா இருக்கும்ல... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சிட்டு'னு சொன்னார்."
சிற்றரசு

கூட இருக்கவங்களை பார்த்துக்குவார்னு கேள்விப்பட்டிருக்கோம். அவர் உடல்நலம், மனநலத்தை எப்படிப் பார்த்துக்குவார்?

அஜித் எடுத்த புகைப்ப்படம்
அஜித் எடுத்த புகைப்ப்படம்

"அவருக்கு என்ன தோணுதோ அதுதான். தொப்பைனா தொப்பை; சிக்ஸ் பேக்னா சிக்ஸ் பேக் வெச்சிடுவார். இப்போ துப்பாக்கி சுடும் போட்டியில கவனம் செலுத்திக்கிட்டு இருக்கார். பைக், ஹெலிகாப்டர், போட்டோகிராபி, கார்டனிங்னு அவர் என்ன பண்ண நினைச்சாலும் அதை பேஸிக்ல இருந்து கத்துக்கிட்டு அதனுடைய உச்சம் வரை பார்த்துட்டு வந்துடுவார். அதுக்காக சம்பந்தப்பட்ட துறையில ஆட்கள்கிட்ட நிறைய டிஸ்கஸ் பண்ணுவார். இப்படி பிடிச்ச விஷயங்களை தவறில்லாமல் செய்றதே அவர் உடல்நலம் மனநலத்தை ஆரோக்கியமா வெச்சிக்குதுனு நினைக்கிறேன்."

ஒரு அப்பாவா அஜித் எப்படி?

"சினிமா இல்லாமல் பல விஷயங்கள்ல கவனம் செலுத்திக்கிட்டு இருந்தாலும் குடும்பத்து மேல அவ்ளோ அரவணைப்பா இருப்பார். தனக்காக எவ்ளோ நேரத்தை ஒதுக்கிறாரோ அதைவிட அதிக நேரத்தை குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒதுக்குவார். அவர் குழந்தைகள்கிட்ட நடந்துக்கிற மாதிரி நம்ம குழந்தைகள்கிட்ட நாம நடந்துக்க முடியலையேனு சில நேரங்கள்ல குற்ற உணர்ச்சியா உணர்ந்திருக்கேன். குழந்தைகள்கிட்ட செம ஜாலியா இருப்பார். ஒரு அப்பாவா அவர்கிட்ட நிறைய கத்துக்கிட்டேன்."

'தர்பார்' படத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரரின் அப்பா!

'தர்பார்' படத்துல வேலை பார்த்த அனுபவம்?

'தர்பார்' படப்பிடிப்பில்
'தர்பார்' படப்பிடிப்பில்

"ரஜினி சாரை போட்டோஷூட் பண்ணணும்னு ரொம்ப நாள் கனவு. அது இந்தப் படத்துல நனவாகிடுச்சு. அவர் சும்மா உட்கார்ந்திருந்தாலே செம கெத்தா இருக்கும். நான் எடுத்த போட்டோ எல்லாம் பார்த்துட்டு குழந்தை மாதிரி உற்சாகமாகிறார். இந்தப் படத்துடைய ஷூட்டிங்ல இருந்தபோதுதான் 'நேர்கொண்ட பார்வை' டிரெய்லர் ரிலீஸாச்சு. அதைப் பார்த்துட்டு 'டிரெய்லர் சூப்பரா இருக்கு. நல்லா பண்ணியிருக்காங்க. அஜித் சூப்பரா பண்ணியிருக்கார். வினோத் நல்லா பண்ணியிருக்கார்'னு சொன்னார். உடனே, நான் வினோத் சாருக்கு போன் பண்ணி ரஜினி சார் பாராட்டினார்னு சொன்னேன். அவர் செம குஷியாகிட்டார். அதுவரைக்கும் ரஜினி சார்கிட்ட நான் பேசவே இல்லை. ஆனா, நான் அந்தப் படத்துல வேலை செஞ்சிருக்கேன்னு கேள்விப்பட்டு வந்து பேசுனார்; பாராட்டினார். இந்த ஒரு மனப்பான்மைதான் அவரை அந்த இடத்துல உட்கார வெச்சிருக்கு. பல வருடங்களுக்கு பிறகு அவரை காக்கி சட்டையில பார்க்க அப்படி இருக்கு.

"இத்தனை வருட அனுபவமா இருந்தாலும் டைரக்டர் சொல்லும்போது எதுவும் பேசாமல் அதைக்கேட்டு நடிக்கிறார். கட் சொன்னா குழந்தை மாதிரி; ஆக்‌ஷன் சொன்னா அவர் சிங்கம் மாதிரி!"
சிற்றரசு

'அழகிய தமிழ்மகன்', 'போக்கிரி', 'வேட்டைக்காரன்'னு விஜய் கூடவும் பயணிச்சிருக்கீங்க. அந்த அனுபவம் எப்படி இருந்தது?

'அழகிய தமிழ்மகன்' படப்பிடிப்பில்
'அழகிய தமிழ்மகன்' படப்பிடிப்பில்

"காலையில 'பில்லா' ஷூட்டிங், நைட் 'அழகிய தமிழ்மகன்'னு வொர்க் பண்ணிட்டு இருந்தேன். அஜித் சார் படத்தைப் பத்தி விஜய் சாரும் விஜய் சார் படத்தைப் பத்தி அஜித் சாரும் கேட்டு தெரிஞ்சுக்குவாங்க. அவங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு. விஜய் சாருடைய டான்ஸ் மற்றும் ஹியூமருக்கு நான் பெரிய ரசிகன். யாராவது அவருக்கு எதிர்ல காமெடி பண்ணாங்கன்னா அவரால சிரிப்பை கன்ட்ரோல் பண்ணி நடிக்க முடியாது. 'அழகிய தமிழ்மகன்' படத்துல ஷகீலா மேடம்கூட ஒரு சீன் இருக்கும். 'ஏன் வீட்டுக்கு லேட்டா வர்றீங்க'னு கேட்பாங்க. அதுக்கு சந்தானம் 'பரங்கிமலை ஜோதியில உங்க படம்தான் பார்த்துட்டு வந்தோம்'னு சொல்லுவார். விஜய் சார் குபீர்னு சிரிச்சுட்டார். அதை எல்லாம் மறக்கவே முடியாது. அவர் நடிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை உருட்டிட்டுதான் ஃப்ரேமுக்குள்ள வருவார். டான்ஸ் ஆடிட்டு அதை ஸ்லோ மோஷன்ல பார்த்து சின்னச் சின்ன கரெக்‌ஷன்லாம் பார்த்து பார்த்து சரி பண்ணுவார்."

சூர்யா - செல்வராகவன்கூட 'என்.ஜி.கே' பட அனுபவம்?

'என்.ஜி.கே' படப்பிடிப்பில்
'என்.ஜி.கே' படப்பிடிப்பில்

"அவர் செம பிளானா வருவார். செட்டே ரொம்ப அமைதியா இருக்கும். அந்தப் படத்துல சூர்யா சாருக்கான ஒவ்வொரு விஷயமும் செல்வராகவன் சார் நடிச்சுக்காட்டுவார். அதை சூர்யா அவ்ளோ அழகா ஸ்கிரீன்ல பண்ணியிருப்பார். கடின உழைப்பாளி. நம்ம குழந்தைகளுக்காக அவர் பேசின விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்த தலைமுறைக்காகக் குரல் கொடுக்கிறார். அதனால அவர் மேல தனி மரியாதை உண்டு."

சமீபமா ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து போட்டோக்கள் லீக் ஆகுது; அதை எப்படி கையாளுறீங்க?

"அப்படி லீக்கானதும் எல்லோருடைய பார்வையும் போட்டோகிராபர் மீது திரும்பும். அது ரொம்ப கஷ்டமா இருக்கும். இப்போ எல்லோர்கிட்டேயும் கேமரா, மொபைல் இருக்கு. அதுல இருந்து தப்பிக்கிறது ரொம்ப சிரமம். அப்போ அப்படி லீக்கான போட்டோக்களை இதுவும் பப்ளிசிட்டிதான்னு விட்டுடுவாங்க. ஷூட்டிங்ல நிறைய ஸ்டில்ஸ் எடுப்போம். ஆனா, இது ஓப்பனிங் சாங், முக்கியமான ஃபைட் காஸ்ட்டியூம் வெளிய தெரியக் கூடாதுனு வெளியிட மாட்டாங்க. படம் வந்த பிறகு இந்த போட்டோக்களை யாரும் கண்டுக்கவே மாட்டாங்க. படம் வெளியாகுறதுக்கு முன்னாடிதான் எங்களுக்கான நேரம். எங்களுக்கான அங்கீகாரம் இன்னும் கொஞ்சம் அதிகமா இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்."