Published:Updated:

" 'பயணம்' தொடங்கி 'மான்ஸ்டர்' வரை... தமிழ் சினிமாவில் தொடரும் கதைத் திருட்டு குற்றச்சாட்டுகள்"

மான்ஸ்டர்
Listicle
மான்ஸ்டர்

தமிழ் சினிமா தற்போது எழுத்தாளர்கள் என்ற படைப்பாளி இனத்தையே மறந்துவிட்டது. எழுத்தாளர்களை வளர்த்து, அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையைக் கொடுத்தால், இப்படிப்பட்ட கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகள் குறையும் என்பதே மறுக்க முடியாத உண்மை.


தமிழ் சினிமாவில் கதைக்குப் பஞ்சம் எனப் பல இயக்குநர்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். சிலரோ, அயல் மொழிகளில் வெளியான வெற்றிப் படங்களின் கதைகளைத் தழுவி திரைக்கதை அமைத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தும் வருகின்றனர். இன்னும் சிலர் இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, கொரியன், இரானியன் என எல்லா மொழிகளிலிருந்தும் முறைப்படி உரிமை வாங்கி ரீமேக் செய்தும் வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலுக்கிடையில்தான் 'இது என் கதை', 'இது நான் ஒரு இதழில் எழுதிய தொடர்கதை' என்ற கதைத் திருட்டுக் குற்றச்சாட்டுகளும் பரவலாக அதிகரித்து வருகின்றன.


1
மான்ஸ்டர்

மான்ஸ்டர்

கடந்த வாரம் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான 'மான்ஸ்டர்' திரைப்படத்தின் கதை தன்னுடையது எனப் பத்திரிகையாளர் லதானந்த் குற்றம் சாட்டினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பிரபல தமிழ் இதழ் ஒன்றில் வெளியான தன் கதை ஒன்றை அடிப்படையாக வைத்துதான் 'மான்ஸ்டர்' திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் நெல்சன் எனக் குற்றம்சாட்டினார் லதானந்த். மேலும், படத்தில் எலி செய்யும் அட்டகாசம் மற்றும் வேறுசில காட்சிகள் அப்படியே தன் கதையில் இடம்பெறுபவை என்றும் அவர் கூறியுள்ளார். தன் கதையைப் பயன்படுத்தியதற்காகப் படத்தின் டைட்டிலில் அவர் பெயரைக் குறிப்பிட வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். ஆனால், இயக்குநர் நெல்சனோ, ''ஒரு எலி வீட்டில் செய்யும் அட்டாசத்தைப் பார்த்த அனுபவம் எல்லோருக்கும் இருக்கும். தவிர, நான் லதானந்த் சொல்லும் வார இதழையோ, அதில் இடம்பெற்ற அந்தக் கதையையோ படித்தது இல்லை" என, லதானந்த்தின் குற்றச்சாட்டை மறுத்தியிருக்கிறார். 


2
பயணம்

பயணம்

கிட்டத்தட்ட 'மான்ஸ்டர்' படத்தின் சிக்கலைப் போன்றதுதான் ராதா மோகன் இயக்கிய 'பயணம்' திரைப்படத்துக்கும் வந்தது. தமிழில் வெளியான வெகுசில ஃபிளைட் ஹைஜாக் படங்களில் 'பயணம்' முக்கியமானது. இப்படத்தின் கதை தன்னுடையது என க்ரைம் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் சொன்னார். தன்னுடைய க்ரைம் கதையொன்றின் அதே சாராம்சத்தில் 'பயணம்' படத்தின் கதையும் உள்ளது என அந்தப் படம் வெளியானபோதே குற்றசாட்டினார். என்றாலும், அப்போது பெரிதாக்கப்படாத அந்தச் செய்தி, அந்தப் படத்துக்கு சிறந்த படத்துக்கான மாநில விருது கிடைத்தபோது விஸ்வரூபம் எடுத்தது.

விருது அறிவிக்கப்பட்டவுடன், தமிழக அரசுக்குப் பிரபாகர் ஒரு கடிதம் எழுதினார். அதில், "சிறந்த படத்துக்கான விருது வாங்கவுள்ள 'பயணம்' திரைப்படத்தின் கதை 'இது இந்தியப் படை' என்ற என் புதினத்தின் கதையைப் போலவே உள்ளது. அந்தப் படம் வந்த சமயத்தில் ராதா மோகனுக்கு அந்த நாவலை அனுப்பி வைத்தேன். அவரும் அதைப் படித்துவிட்டு இரண்டும் ஒரே கதை என ஒப்புக்கொண்டார். என்றாலும், அதற்கு எந்த வருத்தமும் அவர் தெரிவிக்கவில்லை. அதனால், நீங்கள் விருது வழங்கும் உங்கள் முடிவை மறுசீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.


3
மெட்ராஸ்

மெட்ராஸ்

'அட்டகத்தி' மூலமாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்வியலைப் பதிவுசெய்த இயக்குநர் பா.இரஞ்சித், அடிமைப்படுத்தப்படும் மக்களின் அரசியலைச் பேசும்விதமாக 'மெட்ராஸ்' படத்தை உருவாக்கினார். வடசென்னையின் குடிசைமாற்றுவாரிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழும் மக்கள், அவர்களின் நட்பு, காதல், துரோகம், கோபம், வலி, போராட்டம், அரசியல் என எல்லாவற்றையும் தெளிவாகப் பிற மக்களுக்கு எடுத்துச் சொன்ன படம் இது.

இந்தப் பின்னணியில் படம் எடுத்தால் அது வெற்றியடையும் என வணிகக் கண்ணோட்டத்திலும் தமிழ் தயாரிப்பாளர்களுக்குக் கற்றுக்கொடுத்த படம். 'வடசென்னை', 'மேயாதமான்', 'கபாலி', 'காலா', 'பரியேறும் பெருமாள்' எனப் பல படங்கள் வெளியாகி வெற்றியடைய அடித்தளமிட்டதும் 'மெட்ராஸ்'தான். ஆனால், இந்தப் படத்தின் கதை, தான் எழுதிய 'கறுப்பர் நகரம்' கதைதான் எனக் குற்றம்சாட்டினார், இயக்குநர் கோபி நயினார். ஆனால், இந்த சர்ச்சை பல நாள்களுக்கு நீடிக்கவில்லை. இதனால் பல விமர்சனங்களுக்கும் உள்ளானார். தன் தரப்பு நியாயத்தைப் பேச யாரும் முன் வராததால், கோபி நயினாரின் வாதம் கேட்பாரற்றுப்போனது.


4
கத்தி

கத்தி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் திரைப்படங்கள் கதைத் திருட்டு குற்றச்சாட்டுக்குள்ளாவது இப்போதெல்லாம் ஒரு வாடிக்கையாகவே மாறிவிட்டது. 'கஜினி', 'கத்தி', 'துப்பாக்கி', 'ஸ்பைடர்', 'சர்கார்' என அவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களின் கதை அவருடையதில்லை என்ற குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். குறிப்பாக, 'கஜினி' படத்தின் இந்தி வெர்ஷனைப் பார்த்துவிட்டு, அதன் கதையின் மூலமான 'மெமென்டோ'வின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தன்னிடம் புலம்பியதாக, இந்தி நடிகர் அனில் கபூர் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

கஜினி

'கத்தி' படத்தின் கதையைத் தன்னிடமிருந்து முருகதாஸ் திருடிவிட்டதாகப் புகாரளித்தார் கோபி நயினார். இது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. அதுமட்டுமல்லாமல், அது அவருக்கே பெரிய இடராக வந்தது. இப்படி 'கத்தி', 'மெட்ராஸ்' சிக்கல்களிலிருந்து வெளிவந்து, தன்னை ஒரு நேர்த்தியான படைப்பாளியாக நிலைநிறுத்திக்கொள்ள கோபி நயினாருக்கு 'அறம்' திரைப்படம் வெளியாகும்வரை வாய்ப்பே கிடைக்கவில்லை.


5
சர்கார்

சர்கார்

இதுநாள்வரை கதைத் திருட்டுக் குற்றச்சாட்டை நீதிமன்றத்துக்கு எடுத்துச்சென்று, அதில் ஓரளவுக்கு வெற்றியும்பெற்ற ஒரே நபர், 'சர்கார்' படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடுத்த வருண் ராஜேந்திரன் மட்டுமே. முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் கதையை ஏற்கெனவே 'செங்கோல்' என்ற பெயரில் தமிழ்த் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவுசெய்திருந்ததாகத் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தார் வருண். பிறகு சங்கம், நீதிமன்றம் எனப் பல தலையீடுகளுக்குப் பிறகு, இரண்டும் ஒரே கதைதான் என்று நிரூபணமானது. 'சர்கார்' படத்தின் டைட்டில் கார்டில் முருகதாஸ் வெளியிட்ட ஒரு அறிக்கையோடு சேர்ந்து 'சர்கார்' படம் வெளியானது.


6
96

96

பொதுவாக, காதல் திரைப்படங்களில் ஒரேவிதமான காட்சிகள் இருப்பது இயல்புதான். ஆனால், '96 திரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சியமைப்பு தன்னுடைய 'நீ நான்மழை இளையராஜா' படத்தின் கதையைப்போல இருக்கிறது என அந்தப் படம் வெளியான பிறகு இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளர் சுரேஷ் குற்றம் சாட்டினார். தன்னுடைய கதையை இயக்குநர் மருதுபாண்டியனிடம் பகிர்ந்ததாகவும், அதை '96 இயக்குநர் பிரேம்குமாரின் கதை விவாதத்தில் மருதுபாண்டியன் பகிர்ந்ததாகவும் கூறினார் சுரேஷ்.

ஆனால், பாரதிராஜாவைத் தவிர வேறுயாரும் சுரேஷின் பக்கம் நின்று அவர் தரப்பு வாதத்தைப் பேச முன்வராததால், அந்தப் பிரச்னையும் அப்படியே முடிவுபெறாமல் ஓய்ந்தது.


7

கதை எழுதுபவர் ஒருவர், திரைக்கதை வசனம் எழுதுபவர் ஒருவர், இயக்குபவர் ஒருவர் என்றுதான் நீண்ட நாள்களாகத் தமிழ் சினிமா இயங்கிவந்துள்ளது. சி.வி.ஶ்ரீதர், கிருஷ்ணன்-பஞ்சு, பாரதிராஜா, பாலசந்தர், கே.எஸ்.ரவிகுமார், சுந்தர்.சி என அன்றிலிருந்து இன்றுவரை பல இயக்குநர்கள் தாங்கள் இயக்கும் படங்களுக்கான கதைகளைப் பிற எழுத்தாளர்களிடம்தான் வாங்கிவருகின்றனர்.

மு.கருணாநிதி, பஞ்சு அருணாசலம், விசு, அனந்து, ஆர்.செல்வராஜ், கிரேஸி மோகன் எனப் பலர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதற்காகவே புகழ்பெற்று விளங்கிய காலம் உண்டு. தமிழ் சினிமா தற்போது எழுத்தாளர்கள் என்ற படைப்பாளி இனத்தையே மறந்துவிட்டது. எழுத்தாளர்களை வளர்த்து, அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையும் கொடுத்தால், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் குறையும் என்பதே மறுக்க முடியாத உண்மை.