Published:Updated:

நுண்ணுணர்வுகளின் கலைஞன்!

முதல் படத்தின் முக்கியமான காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் பயப்படுவேன்.

பிரீமியம் ஸ்டோரி

2013. தமிழ் சினிமாவில் புது அலை இயக்குநர்கள் புகுந்து ஒட்டுமொத்த பரிமாணத்தையும் மாற்றி அமைத்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த தலைமுறைக்கான இரு நாயகர்கள் மெல்ல மெல்ல உருவாகிக் கொண்டிருந்தார்கள். அதே சமயத்தில் கேரளத்திலும் ஒரே படத்தின் மூலம் மூன்று முக்கிய ஆளுமைகள் உருப்பெற்றார்கள். ‘அன்னையும் ரசூலும்’ - அதுநாள்வரை தன் ஒளியமைப்புகளுக்காகப் பாராட்டுகளையும் விருதுகளையும் வாங்கிக் குவித்துக்கொண்டிருந்த ராஜீவ் ரவி, கேரளத்தின் தவிர்க்கமுடியாத இயக்குநரானார். ஓங்கி உயர்ந்த மேற்குத் தொடர்ச்சிமலைத் தொடர்களின் உச்சியில் பகத் பாசில் என்னும் கலைஞனின் கொடி ஏற்றப்பட்டது. கூடவே இந்தத் தசாப்தத்தின் மகத்தான கலைஞனாக பரிணமித்துக் கொண்டிருக்கும் சௌபின் சஹிர் என்கிற இளைஞனின் அறிமுகமும்.

சற்றே ஏறிய நெற்றி, சராசரிக்கும் குறைவான உயரம், ஒட்டிப்போன கன்னங்கள், சீரில்லாத பல் வரிசை என அதற்கு முன்னிருந்த மரபுகளை எல்லாம் பகத் உடைத்து, புது அஸ்திவாரம் போட்டுச் செல்ல, அதில் தன் பெயர்கொண்ட மாளிகையையே கட்டிக்கொண்டிருக்கிறார் சௌபின். ‘கும்பளாங்கி நைட்ஸ்’ படத்தில் ஒரு விபத்தைப்போல குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சாஜியிடம் வரும். தட்டுத் தடுமாறி பயந்து மருண்டு இறுதியில் அத்தீவு வீட்டின் தலைமகனாக நிமிர்ந்து நிற்பார். நிஜத்திலும் அதைப்போலத்தான் சௌபின். நண்பர்களின் இடைவிடாத வற்புறுத்தலால் சினிமாவிற்கு நடிக்க வந்தவர்.

நுண்ணுணர்வுகளின் கலைஞன்!

சினிமாப் பின்னணி கொண்டவர் என்றாலும் மற்றவர்களைப் போல அது பலமானதாக இல்லை. அவரின் அப்பா பாபு சஹிர், பாசிலிடம் அசோசியேட்டாகவும் புரொடக்‌ஷன் கன்ட்ரோலராகவும் வேலைபார்த்தவர். அப்பாவிடமிருந்து ஒட்டிக்கொண்ட சினிமா ஆசை சௌபினை சித்திக்கிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர வைத்தது. பின் பாசில், சுகுமார், சந்தோஷ் சிவன், ராஜீவ் ரவி, அமல் நீரத் என ஏகப்பட்ட பேரிடம் வேலை பார்த்தார். அவரின் தேடல் அவரை 10 ஆண்டுகளாய் அடுத்தடுத்த இடங்களுக்கு இழுத்துச் சென்று இறுதியாய் ‘அன்னையும் ரசூலும்’ படத்தின் கோலினாய் மாற்றி நிறுத்தியது.

‘‘முதல் படத்தின் முக்கியமான காட்சிகளில் நடிக்கும்போதெல்லாம் பயப்படுவேன். எனக்குப் பதில் இன்னொரு நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் கூறித் தப்பிக்கப் பார்த்திருக்கிறேன்’’ எனப் பின்னாள்களில் பகிர்ந்துகொண்டார் சௌபின். அந்தத் தயக்கத்தை உடைப்பதற்காகவே ஒரே மாதிரியான வேடங்களைத் தவிர்க்கத் தொடங்கினார். ‘5 சுந்தரிகள்’ படத்தில் பூவாளானாய் ஒரு சின்ன ரோல், ‘ஐயோபின்டே புஸ்தகம்’ படத்தில் ஒரு குட்டி கேமியோ எனத் திரையில் தோன்றியவருக்கு பெரிய பிரேக் ‘பிரேமம்.’

நிவின் பாலி, மூன்று கதாநாயகிகள், குளிரவைக்கும் நிலப்பரப்புகள், கலங்க வைக்கும் காதலும் இசையும் என இத்தனையையும் தாண்டி பி.டி வாத்தியாராய் காண்பவர்களைச் சிரிப்பில் குலுங்க வைத்தார். ‘‘நான் எப்போதும் என் உள்ளுணர்வு சொல்வதன்படி நடிப்பவன். அப்படி நடித்தால் அந்த வேடம் சின்னதோ, பெரியதோ, கதையில் அது பங்காற்றுகிறதோ, இல்லையோ, அந்த நடிகனைப் பார்வையாளர்கள் கவனிக்கத் தொடங்குவார்கள்’’ - ராபர்ட் டி நீரோவின் புகழ்பெற்ற டிப்ஸ் இது. இந்திய சினிமாவில் உள்ளுணர்வின் சொல்கேட்டு நடிக்கும் மிகச்சில கலைஞர்களுள் சௌபினும் ஒருவர். அதனால் மலையாள சினிமாவும் அந்த பி.டி டீச்சரை உன்னிப்பாய் கவனித்துக் குறித்துவைத்துக்கொண்டது.

பி.டி வாத்தியார் சிவனின் நீட்சிதான் ‘மகேஷின்டே பிரதிகார’த்தின் க்றிஸ்பின். சின்ன வேடம். ஆனால் கதையை மாற்றியமைக்கும் புள்ளியே அந்த க்றிஸ்பின்தான். நல்லதைவிட கெட்டதையே அதிகம் செய்யும் அந்தத் துடுக்கு இளைஞனின் கதாபாத்திர அமைப்பிற்கு அப்படியே பொருந்தினார் அந்தப் பக்கத்துக்கடை பையன். அதன்வழியே கேரளத்துக் குடும்பங்களிலும் பக்கத்துவீட்டுப் பையனானார்.

நடிகராய் அறிமுகப்படுத்திய ராஜீவ் ரவியே சௌபினை நெகட்டிவ் வேடத்திலும் அறிமுகப்படுத்தினார் ‘கம்மாட்டி பாடம்’ படத்தில். வழக்கம்போல கேமியோதான். ஆனால் சௌபினுக்கு ஒரு ராசி உண்டு. அவர் கதையின் நாயகர்களை உருவாக்குபவர். ‘மகேஷின்டே பிரதிகார’த்தில் சிரித்தபடி சுற்றிக்கொண்டிருக்கும் மகேஷை சபதம் போடவைக்கும் காட்சி சௌபினுக்கே சொந்தம். ‘கம்மாட்டி பாட’த்தில் ஊதாரியாய்ச் சுற்றிக்கொண்டி ருக்கும் பாலனை மார்க்கெட் அறிய பாலா சேட்டனாய் மாற்றுவதும் கராத்தே பிஜுதான். அதாவது சௌபின்தான்.

ஹீரோவுக்கான இலக்கணங்களை உடைத்தவர் அடுத்துக் கையிலெடுத்தது இயக்குநருக்கான இலக்கணங்களை. அதில் பகத் முன்னோடி என்றால் இதில் சௌபினின் இன்னொரு நண்பரான திலீஷ் போத்தன் முன்னோடி. பல நூறு பேரின் முன்னிலையில் கேமராவைப் பார்த்து கொஞ்சமும் தயக்கமின்றி உணர்ச்சிகளை நொடிக்கு நொடி மாற்றும் கலைஞனால் அதே கேமராவைச் சிறந்த கதைசொல்லியாக மாறி இயக்கவும் முடியும் என்பதை ‘பரவா’ படத்தின் மூலம் நிரூபித்துக் காட்டினார் சௌபின்.

‘காமெடியா, பாடி லாங்குவேஜ் தேவையில்லை... வசன உச்சரிப்புகளிலேயே என்னால் முடியும். வில்லத்தனமா? இடுங்கிய கண்களை முழித்துப் பார்த்தாலே பயம் வரும். லேசாய் பேச்சு குழறி கண் கலங்கினால் பார்ப்பவர்களை அழவைக்கவும் முடியும்’ என ஏற்கும் எல்லா வேடங்களிலும் வித்தியாசம் காட்டினார்.

ஆல்ரவுண்டராய் கலக்கினால் கேப்டன் வேடம் தேடிவரும்தானே! வந்தது. ‘சுடானி ப்ரம் நைஜீரியா.’ நிராகரிப்பின் வலியை தன் அணியின் வெற்றிவழியே துடைக்கப் போராடும் எளிய மனிதனின் கதை. படத்தில் சௌபினின் நடிப்பைப் பேச ஒரே ஒரு இடம் போதும். படம் பார்த்தபோது நெகிழ்ந்துபோய் அந்த ப்ரேமை போட்டோ எடுத்து பத்திரப்படுத்தியது இப்போதும் நினைவிலிருக்கிறது. அம்மாவின் இரண்டாவது திருமணத்தை சகிக்க முடியாமல் அவரையும் அவர் கணவரையும் வெறுக்கும் மஜீத்திற்கு உறவுகளின் முக்கியத்துவத்தைச் சொல்லிச் செல்வார் சாமுவேல். குற்றவுணர்ச்சி அழுந்த தன் அம்மாவின் கணவரை ஒரு மகனாய் தேடிப் போவார் மஜீத். ஏடிஎம் வாசலின் பாதி இருட்டில் சேரில் கூன் போட்டபடி அமர்ந்திருக்கும் தந்தையை வெறித்த பார்வையில் அணுகும் நொடி நமக்குள்ளும் ஏதோ அழுத்தும். மலையாளத்தின் பழம்பெரும் நாடக நடிகரான கேடிசி அப்துல்லா நடித்த கடைசிக் காட்சி இது. சௌபினைவிட சிறப்பாய் அவரை யாரும் வழியனுப்பி வைத்திருக்க முடியாது.

நுண்ணுணர்வுகளின் கலைஞன்!

மொழிகள் தாண்டியும் அவருக்கு ரசிகர்களைத் தந்த படம் ‘கும்பளாங்கி நைட்ஸ்.’ உருக்குலைந்துபோன குடும்பத்தின் மூத்த மகனாய் இயலாமையில் தட்டுத் தடுமாறி தனக்கான அன்பைக் கண்டடையும் நெகிழ்ச்சியான வேடம். மலையாளத்தின் பிரபல கதாசிரியர் முஷீன் பராரியின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘இந்த மாதிரியான வேடத்திற்கு சௌபினை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?’

வெகுளிச் சிரிப்பால் இதயங்களை வென்று பயணப்படும் அம்பிலி, தந்தைக்கும் தனக்குமிடையிலான வெற்றிடத்தை இயந்திரத்தின் வழி நிரப்ப முயன்று தோற்று உண்மை உணரும் ஆண்ட்ராய்டு குஞ்சப்பனின் சுப்பன், குற்றவுணர்வும் அச்சவுணர்வும் கலந்த கணங்களைப் பிரதிபலிக்கும் ‘விக்ரிதி’, அப்பாவி கம்யூனிஸ்ட் தொண்டனைப் பதிவு செய்த ‘காம்ரேட் இன் அமெரிக்கா’, பெருந் தொற்றுக்காலத்தின் துயரத்தைச் சித்திரித்த ‘வைரஸ்’ என ஒவ்வொரு படத்திலும் மெருகேறி மேலே மேலே என நூலுக்கு அடங்காத பட்டமாய்ப் பறந்துகொண்டே இருக்கிறார் சௌபின். பகத் என்னும் நடிப்பு ராட்சசனுக்கு இணையாக ‘இருள்’ மாளிகையில் சௌபின் நடத்திய போராட்டம் கண்டு சிலிர்த்தவர்கள் நிறைய!

காமெடியனாய், வில்லனாய், குணசித்திர வேடத்தில், குட்டி கேமியோவில், கதை நாயகனாய், கதாசிரியராய், இயக்குநராய் எந்தப் பாத்திரத்தில் ஊற்றினாலும் அதன் வடிவமாய் மாறிவிடக்கூடிய தண்ணீரின் இயல்பு சௌபினுக்கு. தனது நடிப்பை நிரூபித்துக்காட்டும் அற்புதத் தருணங்களுக்காகக் காத்திருக்கும் கலைஞனில்லை சௌபின். நுண்ணுணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் தன் இருப்பை உணர்த்திவிடும் மகத்தான கலைஞன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு