Published:Updated:

`நடிகர் சுதீப்புக்கு பலத்த காயம்!’ - 'கோட்டிகோபா -3' படத்தின் ஆக்‌ஷன் காட்சி படப்பிடிப்பில் சோகம்

சுதீப், கன்னடப் படங்களில் மட்டுமில்லாமல் பல்வேறு மொழிகளில் சின்ன கதாபாத்திரத்திலாவது நடித்துவிடுவார். பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் 'தபாங் 3' படத்தின் ஷூட்டிங்கை சமீப்பத்தில்தான் முடித்தார்.

Sudeep
Sudeep

இதைத் தொடர்ந்து, தான் ஹீரோவாக நடிக்கும் 'கோட்டிகோபா 3' படத்தின் பணிகளில் இறங்கியுள்ளார். படத்தை வரும் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியிடுவதால், படத்தின் வேலைகள் பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கிறது. அப்படத்தின் சண்டைக் காட்சியைப் படமாக்கும் சமயத்தில், சுதீப்புக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சுதீப்
சுதீப்

கன்னடத்தில் சிவ கார்த்திக் இயக்கும் படம், 'கோட்டிகோபா 3'. ரஜினிகாந்த் நடித்த கல்ட் ரக படமான 'பாட்ஷாவை'த் தழுவி 2001-ல் கன்னடத்தில் வெளிவந்த படம்தான், 'கோட்டிகோபா'. விஷ்ணுவர்தன் இப்படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 2016-ல் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது. அதில் ஹீரோவாக நடித்த சுதீப், தொடர்ந்து அதன் மூன்றாம் பாகத்திலும் தற்போது நடித்துவந்தார். இப்படத்தின் ஆக்‌ஷன் சீக்குவென்ஸ், ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டு வந்தது. ஸ்டன்டு காட்சி ஒன்றை படமாக்கும் சமயத்தில், சுதீப்பின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக சுதீப்பை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளது படக்குழு. சிகிச்சையின் முடிவில், சுதீப்பை சில வாரங்கள் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். 'கோட்டிகோபா 3' படத்தைத் தவிர 'பயில்வான்', 'சைரா நரசிம்மா ரெட்டி' போன்ற படங்களிலும் அவர் நடித்துவருகிறார்.