Published:Updated:

சுதா கொங்கரா ஆந்தாலஜி... இசையமைப்பாளரின் தங்கைதான் ஹீரோயின்... ஹீரோ யார் தெரியுமா?!

சுதா கொங்கரா, விக்னேஷ், கெளதம் மேனன், வெற்றிமாறன்
சுதா கொங்கரா, விக்னேஷ், கெளதம் மேனன், வெற்றிமாறன்

ஆணவக் கொலையை மையமாக வைத்து கெளதம் மேனன், வெற்றி மாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் ஆகியோர் தமிழில் ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

லாக்டெளன் காலத்தில் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் படமாக மாறியிருக்கிறது நெட்ஃபிளிக்ஸின் ஆந்தாலஜி படம். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்கள் கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து எடுத்திருக்கும் ஆந்தாலஜி படம் என்பதால் இதற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துக்கொண்டே போகிறது.

இந்தப் படத்துக்கானப் பெயரை இன்னும் இறுதி செய்யாமல் வைத்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். ஒவ்வொரு இயக்குநரின் தரப்பில் இருந்தும் நான்கு பெயர்கள் நெட்ஃபிளிக்ஸுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறதாம். அதில் அவர்கள் தேர்ந்தெடுப்பதுதான் டைட்டிலாக அறிவிக்கப்படும். இந்த நெட்ஃபிளிக்ஸ் ப்ராஜெக்ட்டை இயக்குநர் வெற்றிமாறன் ஒருங்கிணைத்திருக்கிறார் என்கிறார்கள்.

இந்தியில் அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோரை வைத்து இரண்டு ஆந்தாலஜி படங்களை தயாரித்த நெட்ஃபிளிக்ஸ், அதே ஃபார்முலாவைத்தான் தமிழ் சினிமாவிலும் அப்ளை செய்திருக்கிறது. இந்தியில் `கோஸ்ட் ஸ்டோரிஸ்' என்கிற பெயரில் கடந்த ஜனவரி 1-ம் தேதி வெளியான படத்துக்குப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. அதே பாணியில்தான் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல இயக்குநர்களை ஒருங்கிணைத்து ஆந்தாலஜி படம் எடுத்திருக்கிறது நெட்ஃபிளிக்ஸ். கடந்த செப்டம்பரில் தொடங்கிய இந்த ப்ராஜெக்ட்டின் படப்பிடிப்புகள் லாக்டெளனுக்கு முன்பாகவே முடிந்துவிட்டன. டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மட்டுமே லாக்டெளனில் நடந்து, தற்போது முழு படமும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது.

Vignesh Sivan, Anjali, Kalki Koechlin
Vignesh Sivan, Anjali, Kalki Koechlin
கெளதம் மேனன், வெற்றிமாறன், சுதா கோங்ரா, விக்னேஷ் சிவன்... ஆணவக்கொலை ஆந்தாலஜி ரெடியா? #Exclusive

ஆணவக் கொலையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த ஆந்தாலஜி படம் குறித்த எக்ஸ்குளூசிவ் தகவல்களை இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் விகடன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம். ஒவ்வொரு இயக்குநரின் படமும் 30 நிமிடங்கள் கொண்டதாக இருக்கும். கெளதம் மேனன் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். இதில் `இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', `மங்காத்தா' படங்களில் நடித்த அஷ்வின் காக்கமன்னு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். வெற்றிமாறனின் கதையில் பிரகாஷ் ராஜ் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவியை சுற்றித்தான் கதை நகரும். விக்னேஷ் சிவன் கதையில் அஞ்சலியும் இந்தி நடிகை கல்கி கோச்சலினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில் மிகவும் சஸ்பென்ஸாக இருந்த சுதா கோங்ராவின் ப்ராஜெக்ட் குறித்தத் தகவல்களைத் திரட்டினோம்.

பவானி ஸ்ரீ
பவானி ஸ்ரீ

முழுக்க முழுக்க கொடைக்கானலில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தக் கதையில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஶ்ரீ-தான் லீட் ரோலில் நடித்திருக்கிறார். இவருடைய காதலராக மலையாள நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் நடித்திருக்கிறார். இதில் முக்கியக் கதாபாத்திரத்தில், இயக்குநர் பாக்யராஜ் மகனும், நடிகருமான சாந்தனு நடித்திருக்கிறார். சுதா கொங்கராவின் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

நெட்ஃபிளிக்ஸுக்கான இந்த ஆந்தலாஜி படத்தில் தமிழகத்தில் நடைபெற்ற மிக முக்கியமான ஆணவக்கொலைகள் பற்றிய ரெஃபரன்ஸ்கள் இருக்குமாம். காதல் மற்றும் போலீஸ் த்ரில்லர் படங்களை மட்டுமே இயக்கிவந்த கெளதம் மேனன் ஆணவக்கொலைப் பற்றிய இந்தப் படத்தில் தன்னுடைய வேறு பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார் என்கிறார்கள். அதேப்போல் ஜாலிகேலி படங்களுக்கு மட்டுமே புகழ்பெற்ற விக்னேஷ் சிவன் இதில் மிகவும் சீரியஸான சப்ஜெக்ட்டை கையில் எடுத்து சிறப்பாக முடித்துத்தந்திருக்கிறார் என்கிறார்கள்.

கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய இந்த ப்ராஜெக்ட் இந்த ஆண்டு செப்டம்பரில் ரிலீஸாக இருக்கிறது. இந்தப்படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு