அத்தியாயம் 1
அத்தியாயம் 2
Published:Updated:

சுதாகர் - ஒரு நிருபரின் டயரியிலிருந்து..!

Sudhakar - A Reporter's Diary
பிரீமியம் ஸ்டோரி
News
Sudhakar - A Reporter's Diary

``தமிழ் தெரியாத என்னை முதல் முதல்லே தைரியமா நடிக்க வெச்சவர் பாரதிராஜா!

சுதாகரின் பூர்வீகம் ஆந்திரா. அப்பா முன்பு டெபுடி கலெக்டராகப் பணியாற்றியவர். இப்போது ஓய்வு பெற்று, மகன் சுதாகரது கணக்கு வழக்குகளை - வரவு செலவுகளைக் கவனித்துக் கொள்கிறார்.

சுதாகரின் கூடப்பிறந்த சகோதரர்கள் ஆறு பேர். இவர்தான் கடைக்குட்டி. ஊரிலே நிலம் நீச்சு, வீடு மாடு என்று இருந்தாலும், தன் பி.ஏ. படிப்பைப் பாதியிலேயே அறுத்துக் கொண்டு சென்னை ஃபிலிம் சேம்பர் நடிப்புப் பள்ளியில் வந்து சேர்ந்தார் சுதாகர்.

சினிமா ஆசை யாரை விட்டது?

Sudhakar - A Reporter's Diary
Sudhakar - A Reporter's Diary

ஒரு சமயம் வாகினி ஸ்டூடியோவில் ஷூட்டிங் பார்க்கப் போன இவரை உள்ளேயே அனுமதிக்கவில்லை.

``நான் ஒரு பிரபல நடிகனாகி இதே ஸ்டூடியோவுக்குள் மரியாதையோடு நுழைகிறேன், பாருங்கள்" என்று சவால் விட்டு வந்தார் சுதாகர்.

நடிப்புப் பயிற்சி முடிந்தது. பாரதிராஜாவின் பார்வை இவர்மீது விழுந்தது - படங்கள் வந்தன  - பிரபல நடிகரானார்.``தெருவில் நான் போகும்போது `அதோ, சுதாகர் போகிறார்' என்று நாலு பேர் சொல்லும்வரைதான் கிளாமர் - மதிப்பு - வால்யூ - எல்லாம்.

தெருவில் நான் போகும்போது யாரும் என்னைப் பற்றி மூச்சு விடவில்லையென்றால் எல்லாமே போச்சு. சினிமா உலகம் என்னை மறந்து விட்டது என்று அர்த்தம். அந்த நிலை வந்தால்கூட நான் சினிமாவில் எங்காவது எப்படியாவது ஒட்டிக் கொண்டுதான் இருப்பேன்" என்றார் சுதாகர்.

பல படங்களில் நடிப்பதுடன் `சந்தன மலர்கள்' என்ற படத்தையும் எடுத்து வருகிறார் சுதாகர். இத்தனை சீக்கிரம் சொந்தப் படம் தயாரிக்கத் துவங்கி விட்டாரே என்று வியந்தபோது, ``ஐந்து லட்சம் சம்பாதித்து ஐந்து லட்சம் போனால் தான் கவலைப்பட மாட்டேன்.

அது தலைவிதி என்று விட்டு விடுவேன். பொதுவாகவே எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவன் நான் அல்ல. ஏனென்றால், நாளைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்துக் கொண்டு மண்டையைப் பிய்த்துக் கொண்டிருந்தால் இன்று சாப்பிடும் சோறு ருசிக்காது.

இன்றைக்கு அனுபவித்துவிட வேண்டும். நாளையைப் பற்றி நாளை கவலைப்பட்டுக் கொள்ளலாம்."சுதாகரின் இந்த விளக்கமே விநோதமாக இருந்தது.

தன் எண்ணத்தைத் தொடர்ந்தார்: ``என்னைப் பொறுத்தவரை எனக்கு இன்றைக்கு இருக்கும் வேலைகளை ஒழுங்காகச் செய்து முடிப்பேன். எனக்குக் கொடுத்த பாத்திரத்தை எத்தனை சின்ஸியராக முடியுமோ அத்த அளவுக்குச் செய்வேன்.

நான் செய்யும் காரியத்தின்மீது எனக்கு ஒரு பக்தியும் மரியாதையும்கூட இருக்கும்.

"எது எப்படியோ? இவரை அறிமுகப்படுத்திய பாரதிராஜாவின்மீது இவருக்கு அபார பக்தியும் மரியாதையும் இருக்கிறது.``தமிழ் தெரியாத என்னை முதல் முதல்லே தைரியமா நடிக்க வெச்சவர் அவர்.

போகப் போகத்தான் என் தமிழை நான் இம்ப்ரூவ் பண்ணிக்கிட்டேன். இதற்கென்று ஆசிரியரை வைத்துக் கொண்டோ அல்லது அரிச்சுவடியைப் படித்தோ நான் என் தமிழை வளர்த்துக் கொள்ளவில்லை.

"பின் எப்படி இவர் நன்றாகத் தமிழ் பேசுகிறார்?``பேசுவது மட்டுமில்லே... நல்லா தமிழ் படிப்பேன். எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது. முதல்லே சினிமா போஸ்டர்களை எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் தொடர்ந்து தினத்தந்தி படிச்சேன் - படிக்கிறேன்.

அதிலேதான் பெரிய பெரிய எழுத்திலே சின்னச் சின்ன வார்த்தையா வருது. படிக்க ஈஸியா இருக்கு. நான் இன்னிக்கு ஓரளவு நல்லா தமிழ் படிக்கிறேன்னா அதுக்கு தினத்தந்திதான் காரணம்."ஆர்வமும் தேவையும் இவர் பணியைச் சுலபமாக்கி விட்டது.``ரொம்ப நாள் எனக்கு மணியார்டர் எப்படி அனுப்பறது - தந்தி எப்படி அனுப்பறதுன்னே தெரியாது. மெட்ராஸ் வந்துதான் நான் வாழக் கத்துக்கிட்டேன்.

"அது சரி, இவர் திரைக்கு வந்த புதிதில், `தெலுங்குப் படங்களில் நடிக்க மாட்டேன்' என்று எங்கோ சொன்னதாக நினைப்பு.புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழிக்கும் இதற்கும் ஒன்றும் சம்பந்தமில்லை.

ஏனென்றால், இப்போது இவர் ஏழு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்! 

- பாலா

(08.02.1981 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)