Published:Updated:

``இந்தத் தலைமுறைக்குப் பிடிச்ச மாதிரி என்னால படம் பண்ண முடியாதா?!" - `புத்தம் புது காலை' சுஹாசினி

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

``இன்னைக்கு விமர்சனமெல்லாம் `உங்க நடிப்பு சரியில்லை', `அதை இம்ப்ரூவ் பண்ணுங்க'னு சொல்றதில்லை. `எதுக்கு நீயெல்லாம் நடிக்குறே'னுதான் கேட்குறாங்க. இப்படியான சூழல்ல, எதுக்கு நீ டைரக்ட் பண்றனு என்னை யாரும் இதுவரை கேட்கலை" - சுஹாசினி மணிரத்னம்.

அமேஸான் ப்ரைமில் வெளியாகியுள்ள `புத்தம் புது காலை’ ஆந்தாலஜியில் (Anthology) ஒரு குறும்படத்தை இயக்கி கம்பேக் கொடுத்திருக்கிறார் சுஹாசினி மணிரத்னம்.1995-ம் ஆண்டு வெளியான `இந்திரா’ திரைப்படத்துக்குப் பிறகு, 25 ஆண்டுகள் கழித்து அவர் இயக்கியுள்ள படம் இது. ஒளிப்பதிவு உதவியாளராகத் தனது திரைப்பயணத்தைத் தொடங்கி நடிகை, திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என அடுத்தடுத்த தளங்களுக்கு நகர்ந்தவர்.

ஐந்து குறும்படங்களின் தொகுப்பான `புத்தம் புது காலை’, கொரோனா லாக்டௌன் பின்னணியில் பாசிட்டிவிட்டியைத் தரும் வகையிலான முயற்சி. சுஹாசினி மணிரத்னம், சுதா கோங்கரா, கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ் என ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ள இந்த ஆந்தாலஜியில், தான் பங்களித்த அனுபவம் பற்றி பகிர்ந்துகொள்கிறார் சுஹாசினி.

``இந்தப் பொதுமுடக்கக் காலத்தில் படப்பிடிப்பு நடத்துவது பெரும் சவாலாக இருந்ததா?''

``நிச்சயமா. லாக்டௌன் முடிஞ்சதும் படப்பிடிப்பு வேலையைத் தொடங்கிடலாம்னு நினைச்சோம். ஆனா, அது தள்ளிப்போயிட்டே இருந்தது. ஜூலை 6-ம் தேதிதான் முதல்கட்ட லாக்டௌனே முடிவுக்கு வந்தது. அமேஸான் ப்ரைம் நிறுவனம், படப்பிடிப்பில் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ரொம்ப கவனமா இருந்தாங்க. டெக்னீஷியன்களோட சேர்த்து கேமரா முன்னாடி 6 பேர்தான் இருக்கணும். நடிகர்கள் நாங்களே 5 பேர். தவிர, கேமராமேன் மட்டும்தான் ஸ்பாட்ல இருக்க முடியும். லைட்மேன் வந்து லைட் அரேஞ்ஜ்மென்ட்ஸ் பண்ணிட்டு பக்கத்து ரூம்க்கு போயிடுவார்.

கடைக்குப் போய் காய்கறிகள் வாங்குற மாதிரி நான் ஒரு சீன் எழுதியிருந்தேன். ஆனா அதுக்கு அனுமதி கிடைக்காததால எடுக்க முடியாம போச்சு. அதே மாதிரி ஃப்ளைட்ல வந்து இறங்கி ஏர்போர்ட்டிலிருந்து வர்ற மாதிரியும் ஒரு சீன் எழுதியிருந்தேன். அதுக்கும் அனுமதி கிடைக்காததால அந்தக் காட்சிகளை ஓவியங்கள் மூலமா காண்பிச்சோம்.

படப்பிடிப்பு நடந்த நேரத்துல ஸ்ருதிஹாசன் ஹைதராபாத்தில் இருந்தாங்க. அவங்களால சென்னை வரமுடியாத நிலைமை. அதனால அவங்க போர்ஷனை அங்கேயே ஒரு கேமராமேனை வெச்சு ஷூட் பண்ணினோம். ஸூம் மூலமா இங்கிருந்தே அதை டைரக்ட் பண்ணினேன்.''

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

``உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களையே நடிக்க வைத்திருக்கிறீர்கள். இதற்கு எதுவும் தனிப்பட்ட காரணம் இருக்கிறதா?''

``இந்த மாதிரி நோய்த்தொற்றுக் காலத்துல பல நெருக்கடிகளுக்கு மத்தியில படம் பண்றோம். நம்ம குடும்பத்துலேயே இத்தனை நடிகர்கள் இருக்காங்களே, இந்த இக்கட்டான சூழ்நிலையில அவங்களையே நடிக்க வைக்கலாமேனு எடுத்த முடிவுதான் இது. அப்பா கதாபாத்திரத்தை எங்கப்பாதான் பண்றதா இருந்தது. ஷூட்டிங்குக்கு 10 நாள் முன்னாடி அவர் கீழ விழுந்து தோள்பட்டை எலும்பு முறிஞ்சிடுச்சு. அதனால டெல்லி குமார், டெல்லி கணேஷ் இவங்ககிட்டயெல்லாம் கேட்டேன். அவங்க இந்தக் கொரோனா சூழலால கொஞ்சம் தயங்கினாங்க. கடைசியில் காத்தாடி ராமமூர்த்தி, தான் பண்றதா முன்வந்தார்.

ஷூட்டிங் முடிஞ்சதும்கூட நாங்க டீமை வெளிய அனுப்பலை. லொக்கேஷன்லேயே சில நாள்கள் தங்கவெச்சோம். இது மாதிரி நிறைய பொறுப்புகள் இருந்தன.''

``இப்படத்தின் மற்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றும் சந்தர்ப்பம் வாய்த்ததா?''

``இந்தப் படத்தில் பணியாற்றியிருக்கும் மற்ற இயக்குநர்களும் என் நண்பர்கள்தாம். ஆனா, நாங்க ஒருவரோடு ஒருவர் இன்ட்ராக்ட் பண்றதுக்கான வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைக்கலை. ஆந்தாலஜி படம்னாலும் ஒவ்வொரு கதையோட கதாபாத்திரமும் இன்னொரு கதையோட கதாபாத்திரத்துடன் உரையாடுற மாதிரி இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். இயக்குநர் ஹலீதா ஷலீம் `சில்லுக்கருப்பட்டி’ ஆந்தாலஜி பண்ணினாங்க. அதில் அனைத்து கதைகளுக்கும் அவங்கதான் இயக்குநர் என்பதால, எல்லா கதை கதாபாத்திரங்களுக்கு இடையிலும் ஒரு தொடர்பை வெச்சாங்க. அது மாதிரி இந்தப் படத்தில் பண்ண முடியாமப்போச்சு.''

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

``25 ஆண்டுகளுக்குப் பிறகு படம் இயக்கியிருக்கிறீர்கள். இன்றைய ட்ரெண்டுடன் ஈடுகொடுத்துப் பயணிக்க முடிந்ததா?''

``சினிமாங்குறது எல்லா தலைமுறைக்கும் பொதுவானது. இன்றைய தலைமுறையினரும் ரசிக்கிற மாதிரியான படத்தை பண்ணித்தான் ஆகணும். 40 வருஷமா திரைத்துறையில் இருக்கேன். `ஏன், இந்தத் தலைமுறைக்கு பிடிச்ச மாதிரி என்னால படம் பண்ண முடியாதா?'னு நினைச்சுதான் இதைப் பண்ணினேன். யாரா இருந்தாலும் அந்தந்த கால சூழலுக்குத் தகுந்த மாதிரிதான் படம் பண்ணணும்.''

``திரைத்துறையில் இயக்கம் என்பது இன்றுவரை ஆண் மையமாக இருக்கிறதே? இப்படத்தின் 5 இயக்குநர்களில் 2 பேர் பெண்கள் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

``திரைப்படப் பார்வையாளர்களில் ஆண்கள்தாம் அதிகளவில் இருக்காங்க. பெண்கள் சீரியல்கள்தான் அதிகம் பார்க்குறாங்க. இந்த நிலையை ஓடிடி தளங்கள் மாற்றிப்போட்டிருக்கு. இப்ப கணவன், மனைவி ரெண்டு பேரும் அவங்கவங்க கேட்ஜெட்ல படம் பார்க்கலாம். படம் வெளியானதுல இருந்து, நிறைய பெண்கள்தாம் எனக்கு கால் பண்ணி படம் பத்தின கருத்துகளை பகிர்ந்துகிட்டாங்க. இது ஒரு நல்ல மாற்றம். இந்தப் படத்தைப் பொறுத்தவரை இரண்டு பெண் இயக்குநர்கள் இயக்கியிருக்காங்க என்பது, உலக அரங்கில் நல்ல வரவேற்பைக் கொடுக்கும். அமேஸான் மாதிரியான கார்ப்பரேட்க்கு அது தேவைப்படும். `இப்படியான கட்டாயம் உருவாகுறப்பதான் பெண்களுக்கு இடம் கொடுப்பாங்களா?'னு கேட்கலாம். எப்படியாக இருந்தாலும் பெண்களுக்கான இடம் கொடுக்கப்படுறது மகிழ்ச்சியான விஷயம்தான்.''

``திரைப்படங்களில் இதுபோன்ற பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்ள ஓடிடி நல்ல தளமாக இருக்குமா?''

``உலகின் அனைத்து மூலைக்கும் நம் படம் போய்ச்சேரும்ங்குறது நல்ல விஷயம்தானே? ஆனா, இன்னும் இது மாதிரி ஓடிடியில் வெளியாகுற ஆந்தாலஜியில் பெரிய நடிகர்கள் யாரும் நடிக்க முன்வரலை. இந்த நிலை மாறணும்.''

புத்தம் புது காலை
புத்தம் புது காலை

``படத்தின் விமர்சனங்கள் நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கின்றனவா?''

``நிச்சயமா. ஏன் இவ்ளோ நாள் டைரக்ட் பண்ணாம இருந்தீங்கனு நிறைய பேர் கேட்டாங்க. நீ ஏன் இதெல்லாம் பண்றேன்னு யாரும் கேட்கலைங்கிற விதத்துல மகிழ்ச்சியா இருக்கு. இன்னைக்கு விமர்சனமெல்லாம் `உங்க நடிப்பு சரியில்லை', `அதை இம்ப்ரூவ் பண்ணுங்க'னு சொல்றதில்லை. `எதுக்கு நீயெல்லாம் நடிக்குறே'னுதான் கேட்குறாங்க. இப்படியான சூழல்ல, எதுக்கு நீ டைரக்ட் பண்றனு என்னை யாரும் இதுவரை கேட்கலை.''

``இந்த விமர்சனங்கள், அடுத்து தனியாகப் படம் இயக்குவதற்கான உத்வேகத்தைக் கொடுத்திருக்கிறதா?''

`` `மெட்ராஸ் டாக்கீஸி'ல் நான் இணை தயாரிப்பாளர். என்னால் முழு நேர இயக்குநரா எல்லாம் இருக்க முடியாது. இடைப்பட்ட காலத்துல 5 சிறுகதைகள் எழுதினேன். என்னோடு சேர்த்து காளிதாஸ், ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் ரேவதி, ரிச்சர்ட்னு 5 இயக்குநர்கள் அதை குறும்படங்களாகப் பண்றோம். அதுல கிடைக்கிற லாபத்துல 35 சதவிகிதத்தை நலிந்த நடிகர்களுக்குக் கொடுக்கத் திட்டமிட்டிருக்கோம். அடுத்து அது வெளியாகும்.

ஓடிடி தளங்களில் `ஷோ ரன்னர்'னு ஒரு பொறுப்பு இருக்கு. எல்லாத்தையும் ஒருங்கிணைக்கிற வேலை அது. இயக்குநரா வேலைசெய்யுறதைவிட ஷோ ரன்னரா இருக்கிறதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு.''

``உங்கள் கணவர் மணிரத்னத்துடன் இணைந்து ஸ்க்ரிப்ட் எழுதும் அனுபவம் பற்றி..?"

``அவர் கூட இப்ப இல்லை, `ரோஜா', `பம்பாய்', `திருடா திருடா'னு பல காலமாகவே வேலைசெஞ்சிட்டிருக்கேன். முதல்ல இந்தக் கதையை சொன்னப்போ வேண்டாம்னு சொன்னார். அப்புறம் மூணு நாள் கழிச்சு, `நல்லாருக்கு நீ இதையே பண்ணு'னு சொன்னார். பக்கத்து பக்கத்து ரூம்லதான் இருப்போம்னாலும் மெயில்லதான் அனுப்புவேன். அவர் புளூ இங்க்ல திருத்திக் கொடுப்பார். ஸ்க்ரிப்ட் முழுவதும் புளூ இங்க்கா இருக்கும். `இது என்னோட சஜஷன் மட்டும்தான். மத்தபடி இது உன் படம்; உன் முடிவு'னு சொல்லித்தான் ஸ்க்ரிப்ட்ட கொடுத்தார். ஷூட்டிங்க்கு எல்லாம் அவர் வரலை. இசை அவருக்கு ரொம்பப் பிடிக்கும்ங்குறதால அவர் சூப்பர்வைஸ் பண்ணினார்.''

- கி.ச.திலீபன்
அடுத்த கட்டுரைக்கு