சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

Coffee with காதல் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
News
Coffee with காதல் படத்தில்...

யோசிக்கும்போது நிறைய வரும். படிக்கிற புத்தகத்தில் ஒரு வரி பாதிக்கும். பத்திரிகைச் செய்தியில் ஒன்னு கிடைக்கும். ஒருத்தர் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லும்போது ஒரு விஷயம் ஃப்ளாஷ் ஆகும்

‘`எனக்கு ரொம்ப நாளாகவே ஃபீல் குட் மூவி பண்ணணும்னு ஆசை. அப்படிப்பட்ட படங்கள் தமிழில் அரிதாகவே வருது. நான் எம்.ஜி.ஆர் ரசிகன். எனக்குப் பிடிச்ச படம் ‘அன்பே வா.' எனக்குத் தெரிந்து தமிழில் அவ்வளவு அருமையாக அமைந்த ஃபீல் குட் மூவி அந்தப் படம்தான். படம் முழுக்க சின்னப் புன்னகையோடு பார்க்கலாம். நல்ல ரொமான்ஸ், காமெடி, குறைந்த பைட்னு பார்க்கவே நல்லா இருக்கும். நான் செய்த ‘உள்ளத்தை அள்ளித் தா', ‘தீயா வேலை செய்யணும் குமாரு' எல்லாம் இப்படிப்பட்ட படம்தான். ஆனால் காமெடி கொஞ்சம் தூக்கலாகப் போய் காமெடி படம்னு ஆகிப்போச்சு. ஃபீல் குட் மூவி ஏக்கத்தைப் போக்க இப்ப ‘Coffee with காதல்' செய்திருக்கேன். நல்ல சந்தோஷமான படமாக இருக்கும். ப்ளசண்ட் வியூ, அழகான முகங்கள், நல்ல லொக்கேஷன், காதல்னு அள்ளும். நிச்சயம் கடைக்கோடி ஜனங்க வரைக்கும் ரசிக்கிற மாதிரி படம் இருக்கும்’’ வழக்கம் போல் உற்சாகத்தோடு இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. இன்னும் பக்குவத்தில் இருக்கிற அரிதான கமர்ஷியல் மாஸ்டர்.

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``படமே நிறைய ஹீரோ - ஹீரோயின்களோட பார்க்கவே ஜோதியா இருக்கே...’’

‘‘மூணு ஹீரோக்கள், ஐந்து ஹீரோயின்கள். எனக்கு ஜீவா, ஜெய்கூட எப்பவும் செட்டாகும். என்கூட ஒர்க் பண்ணணும்னா ரொம்பத் துடிப்பாக இருப்பாங்க. இவங்களுக்கு அண்ணன் கேரக்டராக ஸ்ரீகாந்த். பக்கா ஃபேமிலி மேன் வேல்யூ உள்ளவர். கொஞ்சம் சபலம்னு வித்தியாசம் உள்ள ரோல். இதுவரைக்கும் இவர்கூட ஒர்க் பண்ணினதில்லை. ரொம்ப அருமையான ஜாலியான கேங் மாதிரி ஆகிட்டோம். மாளவிகா சர்மா, அம்ரித்தா ஐயர், பிக்பாஸ் சம்யுக்தா, ஐஸ்வர்யா தத்தா, ரைசா வில்சன்னு பெண்கள். முதல் இடத்திற்குப் போகத் தகுதியுள்ள பெண்கள்தான். இவங் களோட இந்த மூணு அண்ணன்களுக்கும் தங்கச்சியாக திவ்யதர்ஷினி பண்றாங்க. படத்தோட ஆதாரமே அவங்கதான்.

ஒவ்வொரு பிரதருக்கும் ஒரு ட்ராக் போகும். காமெடி, சென்டிமென்ட் அளவாக இருக்கணும். நான் எப்பவும் சினிமாவிற்காக ஸ்கிரிப்ட்டுக்கு நல்லா உழைச்சிட்டு ஷூட்டிங்கைப் பதற்றம் இல்லாமல் செய்வேன். இதில் நடிக்கிற ஒவ்வொருத்தருக்கும் வேண்டிய இடம் கொடுக்கணும். நிறைய கவனமும் உழைப்பும் தேவைப்பட்டது. ஒவ்வொருத்தரின் குணாதிசயத்தையும் ஒழுங்கு படுத்தணும். யோகி பாபுவோட ட்ராக்கே ஒரு தனிப் படம் மாதிரியே போகும். படம் முழுக்க இளமையும் துள்ளலும் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். கவனமாக, ஆனால் சந்தோஷமாக வேலை பாத்திருக்கேன்.’’

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``உங்க படத்துக்கு இப்படி ஒரு தலைப்பை எதிர்பார்க்கலை...’’

‘‘இது முழுக்க காமெடி படமும் இல்லை, சீரியஸ் படமும் இல்லை. மூன்று பிரதர்ஸ், அவங்க உறவுகள், அவங்க காதல், அதோட சக்சஸ், ஃபெயிலியர், பிரச்னைகளையெல்லாம் புன்னகையோடு பார்க்கலாம். முன்னாடி ‘நலம் வாழ' என்று பெயர் வெச்சேன். ரொம்ப சாஃப்ட்டாக இருந்தது. ரொமான்ஸ், மெட்ரோ மூவி மாதிரி இந்தப் படம் தோற்றமளிக்கணும். அதுக்கு ‘Coffee with காதல்'தான் சரின்னு பட்டது. சிலர் சாதி, சமுதாயம்னு எடுப்பாங்க. நானும் எல்லா ஜானரும் எடுத்திருக்கேன். என் படங்களில் காமெடி கொஞ்சம் அதிகமாக இருக்கிறதால் ‘காமெடி பட இயக்குநர்’னு முத்திரை குத்திட்டாங்க. படத்தில் முக்கியமாக ஊட்டியும் ஒரு பாத்திரமாகவே வரும். எந்த கவர்மென்ட் ஆட்சிக்கு வந்தாலும் சென்னையில் ஒரு சினிமா எடுக்கற சூழ்நிலை, பர்மிஷன் எல்லாமே கிடைக்கிறது கஷ்டம். போன வாரம் என் சொந்த வீட்டில் ஷூட்டிங். நாலு தெரு தள்ளி யாரோ புகார் கொடுத்ததா போலீஸ் வந்துட்டாங்க. சினிமாவை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் இருக்காங்க. சென்னையில் ஷூட்டிங் நடத்தினால் டார்ச்சர் அதிகம். கேமராவை வச்சிட்டா பத்துப் பேர் கவுன்சிலர், அவங்களோட புருஷன்னு வந்துடுவாங்க. நிறைய பஞ்சாயத்து. கிரியேட்டிவிட்டியே போயிடும். அதுதான் ஹைதராபாத், ஊட்டின்னு போயிடுவேன். நம்ம அழகியலுக்கும் ஊட்டி செட்டாகும்.’’

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``மறுபடியும் யுவன் ஷங்கரோட ஒர்க் பண்றீங்க...’’

‘‘இந்த மாதிரி படத்துக்கு முதல் தேவை, நல்ல இசை. யுவனோட ஒர்க் பண்ணி 18 வருஷம் ஆச்சு. ஆனால் எதுவும் தெரியலை. விட்ட இடத்திலிருந்து தொடர்ந்த மாதிரி இருக்கு. முன்னாடி எப்படி இருந்தாரோ அப்படியே இருக்கார். எதற்கெடுத்தாலும் சிரிப்புதான். இன்னும் பாடல் வரவில்லையேன்னு பதற்றமாகக் கேட்டால், ‘நாளைக்கு வாங்கிக்கங்க'ன்னு சாந்தமா பதில் வரும். எதற்கும் ‘நோ' சொன்னது கிடையாது. மெலடியில் பின்னியிருக்கார். எனக்கு ‘ரம்பம்பம்’ பாடல் ரொம்பப் பிடிக்கும். ரீமிக்ஸ் பண்ணினால் அது மாதிரி டான்ஸ் நம்பர் வேணும்னு நினைப்பேன். மறுபடியும் படமாக்கும்போது யூனிட்ல எல்லோரும் ரசித்துப் பார்த்தோம். குஷ்பு என்னமா ரசிச்சு ஆடியிருக்காங்கன்னு எல்லோரும் ஆச்சர்யமா சொன்னாங்க. யுவன்கிட்டே ‘ஷூட்டிங்கிற்கு நீங்களும் வந்தால் நல்லாருக்கும்’னு சொன்னேன். வழக்கம் போல் ‘எஸ்’ சொன்னார். சொன்ன மாதிரி ஷூட்டிங் ஆரம்பிக்கும்போது வந்து நின்னார். சர்வ சாதாரணமாக நடிச்சிட்டுப் போனார். நான் எனக்குச் சொல்லிக்கிட்டது மாதிரிதான்... இவ்வளவு காலம் யுவன் நிலைச்சு நிற்கிறது சாதாரண விஷயம் இல்லை. யுவன் படத்தில் இருக்கிறது ‘பளிச்’னு தெரியும்.’’

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``உங்க படத்தோட கதை உருவாவது எப்படி?’’

‘‘யோசிக்கும்போது நிறைய வரும். படிக்கிற புத்தகத்தில் ஒரு வரி பாதிக்கும். பத்திரிகைச் செய்தியில் ஒன்னு கிடைக்கும். ஒருத்தர் வாழ்க்கையில் நடந்ததைச் சொல்லும்போது ஒரு விஷயம் ஃப்ளாஷ் ஆகும். எங்கேயிருந்து வரும்னு தெரியாது. ஏதோ பல்பு எரியும். நிறைய இயக்குநர்களுக்கு இல்லாத சிறப்பை எனக்கு ஆடியன்ஸ் கொடுத்திருக்காங்க. நான் என்னுடைய பெயரை வச்சு வியாபாரம் பண்ணுகிற இடத்தில் இருக்கேன். சினிமாவிற்கு வந்ததும் நான் அதிகமாக எதிர்கொண்ட, சின்னப் புன்னகையோடு தாண்டிப் போகிற கேள்வி... ‘என்ன இது, உங்க படம் மாதிரியே இல்லையே’ என்பதுதான். நான் பண்ணின முதல் படமே கிராமம், திருவிழா, கோயில்னு அமைஞ்சது. என் வீட்டிலேயே ‘டேய், உனக்கு என்னடா கிராமம் தெரியும்’னு கேட்டாங்க. 'உள்ளத்தை அள்ளித்தா' பண்ணும்போது உன் படம் மாதிரி இல்லைன்னு சொன்னாங்க. ஏன்னா நான் சராசரி ஆளு. காமெடியில் வித்தைக்காரன் இல்லை. ஐ.டி பசங்களை வச்சு ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ எடுத்தேன். அப்பவும் ஆச்சர்யம். உண்மையில் என் படம்னா எப்படி இருக்கணும்னு தெரியலை. எனக்கு ஒரு கதையைச் சொல்லி கன்வின்ஸ் பண்ணத் தெரியும். இப்ப திரும்பிப் பார்த்தா என்கூட வந்தவங்க நிறைய பேரைக் காணோம். முன்னாடி, பின்னாடி வந்தவர்களில் முக்கால்வாசிப்பேரை சினிமாவுக்குள்ளே பார்க்கவே முடியவில்லை. சூப்பர் டைரக்டர்கள் லிஸ்டில் என்னைக்கும் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.எம் பெயர் சொல்றாங்களா? அவங்கதான் அதிக படம் எடுத்து, அதிக லாபம் கொடுத்து, புரொடியூசர்களையும் இண்டஸ்ட்ரியையும் வாழ வச்சிருக்காங்க. இதையெல்லாம் யாரும் சொன்னதே இல்லை.’’

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``குஷ்பு அரசியலில் இறங்கித் தீவிரமாகவும் உழைத்து இத்தனை வருஷமாச்சு. ஒரு எம்.பி சீட்கூட அங்கீகாரமாகக் கொடுக்கலைன்னு நினைப்பீங்களா?’’

‘‘வருத்தப்பட்டிருக்கேன். எம்.பி பதவி கொடுக்கவும், பெற்றுக்கொள்ளவும் அவங்களுக்குத் தகுதி இருக்கு. தன் உழைப்பைப் பார்த்து அவங்களாகவே கொடுக்கணும்னு நினைப்பாங்க. ஆயிரம் விளக்கு தொகுதியில் இறங்கி வேலை செய்தாங்க. நானும் கூடப் போயிருந்தேன். சிட்டியின் மத்தியில் இருக்கிற தொகுதியில் சில இடங்கள் இப்படி இருக்கேன்னு ஆச்சரியப்பட்டிருக்கேன். நல்ல எண்ணத்தோடு அரசியலுக்கு குஷ்பு வந்திருக்காங்க. அதிலிருந்து ஒரு பைசா எடுத்துக்கணும்னு அவங்களுக்கு எண்ணமே கிடையாது. அரசியலுக்குத் தேவை நல்ல பொறுமை. அதைப் படிப்படியாக அவங்க கத்துக்கிட்டு இருக்காங்க. இங்கே வந்து புது ஊர், தெரியாத மொழி, வேறு வகையான மக்கள் சூழலில் அவங்க ஜெயிச்சிருக்காங்க. அது மாதிரியே அரசியலிலும் அவங்க நல்ல இடத்திற்கு வருவாங்க. அவங்க எந்த நல்ல முயற்சியிலும் நான் துணை நிற்பேன்.’’

“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி
“இந்தியாவிலேயே பெரிய படம் என்னோடதுதான்!” - சீக்ரெட் சொல்லும் சுந்தர்.சி

``உங்க கனவுப் படம் ‘சங்கமித்ரா’ என்னாச்சு?’’

‘‘அதற்குப் பெரிய பணம் தேவைப்படுது. தேடுதல் நடக்குது. நாலு வருஷத்திற்கு மேலே சங்கமித்ராவுக்கு உழைப்பைப் போட்டிருக்கோம். திட்டமிட்டபடி வந்திருந்தால் இந்தியாவிலேயே அது மிகப்பெரிய படம். ஒருநாள் ‘சங்கமித்ரா’ திரையைத் தொடுவாள்.’’

``இதுவரை பெற்ற அனுபவத்தின் சாரம் என்ன?’’

‘‘இதுவும் கடந்து போகும்ங்கிறதுதான். வாழ்க்கையை பாசிட்டிவா பார்ப்பேன். நல்ல ஸ்கிரிப்ட்னா நாளைக்கே ஷூட்டிங் போற திறமை, பக்குவம், அனுபவம், எனக்கான மார்க்கெட்னு எல்லாம் இருக்கு. சினிமாவுக்குத் தேவை சின்சியாரிட்டி. இங்கே சின்சியரா இருந்தா அது உங்களை சந்தோஷமா வச்சுக்கும். முட்டித்தள்ளிடாமல் ஆதரவாகப் பார்க்கும். என்னை இந்த சினிமா நல்லா வச்சிருக்கு. அதுதான் என் சந்தோஷம்.’’