தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளிவந்த 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் திருநங்கையாக நடித்து பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருந்தார் விஜய் சேதுபதி. இப்படம் ஆஸ்திரேலியாவில் உள்ள 'மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா'வில் திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்படம் விருதுக்கும் தேர்வானது. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம் ஆகிய மூன்று பிரிவுகளில் இப்படம் விருதுகளைப் பெற்றிருக்கிறது. அதுமட்டுமன்றி விருதைத் தேர்ந்தெடுக்கும் நடுவர்கள், இப்படத்தைப் பற்றி பெருமையாகவும் பேசியுள்ளனர். இதன் விருது வழங்கும் விழா, தற்போது மெல்போர்னில் நடந்து வருகிறது.

தொடர்ந்து பல படங்களின் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்து வந்த விஜய் சேதுபதி, இதன் விருது விழாவில் கலந்துகொள்ள நேற்று ஆஸ்திரேலியா சென்றுள்ளார். மேலும், இரண்டு நாள்கள் விருது விழாவில் கலந்துகொண்டு முடித்த பின், நான்கு நாள்கள் அங்கிருந்து ஆஸ்திரேலியாவைச் சுற்றிப் பார்த்து முடித்துவிட்டு நாடு திரும்புகிறார். விஜய் சந்தர் இயக்கும் 'சங்கத் தமிழன்' படத்தின் பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட இருக்கிறது. இதன் ஷூட்டிங் வரும் 13-ம் தேதி ஆரம்பித்து மூன்று நாள்கள் நடக்க இருக்கிறது.
