Published:Updated:

"சினிமாவுக்காக கல்யாணம் பண்ணிக்கல; அம்மாவைப் பார்க்கல... நானே சாட்சி!" - 'சூப்பர் டீலக்ஸ்' ரமணா

தாட்சாயணி
நானே சாட்சி!
நானே சாட்சி!

"டப்பிங் பேசப் போனப்போ அங்கே இருந்தவங்ககிட்ட எல்லாம் 'இவர்தான் இந்தப் படத்துல சூப்பர் ஸ்டார். இந்தப் படம் ஓடுதோ ஓடலையோ, இவருக்கு நல்லபேர் கிடைக்கும்'னு சொன்னாரு. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல."

"என் நெஜப்பேரு ரமணன், படத்துல என் பேரோ ராமசாமி. ஆனா, இப்போ ரெண்டும் இல்லாம எல்லோரும் ‘அற்புதம்.. அற்புதம்’னு கூப்புடுறாங்க தம்பி. ரோட்டுல பார்க்குறவங்கெல்லாம் ‘அற்புதம் நீங்க ரொம்ப நல்லா நடிச்சிருக்கீங்க… நானே சாட்சி’னு சொல்றாங்க. இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல தம்பி” - ஒரு கனவை விவரிப்பதுபோல விவரிக்கிறார், சமீபத்தில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் கவனம் ஈர்த்த நடிகர் ரமணா.

"உங்களைப் பத்தி சொல்லுங்க?"

"எனக்கு விசாகப்பட்டினம் பக்கத்துல ஒரு குக்கிராமம். அந்தக் கிராமத்துல போடுற நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்படித்தான் எனக்கு நடிப்பு ஆர்வம் வந்தது. அதுக்கப்பறம் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிக்கிட்டுருந்த நான், 2005-ல இருந்து நிரந்தரமா சென்னையிலேயே தங்க ஆரம்பிச்சிட்டேன். முதல்ல சின்னத்திரையில கெடைச்ச சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சிக்கிட்டுருந்தேன். என்னோட குரல் நல்லாயிருக்குன்னு சொன்ன என் நண்பர்கள் என்னை டப்பிங் கலைஞர்கள் சங்கத்துல உறுப்பினரா சேரச் சொன்னாங்க. நானும் சேர்ந்தேன். கிடைச்ச சின்னச் சின்ன வாய்ப்புகளைப் பயன்படுத்தி, டப்பிங் பேசுனேன். நாளடைவில் தெலுங்கு மொழியில டப்பிங் ஆகுற படங்களுக்குக் குரல் கொடுக்க ஆரம்பிச்சேன். அப்படி மோகன்லால் உள்ளிட்ட பல முன்னணி ஹீரோக்களுக்குத் தெலுங்குல பேசியிருக்கேன். இடையில இடையில பெரியதிரையில கிடைச்ச சின்னச் சின்ன வேடங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். என் கனவுக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சுக்கிட்டேன். இன்னும் நான் கல்யாணம் பண்ணிக்கல. பெத்த தாயைப் பார்த்தே பத்து வருடம் ஆச்சு. இப்போதான் நல்லநேரம் ஆரம்பிச்சிருக்கு. பார்க்கலாம் தம்பி."

" 'சூப்பர் டீலக்ஸ்' வாய்ப்பு எப்படி கிடைச்சது?"

"தமிழ் சினிமாவுல நான் ஏறி இறங்காத அலுவலகமே இல்லை. எல்லா அலுவலகத்துக்கும்போய் போட்டோ கொடுப்பேன். ஆனா, எல்லோருமே ரொம்ப சின்னச் சின்ன வாய்ப்புகள்தான் கொடுப்பாங்க. கூட்டத்தோடு கூட்டமா பல படங்கள்ல நின்னுருக்கேன். அப்படித்தான் ‘சூப்பர் டீலக்ஸ்' ஆரம்பிக்கும்போதும் அந்த அலுவலகத்துக்குப் போய் போட்டோ கொடுத்திருந்தேன். ஆனா, என்னை ஆடிஷனுக்குக் கூப்பிடல. அதேசமயம், அங்கே போட்டோ கொடுத்திருந்த என் நண்பர் ஒருத்தரை ஆடிஷனுக்கு கூப்பிட்டுருந்தாங்க. அவரு என்னை சும்மா துணைக்குக் கூப்பிட, நானும் விருப்பமில்லாம அவர்கூட போயிருந்தேன். உள்ளே ஆடிஷன் போய்க்கிட்டிருக்கு. நான் வெளியில காத்துக்கிட்டிருந்தேன். அப்போ திடீர்னு உள்ளே ஒரு வாக்குவாதம், ஆடிஷன் போயிருந்த நண்பர் கோபமாகி வெளியே வந்துட்டாரு.

அற்புதம்
அற்புதம்

எனக்கு எதுவுமே புரியல. அப்போ, என்னைப் பார்த்த உதவி இயக்குநர்கள், 'அண்ணே உங்களுக்கு நடிக்கத் தெரியுமா’னு கேட்டாங்க. 'நான் இங்கே ஏற்கெனவே போட்டோ கொடுத்திருந்தேன். ஆனா, யாரும் என்னைக் கூப்புடலையே தம்பி. நான் சும்மா அவர்கூட வந்திருந்தேன்’னு சொன்னேன். 'பரவாயில்ல, இப்போ நாங்க சொல்ற டயலாக்கைப் பேசி நடிங்க. நாங்க அதை டைரக்டர்கிட்ட காட்டுறோம்’னு சொன்னாங்க. நானும் நடிச்சேன். அதைப் பார்த்துட்டுதான் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா சார் எனக்கு வாய்ப்பு கொடுத்தாரு. எனக்குக் கேரக்டர் தர்றாங்கனு தெரிஞ்சதும் நான், 'சரி வழக்கம்போல ஏதாவது ஒரு வரி டயலாக் பேசுற கேரக்டரா இருக்கும். அதுவும் படம் ரிலீஸாகுறப்போ இருக்குமோ இருக்காதோ’னு நெனைச்சுக்கிட்டுதான் போனேன். ஆனா, முதல்நாளே எனக்கு முப்பது வரி வசனத்தைக் கொடுத்து நடிக்க வெச்சாங்க. அப்போதான் எனக்கு அந்தக் கதாபாத்திரத்தோட முக்கியத்துவமே புரிஞ்சுது."

"தியாகராஜன் குமாரராஜா பத்தி சொல்லுங்க?"

"சார் வேலை விஷயத்துல கொஞ்சம் கோபக்காரரு. ஆனா, ரொம்ப தங்கமானவரு. திட்டும்போது தனியா வெச்சுத் திட்டுவாரு, பாராட்டும்போது எல்லோர் முன்னாடியும் பாராட்டுவாரு. ஒரு காட்சியில மிஷ்கின் சாரை நான் கழுத்தைப் பிடிச்சுத் தள்ளி சுவத்துல சாய்க்கணும். அப்போ நான் அவருக்கு வலிச்சிடுமோனு பயந்து ரொம்ப மெதுவா செஞ்சேன். அதைப் பார்த்ததும் அவருக்குப் பயங்கரமா கோபம் வந்துடுச்சு. கன்னா பின்னான்னு திட்டிட்டாரு. அப்புறம் நான் அவர் எதிர்பார்த்த மாதிரியே செஞ்சதும் சந்தோஷமாகிட்டாரு. படப்பிடிப்பு இடைவேளையில என்னைப் பாடச் சொல்லி ரசிப்பாரு. நான் புல்லாங்குழல் நல்லா வாசிப்பேன். அதை வாசிக்கச் சொல்லியும் கேப்பாரு.

அந்தப் படத்துல நான் செஞ்ச சின்னச் சின்ன விஷயங்களும், குரல் வடிவமும் அவரு சொல்லிக்கொடுத்ததுதான். டப்பிங் பேசப் போனப்போ அங்கே இருந்தவங்ககிட்ட எல்லாம் 'இவர்தான் இந்தப் படத்துல சூப்பர் ஸ்டார். இந்தப் படம் ஓடுதோ ஓடலையோ, இவருக்கு நல்லபேர் கிடைக்கும்'னு சொன்னாரு. எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. அதேமாதிரி, ரிலீஸுக்கு அப்புறம் அவரைப் பார்த்தப்போ, ‘என்னன்ணே சொன்ன மாதிரியே ஜெயிச்சீட்டிங்க. கலக்குங்க போங்க’னு சொல்லிச் சிரிச்சாரு. அவர் என் திரையுலகக் கடவுள். அதுமட்டுமில்ல, ‘2.0’ எவ்வளவு பெரிய படம், அதுல ரஜினி சாரைப் படம் பிடிச்ச நீரவ் ஷா சார் இந்தப் படத்துல என்னைப் படம் பிடிச்சிருக்காருங்கிறதை நெனைக்கிறப்போல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு தம்பி."

"மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன்னு எல்லோருமே சீனியர்ஸ். அவங்களோட இணைந்து நடித்ததைப் பற்றி?"

"எல்லோருமே ரொம்பப் பெரிய ஆளுங்க. ஆனா, எல்லோரும் பந்தா இல்லாமதான் பழகுனாங்க. அதுல மிஷ்கின் சார் ஒருபடி மேல! எல்லோருடைய காம்பினேஷன் காட்சி ஒண்ணு எடுக்குறப்போ, இயக்குநர் எங்க எல்லோருக்கும் வசனத்தை சொல்லிக்கொடுத்துக்கிட்டுருந்தாரு. அப்போ, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் எல்லோரும் உட்கார்ந்திருந்தாங்க. நான் பக்கத்துல நின்னுக்கிட்டிருந்தேன். அதைக் கவனிச்ச மிஷ்கின் சார், ‘யோவ் நீயும் ஆர்டிஸ்தானே, வந்து பக்கத்துல உட்காருய்யா. உட்கார்ந்து வசனத்தைக் கவனி’னு அன்பா கண்டிச்சாரு.

"நீங்க பேசுன ‘நானே சாட்சி’ வசனத்தை வெச்சு நிறைய மீம்ஸ் வந்துக்கிட்டுருக்கே... பார்த்தீங்களா?"

"அதை ஏன் கேட்கறீங்க தம்பி. இப்போ தேர்தல் நேரம் வேற இல்லையா.. மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை என்னோட வசனத்தையும் போட்டோவையும் வெச்சு கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்காங்க. முதல்ல அதிர்ச்சியா இருந்தது. இப்போ அது பழகிடுச்சு. அந்த வசனம் இந்த அளவுக்குப் புகழ் பெறும்னு நான் நினைக்கல. ரோட்டுல, தெருவுல எங்கே போனாலும் ‘அற்புதம் நானே சாட்சி’னு அதேமாதிரியே கை வெச்சுச் சொல்றாங்க. உதவி இயக்குநர்கள்கூட ‘அண்னே இந்தப் படத்துல உங்களுக்கு கேரக்டர் உண்டு. நானே சாட்சி’னு சொல்லிச் சிரிக்கிறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்."

நானே சாட்சி!
நானே சாட்சி!

"உங்க தாய்மொழி தெலுங்கு. ஆனா, தூய தமிழ்ல பேசுறீங்களே எப்படி?"

"மொழிமாற்றுப் படங்களுக்கு குரல் கொடுக்குறப்போதான் எனக்குத் தமிழ்மொழிமேல அதிக ஈடுபாடு வந்தது. அதுமட்டுமில்லாம, எந்த மொழி பேசுறோமோ அந்த மொழியைச் சரியா பேசணும்ங்கிறது என்னோட கொள்கை. எந்த மொழியில பேசுறேனோ, அந்த மொழிதான் அப்போ எனக்குத் தாய்மொழி. அதை 100 சதவீதம் தவறில்லாம பேசணும்னு நெனைப்பேன். தமிழும் தெலுங்கும் எனக்கு இரு கண்கள். ரெண்டையுமே தவறில்லாம பேசுவேன்."

"இப்போ என்னென்ன படங்கள் பண்ணிக்கிட்டு இருக்கீங்க?"

"மணிரத்னம் சாரோட ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு ஆடிஷன் போய்ட்டு வந்திருக்கேன். நிச்சயமா ஒரு நல்ல ரோல் உண்டுன்னு சொல்லிருக்காங்க. சுப்ரமணிய சிவா சார் அவரோட அடுத்த படத்திலேயும், 'ப்ளூ சட்டை' மாறன் சார் இயக்கப்போற படத்திலேயும் வாய்ப்பு தர்றதா சொல்லியிருக்காங்க. இதெல்லாம் இல்லாம, இன்னும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, சின்னச் சின்ன வாய்ப்புகளைவிடப் பெரிய வாய்ப்புகளா பார்த்துதான் தேர்ந்தெடுத்து நடிச்சிக்கிட்டுருக்கேன் தம்பி. பார்க்கலாம்."

அடுத்த கட்டுரைக்கு