Published:Updated:

`இந்த மாஸ் காட்ட, வேற யார் இருக்கா?' - ஒரு ரஜினி ரசிகையின் வெறித்தன வாழ்த்து

ரஜினிகாந்த்

ஒரு மனித‌ன் தன் தாய்மொழி அல்லாத ஒரு மொழியை இவ்வளவு வேகமாகப் பேச முடியுமா என யோசித்துப் பார்த்தாலே ரஜினியின் வேகம் எவ்வளவு பிரமிப்பூட்டுவதெனப் புரிந்துவிடும்.

`இந்த மாஸ் காட்ட, வேற யார் இருக்கா?' - ஒரு ரஜினி ரசிகையின் வெறித்தன வாழ்த்து

ஒரு மனித‌ன் தன் தாய்மொழி அல்லாத ஒரு மொழியை இவ்வளவு வேகமாகப் பேச முடியுமா என யோசித்துப் பார்த்தாலே ரஜினியின் வேகம் எவ்வளவு பிரமிப்பூட்டுவதெனப் புரிந்துவிடும்.

Published:Updated:
ரஜினிகாந்த்

இவரைப் பற்றி எல்லோரும் எல்லாமும் பேசி முடித்தாயிற்று. இனியும் புதிதாகச் சொல்ல என்ன இருக்கிறது என்ற மலைப்போடுதான் தொடங்குகிறேன். சினிமா உலகம் ஒரு மாயலோகம். ஏ, பி, சி என சென்டர்களாக மக்களைப் பிரித்தாலும், எந்தச் சமூக நிலையில், கல்விய‌றிவில், பண மாட்சியில் இருந்தாலும் மக்களுக்கு சினிமா என்பது ஒரு மேஜிக். பரபரக் காட்சிகளில் சிலிர்த்து கைதட்டும் ஆக்‌ஷன் படங்களாகட்டும் நகைச்சுவையில் கவலை மறந்து சிரிக்கும் காமெடிப் படங்களாகட்டும், கண்ணீரில் கரைத்து உணர்ச்சி மிக வைக்கும் சென்டிமென்ட் படங்களாகட்டும், யதார்த்தத்தைப் படர‌ விட்டுச் சிந்திக்கச் செய்யும் சீரியஸ் படங்களாகட்டும் ஒவ்வொரு வகைமைக்கும் ஒரு பிரத்யேக ரசிகர் கூட்டமுண்டு. அவர்களுக்குள் ஏராள முரண்களும் உண்டு. ஆனால், இவற்றை எல்லாம் தனித்தனி வட்டங்களாகக் கொண்டால், இந்த வட்டங்கள் பொதுவாகச் சங்கமிக்கும் பெருங்கூட்டம் ஒன்றுண்டு. அவர்கள்தான் ரஜினியின் ரசிகர்கள். அவர்கள் ரசனையின் அடையாளம் ரஜினியிஸம், அவர்களின் மகிழ்ச்சியில் மினுங்குவது ரஜினி!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
ஓவியம்: ப.சூரியராஜ்

1975-ல் நடிக்க வந்திருக்கிறார் ரஜினி. அந்தக் காலகட்டத்தில் (இந்தக் காலத்திலுமே) ஒரு திரைநாயகனுக்கான‌ பொதுப்பார்வையில் இருந்த எல்லா இலக்கணங்களையும் கட்டுப்பாடுகளையும் களைந்தெறிந்துவிட்டுத்தான் களம் புகுந்திருக்கிறார். அவரே சொன்னதுபோல் அவருக்கு ஓர் எதிர்பாராத வரவேற்பைத்தான் தமிழகம் தந்திருந்தது என்றாலும் அதைத் தக்க வைத்துக்கொண்டு ஆட்டத்தில் நீடிப்பது சாதாரண காரியமல்ல. காதலன் எல்லாவற்றிலும் தன்னை இம்ப்ரெஸ் செய்துகொண்டே இருக்க வேண்டுமென காதலி நினைப்பது போலத்தான் தனக்குப் பிடித்த‌ நடிகன் பற்றிய ரசிகனின் எதிர்பார்ப்பும். அதைப் பூர்த்தி செய்தபடியே இருக்கும் நடிகர்கள், காலத்தின் ஓட்டத்தில் தேங்குவ‌தே இல்லை. ரஜினி அதில் காட்டாறு. ஒரே சூப்பர் ஸ்டார்தான். அது எப்போதும் ரஜினிதான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தன்னால் செய்ய இயலாததைத் திரையில் செய்ப‌வனைத்தான் ஒரு ஹீரோவாக சாமானிய மக்கள் பார்க்கிறார்கள். ஒரு வெகுஜன சினிமாவில் கதையின் வலு, திரைக்கதை நேர்த்தியெல்லாம் தாண்டி அதன் நாயகனின் தனித்துவ‌ அம்சமும் முக்கியத்துவம் பெறுகிறது. ரஜினியைப் பொறுத்தவரை அது அவரது வேகம். நடப்பது, நிற்பது, சிரிப்பது, திரும்புவது, அமர்வது, எழுவது என எல்லாவற்றிலும் ரஜினியிடம் ஒரு துரிதம் இருக்கும். இந்த வேகம் பிறப்பியல்பாகவும்கூட‌ இருக்கலாம். ஆனால், அதை ரசிகன் ரசிக்கும் வண்ணம் உடல் மொழியைத் தொடர்ந்து மெருகேற்றிக்கொண்டே இருக்கிறார். ஒரு மனித‌ன் தன் தாய்மொழி அல்லாத ஒரு மொழியை இவ்வளவு வேகமாகப் பேச முடியுமா என யோசித்துப் பார்த்தாலே ரஜினியின் வேகம் எவ்வளவு பிரமிப்பூட்டுவதெனப் புரிந்துவிடும். அதே வேகத்தில் 70 வயதில் காலடி எடுத்து வைக்கும் இந்த வயதிலும் இன்னும் ரசிகனுக்காகச் சிந்திக்கிறார். ரசிகனின் திருப்தியே தன் உழைப்பின் பலன் என்பதை அறிந்திருக்கிறார்.`மூன்று முடிச்சு', `முரட்டுக்காளை'யில் தொடங்கி சமீபத்தில் வெளிவந்த‌ `பேட்ட' படம் வரையிலும் அவரது ஸ்டைலும் உழைப்பும் அதை நிரூபித்தது.

`தளபதி' ரஜினி
`தளபதி' ரஜினி

ரஜினியின் தனித்தன்மை ஸ்டைல். ரஜினி என்றாலே ஸ்டைல்தான். ஆனால், ஒருவர் என்ன செய்தாலும் ஸ்டைலாக இருந்தால் அதைத் தனித்தன்மையெனச் சொல்வது தகுமா என்று தெரியவில்லை! படங்களில் ஸ்டைல் என்பதைக்கூட விட்டுவிடலாம். அது எத்தனை டேக் வேண்டுமானாலும் போயிருக்கும். அல்லது இயக்குநரின் உள்ளீடுகளும் பாதிப்பும் இருக்க நிறைய வாய்ப்புண்டு. ஆனால், பொதுநிகழ்ச்சி விழாக்களில், பத்திரிகையாளர் சந்திப்புகளில், இன்ன பிற நிகழ்ச்சிகளில் பேசும்போதும், சிரிக்கும்போதும், நடக்கும்போதும்கூட அவரை மீறி வெளிப்படும் ஸ்டைல்களை எல்லாம் கூர்ந்து கவனித்தால் தெரியும். ஸ்டைல் என்பது ரஜினிக்கு பிறப்பிலேயே அமைந்த ஒரு கூடுதல் உறுப்பென்று! அல்லது ஸ்டைலானது தனக்கென ஒரு ரூபம் கொடுத்துக்கொண்டால் அதுவே `ரஜினி!'

தனக்குக் கிட்டிய‌ குறைந்தபட்ச வரவேற்போடு திருப்தியுறாமல் தன்னிடம் மக்கள் விரும்பிய ஸ்டைலையே, ஸ்டைல் ஸ்டைலாக ஒவ்வொரு படத்திலும் இறக்கினார். உதாரணமாக சிகரெட் பிடிக்கிற காட்சியை எடுத்தால் ஒவ்வொரு படத்திலும் அந்த சிகரெட்டுக்கான நெருப்பு எங்கிருந்து வருகிறது என்பது மாறிக்கொண்டே இருக்கும். அது ரசிகனிடமிருந்து ஒரு புன்னகையைப் பற்றவைக்கும். ஒரு ஹீரோ ஸ்டாராகி, சூப்பர் ஸ்டாராகும் தருணம் அது.

`பாட்ஷா' ரஜினி
`பாட்ஷா' ரஜினி

தமிழ் சினிமாவில் ரஜினிக்கு முன்பும் பின்பும் (நாயகிகளைத் தவிர்த்து) எவருடைய‌ கண்ணையும் ரசிகர்கள் இவ்வளவு ரசித்திருப்பார்களா எனத் தெரியவில்லை. காந்தக் கண்கள் என்று பெண்களை வர்ணிக்கலாம். ஓர் ஆணின் கண்களுக்கு அப்படி ஒரு வசீகரம் பெரும்பாலும் சாத்தியமில்லை. ஒரு நடிகனுக்கு முக பாவங்களில் கண்கள் முக்கியப் பங்கு வகிக்கும். அந்த வகையில் ஆக்ரோஷ வசனமோ, மனமுருகும் சென்டிமென்டோ காட்சியின் தீவிரத்தைக் கண்களில் கொண்டு வருவதில் ரஜினி விற்பன்னர். உதாரணமாக `அண்ணாமலை' படத்தில் நண்பன் அஷோக்கிடம் சவால்விடும் காட்சியில் ரஜினி தொடைதட்டிப் பேசிக்கொண்டிருக்கும் வசனங்கள் தாண்டி கண்கள் தனியாய் `இந்த மாஸ் காட்ட வேற எவன்டா இருக்கான்' எனத் தனி சவால்விடும்.

`மிஸ்டர் பாரத்' ரஜினி
`மிஸ்டர் பாரத்' ரஜினி

நடிப்பில் பெரிதாக சாதித்ததில்லை, வெரைட்டி காட்டியதில்லை என்னும் குற்றச்சாட்டுகள் பொதுவாக‌ அவர் மீது உண்டு. ஆனால், ஆக்‌ஷன் மசாலா ப‌டங்களில் நடிக்கும்போதுகூட அவர் முகபாவங்கள் அவ்வளவு நுட்பமாக இருக்கும். அவர் அப்பாவியாக நடிக்கும் காட்சிகளில் அவர் முகத்தில் அவ்வளவு வெகுளித்தனம் கொப்பளிக்கும். அடுத்த நொடியே அக்காட்சியில் அதிரடி வசனம் பேச வேண்டியிருந்தால் அதே முகம் அதற்கேற்ப பிசிறின்றி மாறும். திரைக்கதையில் டிரான்ஸ்ஃபர்மேஷ‌ன் என்ற‌ விஷ‌யம் இல்லாத படங்களில்கூட ரஜினியின் டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சிகளை இயல்பாக உணர முடியும். 80-களின் ரஜினி படங்களில் பல சண்டைக் காட்சிகளில் இதை ரசிக்கலாம்.

இவற்றையெல்லாம் மற்ற நடிகர்கள் எல்லோரும் செய்வதுபோல்  பத்தோடு பதினொன்றாக அவர் செய்வதில்லை என்பதால்தான் அவருக்கு இந்த வரவேற்பு. காலங்கள் தாண்டியும் நிலைத்து நிற்கிறார். ஒரு வசனம் ஆக்ரோஷ‌மாக இருக்கலாம், ஒரு சண்டை ஆவேசமாக இருக்கலாம், ரஜினியைப் பொறுத்தவரை பார்வையும் சிரிப்புமேகூட ஆக்ரோஷ‌மாக, ஆவேசமாக‌ இருக்கும். அதுவே வில்லனாக‌ நடித்திருந்தால் குரூரமாக இருக்கும். இதற்கு `எந்திரன்' ஓர் உதாரணம். அவ்வளவு போக்கிரித்தன உடல்மொழிகொண்ட‌ மனிதனால் ராகவேந்திரராக நடித்தபோது தெய்விக முகமும் காட்ட முடிந்தது. `முள்ளும் மலரும்' நடித்தபோது பேரன்பைப் பொழிய முடிந்தது. `ஆறிலிருந்து அறுபது வரை' நடித்தபோது சோகத்தை ஏந்த முடிந்தது. `தளபதி' படத்தில் நட்பின் விசுவாசத்தைக் காட்ட முடிந்தது.`கபாலி', `காலா' நடித்தபோது காதலில் தோய முடிந்தது. சினிமாவில் அவர் தேர்ந்தெடுத்த பாதையில் வெரைட்டி கேரக்டர்கள் அவருக்கு அதிகம் வாய்க்கவில்லை என்பது முற்றிலும் ஏற்கப்பட வேண்டிய உண்மை. என்றாலும் அவரால் மாறுபட்ட பாத்திரங்களேற்று நடிக்க முடியாது என்பது ஓர் அபத்த முன்முடிவு. தவிர, இன்னும் காலமிருக்கிறதே அதை எல்லாம் செய்து காட்ட.

`எந்திரன்' ரஜினி
`எந்திரன்' ரஜினி

ரஜினியின் சமூகப் பங்களிப்பு ஒன்று உண்டு. அதிகம் பேசப்படாதது என நினைக்கிறேன். பல நடுத்தர ஏழ்மைக் குடும்பக் குழந்தைகளுக்கு வறுமையை மறக்கடிக்கும், கவலை போக்கும், தன்னையும் ஒரு  ஹீரோவாக உணர வைக்கும் மேஜிக்கை ரஜினி நிகழ்த்தினார். அவ்வகையில் அவர் சத்தமின்றிச் செய்துகொண்டிருப்பது ஒரு மனோசிகிச்சை. இன்றும், இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கும் ரஜினியைப் பிடிக்கிறது. ரஜினி படம் பார்க்காமல் பால்யம் கடந்தவர்கள்தாம் பால்யம் தொலைத்தவர்கள். ஆறிலிருந்து அறுபது வரை என்பது ரஜினி ரசிகர்களின் வயதும்தான்.

44 ஆண்டுகளாக‌ ஒரு மனிதன் கொஞ்சமும் விட்டுத்தராமல் தன் இடத்தை தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இந்தத் தலைமுறை நடிகர்களுடனும் போட்டியில் இருக்கிறார்.

Rajinikanth's Cinema Journey
Rajinikanth's Cinema Journey
Vikatan Infographics

அந்தப் போட்டியும் அவர் வசமிருக்கும் அவருடைய நிரந்தர இடத்துக்குத்தானே தவிர அடுத்தவர்களின் இடத்துக்கு அவர் போட்டி போடுவதில்லை. போட்டியிடுமளவு மற்ற இடங்கள் இதைவிட உயர்ந்ததுமில்லை. அரசியலுக்கு வருவதாகக் கால் நூற்றாண்டாகப் போக்குக் காட்டியும் இன்றும் ரஜினி ஒரு வரி பேசினாலே அது பிரேக்கிங் நியூஸ்தான். அப்படி ரஜினி சமீபமாக `அதிசயம்', `அற்புதம்' என்ற சொற்களைப் பிரபலமாக்கிவிட்டிருக்கிறார்.

`காலா' ரஜினி
`காலா' ரஜினி

எல்லாவற்றையும் பேசிவிட்டு ரஜினியின் எளிமையைப் பேசாமால் போனால் எப்படி? ஒரு மனிதன் கற்பனை செய்ய முடியாத அளவு இமாலயச் சாதனைகளை நிகழ்த்தியவர், நடந்துகொள்ளும் விதம் எவ்வளவு எளிமையாக இருக்கிறது! கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாகத் தமிழ் சினிமாவில் ராஜாவாக இல்லையில்லை ராஜாதி ராஜாவாக‌ ஆட்சி நடத்தும் மனிதர், அதற்கான தலைக்கனம் துளிகூட இல்லாமல் இருக்கிறார். ஜீ தமிழ் பேட்டியில் தொகுப்பாளினி அர்ச்சனாவிடம் தன் கடந்தகால அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டபோது சின்னப்பிள்ளை மாதிரி சிரித்துக் கைதட்டி மகிழ்ந்ததைத் தமிழகமே வியந்து பார்த்தது. மனதின் குஷியை அப்படியே சிரிப்பில் வெளிப்படுத்துகிறவர்கள் குழந்தைகளுக்கு ஒப்பு. ரஜினிக்கு அப்படிப்பட்ட சிரிப்பு. சமீபத்தில் வெளியான `சும்மா கிழி' பாட்டின் இறுதியில் அவர் `தியேட்டர்ல சும்மா கிழிதான்' என்று சொல்லும்போதுகூட அத்தனை வெள்ளந்தியாக‌ வெளிப்பட்டார்.

அவரை அவமதிப்ப‌தாக எண்ணிக்கொண்டு தாக்கிப் பேசியவர்களைக்கூட புன்னகையுடன்தான் எதிர்கொண்டார். சக போட்டி நடிகரான கமல் மேல் அவர் கொண்டிருக்கும் நட்பும் மதிப்பும் பார்க்கும்போதெல்லாம் நாம் எவ்வளவு நேர்மையுடனும் திறந்த மனதுடனும் சக போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமாகவே தோன்றுகிறது. ரசிகர்கள் மீதான அன்பு, எதிர்ப்பவரையும் திருப்பி நாகரிகமில்லாமல் தாக்காத பண்பு என எல்லா நற்குணங்களும் அமைந்தவர்.

`பேட்ட' ரஜினி
`பேட்ட' ரஜினி

இதெல்லாம் நடிப்பெனக் கூறுகிறவர்கள் உண்டு. நிஜ வாழ்க்கையில் நடிப்பு சீக்கிரம் சாயம் வெளுத்துவிடும். ஏதோ ஒரு தருணத்தில் அகம்பாவம் வெளிப்படும். நட்பில் நடிப்பு பல்லிளிக்கும். அநாகரிக பேச்சு ஓர் உணர்ச்சிவசப்பட்ட தருணத்தில் வெடித்து வெளிவரும். ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஒருவர் எந்தச் சூழலிலும் தன்னிலை தவறாமல் இருக்கிறார் எனில், அது அவரது குண இயல்பாகத்தான் இருக்க முடியும். காலம் அவரை இதுமாதிரியான விஷயங்களுக்குக் கோபப்படுவதிலிருந்து தடுத்தாட்கொண்டு பக்குவப்படுத்தி இருக்கலாம். அல்லது மிகத் திறமையான நடிப்பாக இருக்க வேண்டும். ஆனால், அவர் அவ்வளவு நல்ல நடிகர் என்றும் இந்த வெறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!

`கொடுக்கிற காசுக்கு படம் முடிஞ்சு வரப்போ சந்தோஷமா வர்றோமா' என்பதுதான் சராசரி ரசிகனின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. கணிசமான முறை அதை நிறைவாகச் செய்தவர் ரஜினி. `தர்பாரி'லும் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார். வயது, அனுபவம் ஏற ஏற, பொறுப்பு, முதிர்ச்சி கூடக் கூட நாம் முக்கியத்துவம் தரும் விஷ‌யங்கள் மாறிக்கொண்டே இருக்கும். மிகச் சில விஷயங்கள்தான் இவற்றையெல்லாம் தாண்டியும் மாறிலியாக நிலைக்கும். இன்று தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு அப்படிப்பட்ட விஷ‌யங்களில் ஒன்றா ரஜினி நிச்சயம் இருப்பார்.

`பேட்ட' ரஜினி
`பேட்ட' ரஜினி

தமிழ் சினிமா ஒரு புத்தகம் எனில் அதன் அட்டைப்படம் ரஜினிதான். அட்டைப்படத்தைப் பார்த்து புத்தகத்தைத் தீர்மானிக்கக் கூடாதுதான். ஆனால் புத்தகத்துக்கான அடையாளம், அந்த அட்டைப்படம்தான். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா!