Published:Updated:

சர்வைவர்: `பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!' - விக்ராந்த் மனைவி மானசா

விக்ராந்த் - மானசா

பார்வையாளர்களில் ஒருவராகவும் விக்ராந்தின் மனைவியாகவும் பதற்றத்தோடும் பயத்தோடும் ஒவ்வொரு நாள் எபிசோடையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் மானசா.

சர்வைவர்: `பப்ளிக்கா இப்படி தர்மசங்கடப்படுத்துவார்னு எதிர்பார்க்கல!' - விக்ராந்த் மனைவி மானசா

பார்வையாளர்களில் ஒருவராகவும் விக்ராந்தின் மனைவியாகவும் பதற்றத்தோடும் பயத்தோடும் ஒவ்வொரு நாள் எபிசோடையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் மானசா.

Published:Updated:
விக்ராந்த் - மானசா

மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய `சர்வைவர்' ரியாலிட்டி ஷோ, ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாக ஆரம்பித்திருக்கிறது. சர்ச்சைகளுக்கும் பஞ்சாயத்துகளுக்கும் பெயர் போன `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்ற அளவுக்கு `சர்வைவர்' நிகழ்ச்சியிலும் பல சம்பவங்கள் காத்திருக்கின்றன என்பது நிகழ்ச்சி ஆரம்பமான அடுத்தடுத்த நாள்களிலேயே புரிந்துவிட்டது.

இரண்டாவது நாள் டாஸ்க்கிலேயே கடலில் நீச்சலடிக்க முடியாமல் திணறினார் நடிகர் விக்ராந்த். அடுத்த நாள் பார்வதிக்கும், சிருஷ்டி டாங்கேவுக்கும் வாக்குவாதம் வலுத்தது. புறம்பேசுதல் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் பார்வையாளர்களில் ஒருவராகவும் பங்கேற்பாளரின் மனைவியாகவும் பதற்றத்தோடும் பயத்தோடும் ஒவ்வொரு நாள் எபிசோடையும் பார்த்துக்கொண்டிருக்கிறார் மானசா. நடிகர் விக்ராந்த்தின் மனைவி. நிகழ்ச்சியின் முதல்நாளன்று மானசா எழுதிய கடிதத்தை விக்ராந்த் வாசிக்க, அதுவே அவர்களது காதலைச் சொன்னது.

சர்வைவர்
சர்வைவர்

மானசாவிடம் பேசினோம்.... பிரிவுத்துயரில் பசலை வராததுதான் மிச்சம். கணவரின் வருகைக்காக காதலோடும் கவலையோடும் காத்திருக்கிறார்.

``எங்களுக்குக் கல்யாணமாகி 12 வருஷங்களாச்சு. லைஃப்ல இதுவரைக்கும் இப்படியொரு பிரிவை நாங்க சந்திச்சதே இல்லை. விக்ராந்த் எந்த மூலைக்கு ஷூட்டிங் போனாலும் நானும் கூடவே போயிடுவேன். ஒருவேளை போக முடியலைன்னாலும் வீடியோ கால்ல தினமும் என்கிட்டயும் பசங்ககிட்டயும் பேசிடுவார். எந்த கம்யூனிகேஷனும் இல்லாத இந்தப் பிரிவும் இந்த அனுபவமும் ரொம்ப கொடுமையா இருக்கு.

ஆஸ்திரேலியன் சர்வைவர் ஷோ எங்க ஃபேமிலிக்கே ரொம்ப ஃபேவரைட். பல வருஷங்களா பார்த்திட்டிருக்கோம். `அதே ஷோ தமிழ்ல வருது.... நீங்க கலந்துக்கறீங்களா'ன்னு கேட்டதும் அவர் செம ஹேப்பியாயிட்டார். ஆனா அதையும் தாண்டி இப்படியொரு சாகச நிகழ்ச்சியில நிஜமாவே தாக்குப்பிடிச்சிட முடியுமாங்கிற பயமும் அவருக்கு இருந்தது. எங்களுக்கு ரெண்டு பசங்க. பெரியவன் யஷ்வந்துக்கு 11 வயசாகுது. சின்னவன் விவின் விநாயக்குக்கு 5 வயசு. விக்ராந்த்துக்கு பசங்கன்னா உயிர். அவங்ககிட்ட பேசாம, பார்க்காம எப்படி இருக்கப் போறார்னு ரொம்ப கவலையா இருந்தது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

லாக்டௌன் ஆரம்பிச்சதுலேருந்து கிட்டத்தட்ட ஒன்றரை வருஷமா ஃபேமிலியில எல்லாரும் ஒண்ணா இருந்து பழகிட்டோம். பசங்களுக்கு ஸ்கூல் இல்லை. அவருக்கு ஷூட்டிங் இல்லை. 24 மணி நேரமும் ஒண்ணா இருந்ததுல பிள்ளைங்களோட இன்னும் க்ளோஸ் ஆயிட்டார். எல்லாத்தையும் விட்டுட்டு ஒரு தீவுல போய் இருந்துட முடியுமாங்கிற தயக்கமும் இருந்தது. ஷோவுக்குப் போறதுனு முடிவானதும் `தினம் ஒரேஒரு தடவை போன்ல பேச மட்டும் பர்மிஷன் கொடுப்பீங்களா'னு தான் கேட்டார். ஆனா அதுக்கு வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டாங்க. வேற வழியில்லாம ஓகே சொன்னார்.

கிளம்பற அன்னிக்கு வீட்டுல மத்தவங்க எல்லாம் வாழ்த்தி அனுப்ப, நானும் என் பெரிய பையனும் மட்டும் `சீக்கிரமா வந்துடுங்கப்பா'ன்னு சொல்லி அனுப்பினோம். சின்னவன், `என்ன சொல்றீங்க... நீங்க சர்வைவர் டைட்டிலோட வாங்கப்பா'னு சொன்னான். எங்க மாமியார் வேற லெவல்... மகன் சர்வைவர் ஷோவுக்கு போறார்னு தெரிஞ்ச நாள்லேருந்து அவங்க கனவுல பாம்பு, தேளெல்லாம் வர ஆரம்பிச்சிருச்சாம்.. `ஐயையோ.... எம்புள்ளையைக் கொண்டுபோய் காட்டுல விடறீங்களே... அவனால இருக்க முடியாதே.... நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்தீங்களா'னு புலம்பிட்டே இருந்தாங்க.

குழந்தைகளுடன் விக்ராந்த் - மானசா
குழந்தைகளுடன் விக்ராந்த் - மானசா

விக்ராந்துக்கு பீச், காடு, பூச்சிகள் எதுவும் பிடிக்காது. அது மட்டுமில்லை.... அவர் எந்த வம்பு, தும்புக்கும் போக மாட்டார். பஞ்சாயத்துன்னா 100 கிலோ மீட்டர் தள்ளிப் போய் நிற்கற கேரக்டர். ரொம்ப அமைதியானவர். ஆனா `சர்வைவர்' ஷோ ஆரம்பிச்ச ரெண்டாவது நாளே அதுல பஞ்சாயத்து ஆரம்பிச்சிருச்சு... இவர் எப்படி சமாளிக்கப் போறாரோனு பயமா இருக்கு. `உங்களுக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் பேசுங்க. நைட் தூங்கறபோது நிம்மதியா ஃபீல் பண்ணணும்'னு மட்டும் சொல்லி அனுப்பியிருக்கேன். பஞ்சாயத்தே பண்ணத் தெரியாத மனுஷனை அங்கே பஞ்சாயத்து பண்ண வெச்சிடுவாங்களோன்னு பயமா இருக்கு....'' என்பவர், நிகழ்ச்சியின் இரண்டாவது நாளே விக்ராந்த், கடலில் நீச்சலடிக்க முடியாமல் திணறியது கண்டு பதறியிருக்கிறார்.

``விக்ராந்த் ஃபிசிக்கலி செம ஆக்டிவ்வான பர்சன். ஸ்போர்ட்ஸ்பர்சன். ஸோ... அந்த வகையில பிரச்னை இருக்காதுன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். ஆனா ரெண்டாவது நாள் கடல் டாஸ்க்குல அவர் திணறினபோது கவலையாயிடுச்சு. அவர் பயங்கர ஸ்ட்ராங் ஸ்விம்மர். ஆனா இதுவரைக்கும் கடல்ல நீச்சலடிச்சது கிடையாது. அவ்வளவு சீக்கிரம் எந்த விஷயத்துலயும் விட்டுக்கொடுக்கவும் மாட்டார். அப்படிப்பட்டவர் முதல்நாளே இப்படிப் பண்ணிட்டாரேன்னு வருத்தமா இருந்தது. எங்களைவிட அவர் இன்னும் ரொம்பவே வருத்தப்பட்டிருப்பார். ஏன்னா ஸ்போர்ட்ஸ்னு வந்துட்டா அவர் வெறித்தனமாயிடுவார்.

கடந்த நாலு வருஷங்களா அவர் ஃபிட்னெஸ்ல பயங்கர ஆர்வமா இருக்கார். லாக்டௌன்ல ஜிம்மெல்லாம் மூடினபோதுகூட வீட்டுக்குள்ளேயே ஓடறது, வொர்க் அவுட் பண்றதுன்னு இருந்தார். சாப்பாட்டு விஷயத்துலயும் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ஒரு டீஸ்பூன் நெய் எக்ஸ்ட்ரா ஊத்திட்டேன்னாகூட மூணு ரவுண்டு எக்ஸ்ட்ரா ஓடற அளவுக்கு ஸ்ட்ரிக்ட். `ஷோவுக்கு போனா இப்படியெல்லாம் பண்ணிட்டிருக்காதீங்க... எது கிடைக்குதோ சாப்பிடுங்க.. ஃபிட்னெஸ்ஸையெல்லாம் வந்து பார்த்துக்கலாம்'னு சொல்லிதான் அனுப்பியிருக்கேன். ஆனா நான் எதைப் பண்ணக்கூடாதுன்னு சொன்னேனோ, அதைப் பண்ணிட்டாரே....'' என வெட்கப்படுகிறார்.

விக்ராந்த் - மானசா
விக்ராந்த் - மானசா

அதுதான் அந்தக் கடிதம்...

``அவர் அன்னிக்கு அதிகாலை ஃபிளைட்டுல கிளம்பினார். முதல்நாள் ராத்திரி முழுக்க எனக்குத் தூக்கமே இல்லை. அழுதுடக்கூடாது, போகாதீங்கன்னு சொல்லக்கூடாது, அப்படியெல்லாம் செஞ்சிட்டா அவர் உடைஞ்சிடுவார்னு ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குற மாதிரி பில்டப் கொடுத்துட்டே இருந்தேன். என்னுடைய உணர்வுகளை எல்லாம் கொட்டி அந்த லெட்டரை எழுதி அவர்கிட்ட கொடுத்தேன். `இதை இப்போ படிக்காதீங்க... உங்ககிட்டருந்து செல்போனை வாங்கின பிறகு படிங்க'ன்னு சொல்லிதான் கொடுத்தேன். ஆனா மனுஷன் இப்படி பப்ளிக்கா படிச்சு என்னை தர்மசங்கடத்துக்கு ஆளாக்குவார்னு எதிர்பார்க்கவே இல்லை....'' மீண்டும் வெட்கப்படுபவருக்கு, கணவர் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்ற கனவெல்லாம் கிடையாதாம்.

பின்னே...?

``இதுவரைக்கும் விக்ராந்த் டெலிவிஷன் ஷோஸ் எதுவும் பண்ணதில்லை. அப்படிப் பண்ற வாய்ப்பு வந்தபோது அது அவருக்குப் பிடிச்ச ஷோவா இருக்கிறது நல்ல விஷயம்தானே.... எனக்கு அவர் டைட்டில் ஜெயிக்கணுங்கிற பேராசையெல்லாம் இல்லை. அவர் நல்லபடியா வந்தா போதும்னு இருக்கு. இந்த ஷோ மூலமாதான் இவர் வெளிய தெரியணும்னு இல்லை. ஏற்கெனவே மக்களுக்கு இவரைத் தெரியும். ஆனாலும் லாக்டௌனால கொஞ்ச நாளா மக்களோட தொடர்பே இல்லாமப் போயிடுச்சு. அந்த இடைவெளியை நிரப்பறதுக்கான விஷயமாதான் இதைப் பார்க்கறோம். ஒருவேளை இந்த ஷோ மூலமா பெரிய விஷயங்கள் நடந்தா சந்தோஷம். நடக்கலைன்னாலும் பிரச்னையில்லை. எதிர்பார்ப்பு இல்லாததால ஏமாற்றமும் இருக்காது.'' மனதாரப் பேசுகிறார் மானசா.