Published:Updated:

DilBechara Trailer: `அவெஞ்சர்ஸை தோற்கடித்த தில் பெச்சாரா!’ - சாதனை படைத்த சுஷாந்த் சிங் படம்

சுஷாந்த்
News
சுஷாந்த்

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசிப் படமான தில் பெச்சாராவின் டிரெய்லர் வெளியாகி பெரும் சாதனை படைத்துள்ளது.

மறைந்த பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘எம்.எஸ்.தோனி: அண்டோல்டு ஸ்டோரி’ படம் மூலம் பாலிவுட்டைத் தாண்டி பிற மாநிலங்களிலும் கவனம் பெற்றார். டி.வி சீரியலில் நடித்து அதன் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமான சுஷாந்த் மிகவும் குறுகிய காலத்தில் தனக்கென தனி இடம் பிடித்திருந்தார். இவர் நடித்த பி.கே, கேதர்நாத், கடந்த வருடம் வெளியான சிச்சோரே ஆகிய படங்கள் பெரும் ஹிட்டாகின.

சுஷாந்த்
சுஷாந்த்

திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகராக இருந்த சுஷாந்துக்கு அவரது சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் இருந்ததாகக் கூறபடுகிறது. இதனால் கடுமையான மன அழுத்தத்தில் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்த சுஷாந்த் கடந்த ஜூன் 14-ம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தன் வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சுஷாந்த் சிங்கின் மரணம் மொத்த பாலிவுட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது. அவர் இறந்த பிறகே இந்தியா முழுவதும் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டார். மேலும் பாலிவுட்டில் இருப்பதாகக் கூறப்படும் வாரிசு நடிகர்கள், சுயமாக உருவானவர்களுக்கு இடையே இருக்கும் வேறுபாடு தொடர்பாகப் பல்வேறு விமர்சனங்கள் இணையத்தில் உலாவந்தன. சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அது கொலை என்ற கருத்தும் ஒருபுறம் பேசப்பட்டு வருகிறது.

சுஷாந்த்
சுஷாந்த்

இந்நிலையில் முகேஷ் சாப்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத், நடித்த கடைசி படமான `தில் பெச்சாரா’ படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி அவரது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. சுஷாந்த் உயிரிழப்பதற்கு முன்னரே இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் அனைத்தும் முடிந்து ஓடிடியில் வெளியிடப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. சொன்னதைப் போலவே தற்போது `தில் பெச்சாரா' படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கேன்சரால் பாதிக்கப்பட்ட பெண்ணைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் சுஷாந்த் நடித்துள்ளார். `தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்காக அந்தப் படம் உருவாகியுள்ளது. `தில் பெச்சாரா' படத்தின் ட்ரைலர் வெளியான சில நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்டானது.

தொடர்ந்து கடந்த 24 மணிநேரத்தில் கோடிக்கணக்கானவர்கள் இந்த டிரெய்லரைப் பார்த்துள்ளனர். மேலும் யூடியூபில் 24 மணிநேரத்தில் 4.7 மில்லியன் லைக்குகளைப் பெற்ற முதல் இந்திய படமாக சுஷாந்த் சிங்கின் `தி பெச்சாரா’ படம் உருவாகியுள்ளது. இது உலகளவில் ஹிட் ஆன அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் மற்றும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் ஆகிய இரண்டு டிரெய்லர்களின் லைக்குகளைவிடவும் அதிகம்.

(குறிப்பு : ஃபாக்ஸ் ஸ்டார் ஹிந்தியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலின் லைக்குகள் மட்டும்)

மறைந்த சுஷாந்த் சிங்குக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக ‘தில் பெச்சாரா’ படம் வரும் 24-ம் தேதி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ளது. மேலும் சுஷாந்தின் அனைத்து ரசிகர்களும் படத்தை பார்க்கும் வகையில் ஹாட் ஸ்டாரில் சந்தாதாரர்களாக இல்லாதவர்களும் இலவசமாக படத்தை பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தில் பெச்சாரே படத்தின் ட்ரைலரில் வரும் ‘ நம் பிறப்பு அல்லது இறப்பு நேரத்தை நம்மால் தீர்மானிக்க முடியாது, ஆனால் வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என்பதை நாம் தீர்மானிக்க முடியும்’ என்ற வசனமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பலரும் இதை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.