Published:Updated:

"மரணமும் கிரேஸி மோகன் ஆசைப்படிதான் வந்திருக்கு!" - எஸ்.வி.சேகர்

அலாவுதின் ஹுசைன்

நாடக ஆசிரியர் , வசனகர்த்தா கிரேஸி மோகனுடனான நட்பு குறித்து நடிகர் எஸ்.வி. சேகர்

 எஸ்.வி. சேகர்
எஸ்.வி. சேகர்

நாடக ஆசிரியர் , வசனகர்த்தா கிரேஸி மோகன் பெயரிலிருக்கும் 'கிரேஸி' என்னும் அடைமொழிக்குக் காரணமாக இருந்தது அவர் நடிகர் எஸ்.வி.சேகருக்கு அவர் எழுதிய 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகம்தான். கிரேஸி மோகன் குறித்து எஸ்.வி .சேகர் நம்மிடம் பேசியதிலிருந்து...

கிரேஸி மோகன்
கிரேஸி மோகன்

"என்னோட நாடகங்களை ரெகுலரா எழுதுற கே.கே.ராமனுடைய எழுத்து எனக்கு சரியா செட் ஆகல. அப்போ அவர் 'உன்னோட ஓட்டத்துக்கு ஏத்த மாதிரி ஒரு ஆளைக் காட்டுறேன்'னு அவர் அறிமுகப்படுத்துன ஆளுதான், இன்ஜினியர் மோகன்.

நாங்க முதல்ல மீட் பண்ணும்போது, 'நீ என்ன பண்ணுவ'னு நான் கேட்டதற்கு, 'நான் நடிப்பேன்'னுதான் சொன்னார். 'நீ எழுது'னு சொன்னேன். நாங்க இரண்டு பேர் சேர்ந்த முதல் நாடகம், ' 'கிரேஸி தீவ்ஸ்' ஒரு வீட்டுக்குள்ள வர நான்கு திருடர்கள் அங்கேயே தங்கிட்டா எப்படியிருக்கும்னு எழுதுன நாடகம். அது செம ஹிட் ஆச்சு. அதுக்கப்புறம்தான் மோகன், 'கிரேஸி' மோகன் ஆனார்.

அந்த நாடகம் எழுதக் கேட்டு பலநாள் ஆச்சு. 'என்னயா மோகன் நாடகத்தை எப்போ எழுதித் தருவ'னு கேட்டதுக்கு, 'எழுதி பரண்மேல வெச்சதை எலி சாப்பிட்டிருக்கு'னு சொல்லிட்டுப் போயிட்டார். அவர் டைமிங்ல ஒரு வெகுளித்தனம் இருக்கும். அதுக்குப் பிறகு மூணு நாடகம் சேர்ந்து பண்னோம்.

அவர் தனியா போகணும்னு ஆசைப்பட்டார். நாங்க நண்பர்களா பிரிஞ்சோம். அவரோட நகைச்சுவையில கொஞ்சம்கூட விரசம் இருக்காது. அவர்கிட்ட இருக்க நல்ல குணமே, யாரையும் தப்பா பேசமாட்டார்.

கமல் ஹாசன், கே.பாலசந்தருடன் கிரேஸி மோகன்
கமல் ஹாசன், கே.பாலசந்தருடன் கிரேஸி மோகன்

கமல்கூட அவர் சேர்ந்து பண்ண எல்லாப் படமுமே காமெடியில செம ஹிட். அவரது டைமிங்கை உணர்ந்தவங்கதான், அதை சரியா கொண்டுவர முடியும். நான், பாண்டியராஜன் நடிச்ச 'கதாநாயகன்' படத்துக்கும் அவர்தான் எழுத்து. அது எங்களுக்கு ஹிட்டா அமைஞ்ச படம். அவர் காமெடி வசனங்கள் அவருக்கான ஒரு டிரேட் மார்க்குடன் வரும். 'இது கிரேஸி காமெடி'னு எளிதில் ரசிகர்களால கண்டுபிடிக்க முடியும்.

ஐ.சி.யு-ல அவரைப் பார்க்கும்போது, தூங்குற மாதிரி படுத்திருந்தார். காலையில காபி குடிக்கும்போது தம்பி மாதுகிட்ட 'யார் யார் வந்தாங்களோ, நேரம் முடிஞ்சா போயித்தான் ஆகணும்'னு சொன்னாராம். அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும்னு அவருக்குத் தெரியல.

எஸ்.வி.சேகர் , மாது பாலாஜியுடன் கிரேஸி மோகன்
எஸ்.வி.சேகர் , மாது பாலாஜியுடன் கிரேஸி மோகன்

கூட்டுக் குடும்பம் என்ற கொள்கையில் மிகத் தீவிரமாக இருந்தவர். முதியோர் இல்லங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது, என்கிட்ட இதை அடிக்கடி சொல்வார். கூட்டுக் குடும்பமாகத்தான் தன் குடும்பத்தை வழி நடத்தினார். ரொம்ப நிறைவான வாழ்க்கை அவருடையது. நேரம் முடிஞ்சுடுச்சு, போயிட்டார். 'டக்னு ஒரு ஹார்ட் அட்டாக்; உடனே போயிடணும்!'னு சொல்வார். மரணமும் அவர் ஆசைப்படியேதான் நடந்திருக்கு" என்கிறார், எஸ்.வி.சேகர்.

அலாவுதின் ஹுசைன்