Published:Updated:

இன்னொரு `பாகுபலி'யா இந்த `சைரா நரசிம்ம ரெட்டி?'

கார்த்தி
சைரா நரசிம்ம ரெட்டி
சைரா நரசிம்ம ரெட்டி

இந்திய சிப்பாய்க் கலகம் 1857-ல் தொடங்குவதற்கு முன்பே, தென்னிந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் பலர் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். அதில் ஒருவரான உய்யாலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கையைச் சொல்கிறது, சிரஞ்சீவி நடித்திருக்கும் 'சைரா நரசிம்ம ரெட்டி'.

வணிகம் செய்ய வந்த பிரிட்டிஷார், அதிக வட்டி, கொள்ளை அடித்தல், நில அபகரிப்பு போன்ற குரூரங்களில் ஈடுபட, சில அரசர்கள் கோபம் கொள்கிறார்கள். பல பாளையக்காரர்கள் எதுக்குடா வம்பு என மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்க, சைரா மட்டும் துணிந்து நிற்கிறார். உனக்கு ஏன் கட்ட வேண்டும் கிஸ்தி என்கிறார். ஆம், கிட்டத்தட்ட வீரபாண்டிய கட்டபொம்மனில் சிவாஜி பேசிய வசனம்தான். சிரஞ்சீவி ஸ்டைலுக்கு மாற்றியிருந்தாலும், சிவாஜி கண் முன் வரத் தவறவில்லை.

சைரா நரசிம்ம ரெட்டி
சைரா நரசிம்ம ரெட்டி

முன்பு காயாகி, பின்பு பழம் விடும் உற்ற கூட்டாளி அவுக்குராஜாக சுதீப். அக்கடதேசத்துக்கு சுதீப் என்றால், தமிழ் ராஜபாண்டியாக, இறுதிவரை உடன் நிற்கும் தோழனாக விஜய் சேதுபதி. கூடவே சுற்றும் இன்னொரு ரெட்டிகாராக ஜகபதி பாபு. கதையைச் சொல்லும் ராணி லட்சுமி பாயாக அனுஷ்கா. சைராவின் மானசீக குருவாக அமிதாப். தமிழில் முன்னுரை வாசிக்க கமல், மலையாளத்தில் மோகன்லால், தெலுங்கில் பவன் கல்யாண் என ஒட்டுமொத்த திரையுலகையும் ஆந்திராவுக்கு அழைத்து, இந்த இந்தியப் படத்தைத் தயாரித்திருக்கிறார் சிரஞ்சிவின் மகன் ராம் சரண்.

காதலியாகிப் பின் நாட்டியப் போராளியாகும் (ஆம், நாட்டியப் போராளி) லக்ஷ்மி வேடத்தில் தமன்னா. சூழ்நிலை திருமண ஜோடியாக நயன்தாரா. நயன்தாராவைவிடவும் தமன்னாவுக்கு சிறப்பானதொரு பாத்திர வார்ப்பு. படத்தில் வரும் அத்தனை நடிகர்களையும் தாண்டி, தனித்து அதகளப்படுத்தியிருக்கிறார் சிரஞ்சீவி. மனிதருக்கு 65 வயதாம். எந்தக் காட்சியிலும் அதற்கான முதிர்வு தெரியவில்லை. அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார். சண்டைக்காட்சிகள், கர்ஜிக்கும் வசனங்கள் என எல்லாவற்றிலும் மெகா ஸ்டார் மெகா மாஸ். வரலாற்றுத் திரைப்படம், சில இடங்களில் வரலாற்றுப் புனைவாகி, பல இடங்களில் வரலாற்று திரிப்புகளுடன்கூடிய அதீத ஃபேன்டஸி திரைப்படமாகிவிடுகிறது. அத்தனை ஃபேன்டஸிகளிலும் நம்மைச் சிரிக்கவிடாமல் ரசிக்கவைக்கிறது சிரஞ்சீவியின் சைரா.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
சைரா நரசிம்ம ரெட்டி

'சைர சைர சைராஹே' எனும் ஜூலியஸ் பாக்கியமின் பின்னணி இசை, படம் முடிந்து வீட்டுக்கு வரும் வரை காதுகளில் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கிறது. அமித் திரிவேதியின் இசையில் வரும் பாடல்களைக் கேட்க விடாமல் செய்கிறது, பாடலில் வரும் டம்மி தமிழ் வரிகள். லீ விட்டேக்கர், கிரெக் பவல், ராம் லக்ஷண் என ஒரு பெரிய குழுவே படத்தின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்திருக்கிறது. எல்லாமே பக்கா மாஸ்!

ரத்னவேலுவின் அனுபவமிக்க ஒளிப்பதிவு, ஒரு வரலாற்றை நம் கண்முன் காட்டுகிறது. சில காட்சிகளில் தெரியும் ஓவர் கிராஃபிக்ஸைக் குறைத்திருக்கலாம். ஸ்ரீகர் பிரசாத் இன்னும் சிரத்தையுடன் எடிட் செய்திருக்கலாம். முதல் 30 நிமிடங்களுக்கு யாராவது கதையை நகர்த்துங்களேன் எனத் தேவுடு காக்க வேண்டியதிருக்கிறது. சினிமா என்பதால், வரலாற்றுத் திரிப்புகள் இதிலிருக்கும் எனும் டிஸ்கிளைமருடன்தான் படத்தை ஆரம்பிக்கிறார்கள்.

சைரா நரசிம்ம ரெட்டி
சைரா நரசிம்ம ரெட்டி
Vikatan

வேலுநாச்சியாரின் படையிலிருந்து இந்தியாவின் முதல் மனித வெடிகுண்டாகி, பிரிட்டிஷாரைக் கொன்று குவித்த குயிலியின் வரலாற்றை இந்தப் படத்திலும் வேறு ஒரு நபருக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியான கங்கனா ரனாவத்தின் மணிகர்ணிகாவிலும் குயிலியின் கதை எடுத்தாளப்பட்டது. இப்படி பக்கத்து மாநில மெகா பட்ஜெட் வரலாறுகளில் எல்லாம் நம் மண்ணின் கதை அவ்வூர் ஹீரோயிஸ பிம்பமாகிறது. ஆனால், தமிழில் கடைசியாய் ஒரு வரலாற்றுத் திரைப்படம் வெளியாகிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. மருதநாயக டிரெய்லரைத்தான் கடைசி வரை தமிழன் பார்க்க வேண்டும் போல.

ராணி லட்சுமி பாயிடம் இருக்கும் நூறு வீரர்களும் அஞ்சி நடுங்கி பிரிட்டிஷாரிடம் சரணடைய முற்பட, Bed Time ஸ்டோரியாக துப்பாக்கி முனையில் இந்தக் கதையை அவர்களுக்கு நரம்பு புடைக்கச் சொல்கிறார், லட்சுமிபாயான அனுஷ்கா. கழுத்தில் கத்தி இருக்கும்போதே இவ்வளவு நீளமான கதைகளை எல்லாம் சொல்வதால்தான், ஆங்கிலேயர்கள் நம்மை எளிதாக வென்று 400 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர் என்பதுதான் நமக்கு இதில் கிடைத்திருக்கும் பாடம்.

Tamannah
Tamannah
சைரா நரசிம்ம ரெட்டி
“கமல், ரஜினிக்கு ஒரு வேண்டுகோள்... தயவுசெய்து அரசியல் வேண்டாம்” - சிரஞ்சீவி ஓப்பன் டாக்!

இத்தகைய களேபரங்களை எல்லாம் கடந்தும் பல இடங்களில் கெத்தாக மனதில் அமர்கிறது சிரஞ்சீவியின் சைரா. சைராவைக் கொன்று, அதன்பின்னர் 30 ஆண்டுகள் அவரது தலையை கோட்டையில் தொங்கவிட்டது பிரிட்டிஷ் அரசு. மருதநாயகம், சைரா நரசிம்ம ரெட்டி போன்றவர்களைக் கண்டு அஞ்சியது பிரிட்டிஷ் அரசாங்கம். படத்தின் End Creditsல் நாட்டுக்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்களைக் காட்டியதும் ஸ்மார்ட் சாய்ஸ். சிரஞ்சீவியின் மாஸ் வசனங்களுக்காகவும் , கெத்தான மேக்கிங்கிற்காகவும் தாராளமாய் சைராவை வணங்கலாம். 'பாகுபலி'யில் இருந்த பிரமாண்டம் இதில் இருக்கிறது. ஆனால், அந்த எமோஷனல் கனெக்ட் மட்டும் மிஸ்ஸிங்!

அடுத்த கட்டுரைக்கு