Published:Updated:

டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு - சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு! பின்னணி என்ன?

டி.ராஜேந்தர்

கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் டி.ஆருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாள்கள் இருந்து வந்திருக்கிறார்.

Published:Updated:

டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவு - சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்லும் சிம்பு! பின்னணி என்ன?

கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் டி.ஆருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாள்கள் இருந்து வந்திருக்கிறார்.

டி.ராஜேந்தர்
கோடம்பாக்கத்தில் நேற்று திடீர் பரபரப்பு. சிலம்பரசனின் தந்தையும், இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார் என்றும், விரைவில் அமெரிக்காவிற்கோ சிங்கப்பூருக்கோ மேற்சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுவார் என்றும் தகவல்கள் பரபரத்தன. இதன் உண்மை நிலவரம் குறித்து தற்போது சிம்புவே அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

சமீபத்தில்தான் டி.ராஜேந்தர் இசை ஆல்பம் ஒன்றிற்காக இலங்கைத் தமிழர்களின் அவலநிலையைக் கண்ணீர் மல்கப் பாடலாகப் பாடியிருந்தார். அந்தச் செய்தி மறந்து போவதற்குள் டி.ஆர். மருத்துவமனையில் திடீர் அனுமதி என்ற செய்தி பலரையும் திகைக்க வைத்தது. இது பற்றி டி.ஆரின் வட்டாரத்தில் விசாரித்தோம்.

சிம்பு
சிம்பு

"டி.ராஜேந்தர் மகன், மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது. சிம்பிற்குப் பல ஆண்டுகளாகப் பெண் பார்த்து வருகிறார்கள் என்பதும் அறிந்ததே! இந்நிலையில் டி.ஆர். தனது பேரன் பேத்திகளை இந்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளிநாடு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தார். அதை சிம்புவிடமும் சொல்ல, அவர் 'ஃபேமிலி ட்ரிப்பாகவே போய் வருவோம்' எனச் சொன்னதுடன் அமெரிக்கா டூருக்கும் ஏற்பாடுகள் செய்துவந்தார். இந்த நிலையில்தான் கடந்த பத்து நாள்களுக்கு முன்னர் டி.ஆருக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு அங்கே தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாள்கள் இருந்து வந்திருக்கிறார்.

மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட சில நாள்களிலேயே டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டிற்கும் கிளம்பச் சொல்லிவிட்டார்கள். ஆனால், தொடர்ந்து ஒரு வாரம் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவேண்டும், பூரண ஓய்வு வேண்டும் என மருத்துவர்கள் அட்வைஸ் செய்ததால் அப்பாவைச் சிம்பு மருத்துவமனையிலேயே தங்கியிருந்து உடல்நிலையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டார். 'நீங்க இங்கிருந்தால்தான் மருந்து மாத்திரைகளை நேரம் தவறாம மிஸ் பண்ணாம சாப்பிடுவீங்க' எனச் சொல்லி, மருத்துவமனையிலேயே அப்பாவை ஓய்வு எடுக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார். டி.ஆரும் குடும்பத்தினரின் அன்பிற்காகத் தற்போது மருத்துவமனையிலேயே தங்கியிருக்கிறார்.

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

டி.ஆர். அடிக்கடி பிரஸ்மீட் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தாலும் அந்த பிரஸ் மீட் நடந்த அடுத்த கணத்திலிருந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுவதைக்கூடத் தவிர்த்துவிடுவார். இதனால்தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவருடன் நட்பு வட்டத்தில் உள்ள மீடியாவினருக்கே உடனடியாக தெரியாமல் போனது என்கிறார்கள்."

இவ்வாறு அவரது நெருங்கிய வட்டாரத்தினர் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.

சிம்பு அறிக்கை
சிம்பு அறிக்கை

இந்நிலையில் சிலம்பரசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர், "எனது தந்தைக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுய நினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து, உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும், அனைவரின் அன்புக்கும் நன்றி" என்று தெரிவித்துள்ளார்.