Published:Updated:

"சிம்பு படம்னாலே பிரச்னை பண்றாங்க. இது கட்டப்பஞ்சாயத்துக் கூடாரம்!"- யாரைச் சொல்கிறார் டி.ராஜேந்தர்?

''இவங்க நடத்திட்டு இருக்கறது கட்டப் பஞ்சாயத்துக் கூடாரம். அதற்கு என்னால தரமுடியும் கட்டுக்கட்டா ஆதாரம். இவங்க என்ன மிரட்டி கொள்ளையடிக்கற கோஷ்டியா? மடக்கி பணம் பறிக்கக்கூடிய மாஃபியாவா?'' என ஆவேசமாகப் பேசியிருக்கிறார் டி.ராஜேந்தர்.

நடிகர் சிலம்பரசனின் பெற்றோர்களான டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் இருவரும் இன்று சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவகத்திற்கு வந்தனர். அங்கே புகார் கொடுத்துவிட்டு, செய்தியாளர்களையும் சந்தித்தனர். சிம்புவின் 'மாநாடு' திரைப்படம் தீபாவளி ரேசிலிருந்து தள்ளி வைக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு வந்து சில நாள்கள் கூட ஆகாத நிலையில், டி.ஆரின் இந்தப் பரபரப்பு பேச்சு கோலிவுட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

"சிலம்பரசன், 'அன்பானவன் அசராதன் அடங்காதவன்' என்ற படத்துல நடிச்சார். அவருக்கு சம்பள பாக்கி தரல. நடிகர் சங்கத்துல புகார் கொடுத்தார். சம்பளத்தையும் வாங்கிக்கல. சம்பளத்தையும் விட்டுக்கொடுத்து படத்தை ரிலீஸ் பண்ணிட்டாங்க. படத்தை ஒரு விநியோகஸ்தரா டிஸ்ட்ரிபியூஷனுக்குக் கொடுத்தார். இப்படி டிஸ்ட்ரிபியூஷன் கொடுப்பது அவரோட விருப்பம். படத்தினால் நஷ்டம் வந்தால், அது விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் உள்ள பிரச்னை. ஒரு படம் நஷ்டப்பட்டால் நடிகரை எப்படிச் சம்பந்தப்படுத்த முடியும்? லாபம் வந்தா அதே நடிகரைக் கேட்பீங்களா?

சிலம்பரசன், கல்யாணி - மாநாடு படத்தில்...
சிலம்பரசன், கல்யாணி - மாநாடு படத்தில்...

சிலம்பரசனுக்கு மட்டும் இந்தப் பிரச்னை இல்ல. பல நடிகர்களுக்கும் இந்தப் பிரச்னை இருக்கு. வெளியே சொல்ல முடியாமல் இருக்குறாங்க. அவங்களையும் அச்சுறுத்திட்டே இருக்காங்க. இவங்க நடத்திட்டு இருக்கறது கட்டப் பஞ்சாயத்துக் கூடாரம். அதற்கு என்னால தரமுடியும் கட்டுக்கட்டா ஆதாரம். ஒரு படம் ரிலீஸ் ஆகணும்னா, கழுத்துல கத்தி வைக்குறாங்க. அத்தனை கோடி பறிமுதல் பண்றாங்க. இவங்க என்ன மிரட்டி கொள்ளையடிக்கற கோஷ்டியா? மடக்கி பணம் பறிக்கக்கூடிய மாஃபியாவா? அந்த அளவிற்கு விநியோகஸ்தர்கள் பண்றாங்க. வழக்கு ஏற்கெனவே நீதிமன்றத்துல இருக்கும்போது, இவங்க அதுக்கு கட்டப்பஞ்சாயத்து நடத்துறக்கு ரைட்ஸே கிடையாது'' எனக் கோபம் கொப்பளிக்க பேசினார் டி.ராஜேந்தர்.

இந்தப் பிரச்னைக் குறித்து மேலும் விரிவாகப் பேசினார் உஷா ராஜேந்தர்.

"தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்'னு ஒரு படம் எடுத்துருக்கார். அதை விநியோகம் செய்த வகையில், விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கு. அந்த நஷ்டத்தை மைக்கேல் ராயப்பன்தான் தரவேண்டும். ஆனால், அதில் நடித்த சிலம்பரசன்தான் தரவேண்டுமென்று கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்கள். சிலம்பரசன் படம் ஆரம்பிக்கும் போதும் சரி, அதை முடிக்கும்போதும் சரி மிகவும் பிரச்னை தர்றாங்க... தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சிம்புவின் ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும் பல கோடிகளை பெற்றுக் கொண்ட பின்புதான் படத்துல நடிக்க அனுமதிக்கிறாங்க.

டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்
டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர்

அதைப் போல படம் வெளியிடுற போது 'ரெட்' என்கிற பெயரில் பல கோடிதரவேண்டும் என்று எங்களை மிரட்டுகிறாங்க. தமிழ்நாட்டுல சுதந்திரமா வாழ முடியல. தொழிலை மிரட்டுறாங்க. இப்போது புதிதாக அருள்பதி என்பவர் நடப்பு விநியோகஸ்தர் சங்கம் என்ற சங்கத்தை வைத்து, அதில் பல விநியோகஸ்தர்களை வைத்துக் கொண்டு 'சிலம்பரசனின் எந்தப் படத்தையும் நாங்க ரிலீஸ் பண்ண விடமாட்டோம்'னு கட்டப்பஞ்சாயத்து பண்றாங்க. தியேட்டர்ல படத்தை ரிலீஸ் பண்ண விடமாடோம்னு சொல்றாங்க.

இதுக்கு பக்கபலமா எங்களுக்கு அரசாங்கம் இருக்கிறது என்கிற ஒரு மாயையும் உருவாக்கி, இந்த மாதிரியான காரியங்கள்ல ஈடுபடுறாங்க. இது மாயையே தவிர, இன்றைய அரசாங்கம் நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கு. அதற்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இவர்களோட செயல்பாடுகள் இருக்கு. இதை முதல்வரின் பார்வைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்ல அவருடைய வீட்டு வாசலிலும் உண்ணாவிரதம் இருப்பதற்குக் கூட நான் தயாரா இருக்கிறேன். கமிஷன் அலுவலகத்திலும் புகார் கொடுத்துருக்கோம். அது நல்லபடியா நடக்கும்னு நம்புறோம்" என்றார் உஷா ராஜேந்தர்.

இந்தப் பிரச்னை ஒரு பக்கம் பரபரத்தாலும், சிலம்பரசன் தற்போது மும்பையில் 'வெந்து தணியும் காடு' படப்பிடிப்பில் மும்முரமாகக் கலந்து கொண்டிருக்கிறார்.

இந்தப் பேட்டியை விரிவாக வீடியோ வடிவில் காண...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு