Published:Updated:

`அப்போ அள்ளிக் கொடுத்தேன்; இப்போ அமைதியா இருக்கேன்!' - பிறந்தநாள் நினைவுகள் பகிரும் டி.ஆர்

கடந்த ஜூலை 3-ம் தேதி சிம்புவுக்குப் பிறந்தநாள், அக்டோபர் 3-ம் தேதி டி.ராஜேந்தருக்குப் பிறந்தநாள் என்பதால் அவருக்குப் போனில் பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொன்னோம். அப்போது அவர் கடந்த கால பிறந்தநாள் குறித்துப் பேச ஆரம்பித்தார்.

TR With Rajini
TR With Rajini

``நான் இயக்கி நடித்த 'மைதிலி என்னை காதலி', 'என் தங்கை கல்யாணி' படங்கள் வெளிவந்தபோது எல்லாம் நான் புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்தேன். அந்தத் தருணங்களில் எல்லாம் 100 பெண்களுக்குத் தங்கத்தில் தாலி, 10,000 குடும்பங்களுக்கு தலா ஒரு பொன்னி அரிசி மூட்டை, ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் என்று அள்ளி அள்ளிக் கொடுத்தேன். தமிழ்நாட்டில் 1987-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்தபோது கோடம்பாக்கத்தில் சினிமாவில் இருக்கும் தி.மு.க புள்ளிகளே தங்கள் படங்களின் வெள்ளிவிழாவுக்கு அழைப்பதற்கு பயந்துகொண்டிருந்தனர்.

TR
TR

அப்போது நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தேன். 1987-ம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்ட `என் தாயின் சபதம்' வெற்றி விழவுக்குத் துணிச்சலாக கலைஞரை அழைத்தேன். சென்னை வடபழனியில் உள்ள விஜய வாகினி ஸ்டூடியோவில் பிரமாண்ட சினிமா செட் போன்று மேடை அமைத்தேன்.

அப்போது கலைஞர் வயது 66, என் வயது 33 அதனால் அந்தப் பிறந்தநாள் விழா மேடையில் 'என் தம்பி டி. ராஜேந்தர் என்னில் பாதி' என்று உச்சிமோந்து பாராட்டியது என் ஞாபகத்தில் மலர்கிறது. அதன் பின்னர், தனியாக அரசியல் கட்சி ஆரம்பித்தபோது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் அண்ணா சமாதி சென்று அஞ்சலி செலுத்தி வந்தேன்.

Vikatan

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு 'ரயில் பயணங்களில்' வெளிவந்தது. அந்தப் படத்தில் `அமைதிக்குப் பெயர்தான் சாந்தி' என்று ஒரு பாட்டு எழுதியிருந்தேன், அதுபோலவே இப்போது எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்து வருகிறேன்'' என்று தனது பிறந்தநாள் நிகழ்வுகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.