Published:Updated:

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

டாணாக்காரன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
டாணாக்காரன் படத்தில்...

படத்தின் முதல்பாதி முழுவதும் கவனம் சிதறாத கச்சிதமான கதை சொல்லல்.

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல்பாதி முழுவதும் கவனம் சிதறாத கச்சிதமான கதை சொல்லல்.

Published:Updated:
டாணாக்காரன் படத்தில்...
பிரீமியம் ஸ்டோரி
டாணாக்காரன் படத்தில்...

தூத்துக்குடி முதல் சாத்தான்குளம் வரை காவல்துறை ஏன் வன்முறையும் ஒடுக்குமுறையும் கொண்ட நிறுவனமாக இருக்கிறது? ஒரு சாமானிய மனிதரிடம் காவல்துறை பேசும் மொழியில் ஏன் அவ்வளவு அதிகாரம்? இவை எல்லாவற்றுக்குமான அடிப்படைக் காரணத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சியிருக்கும் படம் ‘டாணாக்காரன்.’

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

காலனிய காலத்திலிருந்து தற்போது வரை காவல்துறையில் மாறாத ஒன்று கவாத்து பயிற்சி. 1998-ல் விக்ரம்பிரபு உள்ளிட்ட 350 பேர் காவல்துறைப் பணிக்குத் தேர்வாகிப் பயிற்சிக்கு வருகிறார்கள். 1982லேயே பணிக்குத் தேர்வாகி ஆட்சிக்கலைப்பால் அலைக்கழிக்கப்பட்டு நீதிமன்றத்தின் படியேறி நியமன ஆணை பெற்று, அதே பயிற்சிக்கு நடுத்தர வயதில் ஒரு சிறுகுழுவும் வருகிறது. காவல்துறைப் பயிற்சி, அணிகள் பிரித்தல், இறுதியில் நடைபெறும் போட்டிக்கான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு அடியிலிருக்கும் அதிகார மனோபாவம், அதிகாரிகளின் உத்தரவுக்குக் கீழ்ப்படிதல் என்ற பெயரில் அடிமைகளை வார்த்தெடுக்கும் இறுக்கமான நடைமுறை, எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை முற்றாக ஒழித்துக்கட்டும் மூர்க்கம், காவல்துறைப் பயிற்சிக்கு வரும் இளைஞர்களிடமே மாமூல் வசூலிக்கும் ஊழல் என்று முறைகேடுகளும் வன்முறையும் எப்படி காவலர்களிடம் தொடக்கத்திலேயே விதைக்கப் படுகிறது என்பதை அழுத்தமும் அதிர்ச்சியுமாகச் சொல்லும் கதை; இதுவரை திரையில் சொல்லப்படாத கதை.

படத்தின் முதல்பாதி முழுவதும் கதை நிகழும் களம் பயிற்சி மைதானம்தான். அங்கே கேட்கும் அதிகாரத்தின் குரல்கள், முணுமுணுப்புகளாய், பொருமல்களாய், ஆதங்கங்களாய், சின்னதாய் உரத்து ஒலிக்கும் ரௌத்திரமாய் எதிர்ப்பின் குரல்கள் என இரு வெவ்வேறு தரப்புகளைச் சுற்றியே கதையை நகர்த்தியிருக்கும் தைரியம் பாராட்டுக்குரியது. ஒரு முழுநீள சினிமாவில் முதல்பாதி முழுவதும் ஒரே லொகேஷனில் எடுக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. இதுவரை காவல்துறை பற்றிய சினிமா என்றால் பஞ்ச் டயலாக்குகளுடன் என்கவுண்டர்களையும் அடி உதைகளையும் நியாயப்படுத்தும் சினிமாக்களும் காவல்துறையின் ஒடுக்குமுறையைச் சித்திரிக்கும் சினிமாக்களும் மட்டுமே வந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு காவலரும் ஊழலும் வன்முறையும் கொண்டு எப்படி உருவாக்கப்படுகிறார் என்பதை முகத்தில் அறைந்து சொல்லும் சினிமாவைத் தந்ததற்காக அறிமுக இயக்குநர் தமிழுக்குப் பாராட்டுகள்.

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்
டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது மதிப்புக்குரிய மைல்கல். தன் தந்தைக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துக் கலங்கும் கணம், கடுமையான தண்டனைகள் தரப்படும்போது வலியுடன் அதை எதிர்கொண்டு முடிக்கும் விதம், ‘சித்தப்பு’க்கு நேரும் நிலை கண்டு உடையும் நொடி என்று தொடக்கத்திலிருந்து இறுதிவரை அறிவழகனாகவே வாழ்ந்திருக்கிறார். ‘மறுபேச்சு பேசாதே’ என்பதைத் தாரக மந்திரமாகக் கற்பிக்கும் இறுக் கமான காவல் அதிகாரியாக லால். சின்னச் சிரிப்புகூட இல்லாமல் எப்போதும் இறுக்கமான முகம், விறைப்பான உடல்மொழி என அச்சத்தை விதைக்கும் அதிகாரியாக மிரட்டியிருக்கிறார். இறுதிக் காட்சியில் தனக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் தன் திறமைக்குக் கிடைத்தது இல்லை என்பதைத் தெரிந்துகொண்டே அதைப் பெறும்போது காட்டும் உணர்ச்சி அட்டகாசம்.

எம்.எஸ்.பாஸ்கருக்கு தன் ஒட்டுமொத்த நடிப்பையும் வழங்கும் பாத்திரம். அதிகாரக் களத்தில் ஒவ்வொரு கணமும் என்ன நடக்கும் என்பதைத் தெரிந்துகொண்ட அனுபவம், அதன் காரணமாக ஏற்படும் விரக்தி, துடிப்பான இளைஞர்களிடம் காட்டும் பரிவு என்று செல்லக் கண்ணுவின் கனத்தை நம்மிடம் அப்படியே இறக்கிவைக்கிறார். விறைப்புடன் விக்ரம் பிரபு வந்து நிற்கும்போது ஆழமான பெருமூச்சு விடும் ஒரு காட்சி போதும், எம்.எஸ்.பாஸ்கரின் திறமையைச் சொல்ல.

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்
டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

சுற்றிலும் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் மத்தியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை இறுகப்பற்றிக்கொண்டு அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் ‘சித்தப்பு’ பிரகதீஸ்வரன். “போயிடுங்க போயிடுங்க” என்று அதிகாரிகளுடன் புதிதாகப் பயிற்சிக்கு வந்திருக்கும் இளைஞர்களும் துரத்தும்போது “நாங்க எங்கேடா போகணும், எதுக்குப் போகணும்?” என்று வெடித்து “இந்த வேலைக்கு வர்றதுக்கு முன்னாடி கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட்ல முறுக்கு வித்துக்கிட்டிருந்தேன்” என்று வெடித்து நம்மையும் கலங்கடித்துவிடுகிறார். கொடுமையான தண்டனையின் காரணமாக அவர் மைதானத்தில் மயங்கிவிழும்போது பார்வையாளர்களும் பதறிப்போகிறார்கள். சில காட்சிகளே வந்தாலும் புரட்சிகர உணர்வும் நேர்மைமீதான காதலும் கொண்ட மதிப்புமிகு அதிகாரி மதியாய் போஸ் வெங்கட் பொருத்தம். ‘`அதிகாரி கட்டடம் வெயிலில் நிக்குது பாரு, அதைத் தள்ளிவைங்கடா” என்று குறும்பாய் அதட்டும் அஞ்சலி நாயர் கவனம் ஈர்க்கிறார். பாவெல் நவகீதன், கார்த்திக், மதுசூதன ராவ், லிவிங்ஸ்டன் என்று எல்லா நடிகர்களும் அளவெடுத்துத் தைத்த காக்கிச்சட்டைகளாய் அழகாய்ப் பொருந்துகிறார்கள்.

“முரட்டு வெள்ளைக்காரனுக்கும் முட்டாள் அரசியல்வாதிக்கும் பிறந்த குழந்தைடா இந்த சிஸ்டம்” முதல், மாமரத்துக்குக் கீழ் பாதுகாவலர் நிற்கும் அர்த்தமற்ற மரபை விளக்கும் காட்சி வரை பல வசனங்கள் முக்கியமானவை. மாதேஷ் மாணிக்கத்தின் கேமரா மைதானத்தைச் சுற்றி ஓடி, அடர்ந்த இருட்டுக்குள் துழாவி, மேலிருந்து ஒட்டுமொத்த பரேடையும் விவரித்துத் தானும் கதையின் ஓர் அங்கமாய் மாறியிருக்கிறது. தொடக்கம் முதல் இறுதிவரை பதற்றம், அச்சம், விறுவிறுப்பு, உருக்கம் என எல்லா உணர்ச்சிகளையும் இசையாய் வடித்திருக்கிறார் ஜிப்ரான். ஒரே ஒரு மைதானத்தைச் சுற்றிலும் நடக்கும் முதல்பாதிக் கதையைக் கொஞ்சமும் அலுப்பில்லாமல் கொடுக்க உதவியிருக்கிறது பிலோமின் ராஜின் படத்தொகுப்பு.

டாணாக்காரன் - சினிமா விமர்சனம்

படத்தின் முதல்பாதி முழுவதும் கவனம் சிதறாத கச்சிதமான கதை சொல்லல். ஆனால் இரண்டாம்பாதியோ வழக்கமான சினிமா பாணியில் நாயகன் - வில்லன் போட்டி, வெற்றிபெற நாயகனின் உத்தி, சவால், சபதம் என்று தடம் மாறியிருப்பதே பலவீனம்.

சின்னச்சின்னக் குறைகளைத் தாண்டி தமிழ் சினிமாவில் புதிய வாசலைத் திறந்திருக்கும் இந்த டாணாக்காரனுக்கு ஒரு சந்தோஷ சல்யூட் வைக்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism