Published:Updated:

`புதுப்பேட்டை', `விருமாண்டி' படப் புகழ் நடிகர் பாலா சிங் காலமானார்!

தமிழ்த் திரையுலகில் தன் குணச்சித்திர நடிப்பின் மூலம் தனக்கென தனி இடம் பிடித்த நடிகர் பாலா சிங் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.

பாலா சிங்
பாலா சிங்

மேடை நாடகக் கலைஞராகத் தன் வாழ்வைத் தொடங்கி. பின்னர் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகராக உயர்ந்தவர் பாலா சிங். 1952-ம் ஆண்டு கன்னியாகுமரியில் பிறந்த இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத ஆர்வத்தால் தன் கல்லூரிக் காலத்திலேயே மேடை ஏறி நடிக்கத் தொடங்கினார். பின்னர், நடிப்புத் தாகம் இன்னும் அதிகமாக சென்னைக்கு ரயில் ஏறிய இவர், தேசிய நாடக பள்ளியில் சேர்ந்து முறையான நடிப்பைக் கற்றுக்கொண்டார். தொடர்ந்து பல்வேறு மேடை நாடகங்களில் நடிப்பதையே தன் தொழிலாக மாற்றிக்கொண்டார்.

பாலா சிங்
பாலா சிங்

1983-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மலைமுகலிலே தெய்வம் (malamukalile daivam) என்ற படம்தான் பாலா சிங்குக்கு சினிமாவை அறிமுகப்படுத்தியது. அதில் சிறிய வேடத்தில் நடித்திருந்த அவர், பின்னர் தொடர்ந்து சில மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் சில காலம் யூகி சேதுவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அப்போதுதான் நடிகர் நாசரின் நட்பு கிடைத்துள்ளது. நாசர் இயக்கத்தில் வெளியான அவதாரம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் கால்பதித்தார். இதைத் தொடர்ந்து உல்லாசம், இந்தியன், ராசி போன்ற பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் வில்லன் வேடத்திலும் நடித்து பிரபலபலமானார்.

"பல வருடம் கழிச்சுப் பார்த்தேன்; அந்த செல்வராகவனா இவர்னு தோணுச்சு!" - பாலா சிங்

`புதுப்பேட்டை', `விருமாண்டி' போன்ற படங்கள் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார் பாலா சிங். சமீபத்தில் இவர் நடித்திருந்த என்.ஜி.கே, மகாமுனி போன்ற படங்களிலும் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. இந்நிலையில் 67 வயதான பாலா சிங் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் காரணாமாக வடபழனி, விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

என்.ஜி.கே பட காட்சி
என்.ஜி.கே பட காட்சி

நேற்று அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை அடுத்து அவருக்குத் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் அவர் இன்று காலை சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தார். இவரது திடீர் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா சிங்கின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.