சினிமா
பேட்டிகள்
Published:Updated:

“கதை தெரியாமல் கதை சொல்லணும்!”

எடிட்டர் சிவா சரவணன்
பிரீமியம் ஸ்டோரி
News
எடிட்டர் சிவா சரவணன்

எடிட்டரோட வேலை, அந்தக் கதையை எவ்வளவு சுருக்கமா, வலிமையாச் சொல்லணும் என்பதுதான். டைரக்டர் நிறைய ஷாட்ஸ் எடுத்திருப்பார்.

சினிமாவில் பக்குவமான டிரெய்லர்களை உருவாக்க வேண்டுமானால் உடனே எடிட்டர் சிவா சரவணனைத்தான் தேடுகிறார்கள். ‘நாச்சியார்’, ‘வடசென்னை’, ‘அசுரன்’, ‘விசாரணை’ எனப் பேசப்பட்ட அத்தனை டிரெய்லர்களுக்கும் சிவா சரவணன் தான் காரணம். தெலுங்குதேசம் வரைக்கும் சிவாவின் கொடி பறக்கிறது.

“சின்னவயசில் இருந்தெல்லாம் சினிமா ஆசை இல்லை. பி.காம் படிச்சிருந்தும் அது சம்பந்தமாக வேலையைத் தேடவில்லை. அப்பாவிற்காக ஏதாவது ஒரு வேலைக்குப் போக வேண்டியிருந்தது. அவருக்குத் தெரிந்த விளம்பரப்படக் கம்பெனிக்கு என்னை வேலைக்கு அனுப்பினார். பார்க்கப் பார்க்கப் பிடிக்கும்னு சொல்ற மாதிரி போகப்போகப் பிடிச்சது. விளம்பரத்தில் சுருங்கச் சொல்லணும். நேரம் முக்கியம். ஒரு விஷயத்தை சட்டுனு புரிய வைக்கணும். அதை வெற்றிகரமாகச் செய்ய முடிஞ்சது. 100-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும், டாகுமெண்டரி, மியூசிக் வீடியோவுக்கும் பணிபுரிந்திருக்கேன். மறைந்த ஜீவா சார் ‘12B’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அந்த டிரெய்லரை நிறைய பேர் பாராட்டினார்கள். அதற்குப் பிறகு ஜீவா எடுத்த ‘உன்னாலே உன்னாலே’ படத்தில் ‘ஜூன் போனால் ஜூலைக் காற்றே’ன்னு ஒரு பாட்டு வரும். அதை நான் கட் பண்ணிக் கொடுத்தது அவருக்குப் பிடித்தது. தொடர்ந்து எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்தார். அவரின் மறைவு எனக்கான பர்சனல் இழப்பு” தொடர்ந்து பேசுகிறார் சிவா.

“கதை தெரியாமல் கதை சொல்லணும்!”

“டிரெய்லர் மேக்கிங்கில் பிரபலம் ஆனது எப்படி? அதன் தொழில் ரகசியம் என்ன?”

“தெலுங்கில் ‘ரேஸ்குர்ரம்’ எனக்குப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது. அல்லு அர்ஜுன் என்னைக் கொண்டாடிட்டார். தெலுங்கில் அப்படித்தான். நம்மைப் பிடித்துவிட்டால் மொழி வேறுபாடு எல்லாம் பார்க்க மாட்டார்கள். அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ரகசியம் என்னன்னா, கதை தெரியாமல் கதை சொல்லணும். ரொம்ப சாதாரணமான தியேட்டருக்குப் போய்தான் படம் பார்ப்பேன். அங்கேதான் நிஜமான ரசிகர்களின் முகம் தெரியும். வஞ்சனையே இல்லாமல் பாராட்டுவாங்க. டிரெய்லரை உருவாக்க நாலைந்து தடவை முழுப் படத்தையும் பார்ப்பேன். அதில் என்னென்ன அம்சங்கள் விருப்பத்திற்குரியதாக இருக்குன்னு அந்தப் பார்வையில் தெரிந்துவிடும். எதை, எங்கே, எப்படி, எந்தப் பொருளில் வைக்கிறோம் என்பதில்தான் ஒரு டிரெய்லரின் வெற்றி இருக்கு. ‘அசுரன்’, ‘நாச்சியார்’, ‘ரேஸ்குர்ரம்’ டிரெய்லரெல்லாம் அப்படி அமைஞ்சதுதான். இதில் இயக்குநர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரமும் சேர்ந்திருக்கு. வெற்றிமாறன், பாலா இவங்க கொடுக்கிற சுதந்திரத்தில் நான் ஒரு நல்ல ஜட்ஜ் மாதிரி செயல்படுவேன். அதே மாதிரி சீனுராமசாமி, ‘காக்கா முட்டை’ மணிகண்டன் போன்றவர்களும் எனது கிரியேட்டிவ் சைடில் உதவியாக இருப்பார்கள். இன்னும் இங்கே எடிட்டிங் வெளியே தெரியாதபடிக்குத்தான் இருக்கு. கேரக்டரின் தன்மை, அவர்கள் எப்படி வெளிப்பட வேண்டும் என்பது எடிட்டரின் கைகளில்தான் இருக்கு. இப்பதான் எடிட்டிங் பத்தி நிறைய பேர் பேச ஆரம்பிச்சுட்டாங்க. கொஞ்சம் முன்னாடி வரைக்கும் கண்ணுக்குத் தெரியாத கலையாகத்தான் இருந்தது. விமர்சனங்களில் எடிட்டர் இன்னும் கொஞ்சம் கத்திரியை வைத்திருக்கலாம்னு தவறாமல் எழுதுறாங்க. அப்படியெல்லாம் நாங்களாக அதில் எதுவும் செய்துவிட முடியாது. அதில் நிறைய விஷயங்கள் இருக்கு.”

“கதை தெரியாமல் கதை சொல்லணும்!”

“நிஜமாகவே எடிட்டரோட வேலை என்னன்னு இன்னும் சொல்லப்படலைன்னு தோணுது...”

“உண்மை. கதையைச் சொல்ல குறிப்பிட்ட டைம் வேணும். டைரக்டருக்குன்னு ஒரு பார்வை இருக்கலாம். எடிட்டரோட வேலை, அந்தக் கதையை எவ்வளவு சுருக்கமா, வலிமையாச் சொல்லணும் என்பதுதான். டைரக்டர் நிறைய ஷாட்ஸ் எடுத்திருப்பார். கதையைப் பெருசா யோசிச்சு வைத்திருப்பார். எந்த அளவுக்குக் காண்பிச்சா கதையைப் புரிஞ்சுக்க முடியுமோ அதைச் செய்யணும். ரசிப்பு இல்லேன்னா படம் பிடிக்காது. இப்ப ஆடியன்ஸின் பொறுமை ஏகத்திற்கும் குறைஞ்சிருக்கு. சின்னதா ஷார்ட் பிலிம், யூடியூப், வெப் டி.வி-ன்னு சுருக்கமாகப் பார்த்துப் பழகிட்டாங்க. இப்ப சினிமா 2 மணி 15 நிமிஷத்தில் முடிஞ்சுபோகுது. இதற்கும் எடிட்டிங்கிற்கும் சம்பந்தமே இல்லை. மூன்று மணி நேரம் படமாக இருந்தாலும் எடிட்டிங் இறுக்கமா இருந்தால் பாக்க வைக்க முடியும். அதேபோல இரண்டு மணி நேரம் படம்கூட ரசிக்க முடியாமல்போகலாம். ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் காரணமாக இருக்கறது ஆடியன்ஸோட கனெக்ட் ஆகிற விதத்தில்தான். கனெக்ட் ஆகலைன்னா அவ்வளவுதான். அதைச் சொல்லப்பட வேண்டிய விதத்தில் சொல்லலைன்னு எடுத்துக்கணும். படத்தில் ட்ராவல் ஆவது அவ்வளவு துரிதமாக நடக்கணும். புத்தகம் படிக்கிற மாதிரிதான். ஒரே மூச்சில் படிச்சிட்டேன்னு சொல்றோம் இல்லையா... அதேதான்.”

“அப்போ எடிட்டரோட வேலைதான் என்ன?”

“எடிட்டரும் ஸ்கிரிப்ட் படிச்சா படம் இன்னும் வித்தியாசப்படும். சில விஷயங்களைப் படத்தில் ஒரு தடவை சொன்னால் போதும். சிலதைப் பல தடவை சொல்ல வேண்டியிருக்கும். எதைச் செய்தால் கேரக்டர் நிற்கும்னு பார்க்கணும். அதுதான் எடிட்டரோட நோக்கமாக இருக்கணும். ஒரு சிலர் சின்னப் படத்தில் நிறைய விஷயங்களைச் சேர்ப்பாங்க. அதை இரண்டு மணி நேரத்திற்குச் சுருக்கும்போது சங்கடங்கள் நேருது. பெரிய லன்ச் மாதிரி இத்தனை அயிட்டம் வச்சிடலாம்னு நினைச்சுடுறாங்க. அனுபவமுள்ள இயக்குநராக இருந்தால் கதையையே சுருக்கலாம். சொல்றதை கிளியராகச் சொல்லிட்டால் கதையைச் சுருக்கிடலாம். எப்பவும் படத்துக்கு clear introduction இருந்தால் நல்லாருக்கும். அப்படி டிராவல் பண்ணிப் போகிற அழகே தனி. நானும் ஆரம்பத்தில் டைரக்டர்கள் சொல்வதை மட்டுமே செய்தேன். வெட்டச் சொன்ன இடத்தில் வெட்டி சேர்க்கச் சொன்ன இடத்தில் சேர்த்தேன். ஆனால் அடுத்தடுத்து அப்படிச் செய்ய வேண்டியதில்லைன்னு முடிவுக்கு வந்தேன். எந்த வகைப் படமாக இருந்தாலும் அதோட டார்கெட் ஆடியன்ஸ் யாருன்னு பார்க்கணும். மாஸ் ஹீரோ படம்னா ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் வருவாங்க. அதை நாம் பூர்த்தி பண்ணணும். மாற்று சினிமா ரசிகர்களுக்கு வேற மாதிரி ரசனை இருக்கும். அவங்க தேடற உண்மைக்குப் பக்கத்தில் இருக்கிற சினிமாவுக்கு மெனக்கெடணும். இப்படி விதவிதமாகப் பண்ணும்போதுதான் எடிட்டராக நம் திறமையும் வளரும்.”