Published:Updated:

`மாஸ்டர்’ டு `அண்ணாத்த’... போஸ்ட் புரொடக்‌ஷன் அப்டேட்ஸ் என்ன?

கிட்டத்தட்ட இரண்டு மாதமாக முடங்கியிருந்த சினிமாத்துறை இப்போது மெல்ல மெல்ல ஃபார்முக்குத் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. `போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடக்கலாம்' என்கிற தமிழக அரசின் அறிவிப்பால் நின்றுபோயிருந்த பல பட வேலைகள் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது.

Tamil Movies

ஃபெப்ஸி அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று, மே 11-ம் தேதி முதல் படப்பிடிப்பு அல்லாத சினிமா வேலைகளைப் பார்க்கலாம் எனத் தமிழக அரசு அனுமதி அளித்துவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் எந்தெந்தப் படங்களில் என்னென்ன வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள்?

``தனுஷுக்கு இப்போ ஏகப்பட்ட பெண் ரசிகைகள்... ஆனா, அவரோட முதல் ரசிகை..?'' - ஷெரின்
அண்ணாத்த

அண்ணாத்த

`தர்பார்’ படத்தின் ரிலீஸுக்கு முன்பாகவே `அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பித்துவிட்டார் ரஜினிகாந்த். ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு ஆரம்பிக்கப்பட்ட ஷூட்டிங், இரண்டு ஷெட்யூல்களாக நடந்தது. மூன்றாவது ஷெட்யூலை புனேவில் நடத்தலாம் எனத் திட்டம் போட்டு வைத்திருந்த நிலையில்தான், கொரோனாவால் ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் எனப் பெரிய நடிகர்கள் பட்டாளமே நடிக்கும் `அண்ணாத்த’ படத்தை முதலில் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாம் என வேலைகளை ஆரம்பித்தனர். தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியால், படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு மாறியிருக்கிறது. கடந்த திங்கள்கிழமை முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், எடிட்டர் ரூபன் தலைமையில் `அண்ணாத்த’ படத்தில் இதுவரைக்கும் எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் செய்யும் பணிகள் தொடங்கியிருக்கின்றன.

Indian 2

இந்தியன் 2

ஆரம்பத்தில் இருந்தே பல மாற்றங்களையும் பல பிரச்னைகளையும் சந்தித்துக்கொண்டிருக்கும் 'இந்தியன் 2' திரைப்படம், ஒரு வழியாக ஆரம்பித்து பல ஊர்களில் படப்பிடிப்பும் நடந்தது. ஈ.வி.பி-யில் படப்பிடிப்பு நடந்தபோது க்ரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் இறந்ததால், படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்கலாம் என அவர்கள் திட்டமிட்ட நேரத்தில், கொரோனாவால் மீண்டும் தடங்கல். பிரச்னைகளுக்கு மேல் பிரச்னை என்பதால் லைகா நிறுவனம் இந்தப் படத்தை கைவிடப் போவதாகச் சில வதந்திகள் பரவின. ஆனால், அதில் உண்மையில்லை. 'இந்தியன் 2' படத்துக்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அனிமேஷன் வேலைகள் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்க, ஷங்கரின் முன்னிலையில் எடிட்டிங்கை ஆரம்பித்திருக்கிறார் ஶ்ரீகர் பிரசாத்.

Master விஜய்

மாஸ்டர்

ஏப்ரல் 9-ம் தேதி `மாஸ்டர்’ படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என முடிவு செய்து, அதற்காக ஓடிக்கொண்டிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாக்டெளன் அறிவிப்பதற்கு முன்னரே மார்ச் மாதம் கடைசி வாரத்தில் `மாஸ்டர்’ படத்தின் எடிட்டிங்கை முடித்துவிட்டார் பிலோமின் ராஜ். தற்போது மீண்டும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஆரம்பிக்கலாம் எனச் சொன்னதால், ஃபைனல் மிக்ஸிங் செய்து வருகிறார்கள். செப்டம்பர் - அக்டோபரில் தியேட்டர்கள் திறந்துவிட்டால் நவம்பர் 14 தீபாவளிக்கு படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Valimai Updates

வலிமை

ஏப்ரல் ரிலீஸ் என்கிற அறிவிப்போடு ஆரம்பிக்கப்பட்ட `வலிமை’ திரைப்படம், ஷூட்டிங் நடப்பதில் தாமதம் ஏற்பட்டதால் தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஆரம்பிக்கப்பட்ட முதல்கட்ட ஷூட்டிங், இரண்டாம் கட்டமாகச் சென்னையில் தொடர்ந்தது. சென்னையில் ஷூட்டிங் நடக்கும்போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டதால், சில நாள்கள் ஷூட்டிங் தாமதமானது. மூன்றாவதுகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஆரம்பமாகும் நேரத்தில்தான் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது படத்தின் எடிட்டிங் வேலைகள் ஒரு பக்கம் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், மூன்றாம்கட்ட படப்பிடிப்பை எங்கு நடத்தலாம் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஜூலைக்கு மேல் ஷூட்டிங் தொடங்கினால் 2021 ஏப்ரல் ரிலீஸ் என்பதுதான் இப்போதைய பிளான்.

கோப்ரா

கோப்ரா

இந்தியாவில் பல மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்ட விக்ரமின் `கோப்ரா’ திரைப்படம், ரஷ்யாவில் க்ளைமாக்ஸ் எடுக்கப்பட்டபோது கொரோனாவால் நிறுத்தி வைக்கப்பட்டது. மே மாதத்தில் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் எடிட்டிங் வேலைகள் முன்னரே நடந்து வந்தது. இப்போது எடிட்டிங் மீண்டும் தொடங்கியிருக்கிறது. அதேபோல், இனி மீண்டும் ரஷ்யாவுக்கு சென்று மீதமிருக்கும் க்ளைமாக்ஸ் காட்சிகளைப் படமாக்க முடியாது என்பதால், அந்தக் காட்சிகளை சென்னையிலேயே எப்படி எடுக்கலாம் எனத் திட்டமிட்டு வருகிறார்கள்.

Soorarai Pottru

சூரரைப் போற்று

விஜய்யின் `மாஸ்டர்’ படத்தைப் போலவே, சூர்யாவின் `சூரரைப் போற்று’ படமும் ஏப்ரலில் ரிலீஸாக இருந்தது. அதனால் மார்ச் மாதமே படத்தின் எடிட்டிங் வேலைகளை முடித்துவிட்டார்கள். சில சிஜி காட்சிகளும் ஃபைனல் மிக்ஸிங் மட்டுமே மீதமிருந்த நிலையில், லாக்டெளன் காரணமாக அதுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் அந்த வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். சில சிஜி வேலைகள் மட்டும் மும்பை கம்பெனியிடம் இருந்து வர வேண்டியிருக்கிறது. ஏப்ரல், மே ரிலீஸ் என்பது முடியாமல் போனதால், நிலைமை சீக்கிரம் சரியாகிவிட்டால் ஆகஸ்ட் 15-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்யலாம் என பிளான் செய்திருக்கிறார்கள்.

இந்தப் படங்கள் போக தனுஷின் `ஜகமே தந்திரம்’ படத்தின் ஃபைனல் மிக்ஸிங் வேலைகளும் விஷாலின் `சக்ரா’ படத்தின் டப்பிங் மற்றும் எடிட்டிங் வேலைகளும், `ஜெயம்’ ரவியின் `பூமி’ பட டப்பிங்கும், `மூக்குத்தி அம்மன்’ படத்தின் டப்பிங்கும் தொடங்கப்பட்டிருக்கின்றன.

``சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படம் செம மாஸா இருக்கும்... ஏன்னா?'' - இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி
அடுத்த கட்டுரைக்கு