Published:Updated:

சோழனைத் தேடி, காதலிக்காக ஓடி, கல்லைத் தகர்க்க விண்வெளிக்குப் பறந்து.. தமிழ்சினிமாவின் பயணங்கள் இவை!

"விண்வெளிக்குக் கிளம்புவது முதல் மீண்டும் பூமிக்குத் திரும்புவது வரைக்குமான அந்த த்ரில் பயணம் தமிழ் சினிமாவிற்குக் கொஞ்சம் புதுசு."

டிராவல் திரைப்படங்கள்
டிராவல் திரைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பயணத்தைக் காட்டாத சினிமாக்களே இல்லை எனச் சொல்லலாம். பெரும்பாலான தமிழ் சினிமாக்கள் ஊறுகாய்போலப் பயணத்தைத் தொட்டுக்கொண்டு வெளிவந்திருந்தாலும், முழுக்கவே பயணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான படங்கள் சொற்பம்தான். இதோ, பயணத்தை அடிப்படையாகக் கொண்ட படங்களில், ரசிகர்களைக் கவர்ந்த சில படங்களைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆட்டோகிராஃப்

ஆட்டோகிராஃப்
ஆட்டோகிராஃப்

உங்க பழைய வாழ்க்கையை எப்போவாவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?! நீங்க படித்த பள்ளிக் கூடம், வேலை பார்த்த இடம், பழகிய நண்பர்கள்... இப்படிப்பட்ட சமாசாரங்களைத் திரும்பச் சென்று பார்த்திருக்கிறீர்களா?! ச்சே... வாழ்க்கையில் நீங்க எவ்வளவு மிஸ் பண்ணியிருக்கீங்க தெரியுமா, அத்தனையையும் 'ஆட்டோகிராஃப்' ஞாபகப்படுத்தியது. மீண்டும் பழைய நினைவுகளுக்குள் நம்மைப் பயணிக்க வைத்த காதலை மையமாகக் கொண்ட திரைப்படம். பழனி நெய்க்காரப்பட்டியில் ஆரம்பித்து கேரளா, கோவை இறுதியில் சென்னையில் முடிகிற கதைக்களம். படத்தில் இடம்பெற்ற கேரளக் காட்சிகள் நம்மைக் கேரளாவிற்கே பயணம் செய்ய வைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்தியது.

இன்று நேற்று நாளை

இன்று நேற்று நாளை
இன்று நேற்று நாளை

நிகழ்ந்தபடியே இருக்கும் கடந்த/நிகழ்/எதிர்காலங்களுக்கு 'டைம் மெஷின்’ மூலம் டாக்ஸி டிரிப் அடிக்கும் கதைக்களமே, 'இன்று நேற்று நாளை'. ஹாலிவுட் ஸ்பெஷலான 'டைம் மெஷினை’ முதன்முதலாகத் தமிழுக்குக் கொண்டுவந்து பெருமை சேர்த்தவர், அறிமுக இயக்குநர் ரவிக்குமார். 2065-ஆம் ஆண்டில் ஆர்யா உருவாக்கும் ஒரு டைம் மெஷின், 2015-ஆம் ஆண்டில் சோதனை ஓட்டத்தின்போது விஷ்ணு விஷால், கருணாகரன் இருவரிடம் சிக்கிக்கொள்கிறது. லோக்கல் விஞ்ஞானி மூலம் அதை இயக்கும் வித்தையை அவர்கள் கற்றுக்கொள்கிறார்கள். டைம் மெஷின் மூலம் தொழில், காதல் என அனைத்து விஷயங்களிலும் 'நல்ல நேரத்தை’ உருவாக்கிக்கொள்கிறார்கள். ஒருகட்டத்தில் அந்த விளையாட்டே வினையாகிவிட, முக்காலமும் இணையும் புள்ளியில் என்ன நடக்கிறது.. என்பதைச் சொன்னது, இப்படம். திரைப்படத்தில் அதிகபட்சமாக பயணத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை, 'காலப் பயணம்' மூலம் கவர்ந்த வகையில், இது மிகச்சிறந்த திரைப்படம்.

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்
எங்கேயும் எப்போதும்

கதைப்படி, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி வரும் பேருந்தும், சென்னையிலிருந்து திருச்சி நோக்கிப் பயணிக்கும் ஒரு பேருந்தும் நேருக்கு நேர் மோதி, விபத்துக்குள்ளாகிறது. அதில் பயணம் செய்யும் காதல் ஜோடிகள், அம்மாவும் குழந்தையும் எனப் பல மனிதர்களோடு சேர்ந்து பயணிக்க வைத்த சினிமா இது. அந்த இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பயணிகள் என்ன ஆனார்கள், காதல் ஜோடிகள் சேர்ந்தார்களா... என்பதே திரைப்படத்தின் முடிவு. படத்தில் எக்கச்சக்க காதல் ஜோடிகளுடன் சேர்ந்து ரசிகர்களையும் பயணிக்க வைத்த திரைப்படம், 'எங்கேயும் எப்போதும்'.

பையா

பையா
பையா

ஹாலிவுட் ஸ்டைலில் ஒரு பிஸியான ஹைவே, சில பெட்ரோல் பங்குகள், மோட்டல்கள், பத்து காஸ்ட்லி கார்கள், சேஸிங் காட்சிகள், ஏழெட்டு கேரக்டர்கள், சில அதிரடி ஆக்‌ஷன்... எனப் படு ஸ்டைலாக வெளிவந்தது, 'பையா' திரைப்படம். நண்பரை அழைத்து வர, ரயில் நிலையத்துக்கு காரில் செல்லும்போது ஆரம்பிக்கும் கதைக்களம் முடிவதும் அதே காரில்தான். படம் முழுக்கக் காருக்குள் ரசிகர்களையும் பயணிக்கும் உணர்வைக் கடத்திய சினிமா இது. ஆக்ஷன், காதல் என வழக்கமான கமர்ஷியல் சினிமாக்கள் பாணியில் இருந்தாலும், பார்வையாளனுக்கு சலிப்பைக் கொடுக்காமல் பயணிக்க வைத்தது, இப்படம்.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்
ஆயிரத்தில் ஒருவன்

ஹாலிவுட் படங்களுக்கு இணையாக எடுக்க முயற்சி செய்யப்பட்ட பிரமாண்ட சினிமாக்களில், 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு முக்கியமான இடமுண்டு. பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த சோழர்களுக்கும், பாண்டியர்களுக்கும் நடந்த போரில் தப்பிப் பிழைத்த சோழ இளவரசனைத் தேடி தீவு ஒன்றுக்குப் பயணிக்கும் ஒரு படை. அந்தப் படையோடு ரசிகர்களும் பயணித்தனர் என்றால், அது மிகையல்ல. ஏழு தடைகளைத் தாண்டி சோழ இளவரசனைக் கண்டுபிடிக்கும் பயணத்தில் காட்டப்பட்டிருக்கும் காட்சிகள் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது. வெளியானபோது கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னாளில் 'ஆயிரத்தில் ஒருவன்' சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்பட்டது.

டிக்:டிக்:டிக்

டிக்:டிக்:டிக்
டிக்:டிக்:டிக்

இந்தியாவை நோக்கி வரும் ராட்சத விண்கல்லை விண்வெளியிலேயே அழிக்கப் புறப்படும் ஐந்து பேர் கொண்ட குழுவின் பயணம்தான், 'டிக்:டிக்:டிக்'. விண்வெளிக்குக் கிளம்புவது முதல் மீண்டும் பூமிக்குத் திரும்புவது வரைக்குமான த்ரில் பயணம் தமிழ்சினிமாவிற்குப் புதுசு. இந்திய சினிமாவின் முதல் விண்வெளித் திரைப்படமும் இதுதான்.

டிராவல் சினிமாக்கள் வரிசையில் 'மைனா', '10 எண்றதுக்குள்ள', 'தசாவதாரம்', '6 மெழுகுவர்த்திகள்' எனப் பயணங்கள் நிறைந்த பல சினிமாக்கள் இருக்கின்றன. அவற்றில் உங்களுக்குப் பிடித்த சினிமாக்களை கமென்ட்டில் சொல்லலாமே!