Published:Updated:

மனோகர் - திவ்யா, கார்த்திக் - ஷக்தி... தமிழ் சினிமா எப்போதும் மறக்காத காதல் ஜோடிகள்!

மூன்றாம் பிறையில் `உனக்கே உயிரானேன்... எந்நாளும் எனை நீ மறவாதே' எனச் சொல்லியும் விஜி சீனுவை மறந்திருக்கலாம். ஆனால், விஜியையும் சீனுவையும் இன்னும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்கவில்லை. சீனு - விஜியைப்போல தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத எவர்கிரீன் காதல் இணைகள் பல உண்டு.

1
மெளனராகம்

மெளனராகம் மனோகர் - திவ்யா

இயக்குநர் மணிரத்னத்தின் கிளாஸிக் ஹிட் படங்களில் ஒன்று மெளனராகம். காதல் கைகூடி திருமணம் நோக்கி நகரும் நேரத்தில் காதலன் இறந்துவிட, காதலிலிருந்து மீள முடியாமல் குடும்ப சூழ்நிலையால் வேறொருவருடன் திருமண வாழ்க்கையை வாழ வேண்டியிருக்கும் திவ்யாவுக்கு. திருமண வாழ்வில் பொருந்திப்போக முடியாததற்குக் கணவன் காரணம் கேட்கும் போதுதான், தன் கல்லூரி கால காதலைப் பகிர்வார் திவ்யா.

இரண்டு மணி நேர திரைப்படத்தில் மொத்தம் அரைமணி நேரம் மட்டுமே மனோகர்-திவ்யா காதல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். மோதலில் உருவான காதலில் கார்த்திக்கும் ரேவதியும் இளமை ப்ளஸ் அவ்வளவு ஃப்ரெஷ். திவ்யாவைக் காதலிக்க வம்பிழுப்பது, காலேஜ் மைக்கில் காதலை சொல்வது, காபியில் காதலை பரிமாறிக்கொள்வது என திவ்யா மனோகர் வரும் அரைமணி நேரமும் காதலும் காதல் நிமித்தமும் மட்டுமே காட்சிகளாய் இருக்கும். காதலின் வேண்டுகோளுக்காக, ஆசைக்காகத் தனது லட்சியத்தை விட்டுக் கொடுத்து இல்லற வாழ்வை நோக்கி நகரும் தருணத்தில், மனோகர் இறந்துவிட அந்தக் கணமும் காதலும் திவ்யாவுக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் மனதில் உறைந்து போயிருக்கும். காலங்கள் தாண்டியும் மனோகர் - திவ்யா காதல் சேர்ந்திருக்கலாம் என எப்போது படம் பார்த்தாலும் ஏங்குவதுதான் இந்த இணையின் வெற்றி.

2
Karthick - shakthi

அலைபாயுதே கார்த்திக் - ஷக்தி

இன்றைய மில்லினியம் தலைமுறைகளுக்கு போன தலைமுறையின் ரகளையான காதல் பக்கங்களை அச்சு அசலாய் காட்டியதில் அலைபாயுதே திரைப்படத்துக்கும் கார்த்திக் ஷக்திக்கும் முக்கிய இடமுண்டு. மாதவன் - ஷாலினி தவிர கார்த்திக் - ஷக்தி கதாபாத்திரத்தை யாரும் ரீப்ளேஸ் செய்ய முடியாது எனச் சொல்லும் அளவுக்கு இருவரும் தங்கள் நடிப்பால் திரையில் நிகழ்த்தியிருந்தது முழுக்க முழுக்க காதல் மேஜிக்.

மனித மனம் பொதுவாக உணர்வுகளின் குவியல். அது காதல் வயப்பட்டால் மலையையும் மடுவாக்கும். அந்த உற்சாகத்தை, இளமையை, சந்தோஷத்தை, ஊடலை, கூடலை ஒவ்வொரு காட்சியிலும் அள்ளித் தெளித்திருப்பார்கள் கார்த்திக்கும் ஷக்தியும். `நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசப்படல, நீ அழகா இருக்கன்னு நினைக்கல, ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமா இருக்கு. யோசிச்சு சொல்லு' என டிரெயினில் கார்த்திக் தனது காதலை ஷக்தியிடம் வெளிப்படுத்தும் காட்சிகளில் எல்லாம் தன்னை கார்த்திக்காகவும் ஷக்தியாகவும் பொருத்திப் பார்த்த இளைஞர்கள் ஏராளம். காதல் ஈர்ப்பு, திருமணத்துக்குப் பிறகு காதலில் வரும் இடைவெளி, காதல் பரிதவிப்பு எனக் கார்த்திக்கும் ஷக்தியும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருப்பது காதல் மற்றும் காதல் மட்டுமே.

`மினி, மோகனா, சக்தி, நித்தி...' - `லவ்அண்ட் லவ் ஒன்லி' ஷாலினிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
3
விண்ணைத்தாண்டி வருவாயா

விண்ணைத்தாண்டி வருவாயா கார்த்திக் - ஜெஸ்ஸி

மதம், மனம் என அடுக்கடுக்காய் காதலுக்கு பல தடைகள் காலங்காலமாய் இருக்கிறது. இதற்கு காதல் உடன்படுகிறதா, துச்சமாய் தூக்கி எறிகிறதா என்பதில் இருக்கிறது காதலின் அழகும் ஆழமும்.

மேலே சொன்ன மதமும் மனமும் தடையாய் கார்த்திக் - ஜெஸ்ஸி காதலிலும் உண்டு. `உனை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்?' எனக் காதலின் கூப்பாட்டை கார்த்திக்கும் `மன்னிப்பாயா?' என ஜெஸ்ஸி தன் இயலாமையையும் பாடலின் வழியே நகர்த்தியிருப்பார்கள். காரணங்கள் சொல்லி, கார்த்திக்கின் காதலை நிராகரிக்கும் ஜெஸ்ஸி, ஒரு கட்டத்தில் கார்த்திக் மீதான காதலை மறைக்க முடியாமல் ஒப்புக்கொண்டு காதலிக்கத் தொடங்குவார். `இது லவ்தான ஜெஸ்ஸி?' என கார்த்திக் கேட்கும் போது, `எங்கப்பா உனக்கு சொத்தைக்கூட எழுதித் தருவாரு, ஆனா பொண்ணத் தர மாட்டாரு!' என கார்த்திக்கை காதலிலிருந்து விலக்குவதும், பிறகு இணைவதும் பிரிவதும் எனக் காதலை வசனங்கள், பாடல், இசை என ஒவ்வொன்றிலும் பார்வையாளர்கள் ஒரு கணமாவது தங்களது நிறைவேறாத காதலில் கொண்டு நிறுத்தியதுதான் கார்த்திக் - ஜெஸ்ஸி பாத்திரத்தின் வெற்றி!

4
96

`96' ராம் - ஜானு

கால மாற்றத்துக்கேற்ப இந்த உலகில் எதுவும் தன்னை மாற்றிக் கொள்ளும். ஆனால், முதல் காதல் மட்டும் இதற்கு விதிவிலக்கு. வாழ்வில் எத்தனை காதல் வந்தாலும் முதல் காதலை மனம் மறக்காது. வெறுக்காது. எப்போது அந்தக் காதலை திரும்ப சந்திக்க நேர்ந்தாலும் அன்பு மட்டுமே காதலுக்குத் தரத் தெரியும். அப்படிக் கைகூடாத தனது முதல் காதலை மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அந்த நேசமும் பாசமும் எப்படி இருவருக்குள்ளும் பரிமாறப்படும் என்பதை ராமும் ஜானுவும் நமக்கு `96' படம் மூலம் வாழ்ந்து காட்டியிருப்பார்கள்.

முதல் காதலையும் அவள் நினைவுகளையும் இன்னும் சுமந்து திரியும் ராமுக்கு பல வருடங்கள் கழித்து அவளைச் சந்திக்கும் சூழல் வருகிறது. அவர்களுக்கிடையேயான உரையாடலையும் இயலாமையையும் சொல்லாத காதலையும் அவ்வளவு நெகிழ்ச்சியாய் கதாபாத்திரத்தின் வழியே விஜய் சேதுபதியும் த்ரிஷாவும் கடத்தியிருப்பதுதான் ராம்-ஜானுவின் காதலுக்கு கிடைத்த வெற்றி.

`அதிசய' ரஜினி; `தம்பிமார்கள்' எஸ்.ஏ.சி; `சான்ஸ் கொடுங்க' விஜய் சேதுபதி... உலக நாயகனின் `உங்கள் நான்' விழாவில் நடந்தது என்ன?!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு